"உங்கள் பெயர் வானகத்தில் எழுதியுள்ளது என்றே மகிழுங்கள்" (லூக்.10:20)
****** ***** ***** *****
கடவுள் நம்மைப் படைக்கும்போது தன் சாயலாகப் படைத்தார்.
தன்னுடைய பண்புகளான அன்பு,அறிவு, ஞானம், வல்லமை ஆகியவற்றை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
அவருடைய பண்புகள் அளவற்றவை. நம்முடையவை அளவுள்ளவை.
அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட பண்புகளின் உதவியுடன்தான் நாம் இவ்வுலகில் வாழ்கிறோம், சாதனைகள் புரிகிறோம்.
அவர் நம்முடன் பகிர்ந்து கொண்ட பண்புகளை சரியான முறையில் பயன்படுத்தினால்
நமது வாழ்க்கையும் சாதனைகளும்
கடவுளுக்கு ஏற்றவையாய் இருக்கும், நமக்கு நிலை வாழ்வைப் பெற்றுத்தரும்.
தவறானமுறையில் பயன்படுத்தினால் நித்திய இழப்பைப் பெற்றுத்தரும்.
தவறான முறையில் பயன்டுத்துபவர்கள் கூட
தங்கள் சாதனைகள் குறித்து பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
மகிழ்ச்சியும் அடைகிறார்கள்.
உலகில் ஊழல் புரிவதில், சாதனைகள் புரிந்து கொண்டிருப்பதாகப் பீற்றிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் இதற்குச் சிறந்த உதாரணம்.
ஆனால் தவரான முறையில் புரிந்த சாதனைகளால் கிடைக்கும் மகிழ்ச்சி பாராட்டத் தக்கதும் அல்ல, நிரந்தரமானதும் அல்ல.
நேர்மையான முறையில்
இறைவனின் அருளுடன் சாதிக்கும் எந்தச் சாதனையும்,
உலகக் கண்ணோக்கில் எவ்வளவு சிறியதாய் இருதாலும்,
ஆன்மீகக் கண்ணோக்கில் நித்திய மதிப்பு உடையவை.
அதனால் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிரந்தரமானது,
விண்ணச் சம்பாவனையும் நிரந்தரமானது.
இறைவனின் கட்டளையை மீறும்படியாக சோதனை வருகிறது.
அதை வெல்வதற்கு இறைவனிடம் அருளுதவி கேட்கிறோம்.
இறைவன் அருளோடு சோதனையை வெல்கிறோம்.
இது ஒரு சாதனை.
உலகின் கண்களுக்கு இது ஒன்றுமில்லாத நிகழ்ச்சியாக இருக்கலாம்.
ஆனால் இறைவன் முன்னிலையில் அவருடைய அருளால் செய்யப்படும் எல்லாம் சாதனைதான்.
ஒவ்வொரு சாதனைக்கும் விண்ணகத்தில் இறைவனின் பரிசு உண்டு.
அப்பரிசை எண்ணி மகிழ வேண்டும்.
மண்ணுலக மாந்தரின் பாராட்டைப் பெறுவதற்கான சாதனைகள் புரிய மிகவும் கஸ்டப்பட்டு உழைக்க வேண்டும்.
அப்படியே கஸ்டப்பட்டு உழைத்தாலும்
வரும் பாராட்டு மின்னலைப்போல,
வந்தது போல் இருக்கும், போய்விடும்.
ஆனால் விண்ணக வேந்தரின் பாராட்டைப் பெற கஸ்டப் படவேண்டியதே இல்லை.
அதுமட்டுமல்ல அவருடைய உதவியும் தொடர்ந்து இருக்கும்.
பாராட்டும் நிரந்தரமாக (Everlasting) இருக்கும்.
சில கஸ்டமில்லாத Sample சாதனைகள்.
1.நண்பர் ஒருவரை கடினமான வார்த்தைகளால் திட்டிவிட்டோம்.
திரும்பவும் முகம் கொடுத்து பேச Ego தடுக்கிறது.
இறைவனை உதவிக்கு அழைக்கிறோம்.
துணிச்சல் வருகிறது.
துணிந்து நண்பனிடம் சென்று 'Sorry' சொல்கிறோம்.
ஒரு 'Sorry' யால் ஒடிந்த உறவு ஒட்டுகிறது.
விண்ணகத்தில் இறைத்தூதர்களின் கைதட்டல் கேட்கிறது!
விண்ணில் நமது சாதனைப் பதிவாகிறது!
2. ஆறு மணிக்குப் பூசை.
ஐந்து மணிக்கு எழ வேண்டும்.
கண் திறக்க மறுக்கிறது.
'ஒரு ஐந்து நிமிடம்' உள்ளம் சொல்கிறது.
'ஆண்டவரே வாரும்' இருதயம் கூப்பிடுகிறது.
ஆண்டவரின் அருள்வருகிறது.
துணிந்து எழுகிறோம்
நேரத்தோடு பூசைக்கு வருகிறோம்.
இது ஒரு சாதனையா?
நம்மையே ஒறுத்து நாம் செய்யும் எல்லாம் சாதனைகள்தான்.
3.கோவிலில் திவ்ய பலி பூசை நடந்து கொண்டிருக்கிறது.
Pants pocket ல் செல் அலறுகிறது.
முக்கியமான அழைப்பாக இருக்குமோ?
இருந்துவிட்டுப் போகட்டுமே.
ஆண்டவருக்குப் பின்தான் எல்லாம்.
மனதைப் பீடத்தின் பக்கம் திருப்புகிறோம்.
4.பகல் ஒரு மணி. நல்ல பசி. Non-vegetarian hotel அருகே நடந்து கோண்டிருக்கிறோம்.
உள்ளே சென்று பிரியாணி ஒரு பிடி பிடிக்கணும் போலிருக்கிறது.
ஆனால்,
ஆண்டவருக்காக ஆசையை அடக்கிக் கொண்டு நேரே
vegetarian hotelக்குச் சென்று சாப்பிடுகிறோம்.
உண்மையிலேயே விண்ணகத்தில் நம் பொருட்டு மகிழ்ச்சி உண்டாகும்.
இவையெல்லாம் சாதனைகளா?
இவைகளும் சாதனைகளே.
நம்மை நாமே ஒறுப்பதுதான் மிகப் பெரிய சாதனை.
புனித சவேரியார் உலகம் எல்லாம் கஸ்டப்பட்டு சுற்றி சாதித்ததை
புனித குழந்தைத் தெரசாள்
கன்னியர் மடத்தின் நான்கு சுவர்களின் உள் இருந்தபடியே
தன் ஒறுத்தல் முயற்சிகளாலும், செபத்தாலும் சாதித்துவிட்டாளே!
பணத்தின் ஆதிக்கத்தினால்
சங்கடப்பட்டுக் கொண்டிருந்த நம் திருச்சசபையைத்
தன் வறுமையினால் சரி செய்தாரே புனித பிரான்சிஸ் அசிசி!
செயல்பாடுகளின் அளவைக் கொண்டு சாதனைகளின் அளவு மதிப்பிடப்படுவதில்லை.
அவை யாரை, எந்த அளவுக்குத் திருப்திப் படுத்துகின்றன என்பதை வைத்துதான் அவற்றின் அளவு மதிப்பிடப்படுகிறது.
ஒரு சிறு குழந்தைக்கு இறைவன் பெயரால் ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்தாலும் அது பெரிய சாதனைதான்.
ஏனெனில் அது எல்லாம் வல்ல கடவுளைத் திருப்திப்படுத்துகிறது.
அற்பப் புழுவுக்குச் சமமான நாம் எல்லாம் வல்ல கடவுளை திருப்திப்படுத்தினால் நாம் செய்தது பெரிய சாதனைதானே!
இறைவனுக்காக, இறைவன் அருளால் நாம் செய்யும் எல்லா காரியங்களும் சாதனைகள்தான்!
ஒவ்வொரு வினாடியும் சாதனை புரிவோம்.
வாழ்க்கையையே சாதனை ஆக்குவோம்!
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment