அன்பு தம்பி, தங்கைகட்கு.
***************************
அன்பு தம்பி, தங்கைகட்கு ,
எனது பிறந்தநாளைக் கொண்டாட மும்முறமாகத் தயாரித்துக் கொண்டிருப்பீர்கள்.
ஆயிரக்கணக்காய் பணம் செலவழித்து
விலை உயர்ந்த துணிமணிகள் வாங்கிக் குவித்திருப்பீர்கள்.
வீட்டுக்கு வண்ணம் தீட்டி,
கவர்ச்சிகரமான அலங்காரங்கள் செய்து முடித்திருப்பீர்கள்.
கிறிஸ்மஸ் விருந்திற்காக
உணவு தயாரிக்கத் திட்டம்தீட்டி
அதற்கான பொருட்களையும் வாங்கிச் சேர்த்திருப்பீர்கள்.
ஆனாலும்
முதல் கிறிஸ்ஸை என்னைப் பெற்ற
அன்னையும், வளர்த்த தந்தையும்
எப்படிக் கொண்டாடினார்கள் என்ற விபரத்தை
உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசிக்கிறேன்.
நான்
நீங்கள் வாழும் உலகையும்,
அதைச் சுற்றி விண்வெளியில் உள்ள
கோடிக் கணக்கான விண்மின்களையும் படைத்து
பராமரித்துவரும் சர்வ வல்லப கடவுள்
என்று உங்களுக்குத் தெரியும்.
பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய நான்
மனிதனாய்ப் பிறந்தது
வாழ்க்கையை அனுபவிப்பதற்காக அல்ல.
மனித இனம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாகத்
துன்பங்கள் பல பட்டு, சிலுவை மரத்தில் உயிரைப் பலியாக்கவே
மனித உருவெடுத்தேன்.
ஒரு ஏழைக் கன்னியை என் அன்னையாகத் தேர்ந்தெடுத்தேன்.
அவர்களை எனது அருளால் நிறப்பினேன்.
மனித இனத்திலேயே அருள் நிறைந்தவள் என் அன்னை மட்டுமே.
நான் நினைத்திருந்தால் ஒரு அரண்மனையில் சொகுசாகப் பிறந்திருக்கலாம்.
ஆனால் ஒரு மாட்டுக் கொட்டகையே எனது பிறப்பிடமாகத் தேர்ந்தெடுத்தேன்.
அது வெறுமனே மாடு தங்குமிடம் மட்டுமல்ல.
மாடுகளுக்கான toiletம் அதுதான்.
வயிற்றுக்குள்ளிருந்தே நான் வழிநடத்த
அம்மாவும்,
வளர்த்த தந்தையும் மாட்டுக் கொட்டகைக்குள் நுழைந்தார்கள்.
மாட்டுச்சாணி நாற்றம் அம்மாவின் வயிற்றுக்குள்ளிருந்த என் மூக்கையே துழைத்தது.
அம்மாவுக்கு எப்படி இருந்திருக்கும்?
பெருக்கிச் சுத்தம் செய்த வேலையை வளர்த்த தந்தை செய்தார்.
அந்த நாற்றமான சூழ்நிலையில்தான்,
அம்மாவிற்கு பிரசவ வலி ஏதும் கொடுக்காமல் நான் பிறந்தேன்.
அம்மா சென்ம மாசின்றி உற்பவித்ததால்
அவர்களுக்கு பிரசவ வலி ஏற்படவில்லை.
பிறந்த என்னை மார்கழி மாதக்குளிர் தாக்கியது.
குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த என்னைக்
கந்தைத் துணியால் போர்த்தி,
மாட்டிற்கு வைக்கோல் போடும் இடத்தில் கிடத்தினார்கள் அம்மா.
குளிரில் நடுங்கிக் கொண்டிந்த என் முகத்தை
அம்மாவும், வளர்த்த தந்தையும் பார்த்து மகிழ்ந்தார்கள்.
போர்த்த போர்வைகூட இல்லாமல் நடுங்கிக் கொண்டிருந்தபோது
சில இடையர்கள்
சில ஆட்டுக்குட்டிகளுடன் என்னைக் காண வந்தார்கள்.
நான் பிறந்த செய்தி முதல்முதல் அறிவிக்கப்பட்டது
இந்த ஏழைகட்குத்தான்.
விண்ணிலிருந்து வந்த முதல் நற்செய்தி,
"உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா."
அதைத் தொடர்ந்து வந்த செய்தி,
"உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக.
உலகிலே நன் மனதோற்குச் சமாதானம் உண்டாகுக."
உலகை மீட்க,
இறைவன் மகிமைக்காக,
உலக சமாதானத்திற்காக
உலகைப் படைத்த நான் ஏழையாய்ப் பிறந்தேன்.
ஏழையாய்ப் பிறந்த என் பிறந்த நாளைப்
பணக்காரத்தனமாகக் கொண்டாடலாமா?
உங்களைச் சிந்திக்கவைக்கவே உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
நான் விரும்புவது உங்கள் சுத்தமான இருதயத்தைத்தான்.
சிந்தித்து செயல்படுங்கள்.
இறைத் தந்தையில் என்றும் உங்கள் அன்பு அண்ணன்,
இயேசு கிறிஸ்து.
அன்பு இயேசுவே,
எங்கள் இரட்சகரே,
உமது விருப்பத்திற்கேற்ப
கிறிஸ்மஸ் விழாவை எளிமையாய்க் கொண்டாடுவோம்.
ஆடம்பரத்தை அகற்றி அதனால் மீந்த பணத்தை ஏழைகளோடுப் பகிர்ந்துகொள்வோம்.
ஏழ்மையை நேசிப்போம்.
இருதயத்தை
பாவக்கறையின்றி
சுத்தமாக வைத்திருப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment