Saturday, October 12, 2019

"ஆயினும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்" (லூக்.11:28)

"ஆயினும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்"
(லூக்.11:28)
****       ****    ****     *****     ****

இயேசுவுக்கு தன்னைப் பின்பற்றுபவர்களைப் புகழ்வது ரொம்பப் பிடிக்கும்.

நாம் இயேசுவை பின்பற்றுபவர்கள்தானே?

அப்படியானால் நம்மை அவருக்கு ரொம்ப பிடிக்கும்.

அதாவது,  பெயரளவிற்கு இல்லாமல் உண்மையிலேயே அவரைப் பின்பற்றினால்.

அதென்ன உண்மையிலேயே?

கிறிஸ்தவன் என்றாலே கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவன்தான்.

ஆனால் பின்பற்றுவதில் பல படிகள் (Grades) இருக்கின்றன.

நாம் எழுதும் தேர்வுகளை மதிப்பீடு செய்கிறவர்கள் A. B. C. D என்று grade போடுவது மாதிரி.

சிலர் இயேசுவை கடவுளாக இரட்சகராக ஏற்றுக் கொள்கிறார்கள். 

ஞானஸ்நானம் பெறுவார்கள்.

ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக அப்பப்போ கோவிலுக்கு வருவார்கள்.

அதோடு சரி.

சிலர் ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவை நேசிப்பார்கள்.

நேசத்தின் அளவிற்கேற்ப கோவில் காரியங்களில் ஆர்வம் காட்டுவார்கள்.

தேவத்திரவிய அனுமானங்களில் ஈடுபாடு காண்பிப்பார்கள்.

அவரவர் நேசத்திற்கேற்ப ஈடுபாட்டின் தரமும் இருக்கும்.

சிலர் இன்னும் ஒரு படி ஏறி இறையன்போடு பிறரன்பையும் கலந்து நற்செயல்களில் ஆர்வம் காட்டுவார்கள்.

சிலர் இன்னும் ஒரு படி ஏறி இறைபணிக்கும்,  பிறர் பணிக்கும் தங்களை முற்றிலும் அர்ப்பணிப்பார்கள்.

இவர்கள்தான் இயேசுவின் பண்புகளையும் ஏற்று, அவற்றைத் தமதாக்கி வாழ்பவர்கள்.

இவர்களிலும் இரண்டு படிகள் உண்டு.

முதற்படியினர் இயேசுவைப்போல் வாழ்வார்கள்.

அடுத்த படியினர் இயேசுவாகவே வாழ்வார்கள்.

இவர்கள்தான் உண்மையாகவே இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள்.

அதாவது இயேசு எந்த நோக்கத்திற்காக பூமிக்கு வந்தாரோ

அதே நோக்கத்திற்காகத் தம்மையே அர்ப்பணிப்பவர்கள்.

உதாரணத்திற்கு புனித பிரான்சிஸ் அசிசி.

இயேசு எல்லோரையும் நேசிக்கிறார்.

உண்மையான கிறிஸ்தவர்களாக (கிறிஸ்து அவர்களாக) வாழ்பவர்களை அவருக்கு ரொம்ப பிடிக்கும்.

அவர் தன் தந்தையின் விருப்பப்படிதான் மனிதனாகப் பிறந்து தன்னையே நமக்காகப் பலியாக்கினானார்.

தன்தந்தையின் விருப்பப்படி நடப்பவர்களைத் தன் தாய்க்குச் சமமாகக் கருதினார்.

"வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்"
(மத்12:50)

அதுமட்டுமல்ல,

அவரைப் பெற்றதாய் பேறு பெற்றவள் என்று மக்கள் கூறியபோது

அவர்

"ஆயினும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்"
(லூக்.11:28)

என்று கூறினார்.

தன் தாயை அவர் குறைத்து மதிப்பிடவில்லை.

தன் சீடர்களைக் கொஞ்சம் உயர்வு நவிற்சியுடன் புகழ்கிறார்.

இன்னொரு இடத்தில் தன்னை விடவே அவர்களை உயர்த்திப் பேசுகிறார்.

"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: என்னில் விசுவாசங்கொள்பவன் நான் செய்யும் செயல்களையும் செய்வான்: ஏன், அவற்றினும் பெரியனவும் செய்வான்:"
(அரு.14:12)

கடவுளைவிட பெரிய காரியங்களைச் செய்ய யாராலும் முடியாது.

ஆனாலும் ,தன்மேல் விசுவாசங்கொள்பவனைப் புகழ்வதற்காக

'அவற்றினும் பெரியனவும் செய்வான்.'
என்று கூறுகிறார்.

விசுவாசத்தின் பெருமையை
உயர்வு நவிற்சியுடன் விளக்குகிறார்.

உண்மையான கிறிஸ்தவன்

கடவுளுடைய வார்த்தையைக் கேட்கவேண்டும்.

கேட்டால் மட்டும் போதாது,

அதைத் தன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் திருப்பலியில் கலந்து கொள்கிறோம்.

சிலர் கல்யாண வீட்டிற்கு சாப்பாடு நேரத்தில் மட்டும் போவார்கள்.

அதுலவே சிலர் திருப்பலிக்கும்  திருவிருந்துக்கு மட்டும் வருவார்கள்.

அது தவறு.

முழுப்பூசைக்கும் வரவேண்டும்.

அப்போதுததான்  கடவுளுடைய வார்த்தையைக் கேட்கமுடியும்.

பூசையின்போது வாசிக்கப்படும் பைபிள் வாசகங்கள் இறைவனுடைய வார்த்தைகள்.

குருவானவர் அவ்வார்த்தைகளை மையமாக வைத்து பிரசங்கம் வைப்பார்.

பிரசங்கத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

எதற்காக?

தேர்வு எழுதுவதற்கா?

கடவுளின் வார்த்தையைக் கேட்பது நமது அறிவை வளர்ப்பதற்காக அல்ல.

Listening to God's word is not to improve our knowledge about God.

இறைவனைப் பற்றிய அறிவின் அளவை வைத்து

நமது  விண்ணக வாழ்வின் பேரின்ப அளவு தீர்மானிக்கப் படுவதில்லை.

இறையன்பின் அளவை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

இறை வார்த்தையைக் கேட்டவுடன் அது போகவேண்டிய இடம் அன்பின் இருப்பிடமாகிய இருதயம்.

மூளைக்கும் போகலாம், தப்பில்லை, ஆனால் மூளைக்கு மட்டும் போனால் பயனில்லை.

ஆகவே சாமியார் இறை வார்த்தைதையைப் பற்றி பிரசங்கம் வைக்கும்போது

அதைக் கூர்ந்து கேட்டு இதயத்தில் பதிக்கவேண்டும்.

இதயத்தைத் தொட்டாலே வாழ்வில் பிரதிபலிக்கும்.

இதயத்தில் பதித்தால் அது வாழ்வாகவே மாறும்.

ஒரே வரியில்,

இறை வார்த்தையை வாழவேண்டும்.

இதைத்தான் இயேசுவின் அம்மா செய்தார்கள்.

"உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது.''

இறைவனின் வார்த்தை மரியாயின் வாழ்வானதால்தான்,

இறைவனாகிய வார்த்தை அவளிடம் மனுவுரு எடுக்கத் தகுதி பெற்றாள்.

இறைவனின் அடிமையாக தன்னையே ஒப்புக்கொடுத்த மரியாள் அவருக்கே தாயாகும் பாக்கியம் பெற்றாள்.

தாயைப்போல் பிள்ளை என்போம்.

நாமும் நம் தாயைப்போல முழு அர்ப்பணிப்பாளர்களாக மாறி,

இறை வார்த்தையை நம் வாழ்வாக்குவோம்.

"வாழ்பவன் நானல்ல: என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே." என்ற புனித சின்னப்பரின் கூற்றுப்படி நாம் வாழ்ந்தால்,

"ஆயினும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்"
(லூக்.11:28)

என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்றவர்களாக மாறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment