Thursday, October 3, 2019

ஆலயங்கள் பலவிதம்.

ஆலயங்கள் பலவிதம்.
***************     **************

நண்பர் ஒருவர் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

"கடவுள்தான் எங்கும் இருக்கிறாரே,

நாம் இருக்கும் இடத்தில் இருந்து அவரை வழிபடுவதை விட்டுவிட்டு ஏன் ஆலயங்களுக்கு அலைய வேண்டும்?"

கேள்வியின் தொனியிலிருந்து நண்பர் ஆலயங்களுக்குச் செல்வதை விரும்பாதவர்போல் தெரிகிறது.

அவரை மதிப்பிடுவதை விட்டுவிட்டு, கேள்வியை மட்டும் மதிப்பிடுவோம்.

'கடவுள்தான் எங்கும் இருக்கிறார்.' -Correct.

'நாம் இருக்கும் இடத்தில் அவரை வழிபடுவதை விட்டுவிட்டு'-

அதாவது

'கடவுளை எங்கும், எப்போதும் வழிபடவேண்டியது நமது கடமை, அந்தக் கடமையைச் செய்யாமல்,'

'ஏன் ஆலயங்களுக்கு அலைய வேண்டும்?'

அதாவது,

எங்கும், எப்போதும் வழிபடவேண்டிய கடவுளை,

எங்கும், எப்போதும் வழிபடாமல்

ஆலயத்தில் மட்டும் வழிபடுவது ஏன்?'

வார்த்தைகளைக் கொஞ்சம் மாற்றிப் போட்டால் அவரது கேள்வி இப்படி இருக்கும்:

'கடவுள் எப்போதும், நாம் எங்கு சென்றாலும் நம்மோடு இருக்கிறார். ஆகவே நாம் அவரை எந்நேரமும், எவ்விடத்திலும் வழிபட வேண்டும். அதைச் செய்யாமல் கோவிலுக்குச் சென்று என்ன பயன்?'

இன்னும் கொஞ்சம் விளங்கும்படியாய்ச் சொல்வோம்:

நாம் வீட்டில் இருக்கும்போது கடவுள் நம்மிடம் சொல்கிறார்.

"மகனே/மகளே, என்னைப்பார்."

நாம் சொல்கிறோம்,

"அதெல்லாம் முடியாது.   கோவிலில் இருக்கும்போது மட்டும்தான் உம்மைப் பார்ப்பேன்."

இப்போது கேள்வி புரிந்திருக்கும்.

ஆண்டவர் இருக்கும் இடம்தான் ஆலயம் என்பதை ஏற்றுக்கொண்டால்

மூன்று வகை ஆலயங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

1. நாம் வாழும் உலகம்.

2.  நாம் வழிபாட்டிற்காக ஒன்று கூடும் கட்டடமான கோவில்.

3. நாம்.

நம்முள் அநேகர் திருப்பலி செலுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் கோவில் மட்டும்தான் ஆலயம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அவரால் படைக்கப்பட்ட நாம் வாழும் பிரபஞ்சமே(Universe) அவர்வாழும் ஆலயம்தான்.

அன்பினாலும், காரணத்தினாலும், ஞானத்தினாலும், வல்லமையினாலும் இறைவன் எங்கும் வியாபித்திருக்கிறார்.

அவர் சர்வ வியாபி.

நாம் இறைவன் வாழும் ஆலயத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் வாழும் ஒவ்வொரு வினாடியும் அவரை வழிபடுவது நமது கடமை.

கோவிலிற்குச் சென்று திருப்பலி செலுத்துவது, ஆராதனை செய்வது மட்டும்தான் வழிபாடு என்று அநேகர் நினைக்கிறார்கள்.

உண்மையில் இறைவனை வழிபடுவது என்றால் இறைவன் வழிநிற்றல்,

அதாவது

இறைவனாகிய வழியில் நடத்தல் என்றுதான் பொருள்.

'நானே வழி' என்றார் நம் ஆண்டவர்.

இயேசுவை வழிபட்டால்,

அதாவது

  இயேசுவாகிய வழியே நடந்தால்

அதாவது

அவரை அறிந்து, அவரை நேசித்து, அவருக்குப் பணிபுரிந்து, அவருக்காக நம் அயலானுக்கும் பணிபுரிந்து வாழ்ந்தால்

நிலைவாழ்வைப் பெறுவோம்.

நாம் உலகில் காணும் எல்லா பொருட்களும் இயேசுவைப் பிரதிபலிக்கின்றன.

எந்தப் பொருளையும் தவறாகப் பயன்படுத்தினால், அந்தப் பொருள் பிரதிபலிக்கும் இயேசுவை அவமதிக்கிறோம்.

நாம் பாவம் செய்யும்போது பயன்படுத்தும் பொருட்களும்,

நமது உடல் உறுப்புக்களும் இறைவனால் படைக்கப்பட்டவை.

இறைவன் படைத்தவற்றை அவருக்கு எதிராகப் பயன்படுத்துவது இறைவனுக்குச் செய்யப்படும் அவமதிப்பு.

நாம் பாவம் செய்யாமல், பரிசுத்தமாய் வாழ்வதே நாம் இறைவனுக்குச் செய்யும்  வழிபாடு.

அடுத்து நாம் ஒவ்வொருவரும்  ஆண்டவரின் ஆலயம்தான்.

நமது இருதயத்தில் இறைவன் வசிக்கிறார்.

நம்முள் வாழும் இறைவனை வழிபட

முதலில் நமது இருதயத்தை பாவமாசின்றி சுத்தமாய் வைத்திருக்க வேண்டும்.

இலாசருடைய வீட்டிற்கு இயேசு விருந்து உண்ணச் சென்றபோது மரியாளும், மார்த்தாளும் செய்ததை நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

மரியாள் அமைதியாக அமர்ந்திருந்து இயேசு கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

நாமும் ஆண்டவரை அமைதியில் தியானித்து, நமது உள்ளத்தில் அவர் பேசுவதைக் கூர்ந்து கவனிக்க கவனிக்க வேண்டும்.

தியானத்தின்போது நாம் இறைவனோடு பேசுவதைவிட அவர்  நம்மிடம் பேசுவதுதான் முக்கியம்.

நாம் இடைவிடாது விண்ணப்பங்களைப் போட்டுக்கொண்டே இருந்தால் அவர் கேட்டுக்கொண்டே இருப்பார்.

நாம் அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தால்தான் அவர் நம்முடன் பேசுவார்.

அவர் நம்மிடம் பேசுவது வெறுமனே கேட்டுக் கொண்டிருப்பதற்காக மட்டும் அல்ல.

அவர் சொன்னதைச் செயல்படுத்த.

மார்த்தா ஆண்டவருக்கு உணவுதயாரிப்பதற்காக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்ததுபோல

நாமும் இறைப் பணியாகிய பிறர்பணியில் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்.

இது நமது வெளியரங்க வாழ்க்கை.

நமது வெளியரங்க வாழ்க்கை
நமது உள்ளத்தில் வாழும் தேவனை எல்லோருக்கும் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். 

அதாவது நமது வாழ்க்கையைப் பார்த்து விட்டு

நம்மை இயக்குபவர் இயேசுவே என்பதை மற்றோர் உணர்ந்து

அவர்களும் இயேசுவைத் தங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நமது வாழ்க்கையே வழிபாடாகவும், இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் கருவியாகவும் பயன்படுகிறது.

ஆலயம் என்று ஒன்று இருந்தால் அங்கு வாழும் கடவுளுக்கு பலியிட குரு ஒருவர் வேண்டும்.

நமது ஆலயத்துக்கு நாம்தான் குரு.

நமது இருதயம்தான் பலிபீடம்.

நாம்தான் பலிப்பொபொருள்.

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் நம்மை நாமே தந்தை இறைவனுக்குப் பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.

நம் பலி இறைவனுக்குப் பிடித்தமாய் இருக்கும்படிக்கு ஆண்டவர் இயேசுவின் சிலுவைப் பலியுடன் சேர்த்து ஒப்புக்கொடுக்க வேண்டும்.

காலையில் மட்டுமல்ல, நாள் முழுவவதுமே நாமாகிய நமது ஆலயத்திற்கு நாம்தான் குரு.

நாம் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் இறைவன் நம்முள்தான் இருக்கிறார்.

எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் இறைவனது பிரசன்னத்தில்தான் இருக்கிறோம்.

நாள் முழுவதும் நமது, சிந்தனை, சொல், செயல் சம்பந்தமான சகல அனுபவங்களையும்

நம்முள் உறையும் இறைவனுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.

நாள் முழுவதுமே நாம் இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட பலிப்பொருள் என்பதை மறந்து விடக்கூடாது.

ஆண்டவரின் பலிப்பொருளை மாசின்றி பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு.

என்ன செய்தாலும் 'ஆண்டவருக்காக' என்று நினைத்து, ஆரம்பித்துச் செய்தால்,

நமது ஒவ்வொரு செயலும் ஆண்டவருக்குப் பிரியமானதாக இருக்கும்.

ஒவ்வொரு நாளையும் இறைவனுக்காகவே வாழ்ந்தால்,

நமது வாழ்க்கை முழுவதுமே இறைவழிபாடுதான்.

Man is a social animal.

மனிதன் ஒரு சமூகப் பிராணி.

நாம் பிறப்பதும், வளர்வதும், வாழ்வதும் சமூகத்தில்தான்.

ஆகவே தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல, சமூகமாகவும் இறைவனை வழிபடக் கடமைப் பட்டுள்ளோம்.

சமூக வழிபாட்டிற்காகத்தான் கட்டடங்களாலான ஆலயங்கள்.

இங்கு சமூகமாக இறைவனை வழிபடுகிறோம்.

ஆலயங்களில் சென்று வழிபடுவது நமது வாழ்வில் மிகமுக்கியமான அம்சம்.

ஆலயம்தான் ஒரு ஊரின் மையம்.

ஆலயம் ஊரின் இருதயம் மாதிரி.

இரத்த ஓட்டம் உயிர்வாழ இன்றி அமையாதது.

இருதயம் இரத்த ஓட்டத்திற்கு இன்றியமையாதது.

இருதயத்தில்தான் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது.

அதேபோல நமது பாவங்கள் மன்னிக்கப்பட நாம் நாடவேண்டிய குருவானவர் கோவிலில்தான் இருக்கிறார்.

ஆகவே நமது பரிசுத்த வாழ்வின் மையம் கோவில்தான்.

கோவிலுக்கு வராத கிறிஸ்தவர் இருதயத்துக்கு வராத இரத்தம் மாதிரி!

கோவிலுக்கு வந்து நமது ஆன்மாவைச் சுத்திகரிக்கவேண்டியது நமது கடமை.

கட்டட ஆலயங்களைக் குறிப்பிடும்போது மனதில் படுகின்ற சில கருத்துக்களையும் கூறிவிட வேண்டும்.

மனிதனிடம் ஒரு சுபாவம் உண்டு.

அவசியத்திற்காக ஒரு செயலை ஆரம்பிப்பபான்.

அப்புறம் அதில் ஆடம்பரத்தைச் சேர்ப்பான்.

அப்புறம் அவசியத்தை மறந்து விட்டு ஆடம்பரத்தை மட்டும் வைத்துக்கொள்வான்.

ஆதாம், ஏவாள் மானங்காக்க உடை உடுத்தினார்கள்.

அப்புறம் மானங்காக்கும் அவசியத்தோடு Styleம், fashionனும் சேர்ந்து கொண்டன.

நாகரீக உடையில் Styleம், fashionனும் மட்டுமே உள்ளன. மானம் காற்றில் பறந்துவிட்டது.

ஆரம்பத்தில் உடல் சக்திக்காகவும்,உடல் நலனுக்காகவும் சாப்பிட ஆரம்பித்த மனிதன்  அதோடு ருசியைச் சேர்த்தான்.

நாகரீக உணவில் ருசி மட்டும் இருக்கிறது. உடல் நலன் போய்விட்டது.

ஆரம்பத்தில் அறிவு பெறுவதற்காகக் கல்வி கற்றான்.

அப்புறம் அதோடு வேலைவாய்ப்பு அறிவோடு சேர்ந்து கொண்டது.

இப்போது வேலைவாய்ப்புக்காக மட்டுமே படிக்கிறான், அறிவு காற்றில் பறந்துவிட்டது.

நாம் ஆரம்பத்தில் திறந்த வெளியில் ஒன்றுகூடி சமூகமாக இறைவனுக்கு வழிபாடு செய்தோம்.

அப்புறம் சில வசதிகளுக்காக கோவில்கள் கட்டி அங்கு
ஒன்றுகூடி இறைவனை வழிபட்டோம்.

அப்புறம் வித்தியாச வித்தியாசமான கலை அம்சங்களோடு கோவில்கள் கட்டினோம்.

இப்போது கோவில்களில் கலை இருக்கிறது,

வழிபட ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம்!

விசயத்துக்கு வருவோம்.

கோவில்களில் ஒன்று கூடி திருப்பலி நிறைவேற்றுகிறோம்,

நற்கருணை ஆராதனை செய்கிறோம்,

செபக்கூட்டங்கள் நடத்துகிறோம்,

தியானக்கூட்டங்கள் (Reteats)
நடத்துகிறோம்.

கிறிஸ்தவ வாழ்வில் கோவில் ஆலயவழிபாடு  மையமான (Centre) பங்குவகிக்றது.

நமது ஆன்மீகத்தின் மையமான இயேசு ஆண்டவர் தினமும் தந்தை இறைவனுக்கு பலியாக ஒப்புக் கொடுக்கப்படுவது ஆலயத்தில்தான்!

கன்னி மரியிடமிருந்து பிறந்த அதே இயேசு,

33 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்து,

நற்செய்தி அறிவித்து,

நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்த அதே  இயேசு

தனது ஆத்தும சரீரத்தோடு உண்மையாகவே பிரசன்னமாக (Really Present) இருக்கும் இடம் ஆலயம்.

ஆலயத்திற்கு திருப்பலியில் பங்கேற்கச் செல்லும்போது உண்மையான தயாரிப்போடு செல்ல வேண்டும்.

ஏனோதானோவென்று கடமுறைக்காகச் செல்லக் கூடாது.

திவ்ய நற்கருணையில் இயேசு உண்மையிலேயே இருக்கிறார்.

Jesus is really present in the Holy Eucharist.

ஆகவே நன்மை வாங்கும்போது

நம்மைப் படைத்து இரட்சித்த கடவுளையே வாங்குகிறோம் என்ற பயபக்தி உணர்வோடு,

சிறு குழந்தை தாயிடம் உணவை வாங்குவதுபோல

நற்கருணையை நாவில் வாங்க வேண்டும்.

தின்பண்டம் வாங்குவதுபோல
கையில் வாங்கக்கூடாது.

திவ்யநற்கருணை வாங்குவது ஆண்டவரோடு பேசுவதற்கு,

பக்கத்து சீட்காரரோடு பேசுவதற்கு அல்ல.

திவ்யநற்கருணை ஆன்மீக உணவு. அதை வாங்கும் நம் உள்ளமாகிய பாத்திரம் பாவமாசின்றி பரிசுத்தமாய் இருக்க வேண்டுமே.

திருப்பலி நிறைவேற்றுபவர் குருவானவர்.

நாமும் குருவோடு இணைந்து
பலியை ஒப்புக்கொடுக்க வேண்டும்.

தேவமாதா சிலுவையடியில் நின்று தன் மகனோடு இணைந்து பாவப்பரிகாரப் பலியை ஒப்புக்கொடுத்தாள்.

நாம் திருப்பலிக்கு வருவது பார்வையாளர்களாக அல்ல,

பலியை ஒப்புக் கொடுப்பவர்களாக.

ஆலயங்களை கலை அம்சங்களோடு பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால் அது கலைப்பொருளாக மாறுவது நன்றாக இல்லை.

பீடங்களுக்கு அலங்காரம் தேவைதான்.

ஆனால் பீட அலங்காரம் திருப்பலியிலிருந்து நமது பார்வையை அபகரித்துக்கொள்ளும் அளவிற்கு

அளவைமிஞ்சிப் போய்விடக்கூடாது.

திருமணவீட்டில் அநேகர் மணமக்களைப் பார்ப்பதற்குப் பதிலாக, அவர்களுடைய உடை அலங்காரம், நகை அலங்காரம்,
Make up ஆகியவற்றை மட்டும் பார்த்து இரசித்துக் கொண்டிருப்பார்கள்.

நமது பலி பீடத்தை அந்நிலைக்கு கொண்டு வந்துவிடக்கூடாது.

ஒருமுறை கிறிஸ்மஸ் சமயத்தில் 

நாற்பது இலட்சம் ரூபாய் செலவிட்டு

இயேசு பாலன் பிறந்த குடில் அமைத்திருப்பதாகத்

ஒருவர் தன் முகநூலில் பெருமையாகப் பதிவு செய்திருந்தார்.

ஏழ்மையின் பெருமையையும், அவசியத்தையும் நமக்குக் காட்ட மாடடைத் தொழுவில் பிறந்த இயேசுவைக் கிண்டல் செய்வதுபோல் இல்லை?

"இயேசுவே, நீர் ஏழையாகப் பிறந்தீர். ஆனால், நான் கோடீஸ்வரன்.என்னால் ஏழையான யாரையும் ஏற்றுக்கொள்ள முடியாது. என் நிலைமைக்கு ஏற்றபடி எண் பணத்தைக் கொண்டு நீர் பிறந்த தொழுவைப் பணக்காரத் தொழுவாக மாற்றுகிறேன்"

என்று கூறுவதுபோல் இல்லை?

"மனுமகன் தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்று கூறிய இயேசுவுக்கு வீண் ஆடம்பரங்கள் பிடிக்காது, யார் செய்தாலும்.

அடுத்து கோவிலில் செபக்கூட்டங்கள் நடத்துகிறோம்.

எதைச் செய்தாலும் அதன் உண்மையான நோக்கத்தை நம் இஸ்டத்துக்கு மாற்றுவது நமக்குக் கைவந்த கலை.

செபக்கூட்டங்கள் இறைவனை ஆராதனையோடு வழிபடும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டவை.

ஆனால் நாம் "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று இயேசு சொன்னதை மட்டும் வைத்துக்கொண்டு

செபக்கூட்டங்களை 'சுகமளிக்கும் கூட்டங்களாக, மாற்றிவிட்டோம்!

பாவசங்ங்கீர்த்தனம் செய்து ஆன்மீக சுகம் பெறுவதில் உள்ள ஆர்வத்தைவிட உடல் நலம் பெறுவதிலேயே நமக்கு ஆர்வம் அதிகம்!

உடல் ஆரோக்கியம் முக்கியம்தான்.

ஆனால் ஆலயங்களின் முக்கிய நோக்கம் இறைவனை வழிபடுவதும், ஆன்மீக சுகம் பெறுவதும்தான்.

உடல் நலனுக்காக வேண்டுவதில் தப்பு இல்லை.

ஆனால் ஆன்மீக நலனில் அக்கரை காட்டாது, உடல் நலனுக்காக மட்டும் கோவிலுக்குப் போனால்,

நாம் நிலை வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதுதான் பொருள்.

வாழ்க்கையையே இறை வழிபாடு ஆக்குவது உண்மையான கிறிஸ்வனின் கடமை.

கோவிலுக்கு வந்து,

இறைமகனோடு உலகிற்குள் சென்று

ஆன்மீக வாழ்வு வாழ்வோம்!

ஆலயம் சென்று தொழுவது சாலவும் நன்று!

லூர்து செல்வம்.



No comments:

Post a Comment