Friday, October 18, 2019

நம்பாதவர்கள் கவனிக்கவும்.

நம்பாதவர்கள் கவனிக்கவும்.
------------------------------------------------

"மிஸ்டர், நில்லுங்க. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்."

"பேசுங்க. நிறையவே பேசுங்க. நிறைய பேசுறவங்கள எனக்கு ரொம்பப் பிடிக்கும்"

"நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். நீங்க கடவுள நம்புறவங்க."

..."கடவுள் நம்பிக்கை இல்லாதவங்கதான் கடவுளைப்பற்றி அதிகம் பேசறீஙங்க. 

இன்று கடவுளைப்பற்றி என்ன பேசப்போறீங்க?"


"நேற்று பக்கத்து ஊர்ல ஒரு மரத்துமேல இடிவிழுந்ததே, அதற்கு யார் காரணம்?"

..."கடவுள் இயற்கையைப் படைக்கும்போது அது இயங்க இயற்கை விதிகளைப் ( Laws of nature) படைத்தார்.

அந்த விதிகள்படிதான் இயற்கை இயங்கிக் கிட்டிருக்கு. இடி மட்டுல்ல, எல்லா இயற்கை நிகழ்வுகளும் அப்படித்தான் நடக்கின்றன."

"சுனாமியால் ஏற்படும் அழிவுகள்?"

..."எல்லா இயற்கை நிகழ்வுகளும் என்று கூறிவிட்டேன். ஒவ்வொன்றாய்க் கூறவேண்டுமா? "

"நான் கேட்பது அழிவுகளைப்பற்றி."

..."இயற்கையில் மாற்றங்கள் மட்டுமே நிகழும். மாற்றங்களை  உடன்பாட்டு(Positive) உணர்வோடு நோக்கினால் ஆக்கம்.

எதிர்மறை (Negative) உணர்வோடு 
நோக்கினால் அழிவு.

மலை உடைந்து பாறைகளாக மாறுகிறது.

பாறை உடைந்து கற்களாக மாறுகிறது.

கற்கள் தேய்ந்து கூழாங்கற்களாக மாறுகின்றன.

கூழாங்கற்கள் தேய்ந்து மணலாக மாறுகின்றன.

மலையை கடற்கரையிலுள்ள மணலாக மாற்றுவது ஆறுகள்.

உடைவதும், தேய்வதும் மாற்றங்கள்தான்.

மாறுவது Positive.

நீங்கள் உங்கள் பாணியில் பாறை அழிந்து மணலாயிற்று என்பீங்க. 
அழிவது Negative."

"ஹலோ! நீங்க பேசுவது தத்துவம். நான் பேசுவது  நடைமுறை.

சுனாமியால் எத்தனை பேர் செத்தார்கள் தெரியுமா?

நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்து எத்தனை பேர் உயிர் இழந்தார்கள் தெரியுமா?

கடவுள் இருந்தால் உலகில் இதுபோன்ற தீமைகளுக்கு இடம் கொடுத்திருப்பாரா?"

..."ஒரு சிறிய வேண்டுகோள். தங்களது பூந்தோட்டம் மிக அழகாக இருக்கும் என்று சொல்லி யிருக்கிறீர்கள்.
அங்கு போய் பேசுவோமா?"  

"எனது கவனத்தைக் கடவுளிடமிருந்து திசை திருப்புவதற்காக இப்படிக் கூறுகிறீர்கள். பரவாயில்லை.தோட்டத்திற்குப் போயே பேசுவோம்.

ஆனால் என் கேள்விக்குப் பதில் வரும்வரை விடமாட்டேன்."

..."பதில் தோட்டத்தில்தான் இருக்கிறது.

 ஒரு சின்ன சந்தேகம். அதை நிவர்த்தி செய்து தொடர்ந்து பேசுவோம்.

கடவுள் நம்பிக்கை அற்ற நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைவிட அதிகமாக கடவுளின் பெயரை உச்சரிக்கிறீர்கள் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?"

"பதில் தோட்டத்தில்தான் இருக்கிறது என்று சொன்னீர்ளே!

அதைப் பார்த்துவிட்டு இதற்குப் பதில் சொல்கிறேன்.

இதோ தோட்டத்திற்கு வந்து விட்டோம்."

..."தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டே பேசுவோம்.

உங்களிடம் உண்மையிலேயே அழகுணர்ச்சி இருக்கிறது.

அது தோட்டத்தின்மூலம்   வெளிப்படுகிறது."

"ரொம்ப நன்றி."

..."ஏன் ரோஜா செடிகளை மொட்டை அடித்து விட்டிருக்கிறீர்கள்? "

"மொட்டை அடிக்கவில்லை. trim பண்ணி விட்டிருக்கிறேன். மழை காலம் ஆரம்பிக்கும்போது இதைச் செய்ய வேண்டும். திரும்பவும் நன்கு தளிர்த்து நிறைய பூக்கள் பூக்கும்."

..."பழைய முற்றிய கிளைகளைக் வெட்டிவிட்டால் புதிய இளம் தளிர் செழித்து வளரும்! "

"ஆமா. வெட்டப்பட்ட கிளைகளை வேறிடத்தில் நட்டு வைத்திருக்கிறேன். அவையும் தளிர்த்து விட்டன."

..."மல்லிகைச் செடிகளில் பூக்களையே காணவில்லை? "

"அவற்றில் மொட்டுக்களையே பறித்து விடுவோம். அவற்றைக் கொண்டு மாலைகள் கட்டுவார்கள். அங்குதான் அவை மலரும்."

..."இந்த இடத்தில இருந்த பூஞ்செடிகளை எல்லாம் வெட்டிவிட்டது மாதிரி தெரியுது!"

"இந்த இடத்த பக்குவப்படுத்தி
 வேற செடிகள் நடணும்.
 சில மரங்களைக் கூட வெட்டிவிட்டோம், புது வித பூஞ்செடிகளை நடப்போகிறோம்."

..."அதாவது தோட்டத்தை இன்னும் அழகு படுத்தப்போறீங்க! ''

"ஆமா. நான் செய்கிற எல்லா வேலைகளுமே புதுசுபுதுசா பூஞ்செடிகளை வளர்க்கத்தான்.

உண்மையில பூந்தோட்டங்கிறது நிலப்பகுதி இல்லை, அங்கு வளரக்கூடிய பூஞ்செடிகள்தான்.

பூஞ்செடிகள் நல்லா வளரணுங்கிற நோக்கத்திலதான் நிலத்த வெட்டுகிறோம், கொத்துகிறோம்.

பூஞ்செடிகளைக்கூட Trim பண்ணிவிடுவோம்."

..."Very good. கடவுள் உண்மையிலேயே ஒரு சிறந்த தோட்டக்காரர்.

இந்த உலகம் அவர் பராமரித்து வரும் தோட்டடம்.

நாம் பூஞ்செடிகளில் மலரும் பூக்கள்."

"ஹலோ! என்ன இது. என் பூந்தோட்டத்தை பார்த்திட்டு கடவுளை ஏன் உள்ளே இழுக்கிறீங்க?

நான்தான் தோட்டக்காரன். கடவுளா?

என்னைக் Comment செய்யாமல், கடவுள உள்ள இழுக்கிறீங்க!

கடவுளா என் தோட்டத்தைப் பராமரிக்றார்?"

..."கொஞ்சம் பொறுங்க. நீங்கள் நல்ல தோட்டக்காரர்தான்.

இப்போ 
இந்த உலகத்தை கடவுள் பராமரித்து வரும் தோட்டடமாகக் கற்பனை  செய்து கொள்ளுங்கள்.

நம்மை அதில் வளரும் பூஞ்செடிகளாகவோ,  அவற்றில் மலரும் பூக்களாகவோ கற்பனை செய்து கொள்ளுங்கள்."

"ஹலோ! நான் கடவுளையே நம்பவில்லை. பிறகு எப்படி கற்பனை செய்து கொள்ளமுடியும்?"

..."'கடவுள் இருந்தால் உலகில்  தீமைகளுக்கு இடம் கொடுத்திருப்பாரா?' என்பதுதான் உங்கள் பிரச்சனை.

நீங்கள் கடவுளை ஒரு தோட்டக்காரராக கற்பனை செய்து கொண்டால், 
இயற்கை நிகழ்வு எதுவும் தீமை அல்ல, மாற்றங்கள்தான் என்பது புரியும்.

ஒரு ஐந்து நிமிடம் தருகிறேன்.
கொஞ்சம் சிந்தியுங்கள்.
உங்கள் தோட்டத்தையும் உலகமாகாகிய தோட்டத்தையும்

நீங்கள் தோட்டத்தைக் கவனிப்பதையும், உலகத்தைக்
கடவுள் கவனிப்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்."

(ஐந்து நிமிடம் கழித்து)

"ஒப்பிட்டுப் பார்த்தேன்.
கொஞ்சம் புறியறது மாதிரி தெரியுது.

புரிந்ததைச் சொல்றேன்.

நான் எனது தோட்டத்தைத் தொடர்ந்து அழகாக வைப்பதற்காக அப்பப்போ சில மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறேன்.

ரோசாச் செடிகளை Trim பண்ணிவிடுவது செடிகளைக் காயப் படுத்துவதற்கோ, வெட்டி அழிப்பதற்கோ அல்ல.

செடி நன்கு தளிர்த்து, நிறைய பூத்து, மேலும் அழகாகக் காட்சியளிப்பதற்காகத்தான்.

மல்லிகை மலர்களை மொட்டாக இருக்கும்போது பறிப்பது, அவைச் செல்லவிருக்கும் மாலைகளில் விரிந்து, மாலைகள் அழகாக இருப்பதற்காகத்தான்.

செடிளிலேயே மலரவிட்டால் அவற்றிலேயே வாடிக் கீழே விழும்.

திருமண ஜோடிகளையும் அலங்கரிக்காது, மற்ற பெண்களின் தலைகளையும் அலங்கரிக்காது.

மரங்களை வெட்டியது அவற்றை அவற்றை அழிப்பதற்காக அல்ல.

வெட்டப்பட்ட மரங்கள் நான் கட்டிய புதிய வீட்டின் நிலைகளாகவும், சன்னல்களாகவும்,மேசை நாற்காலிகளாகவும் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக வேறு மரக்கன்றுகளை நட்டிருக்கிறேன்.

பழைய பூஞ்செடிகளை அகற்றி யிருப்பது புதிய செடிகளை நடுவதற்காகத்தான்.

ஆக, தோட்டக்காரன் என்ற முறையில் 

எனது தோட்டத்தில் அழிவு வேலை எதுவும் செய்யவில்லை. 

ஆக்க வேலைகள்தான் செய்திருக்கிறேன்,

 தோட்டத்தை மேலும் மேலும் அழகு படுத்துவதற்காக.

உலகைத் தோட்டமாகவும், கடவுளைத் தோட்டக்காரனாகவும் கற்பனை செய்து பார்த்தால்

இயற்கை நிகழ்வுகள் அழிவு வேலைகள் அல்ல, 

இறைவன் செய்து கொண்டுவரும் ஆக்க வேலைகளே என்பது புரிகிறது."

..."Very good. அப்போ, கடவுளை ஏற்றுக் கொள்கிறாய்!"

"ஏற்றுக் கொள்ளலாம் போல்தான் தெரிகிறது.

ஆனாலும் இன்னும் சில விசயங்கள் புரியவில்லை."

..."இயற்கை நிகழ்வுகளின்போது மனிதர்கள் மரணிப்பது, சூழ்நிலை மாசுபடுவது போன்ற விசயங்கள், சரியா?"

"Correct. மனிதர்கள் வாழத்தானே உலகம், ஏன் அழிகிறார்கள்?

தமிழ்நாட்டில் சுனாமி ஏற்பட்டபோது ஏற்பட்ட மரணங்கள் பற்றிதான் உங்களுக்குத் தெரியுமே."

..."நமது புத்தியின் உதவி கொண்டு இறைவன் இருக்கிறார் என்பதை மட்டும் அறியலாம்.

காரணம் இல்லாமல் காரியம் இல்லை (No effect without cause) என்பது புத்திக்குத் தெரியும்.

மாறாத இயற்கை விதிகளின்படி 

சதா மாறிக் கொண்டும், இயங்கிக் கொண்டிருக்கும் உலகம்

 தன்னைத்தானே உண்டாக்கி யிருக்க முடியாது என்றும் நமது புத்திக்குத் தெரியும்.

உலகின் மேல் வாழும் மனிதனுக்கு மட்டும்தான் புத்தி இருக்கிறது,

மண்ணுக்குப் புத்தி இல்லை என்பதும் நமது புத்திக்குத் தெரியும்.

நாம் பிறந்து வளர்ந்த பிறகே நமக்கு புத்தி இருக்கிறது என்று,

 நமது புத்தி சொன்ன பிறகுதான் நமக்கே தெரியும்.

 புத்தியே இல்லாத சடப் பொருள் தன்னைத் தானே படைத்திருக்க முடியாது என்றும்,

நம்மை நாமே படைக்கவில்லை என்பதும் நமது புத்திக்குத் தெரியும்.

ஆகவே அனைத்துக்கும் ஒரு ஆதி காரணர் இருக்கிறார் என்றும் நமது புத்திக்குத் தெரியும்.

அவர் நமது புத்திக்கு எட்டாதவர் என்றும் நமது புத்திக்குத் தெரியும்."

"புத்திக்கு எட்டாதவரைப் பற்றி எப்படி அறிவது?"

..."இப்போது கடவுள் இருகிறார் என்பதை விசுவசிக்கிறீர்களா?"

"விசுவசிக்கிறீர்களா என்றால்?"

..."எப்போதாவது கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?"

"இல்லை."   

..."இப்போது உங்கள் தோட்டத்தையும், உலகையும் ஒப்பிட்டுப் பேசியபின் 

அவர் இருக்கிறார் என்பதை நம்பணும்போல் இருக்கிறதல்லாவா?"

"கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். இப்போது கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்."

..." Very good.  நீங்கள் விசுவசிக்க ஆரம்பித்து விட்டீர்கள்.

You have entered Faith. But it is not enough. You must go deep into it."

"விசுவாசம் பற்றி விளக்க முடியுமா?''

..."உங்களைப் படைத்த கடவுள் உங்களுடன்தான் இருக்கிறார்.

 உங்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

உங்கள் வாழ்வில் என்ன நடந்தாலும் அவருடைய அனுமதியோடு, உங்கள் நன்மைக்காகவே நடக்கும்.  

இந்தக் கருத்துக்களை மையமாக வைத்து ஒரு இரண்டு நாட்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிந்தியுங்கள்.

மனதில் ஒரு தெளிவு பிறக்கும்.

அப்புறம் சந்தித்து விசுவாசம் பற்றி பேசுவோம்.

மக்களுடைய மரணம், வேதனை, தீமை ஆகியவை பற்றியும் பேசுவோம்.."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment