Monday, December 31, 2018

"வார்த்தை உண்மையான ஒளி."

"வார்த்தை உண்மையான ஒளி."
**************************
"செல்வம்! "

"இதோ வந்திட்டேங்க........முதல்ல காபியக் குடிங்க."

"நீ முதல்ல பக்கத்தில உட்கார்."

"உட்காருகிறேன். நீங்க காபியக் குடிங்க.........குடிச்சாச்சா? இப்ப சொல்லுங்க."

"   'ஆதியிலே வார்த்தை இருந்தார்.'

அருளப்பர் தன் நற்செய்தி நூலை இப்படி  ஆரம்பிக்கிறார்.

'ஆதியிலே' என்றால் 'துவக்கத்திலே'ன்னு அருத்தம்.

கடவுளுக்கு துவக்கமும், முடிவும் கிடையாது.

ஆதியே இல்லாத கடவுளை ஏன்  'ஆதியிலே இருந்தார்னு அருளப்பர்  சொல்லுகிறார்? "

"அதிலே இன்னும் இரண்டு சொற்கள் இருக்கின்றனவே, 'வார்த்தை', 'இருந்தார்'.

அவற்றையும் சேர்த்துக் கேளுங்க."

"சரி. கேட்டாச்சு. சொல்லு."

"தமிழிலே ஒரு பழமொழி உண்டு.

'ஆற்றிலே வெள்ளம் கரை புரண்டு ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கணும்."

"ஏண்டி, மனிதனை 'நாய்'ன்னு சொல்லிட்ட."

"நாய்'ன்னு கெட்ட வார்த்தை இல்லீங்க.

நன்றியுள்ள பிராணி,

நமக்கு எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு தரும் பிராணியுங்கூட.

நமது திருச்சபையில

'ஆண்டவரின் நாய்கள்'ன்னு ஒரு சபை (Religious order)

இருக்கிறது தெரியுமா?"

"என்னடி புதுசுபுதுசா சொல்ற?"

" 'தொமினிக்கன் சபை'ன்னு ஒண்ணு இருக்கு தெரியுமா?"

"தெரியும்."

அந்த சபையை English ல

Dominicans னு சொல்வோம்.

இலத்தீன்ல

'Domini Canes' (The dogs of the Lord)

ன்னு சொல்லுவோம்.

எதிரிகளின் தப்பறையான கொள்கைகளிடமிருந்து (Heresies)

திருச்சபையைப் பாதுகாப்பதற்காக

புனித தொமினிக் (St. Dominic)

ஏற்படுத்திய சபை.

(Dominic’s original focus was the heresy of Albigensianism.)"

"சரி. பழமொழிக்கு வா."

"ஒவ்வொரு பிராணிக்கும் ஒரு இயற்கை குணம் உண்டு. 

அதை மாற்றுவது கடினம்.

மனிதன் மனித மொழியால் மட்டுமே பேச முடியும்.  

மனிதன் அளவுள்ளவன், அவனது மொழியும் அளவுள்ளது.

அதேபோல மனித புத்திக்கும் (Human intellect) ஒரு எல்கை உண்டு.

எல்லையற்ற பரம்பொருளைத் தியானிக்கும்போது

அவரைத் தன் சிந்தனை எல்கைக்குள் கொண்டு வருவான்.

அவனால் உருவுள்ள பொருளைத்தான்
நினைக்க முடியும்.

ஆகவேதான் உருவம் இல்லாத கடவுளுக்கு

ஒரு உருக் கொடுத்து

அப்புறம் அவரைத் தியானிக்கிறான்.

ஆனாலும் கடவுளுக்கு உருவம் இல்லை என்று அவனுக்குத் தெரியும்.

தந்தை இறைவனை

ஒரு நீண்ட தாடியுள்ள தாத்தா உருவத்தில் கற்பனை செய்தாலும்

அவருக்கு உருவம் இல்லை என்ற உள்ளுணர்வோடுதான்

அவரைத் தியானிக்கிறான்.

நான் காலையில் தியானிக்கும்போது தாத்தாவின் மடியில் உட்கார்ந்திருப்பதுபோல கற்பனை செய்துகொள்வேன்.

இது மனதை ஒருநிலைப்படுத்த உதவியாய் இருக்கும்.

கணித ஆசிரியர்

ஒரு கணக்கிற்கான விடைகாணச் சொல்லித்தரும்போது

முதலில் சொல்லுவார்:

'விடையை X என்று வைத்துக்கொள்க'.

அப்புறம் கரும்பலகையில் எழுதுவார்:

Ans. = X.

அப்புறம் சொல்லுவார்:

'நமக்கு விடை தெரிந்துவிட்டது, X.

'Xன் மதிப்பைக் காணவேண்டியது மட்டும்தான் நமது வேலை.

அது ரொம்ப இலேசு.'.

என்று கூறி X ன் உதவியுடன் கணக்கின் விடையைக்காண்பார்.

நமது ஆன்மீகத்திலும் இது உதவியாய் இருக்கும்.

தாடி வைத்த தாத்தா உருவை தந்தை இறைவனாக வைத்துக்கொண்டு தியானிப்போம்.

இந்த தியான வாழ்வின்  இறுதியில் விண்ணகம் செல்லும்போது

தந்தையை அவராகவே காண்போம்."

"ஏண்டி, நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் நான் கேட்ட கேள்வி என்னாச்சி?"

"ஏங்க அடிப்படை வாய்பாடு தெரியாம கணக்கு செய்ய முடியுமா?"

நீ கணக்கில புலிங்கிறது புரியுது. இப்போ ஆன்மீகத்துக்கு வா."

"அளவுள்ள மனித மொழியால அளவற்ற கடவுளை முழுவதுமா விபரிக்க முடியாது.

மனிதனுக்கு துவக்கமும் முடிவும் உண்டு.

அவனைப் பொறுத்தமட்டில் அவனது துவக்கத்துக்கு முன்னால் அவன் இல்லை.

(He was nothing before he was created)

ஆகையினால்தான்
துவக்மே இல்லாத காலத்தைக்கூட மனிதனாகிய அருளப்பர் அவருக்குத் தெரிந்த மொழியில்,

'ஆதியிலே வார்த்தை இருந்தார்.'

என்று குறிப்பிடுகிறார்.

நாம் தாத்தா போன்று உருவம் கொடுத்துள்ள பிதாவை

உருவம் அற்ற தந்தை இறைவன் என்று

எப்படிப்  புரிந்து கொள்கிறோமோ,

அதுபோலவே

'ஆதியிலே'  என்ற என்ற வார்த்தையை

'துவக்கமில்லாத காலத்திலிருந்தே' என்று புரிந்துகொள்ள வேண்டும்.

நமக்கு முக்காலம்.

இறைவனுக்கு நித்திய காலம்.

நமது நிகழ்காலத்திற்கு முன்பு நடந்ததை எல்லாம் நாம் கடந்த காலமாகவே குறிப்பிடுவோம்.

ஆகவேதான் அருளப்பர்
'இருந்தார்' என்று குறிப்பிடுகிறார்.

நாம் அதை 'இருக்கிறார்' என்று புரிந்துகொள்ள வேண்டும்.

கடவுள் நித்திய காலமாகவே தன்னை அறிகிறார்.

God knows Himself from all eternity.

நமது அறிவு ஏதாவது உருவில் இருக்கும், அல்லது வார்த்தையில் இருக்கும்.

ஆகவேதான் இறைவனின் தன்னைப்பற்றிய ஞானத்தை நம் மொழியிலேயே 'வார்த்தை' என்றார்.

அருளப்பர் 'வார்த்தை' எனக் குறிப்பிடுவது பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாம் ஆள், மகன்.

'வார்த்தை மனுவுருவானார்'.

நித்திய காலமாகவே தந்தைக்கும் மகனுக்கும் உள்ள அன்புதான் பரிசுத்த ஆவி."

"பரிசுத்த ஆவியைப்பற்றி அருளப்பர் எங்கே குறிப்பிடுகிறார்? "

"ஏன், அது உங்களுக்குத் தெரியாதா? " 

"உன் வாயினாலே சொன்னா குறைந்தா போயிடுவ. சொல்லேன்."

"இயேசு ஞானஸ்நானம் பெறும்போது,

'ஆவியானவர் புறாவைப்போல வானிலிருந்து இறங்கி, இவர்மேல் தங்கியதைக் கண்டேன்.'

என்று ஸ்நாபக அருளப்பர் கூறுகிறார்.

ஆமா, சாப்பாடு வேண்டுமா, வேண்டாமா?

அல்லது கொஞ்சமுன் குடிச்ச காபியே இன்று முழுதும் தாக்குப்பிடிக்குமா?"

"அதெப்படி? "

"அதெப்படின்னா? உங்க மேஜை மேலேயே Stove ஐ வைத்து இட்டலி அவிக்கடுமா? "

"சரி மீதிய நானே பார்த்துக்  கொள்கிறேன்.நீ கூப்பிடும்போது வந்தால்போதும்"

அருளப்பர் இயேசுவைபப் பற்றி குறிப்பிடும்போது
'வார்த்தை உண்மையான ஒளி.' என்கிறார்.

இயேசுவே அவர் போதிக்கிற காலத்தில்,
.
"நானே உலகின் ஒளி."
என்கிறார்.

உலகிற்கு ஒளி கொடுக்க சூரியனைப் படைத்தவர் அவர்தான்.

இன்று அவர்,

"நானே (நான் மட்டும்
தான்) உலகின் ஒளி."

என்கிறாரே, ஏன்?

இயேசு குறிப்பிடுவது நமது ஆன்மீக உலகம்.

இயேசு உலகிற்கு வந்தது,

விடுதலை இறையியல்வாதிகள் குறிப்பிடுவதுபோல

இவ்வுலக சம்பந்தப்பட்ட விடுதலைகளுக்காக அல்ல, 

அப்படி இருந்திருந்தால் ரோமையரிடமிருந்து யூதர்கட்கு விடுதலை வாங்கிக் கொடுத்திருப்பார், அவர் செத்திருக்கமாட்டார்.

அவர் வந்தது ஆன்மீக விடுதலைக்காக.

பாவத்திலிருந்து விடுதலை பெற்று,

நாம் செல்லும் விண்ணகப் பயணத்தில் இயேசு ஒளியாய் இருக்கிறார்.

இயேசு நம்மோடு வராவிட்டால் நாம் வழி தவறிப்போக நேரிடும்.

அது மட்டுமல்ல, ஆன்மீக சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சனைக்கும்

இயேசு என்ற ஒளியின் மூலம்தான் தீர்வுகாணவேண்டும்.

எந்தப் பிரச்சனைக்கும் தீர்வுகாண இயேசு பயன்படுத்திய வழிமுறைகள்

அன்பு,

இரக்கம்,

மன்னிப்பு மட்டும்தான்.

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை கல்லால் எறிந்துகொல்ல வேண்டுமென்று மற்றவர்கள் கூறும்போது இயேசு அவளை மன்னித்தார்.

தன்னைக் காட்டிக்கொடுத்த யூதாஸைக்கூட அவர் 'நண்பா' என்றுதான் அழைத்தார்.

சிலுவையில் தொங்கும்போது,

இயேசு, "

தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" 

என்று  வேண்டியது யூதாசுக்கும் சேர்த்துதான்.

இயேசு வெறும் formality க்காக வேண்டவில்லை.

உண்மையாகவேதான் வேண்டினார்.

மகன் வேண்டுவதை தந்தை உறுதியாக மறுக்க மாட்டார்.

நிச்சயமாக இயேசுவின் மரணத்திற்குக் காரணமானவர்கள்

கடைசி நேரத்தில் தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப் பட்டிருப்பார்கள்.

நாம் மோட்சத்திற்குச் செல்லும்போது

நிச்சயமாக அவர்கள்தான்

நம்மை வரவேற்று

இயேசுவிடம் அழைத்துச் செல்வார்கள்.

இயேசு நம்மைப் பார்த்து

"உலகிற்கு ஒளி நீங்கள்.''

என்று கூறியிருக்கிறார்.

இயேசு என்னும் ஒளியை நாம் பிரதிபலிக்க வேண்டும்.

மற்றவர்கள் நம்மில் இயேசுவைக் காணவேண்டும்.

"ஏங்க, ஏதாவது வாழ்த்துக் கூறப்போகிறீர்களா?

நானும் சேர்ந்து கொள்கிறேன்."

"செல்வம், வா.

அன்பு நெஞ்சங்களே,

நம்மை இரட்சிக்க,

மனுவுரு எடுத்த

வார்த்தையானவரின்

அன்புடனும்,

பரிவுடனும்,

மன்னிக்கும் மனப்பான்மையுடனும்

பூக்கவிருக்கும்

புத்தாண்டை

வரவேற்போம்.

லூர்து அந்தோனி
செல்வ பாக்கியம்

No comments:

Post a Comment