Monday, October 21, 2019

பாவம் மட்டுமே தீமை.

பாவம் மட்டுமே தீமை.
-------------------------------------------------
"Good morning. உள்ளே வரலாமா?"

..."Good morning மட்டுமல்ல, 
நீங்களும் உள்ளே வரலாம்."

"Busy யா இருக்கீங்களா? "

..."Busy thinking. உங்களுக்கு இரண்டு நாள் time கொடுத்தேன்.

நான் சொன்னதைப் பற்றிச் சிந்திச்சிங்களா? "

"ஆமா. இப்போநான் குழப்பம்  நீங்கித் தெளிவாய் இருக்கிறேன்..

சில கேள்விகள் எழுந்தன. கேட்கலாமா?"

..."ரொம்ப சந்தோசம். கேளுங்க."

"இயற்கை நிகழ்வுகளில பிரச்சனை இல்லை. சடப்பொருளாகிய உலகம் மாறிக்கிட்டு  இருக்கிறது.

ஆனால் அந்த மாற்ற நிகழ்வுகளில மனிதன் மாட்டிக் கொள்வதால்

எண்ணிறந்த மரணங்கள் ஏற்படுகின்றனவே,

அதைத்தான் எப்படி சீரணிப்பது என்று தெரியவில்லை.

நான் கடவுளைக் குறைகூறவில்லை. குறை கூறவும் முடியாது. என் புத்திக்கு எட்டவில்லை.

 என் புத்திக்கு எட்டவையுங்களேன்."


..."தனது எல்லா பண்புகளிலும் கடவுள் அளவற்றவர். நாம் மிகவும் அளவுள்ளவர்கள்.

அளவற்ற பரம்பொருள் அளவுள்ள மனித புத்திக்கு எப்படி எட்டுவார்?

கடவுளை முழுவதும் புரிந்து கொள்ள ஆசிப்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது மாதிரி.

ஆயினும் கடவுள் தன்னைத் தெரிந்து கொள்வதற்காக 'விசுவாசம்' என்னும் வல்லமை வாய்ந்த சக்தியைப் பரிசாகத் தந்திருக்கிறார்.

விசுவாசக் கண்ணோடு இறைவனைப் பார்க்க வேண்டும். புரியவேண்டிய அளவுக்குப் புரியும்.

கடவுள் தன் அளவுகடந்த அன்பை பகிர்ந்து கொள்வதற்காகத்தான் நம்மைப் படைத்தார்.

நாம் இவ்வுலகில் நிரந்தரமாக வாழ வேண்டுமென்பது கடவுளின் திட்டமல்ல.

அவர் திட்டமிட்ட காலம் இவ்வுலகில் வாழ்ந்து, 

பின் மறு உலகில் அவரோடு என்றென்றும் வாழ வேண்டும் என்பதே அவர் திட்டம்.

பிறப்பின் மூலம் உலகினுள் நுழைந்த நாம், 

இறப்பின் மூலம்தான் விண்ணுலகிற்குள் நுழைய முடியும்.

 மரணம் நாம் வருந்த வேண்டிய விசயம் அல்ல, மகிழ வேண்டிய விசயம்.

ஏனெனில் அதுதான் நித்திய பேரின்பத்திற்கான வழி.

நாம் எங்கே, எப்போது, யார்மூலம் பிறக்க வேண்டும் என்று திட்டமிடும்  இறைவன்தான்

நாம் எங்கே, எப்போது, எப்படி இறக்க வேண்டும் என்றும் திட்டமிடுகிறார்.

நாம் மரணிக்க வேண்டியது நோய் மூலமா, விபத்து மூலமா, சுனாமி மூலமா, நிலநடுக்கம் மூலமா என்று தீர்மானிப்பதும் அவரே.

எல்லாம் அவரது நித்திய திட்டப்படிதான் (Eternal plan) நடக்கும்.

நல்லவர்களாகப் பிறந்த நாம்,  நல்லவர்களாக வாழ்ந்து, நல்லவர்களாக மரிக்க வேண்டும்.

பிறப்பையும் இறப்பையும் விட வாழ்வதுதான் முக்கியம்.

இறைவன் கட்டளைகட்குப் பணிந்து வாழ்ந்தால் என்ன நடந்தாலும், எப்போ நடந்தாலும், எப்படி நடந்தாலும் அஞ்ச வேண்டியதில்லை.


நல்லவர்களாக வாழ்ந்தால்,

எப்படி மரித்தாலும், நிலை வாழ்விற்குள் நுழைவோம்"

" நீங்கள் சொல்வது புரிகிறது.

தோட்ட உரிமையாளர்

 தோட்டத்தை எப்படிக் கண்காணிக்க வேண்டுமோ

 அப்படிக் கண்காணிக்க

 அவருக்கு முழு உரிமை இருக்கிறது.

அவர் என்ன செய்தாலும் அது தோட்டத்தின் நன்மைக்கே."

..."வேறு ஏதாவது கேள்வி?"

"இயற்கை நிகழ்வுகள் மாற்றங்களே, தீமைகள் இல்லை.

அப்படியானால் தீமை என்ற சொல் எதைக் குறிக்கும்?"

..."சரியான கேள்வி. நாம் வாழும் உலகம் ஒரு சடப்பொருள். (material world.)

நமது உடல்கூட matter தான்.
அதனால்தான் அது வளர மண்ணிலிருந்து எடுக்கப்படும் பொருட்களே தேவைப்படுகின்றன.

சடப்பொருளில் நிகழ்வனவெல்லாம் மாற்றங்கள்தான்.

நமது உடல் வளர்வது மாற்றம்.

நோயினால் பாதிக்கப்படும்போது ஏற்டுவதும் மாற்றம்தான்.

சிலர் நினைப்பதுபோல் நோய் ஒரு தீமை அல்ல. ஒரு இயற்கை நிகழ்வுதான்.

நமக்கு உடல் மட்டுமல்ல ஆன்மாவும் இருக்கிறது.

புத்தி, மனது, அன்பு ஆகிய தத்துவங்கள் ஆன்மாவிற்கு உரியவை.

நமது ஆன்மாவிற்கு சிந்திக்க, தேர்வு செய்ய, செயல்புரிய முழு சுதந்திரம் இருக்கிறது.

ஆன்மா ஒரு ஆவி.

ஆன்மா உடலோடு இருக்கும்போது உடல் வாழ்கிறது.

ஆன்மா உடலோடு இருக்கும்போதும் வாழும்.உடலை விட்டுப் பிரிந்த பின்னும் வாழும்.

அதாவது  நமது மரணத்திற்குப் பின்னும் ஆன்மா உயிர்வாழும்.

சரியாகச் சொல்ல வேண்டுமானால் 'நாம்' என்ற சொல் நமது ஆன்மாவைத்தான் குறிக்கும்.

அதாவது நமது ஆன்மாதான் நாம். (உடல், நமது உடல்.)

ஆகையினால்தான் மரணத்திற்குப் பின்னும்,

அதாவது நமது உடலை விட்டுப் பிரிந்தபின்னும்,

உடல் மண்ணுக்குள் போனபின்னும்,

'நாம் வாழ்வோம்.'

நமது ஆன்மா உடன் இருக்கும் போது உடல் வாழும் வாழ்வு லௌகீக வாழ்வு.

நமது ஆன்மாவின் வாழ்வு ஆன்மீக வாழ்வு.(Spiritual life)

லௌகீக வாழ்வுக்கு துவக்கமும் உண்டு, முடிவும் உண்டு.

பிறப்பில் ஆரம்பித்து இறப்பில் முடிந்துவிடும்.

ஆன்மாவுக்கு துவக்கம் உண்டு, முடிவு இல்லை.

உடலை வாழவைப்பது ஆன்மா. ஆன்மா பிரியும்போது உடல் இறந்துவிடும்.

ஆன்மாவிற்கு வாழ்வு தருவது இறை உறவு. 

அதாவது  ஆன்மா இறைவனோடு சுமூக உறவில் இருக்கும்போது ஆன்மீக வாழ்வு இருக்கும்.

உறவு  அறுந்தால் ஆன்மீக வாழ்வு இல்லாமல் போய்விடும். 

ஆன்மா இருக்கும்,
ஆன்மீக வாழ்வு இருக்காது."

"அதெப்படி,  ஆன்மா இருக்கும் 
ஆன்மீக வாழ்வு இருக்காது?
கொஞ்சம் விளக்குங்கள்.''


..."ஆன்மாவுக்கு மரணம் கிடையாது.  

அது படைக்கப் பட்டது இறைவனோடு சுமூகமான உறவோடு வாழ்வதற்காகத்தான்.

உறவு அறுந்தால் வாழ்வும் அறுந்துவிடும்."


"அதாவது கணவவோடு உள்ள உறவை அறுத்துவிட்டு தாய்வீட்டிற்குப் போகிற பெண்ணை ' வாழாவெட்டி' என்கிறோமே, அதுமாதிரி, அப்படித்தானே? "

..."அப்படியேதான். Very good analogy. அவள் சாகவில்லை, அவளுடைய மணவாழ்வு செத்துவிட்டது.

இறைவனுக்கும், ஆன்மாவிற்கும் இடையே உள்ள உறவு அறுந்துபோகக் காரணமாய் இருப்பது ஆன்மா செய்கின்ற 'பாவம்.'

பாவத்தை மட்டும்தான் 'தீமை' என்கிறோம்.

ஆம். பாவம் மட்டும்தான் 'தீமை'.

நாம் எதற்காகப் படைக்கப் பட்டோமோ அதை அடைய விடாமல் தடுப்பதால் பாவம் தீமை.

இயற்கையில் ஏற்படும் மாற்றங்களுக்குக் காரணமாய் இருப்பது இறைவன்.

ஆனால் பாவத்திற்குக் காரணமாய் இருப்பது ,
மனிதன், மனிதன்  மட்டும்தான்."

"வாழாவெட்டியாய் இருப்பவள் அதற்காக வருந்தி, கணவனிடம் மன்னிப்புக் கேட்டால்

மணவாழ்வு திரும்பவும் கிடைத்துவிடுமே, 

அதுமாதிரி வசதி ஆன்மீகவாழ்வில் உண்டா?"

..."சரியாகச் சிந்திக்கிறீர்கள்.

பாவம் செய்தவன் அதற்காக வருந்தி, இறைவனிடம் மன்னிப்புக் கேட்டால் இறைவன் கட்டாயம் மன்னிப்பார்.

கிறிஸ்தவத்தில் பாவங்களுக்காக வருந்துவதோடு, குருவிடம் பாவசங்கீர்த்தனம் செய்யவேண்டும்.

பாவம் மன்னிக்கப்பட்டவுடன் ஆன்மீக வாழ்வு உயிர் பெற்று வளர ஆரம்பிக்கும்.

 இறைவனோடு ஆன்மாவிற்கு இருக்கும் நெருக்கத்தின் அளவைப் பொறுத்து நமது ஆன்மீகத்தின் அளவும் இருக்கும்.

உடலுக்கு உணவு வளர்ச்சியைக் கொடுப்பதுபோல,

 நம் ஆன்மீகத்திற்கு இறைவனுடைய அருள் வளர்ச்சியைக் கொடுக்கிறது.

ஆண்டவரது அருளால் அவரை நெருங்குகின்றோம்.

அவரை நெருங்க நெருங்க அவரது அருள் அதிகமாகக் கிடைக்கிது.

அருளின் அளவு அதிகமாக அதிகமாக நமது ஆன்மீக வளர்ச்சியும் அதிகமாகும்."

"கடவுளை நெருங்குதல் என்றால் என்ன?"

"சாதாரணமான நண்பர்கட்கும், நெருக்கமான நண்பர்கட்கும் என்ன வித்தியாசம்?"

"சாதாரணமான நண்பர்கள் பார்க்கும்போது wish பண்ணிக்கிடுவாங்க. முக்கியமான நிகழ்ச்சிகளில சந்திச்சிக்கிடுவாங்க.

நெருக்கமான நண்பர்கள் 
ஒருவர்மேல் ஒருவர் ரொம்ப பாசம் வச்சிருப்பாக. எப்பவும் ஒன்றாகத் திரிவாங்க. பார்க்க முடியாவிட்டால்கூட ஒருத்தரை ஒருவர் நினைச்சிக்கிட்டு இருப்பாங்க."

..."நெருக்கமான நண்பர்களிடையே உள்ள  அத்தனை குணங்களும் இறைவனோடு ரொம்ப நெருக்கமாக உள்ளவர்களிடம் இருக்கும்.

இறைவனை மிக அதிகமாக நேசிப்பார்கள்.

உள்ளத்தில் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

இடைவிடாது செபிப்பார்கள்.

இறைவனுக்காகச் செய்யும் எல்லா செயல்களும் செபமாக மாறிவிடுகின்றன.

என்ன வேலை செய்தாலும் அதை இறைவனின் மகிமைக்காகவே செய்வார்கள்.

எப்பவும் இறைவனின் சன்னிதானத்தில், இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வோடு வாழ்வார்கள்.


இடைவிடாமல் செபிப்பதால் இடைவிடாமல் அவர்களுக்குள ஆண்டவரின் அருள்மழை பொழிந்து கொண்டிருக்கும்.

ஆன்மீக வாழ்வு செழித்து வளர்ந்து கொண்டிருக்கும்.

முழுக்க முழுக்க இறைவனுக்காக வாழும் வாழ்வே இறைவனோடு நெருக்கமான வாழ்வு.

புரிகிறதா?"

"புரிகிறது.

என் பையன் வருகிறான்.
என்னடா?"

"அம்மா உங்கள வரச் சொன்னாங்க."

"என்னவாம்?"

"அத அம்மாட்ட வந்து கேளுங்க."

"மன்னிச்சிக்கிடுங்க ,வந்த வேலையை முடிக்காமல் போவற்கு. 

காலையில் வருகிறேன். 
அருள்மழை பற்றிபேசவேண்டும்."

..."வாங்க."

லூர்து செல்வம். 

No comments:

Post a Comment