Saturday, December 8, 2018

"ஹலோ! ஒரு சந்தேகம்!"

"ஹலோ!  ஒரு சந்தேகம்!"
*******--*****---*************
"ஹலோ!  ஒரு சந்தேகம்!"

"உங்களுக்கு சந்தோசமணி என்று யார்  பெயர் வைத்தது? சந்தேகமணி என்றே வைத்திருக்கலாம்! பரவாயில்லை. கேளுங்க."

"உங்க கோயிலில என்ன விழா கொண்டாடினீங்க?"

"இதைக் கேட்கத்தானா இவ்வளவு பரபரப்பு? விழா அழைப்பிதழிலேயே போட்டிருக்கே. அழைப்பிதழ் உங்கள் கையிலதான இருக்கு."

"அதனாலதானே சந்தேகமே வந்தது."

"இப்ப சொன்னது சரியாப்போச்சா! சந்தோசம் வரவேண்டிய இடத்தில் சந்தேகம் வந்திருக்கு!"

"ஹலோ! சந்தோசம் எங்கிட்ட இருக்கு. வந்ததுதான் சந்தேகம்."

"அடபாவமே! சந்தேகம் வந்தால் சந்தோசம் போயிடுமே!  சரி, கேளும்"

"அமல அன்னைன்னா என்ன அருத்தம்? "

"உண்மையிலேயே தெளிவுபெறக் கேட்கிறீங்களா

அல்லது வெறும் வாதத்திற்காகக் கேட்கிறீங்களா? 

ஏன்னா, நாங்கள் மாதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது
உங்களுக்குப் பிடிக்காதே!"

"அந்தக் கவலை வேண்டாம். நான் கேட்டது கேள்வி, தரவேண்டியது பதில்."

"சரி, கேளுங்க."

"நான் ஏற்கனவே கேட்டுவிட்டேன். சொல்லுங்க."

"சொல்லப்போறதத்தான் கேளுங்கன்னு சொன்னேன், காதால.

இயேசுவின் தாய்,

தன் தாய் வயிற்றில் உற்பவிக்கும்போது

சென்மப் பாவம் இன்றி உற்பவித்தாள்.

அவளை அமலோற்பவி,

அமலோற்பவம்,

அமலஅன்னை என்று அழைக்கிறோம்.

அமலஅன்னையின் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் எட்டாம் தேதி கொண்டாடுகிறோம்."

"இதற்கு பைபிளில ஆதாரம் இருக்கா? "

"ஆதியாகமனத்தில்  ஏவாளை ஏமாற்றிய சாத்தானைச் சபிக்கும் வகையில் ஆண்டவர் கூறிய வார்த்தைகள்:

"உனக்கும் பெண்ணுக்கும்,

உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்:

அவள் உன் தலையை நசுக்குவாள்:

நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்."

இங்கு பெண் மாதாவையும்,  அவள் வித்து இயேசுவையும் குறிக்கின்றன.

"அவள் உன் தலையை
நசுக்குவாள்:" 

மாதா சாத்தானை வெல்வாள்,

அதாவது

பாவம் அவளை அணுகாது என்று

இறைவனே முன்னறிவித்திருக்கிறார்."

"ஹலோ! கொஞ்சம் பொறுங்கள்.

நீங்கள் சரியாக வாசிக்கவில்லை.

"அவர் உன் தலையை
நசுக்குவார்:"

என்றுதான் பைபிளில இருக்கு.

அவர் என்றால்  இயேசு,  மாதா அல்ல."

"கொஞ்சம்  பொறுமை.

கி.பி 382-405 (4ம் நூற்றாண்டின் இறுதி) காலக்கட்டத்தில்,

அன்றைய பாப்பரசரின் விருப்பத்திற்கு இணங்க

புனித ஜெரோம் மொழிபெயர்த்த,

திருச்பையின் அதிகாரப்பூர்வ

Vulgate இலத்தின் பைபிள்படி,

ஆண்ணவர் கூறியது,

Latin:

"Inimicitias ponam

inter te et mulierem,

et semen tuum et semen illius:

ipsa conteret caput tuum,

et tu insidiaberis calcaneo eius."

English:

I will put enmities

between you and the woman,

between your offspring and her offspring.

She will crush your head,

and you will lie in wait for her heel.”

தமிழ்:

"உனக்கும் பெண்ணுக்கும்,

உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே

பகையை
உண்டாக்குவோம்:

அவள் உன் தலையை நசுக்குவாள்:

நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய்."

"மூல நூலில் 'அவர்' என்றுதான் இருக்கிறது."

"மூல நூலில் உள்ள சம்பந்தப்பட்ட Pronoun ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது.

அது பயன்படுத்தப்படும் இடத்திற்கு  ஏற்றபடி ஆணையோ, பெண்ணையோ குறிக்கும்.

ஒரு உதாரணம், தமிழில்.

1. என்னுடைய அக்காமார் இரண்டு பேரும் படிச்சவங்க. 'அவங்க' வெளிநாட்டில வேலை பார்க்கிறாங்க.

2.என் தம்பிமார் இரண்டுபேரும் பள்ளிக்கே போகல.  'அவங்க' உள்ளூர்ல கடை வச்சிருக்காங்க.

இரண்டு வாக்கியங்களிலும் வருகிற 'அவங்க'ங்கிற Pronoun அ பாருங்க, உண்மை புரியும்."

"இது புரியுது. ஆனால் ஏன் ஜெரோம் அதைப் பெண்ணைக் குறிக்க எடுத்தாரு? இயேசுதானே சாத்தானை வென்றார்."

" யார் யாருக்குமிடையே இறைவன் பகையை உண்டாக்குவார்?"

"பெண்ணுக்கும், சாத்தானுக்குமிடையே."

"Correct. அப்போ சாத்தான் தலையை யார் நசுக்குவார்? "

"பெண்."

"பெண் அவளா? அவரா? "
.
"அவள்."

"Correct.  'அவள் உன் தலையை நசுக்குவாள்.' நீங்களே பதிலைச் சொல்லிட்டீங்களே!"

"அப்போ அடுத்த வரி? "

"சாத்தானின் வித்து பாவம்.

பெண்ணின் வித்து இயேசு. 

இயேசு பாவத்தை அழிப்பார்.

அவர் 'உலகின் பாவங்களைப் போக்க வந்தவர்."

"இரண்டு வரிகட்கும் என்ன வித்தியாசம்? ''

"முதல்வரிப்படி:

சாத்தான் ஏவாளை ஏமாற்றியது. அவள் பாவம் செய்தாள்.

ஆனால் அதன் பாச்சா 'பெண்ணிடம்' பலிக்காது.

அவள் அதன் தலையை நசுக்குவாள். பாவம் அவளை நெருங்காது.

இரண்டாவது வரிப்படி:

பெண்ணின் வித்தாகிய இயேசு  எல்லா பாவங்களுக்கும் பரிகாரம் செய்துவிடுவார்.

எல்லா பாவங்களுக்கும் மன்னிப்புப் பெற்றுத் தந்துவிடுவார்.

பாவம் ஒழியும்."

"ஆனால் உங்கள் ஆட்கள்தான் 'அவளை' 'அவராக' மாற்றிவிட்டார்களே,

ஆதாரத்தை அழித்து விட்டார்களே,

இனிமேல் என்ன செய்வீங்க? "

"ஹலோ! நீங்க உங்க அம்மாவை நம்புகிறீர்களா? "

"ஆமா."

"ஏன்? "

"ஏனெனில் அவங்க எனது அம்மா."

"நானும் கடவுளின் தாயை நம்புகிறேன்.

கடவுள் பரிசுத்தர்.
சர்வ வல்லப கடவுள் தன் தாயிடம் பாவமாசை அணுகவிடுவாரா?

பைபிளே எழுதப் பட்டிருக்கிருக்கா விட்டாலும்கூட

கடவுளின் தாய் பாவ மாசற்றவள் என்பதற்கு

அவள் கடவுளின் தாய் என்ற விசுவாசமே போதும்.

வேறு ஆதாரம் தேவையில்லை."

"சரி, புதிய ஏற்பாட்டில் ஏதாவது ஆதாரம் இருக்கா?"

"இவ்வளவு சொல்லியிருக்கேன்.."

"இன்னும் ஆதாரம் இருக்கான்னு கேட்கிறீங்களேன்னு
சொல்லப்போறீங்க.

ஆனால் நான் கேட்பேன்.

சொல்லுங்க.

புதிய ஏற்பாட்டில் ஏதாவது ஆதாரம் இருக்கா?"

"இருந்த ஆதாரத்ததான்  அழிச்சிட்டீங்களே!"

"நாங்க அழிச்சோமா? நாங்க உங்களவிட்டு வெளியே வந்து ரொம்ப நாளாச்சேசே."

"உங்கள திரும்ப உள்ளே கொண்டுவரச் செய்த முயற்சியில

பைபிளில பொதுமொழிபெயர்ப்பு  கொண்டுவந்தாங்க, ஞாபகம் இருக்கா?"

"இருக்கு. அத நாங்க பயன்படுத்தல. அதுல என்ன? "

"கபிரியேல் தூதர் மாதாவுக்கு மங்களவார்த்தை சொல்லும்போது

அவர் கூறிய 'அருள் நிறைந்தவளே வாழ்க,'

என்ற வாழ்த்தை 'அருள் மிகப்பெற்றவளே' என்று மாத்திட்டாங்களே!

'அருள் நிறைந்தவள்' என்றால் 'அருளில் பரிபூரணமானவள்' என்று பொருள். 
அதாவது மரியாளிடம் அருளுக்கு எதிரானது எதுவும்,

சிறு மாசுகூட இல்லை என்பது பொருள்.

'மிக' என்றால் 'அதிக' என்று மட்டும் பொருள்.

'அதிகமானது' நிறைவாய் இருக்க வேண்டிய அவசியமில்லை.

முக்கால் பெட்டி பொருள் இருந்தால் அதிகமானதுதான்,

ஆனால் முழுப்பெட்டி ஆகுமா?

'முக்கால்வாசி அருள் இருக்கு,

கால்வாசி

சின்னச் சின்ன குறைகள் இருக்குன்னு என்று சொல்வதுபோலிருக்கு."

"அப்போ பைபிளில ஆதாரம் இல்லை, சரியா? "

"நான் சொன்னது உங்க மர மண்டையில ஏறலியா?

விசுவாசம் இல்லாதவர்கள்தான் ஆதாரத்தைத் தேடி அலைவார்கள்.

நாங்கள் விசுவசிக்கிறோம்.

தேவ அன்னை மாசுமறு அற்றவள்.

அவள் சென்மப் பாவம் இன்றி உற்பவித்தாள்.

அவள் வாழ்நாளில் எந்தப் பாவமும் அவளை அணுகவில்லை.

அவள் அருள் நிறைந்தவள்.

போதுமா? "

"போதும். உங்கள் விசுவாசம் உங்களை இரட்சிக்கும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment