மோட்சம் எங்கே இருக்கிறது?
****************************
அண்ணாச்சி!"
"என்ன தம்பி? "
"ஒரு சின்ன சந்தேகம், ஒரு பெரிய விசயம் பற்றி."
"எப்பவுமே கேள்வி சிறுசாத்தான் இருக்கும், பதில்தான் கொஞ்சம் நீளமாயிருக்கும். சரி, கேளு."
"நல்ல கள்ளன் சாகப்போற நேரத்தில மனம் திரும்பினான்.
நமது அன்னை மரியாள் தாய் வயிற்றில் உற்பவித்த நாளிலிருந்து
மரணம் வரை ஆண்டவருக்காகவே வாழ்ந்தார்கள்.
இருவருக்கும் ஒரே மோட்சம்தானா?"
நீ கேட்பதைப் பார்த்தால் இருவருக்கும் அதே ஊர்தானான்னு கேட்பது மாதிரி இருக்கு."
"நீங்க சொல்றது புரியல."
"நீங்க கேட்கிறது
'நான் விபசாயம் பார்க்கிறேன்,
நீங்க ஓய்வு பெற்ற ஆசிரியர்,
இருவரும் இருக்கிறது ஒரே பாவூர்ச் சத்திரம்தானா'ன்னு
கேட்கிறது மாதிரி இருக்கு."
"இருவருக்கும் ஒரே மோட்சம்தானான்னு கேட்டேன்.
நீங்க சொல்றதப் பார்த்தா நான் கேட்டதுல ஏதோ தப்பு இருக்கிறது மாதிரி தெரியுது.
ஆனால் என்ன தப்புன்னுதான் தெரியல."
"தப்பு நீங்க கேட்டதில இல்ல,
புரிந்துகொண்டதிலதான் தப்பு.
நமது மொழி நமது அனுபவங்கட்கு உட்பட்ட,
நாம் வாழும் உலகைச் சார்ந்த விசயங்களைப் பற்றிய
நமது அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்குப் பயன்படுகிறது.
நமது உலகம் ஒரு சடப்பொருள்.(Matter)
ஆகவே நமது அறிவு சடப்பொருள் பற்றியதாகவே இருக்கும்.
நம்மைப் படைத்த கடவுள் ஒரு ஆவி.(Spirit)
நமது சடப்பொருள் அனுபவங்களுக்கு அப்பாற்பட்டவர்.
நமது ஐம்புலன்களால் உணரப்படமுடியாதவர்.
காலங்கட்கு அப்பாற்பட்டவர்.
அவரைப்பற்றிய நமது அறிவு விசுவாசத்திற்கு உட்ட்டது.
அவர் சம்பந்தப்பட்ட விசயங்களைப்பற்றி பேசுவதற்கு நமது மொழியில் வார்த்தைகள் இல்லை."
"நீங்கள் சொல்றதப்பார்த்தா,
'மோட்சம் இறைவன் சம்பந்தப்பட்ட விசயம்,
அதை விளக்குவதற்கு நம் மொழியில் பொருத்தமான வார்த்தை இல்லை,
ஆகையினால அதைப்பற்றி எதுவும் கேட்காத'ன்னு சொல்றது மாதிரிஇருக்கு."
"இல்ல. நான் சொல்றத கவனமா கேளு.
யாரும் தென்காசிக்குப் போகிற மாதிரி மோட்சத்துக்குப் போகமுடியாது."
"என்னது? மோட்சத்துக்குப் போகமுடியாதா?"
"ஹலோ! அரை குறையாகச் சொல்லாமல் நான் சொன்னது முழுவதையும் சொல்லு."
"யாரும் தென்காசிக்குப் போகிற மாதிரி மோட்சத்துக்குப் போகமுடியாது"
"ஏன் முடியாதுன்னு சொல்லு பார்ப்போம்."
"ஏன் நேரத்த வீணாக்குறீங்க. எனக்குப் புரியாமல்தான் உங்ககிட்ட கேட்கிறேன். நீங்க எங்கிட்ட கேட்கிறீங்க.
