Saturday, December 15, 2018

"தம்பி, இன்று பூசைக்கு வந்தீங்களா? "

"தம்பி,  இன்று பூசைக்கு வந்தீங்களா? "
*****************************
"தம்பி,  இன்று பூசைக்கு வந்தீங்களா? "

"வந்தேனே!''

'உங்களக் கோயிலில பார்த்ததாக ஞாபகம் இல்லையே."

"பார்த்தாத்தான ஞாபகம் இருக்கும். நான்தான் கோவிலுக்குள்ளேயே வரவில்லையே!"

"தம்பி , பூசைக்கு வந்தேன்னு சொன்ன."

"இப்பவும் சொல்றேன், நான் வீட்டிலிருந்து  பூசைக்கு வந்தது உண்மை.

ஆனால் கோவிலுக்குள் நுழையப்போகும்போது சாமியார் 'போய்ட்டுவா'ன்னு சொல்லிட்டாரு.

நானும் வந்திட்டேன்."

"தம்பி பொய் சொல்லாதீங்க. 

சாமியார் கோவிலில பூசை வைத்துக் கொண்டிருந்தார்.

அவர் எப்படி உங்களப் போகச் சொல்லியிருக்கமுடியும்? "

"அவர் குரல் பீடத்திலிருந்துதான் வந்தது,  'சென்று வாருங்கள், பூசை முடிந்தது." என்று.

"அடபாவி, பூசை முடியும்போது வந்துட்டு 'பூசைக்கு வந்தேன்'னு சொல்ற."

"நான் 'பூசைக்குதான்' வந்தேன். அவர் சீக்கிரம் பூசைய முடிச்சிட்டா நான் என்ன பண்ணுவேன்? "

"தம்பி, ஒவ்வொரு ஞாயிறும் காலை 8 மணிக்கு பூசை ஆரம்பிக்கிறது.

Suppose, 'காலை 7.45. க்கு கோவிலுக்கு வருகிறவர்கட்கு ஒரு  Gift வழங்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டால் என்ன செய்வ?"

"நீங்கள் சொல்றது புரியுது. இனிமேல் ஒவ்வொரு
ஞாயிறும் 8 மணிக்கு முன்பே பூசைக்கு வந்துவிடுவேன்."

திருப்பலி திருச்சபையின் அதிகாரப்பூர்வமான செபம். (Official Prayer of the Church)

அதனால்தான் உலகம் முழுவதும் ஒரே திருப்பலிமுறை பின்பற்றப்படுகிறது.

அதன் வார்த்தைகளை குருவானவர்கூட விருப்பம்போல் மாற்ற முடியாது.

உலகின் எந்தப்பகுதியில், எந்த மொழியில் பூசை கண்டாலும் நம் ஊரில் பூசை காண்பதுபோலவே இருக்கும்.

ஒரு குடும்ப உணர்வு இருக்கும்.

கத்தோலிக்கர் யாவரும் ஒரே குடும்பத்தினர் என்ற உணர்வைத் தருவது திருப்பலி.

திருப்பலியின்போது

நமது பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கிறோம்.

இறைவனின் வார்த்தைகளைக் கேட்கிறோம்.

நமது ஆண்டவராகிய இயேசுவை

நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத்

தந்தை இறைவனுக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கிறோம்.

பலிப்பொருளாகிய இயேசுவை நமது ஆன்மீக உணவாக உண்கிறோம்.

நாம் உண்ணும்போது நம்முள் வரும் இயேசுவோடு உரையாடுகிறோம்.

உரையாடும்போது அவருக்கு நன்றி கூறுவதோடு, நமக்கு வேண்டிய வரங்களைக் கேட்கிறோம்.

இயேசுவின் ஆசீரை குருவானவர் வழியாகப் பெற்று இல்லம் திரும்புகிறோம்.

திருப்பலியைத் தூய்மையான உள்ளத்தோடு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

திருவிருந்தில் தூய்மையான உள்ளத்தோடு  கலந்துகொள்ள வேண்டும்.

சாவான பாவம் இருந்தால் திருப்பலிக்கு முன்னே நல்ல பாவசங்கீர்த்தனம் செய்துகொள்ள வேண்டும்.

சாவான பாவத்தோடு இறைவனை உட்கொள்வது இயேசுவை அவமானப் படுத்துவதற்குச் சமம். அதுவும் ஒரு சாவான பாவம்.

ஏதோ கடமுறைக்காக,

பழக்கதோசத்தின் காரணமாக,

கூட்டத்தோடு கூட்டமாகக் கோவிலுக்கு வந்து,

ஏதோ சாக்லட்டை வாங்குவதுபோல

நற்கருணையை  இடது கையால் வாங்கி

வலதுகையால் வாய்க்குள் போட்டுவிட்டு

'ஹாயாக' வீட்டுக்குப் போவது

குளிக்கப்போய்ச்

சேற்றை அள்ளி

உடல்முழுவதும் பூசிக்கொள்வதற்குச் சமம்.

உரிய தயாரிப்போடு ஞாயிறு திருப்பலியில் கலந்துகொள்வது

நமது கடமை,

கடமுறை அல்ல!

ஒரு முறை புது மாப்பிள்ளை ஒருவர் புதுப்பெண்ணோடு மணப்பந்தலில் அமர்ந்திருந்தார்.

தாலி கட்டவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.

"மேளம் கொட்டச் சொல்லுங்கள்."

என்று ஒருவர் கூற,

மாப்பிள்ளை எழுந்து,

தான் இருந்த இடத்தில் தன் கைக்குட்டையைப் போட்டுவிட்டு

வெளியே ஓட ஆரம்பித்தார்.

"மாப்பிள்ளை!"  என்று ஒருவர் கத்த,

"கொட்டுமேளம் பார்த்துவிட்டு வாரேன்,"

என்று கூறிக்கொண்டே ஓடினார்.

இவருக்கும்,

பூசை நடந்து கொண்டிருக்கும்போது

கோவிலுக்கு வெளியே போய்ப்

பேசிக் கொண்டிருப்பவர்கட்கும் என்ன வித்தியாசம்?

திருப்பலி வெறும் பக்தி  முயற்சி மட்டுமல்ல,

நமது ஆன்மீக வாழ்வின் உயிர்.

இயேசு தன் உயிரைக் கொடுத்து

நமக்கு உயிரைப் பெற்றுத்தந்தது

கல்வாரியில் அவர்  கொடுத்த  திருப்பலி மூலம்தான்.

ஞாயிறு திருப்பலியில் ஒழுங்காகப் பங்கேற்போம்,

ஆன்மீக உயிர் பெற்று ஆண்டவரில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment