"பிரிவினை உண்டாக்கவே வந்தேன்." (லூக்.12:51)
---------------------------------------------
"ஏங்க, இங்க வாங்க."
"என்னடி விசயம்? கையில பைபிள வச்சிக்கிட்டு கூப்பிடுற? ஏதாவது சந்தேகமா?"
"பைபிளில சந்தேகம் வந்தால் கிறிஸ்தவளாக இருக்க முடியாதுங்க.
ஒரு வசனம் புரியல. அதற்குறிய விளக்கம் உங்களுக்குத் தெரிந்தால்
உங்களிடமிருந்து நானும் தெரிஞ்சிக்கிடலாம்னு பார்த்தேன்."
"தெரியாட்டா?"
"சாமியாரப் பார்க்கும்போது கேட்கணும்."
"சரி, கேளு. தெரிஞ்சா சொல்றேன்."
"இயேசு 'நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்?
இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்.'
என்ற வசனம்தான் விளங்கவில்லை."
..."நேரடியாக விளக்குவதைவிட ஒரு உதாரணம் மூலம் விளக்கினால் நன்கு விளங்கும்.
ஒருநாள் உன் மகன்கிட்ட சொல்ற
'இன்றையிலிருந்து ஸ்கூல் விட்ட உடனே நேரே வீட்டுக்கு வரணும், Friend வீட்டுக்குப் போனேன், ஹோட்டலுக்குப் போனேன்னு வீட்டுக்குப் பிந்தி வந்தால் அடி கிடைக்கும்.'
மறு நாள் அவன் பிந்தி வருகிறான். நீ வீட்ல இல்லை.
பிந்தி வந்ததுக்காக அடி கொடுக்கிறேன்.
நீ வரும்வரை அழுகிறான்.
நீ வந்தவுடன் 'நான் பிந்தி வந்ததுக்காக அப்பா அடிச்சிட்டாங்க'ன்னு சொல்றான்.
நீ என்ன சொல்லுவ?"
":அப்பாமேல கோபம் வேண்டாம்.
அவங்க அடிச்சதுக்கு நான்தான காரணம்.
உன் நல்லதுக்குதான 'எங்கேயும் போகாம வீட்டுக்கு வா'ன்னு சொன்னேன்'னு சொல்வேன்."
"இப்போ இயேசு சொன்னது விளங்குதா?"
"விளங்குதுன்னு நினைக்கிறேன்.
உங்க உதாரணத்தில நான் என் மகனுக்கு அவனது நன்மைக்காகக் கட்டளை கொடுத்ததுபோல்
இறைவனும் அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு 'ஒருவரை ஒருவர் நேசியுங்கள், சமாதானமாய் இருங்கள்' என்று கட்டளை கொடுத்திருக்கிறார்.
கட்டளையை மீறுவது பாவம், அதன்படி நடப்பது புண்ணியம்.
மனிதர்களும் இரண்டாய் பிரிந்திருக்கிறார்கள்:
1.கட்டளைப்படி நடக்கும் புண்ணியவான்கள்.
2. கட்டளையை மீறி நடக்கும் பாவிகள்.
கடவுள் இவ்வுலகில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஆதிகாரணர். (Primary Cause)
கட்டளையைக் கொடுத்த கடவுள் ஆதிகாரணர். (Primary Cause)
நமது சுதந்திரத்தைப் பயன்டுத்தி கட்டளைப்படி நடக்கிறோம் அல்லது மீறுகிறோம்.
சுதந்திரத்தைப் பயன்டுத்திச் செயல்படுவதால் நமது செயல்களுக்கு நாம்தான் பொறுப்பு.
நாம் உடனடிக் காரணிகள் (Secondary cause)
"நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்?
இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்."
என்று இயேசு கூறும்போது,
'நான் கடவுள்.
உங்களைப் படைத்து
எனது பிள்ளைகளாக்கி,
உங்கள் நலன் கருதி
'அன்பு செய்து, சமாதானமாய் வாழுங்கள்' என்று கட்டளை கொடுத்தேன்.
ஆனால் நீங்களோ கட்டளையை அனுசரிப்போர், மீறுவோர் இரண்டு பிரிவினர் ஆகிவிட்டீர்கள்.
உங்கள் பிரிவினைக்கு உங்களைப் படைத்த நான்தான் ஆதிகாரணர்.' என்கிறார்.
சரியா?"
..."Correct. ஆனால் பிரிவினைக்குப் பொறுப்பு ஏற்கவேண்டியது நாம்தான்.
ஏனைனில் நமது சுதந்திரத்தைப் பயன்டுத்தியே செயல்படுகிறோம்.
அன்பு செய்வதும், செய்யாதிருப்பதும் நாம்தான்.
ஒருநாள் வகுப்பில் ஒரு மாணவனைப் பார்த்து
"ஏண்டா இவ்வளவு மோசமா மார்க் எடுத்திருக்க?"ன்னு கேட்டேன்.
"நீங்கதான் சார் காரணம்."
"நானா?"
"ஆமா. நீங்கதான பரிட்சை வச்சீங்க. பரிட்சை வச்சிருக்கா விட்டால் fail ஆகியிருக்க மாட்டேன்."
எப்படி இருக்கு?"
"ஆனால் உங்க மாணவன் உங்களிடம் கேட்டது மாதிரி நாம் கடவுளிடம் கேட்டுவிடக் கூடாது.
அன்புமயமான கடவுள் தன்னுடைய அளவற்ற அன்பின் காரணமாகத்தான் நம்மைப் படைத்தார்.
அவர் நமக்குக் கொடுத்த கட்டளைகளும் அன்புமயமானவை.
'1. நான் உன் தந்தை, என்னை நேசி.
2. உன் அயலான் உனது சகோதரன். அவனையும் நேசி.
இவை அன்பின் கட்டளைகள்.
Commandments of love.
கடவுள் அன்புமயமானவர்.
அவரது கட்டளைகளும் அன்புமயமானவை.
கரும்பு தின்னக் கூலியா என்பார்கள்.
ஆனால் கரும்பைப் போன்ற இனிய கட்டளைகளைக் கொடுத்து,
அன்பு செய்பவர்களுக்குக் கூலியாக நித்திய பேரின்பத்தையும் கொடுக்கிறார்.
இந்த நிலையில்
"நீர் படைத்ததனால்தானே அன்பு செய்ய வேண்டி யிருக்கிறது!" என்று குறை சொன்னால் நம்மைப் போல் பைத்தியங்கள் இருக்க மாட்டார்கள்!
" மண்ணுலகில் தீயை மூட்டவே வந்தேன். இப்போதே அது பற்றியெரிய வேண்டுமென்று எவ்வளவோ விரும்புகிறேன்!"
இயேசு மூட்டவந்தது அன்புத் தீ!
அன்புத்தீயில் பற்றி எரிவோம்.
பாவ அழுக்கு நீங்கி பரலோக இன்பத்திற்குத் தயாராவோம்."
"இயேசு தரும் அன்பு பிரிவினைக்கு அல்ல,
அன்போடு இணைவதற்கு!"
லூர்து செல்வம்.
'
No comments:
Post a Comment