தென்காசிக்கும், மோட்சத்துக்கும் என்னங்க சம்பந்தம்?"
தென்காசி ஒரு இடம், இடத்திற்குப் போகலாம்.
மோட்சம் ஒரு இடம் அல்ல.
அது வாழ்க்கை நிலை.
Heaven is not a place, it is state of being.
அது நமது ஆன்மா நித்தியத்துக்கும் அனுபவிக்கப்போகும்
இறைவனோடு இணைந்த பேரின்ப நிலை.
நாம் இவ்வுலகில் மரித்தபின் நித்தியத்துக்கும் இறைவனோடு இணைந்தால்
அது பேரின்ப நிலை, அதாவது, மோட்சம்.
நித்தியத்துக்கும் இறைவனோடு இணையமுடியாவிட்டால்
அது பெருந்துன்பநிலை, அதாவது, நரகம்."
"உலக இறுதியில் நாம் உயிர்த்த பின்? "
"நாம் உயிர்த்தபின் நமது உடலோடு இதே பேரின்ப நிலையை அனுபவிப்போம்.
நமது உயிர்த்த உடலுக்கும் இடம் தேவை இல்லை. இயேசுவின் உயிர்த்த உடலைப்போலவே நம் உடலும் இருக்கும்."
" இன்னொன்று புரியவில்லையே.
நல்ல கள்ளனும் பேரின்பம் அனுபவிக்கிறான்,
புனிதர்களும் பேரின்பம் அனுபவிக்கிறார்கள்.
புனிதர்களாக வாழ்ந்தவர்களுக்கும்,
வாழ்நாள் முழுவதும் திருடிவிட்டு
மோட்சத்தையும் திருடியவனுக்கும்
ஒரே பேரின்பம்தானா?
வாழ்நாள் முழுவதும் உழைத்ததற்கு Extra benefit கிடையாதா? "
"உங்க வீட்டில யார்யாரெல்லாம் சாப்பிடராங்க?"
"இதென்ன கேள்வி, எல்லாரும்தான் சாப்பிடுகிறோம் "
"எல்லோரும் ஒரே அளவா சாப்பிடுரீங்க?"
"அதெப்படி? சின்ன பாப்பா ஒரு இட்டலி சாப்பிடுவா.
பெரிய பாப்பா 3 இட்லி.
மனைவி 4 இட்லி.
நான் 5 இட்லி."
"நீ 5 இட்லி சாப்பிடற.
உங்க பாப்பா ஒரு இட்லி சாப்பிடுகிறாள்.
பாப்பா வயித்துக்குப் போதுமா?"
"தெரியாதது மாதிரி கேட்கிறீங்க.
சாப்பாட்டின் அளவு அவரவர் வயதுக்கு ஏற்றபடி மாறலாம்.
எல்லோரும் திருப்தியாகத்தான் சாப்பிடறோம்.
ஆமா, நான் மோட்ச பேரின்பத்தைப் பற்றிக் கேட்டா
நீங்க சாப்பாட்டப்பற்றி கேட்கிறீங்க?"
"நல்ல கள்ளன் உங்க வீட்டு பாப்பா மாதிரி.
அவனுடைய ஆன்மீகத் தகுதிக்கு ஏற்ற அளவு இன்பம் கிடைக்கும்.
அவனுக்கு அது பேரின்பம்தான்.
புனிதர்கட்கு அவர்கள் தகுதிக்கு ஏற்ற அளவு இன்பம் கிடைக்கும்.
அவர்கட்கு அது பேரின்பம்தான்.
நமக்கு அதிகமான பேரின்பம் வேண்டுமென்றால் அதற்கேற்றபடி வாழவேண்டும்."
சிற்றின்பத்தை ஒறுத்தால்
பேரின்பம் கிடைக்கும்.
லூர்து செல்வம்.
"
No comments:
Post a Comment