ஏன் இயேசு முப்பது ஆண்டுகள் அம்மாவிற்குக்
கீழ்ப்படிந்திருந்தார்?
****************************
"செல்வம், கொஞ்சம் இங்கே வா, உட்கார்."
"ஏங்க, உங்களுக்கு ஒரே வேலை வாசிக்கிறதும், எழுதுவதும் மட்டுந்தான்.
எனக்கு இங்க ஆயிரம் வேலை இருக்கு. அதையெல்லாம் போட்டுவிட்டு உங்க பக்கத்தில உட்கார்ந்தா என் வேலையை யார் பார்ப்பா.
நிச்சயமா நீங்க பார்க்க மாட்டீங்க."
"யார் சொன்னா?
நீ செய்கிற எல்லா வேலையையும்
நான்தான பார்த்துக்கிட்டிருக்கேன்."
"இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.
சரி, உட்கார்ந்தாச்சி, சொல்லுங்க."
"இயேசு ஏன் மனிதனாய்ப் பிறந்தார்? "
"ஏங்க சின்னப் பிள்ளைகளிடம்
கேட்கவேண்டிய கேள்விய எங்கிட்ட கேட்கிறீங்க."
"எனக்கு இப்ப நீதான் சின்னப் பிள்ள. சொல்லு."
"நம்ம பிள்ளைகளுடைய பிள்ளைகளே பெரிய பிள்ளைகளாகி
அவங்களுக்கும் சின்னப்பிள்ளைகள் பிறந்தாச்சி.
நான் சின்னப்பிள்ளையா? கேட்க வேண்டியத நேரடியா கேளுங்க."
"சரி, நேரடியாகவே கேட்கிறேன்.
இயேசு பிறந்தது நற்செய்தியை அறிவிக்கவும் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும்தானே.
அவர் வாழ்ந்ததே 33 ஆண்டுகள்தான்.
அதில் வந்த வேலைக்கு வெறும் மூன்று ஆண்டுகளை வைத்துக்கொண்டு
30 ஆண்டுகளை பெற்றோருடன் செலவழித்து விட்டாரே, ஏன்? "
"இப்போ என்ன சொல்லவர்ரீங்க?"
"கேள்வி கேட்டிருப்பது நான்.
பதில் சொல்லவேண்டியது நீ."
சரி. இயேசு கடவுள் என்பது உங்களுக்குத் தெரியுமா?"
"தெரியும்."
"அவர் எல்லாம் வல்லவர் என்பது தெரியுமா?"
"தெரியும்."
"அவர் எடுத்திருந்த மனித சுபாவம்,
பாவம் தவிர மற்ற எல்லா வகையிலும்,
நம்மைப் போன்றது என்பது தெரியுமா?"
"தெரியும்."
"கடவுளாகிய அவர்
மனிதர்களாகிய நமக்குக் கொடுத்த பத்துக் கட்டளைகளுள்
நான்காவது கட்டளை மனிதன் என்ற வகையில் அவருக்கும் பொருந்தும் என்று....."
"அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.
நான் கேட்ட ஒரு கேள்விக்குப் பதில் சொல்லாம நீ பாட்ல கேள்விகளை அடுக்கிக் கொண்டேபோற."
"சரி. கேள்வியைப் பார்த்துப் பயப்படுவது மாதிரி தெரியுது. பயங்காட்ட மாட்டேன்.சொல்றதக் கேளுங்க.
கடவுள் எல்லாம் வல்லவர்.
அவரால் முடியாதது எதுவுமில்லை.
அவர் நினைத்திருந்தால் மனிதனாகித் துன்பங்கள் அனுபவிக்காமலே
நமது பாவங்களை மன்னித்திருக்கலாம்,
அல்லது
மன்னியாமல் நமது முதல் பெற்றோரை அழித்து
மனித இனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.
ஆனால் தனது அன்பின் மிகுதியை நாம் அறிந்து
அவரை அன்பு செய்யவேண்டு மென்பதற்காக
மனிதனாகி, சிலுவைப்பலியை ஏற்றுக்கொண்டார்.
ஒன்றுமே இல்லாத பரம ஏழையாய் மாட்டுத் தொழுவத்தில், மார்கழிக் குளிரில் பிறந்தார்,
நாம் ஏழ்மையை நேசிக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரிகையாக.
தான் கடவுளாக இருந்தும் தன்னைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க அனுமதித்தார்,
நாம் நம்மை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழவேண்டும் என்பதற்காக.
அதேபோல தன்னைச் சோதிக்க வந்த சாத்தானை,
தன்னை நெருங்கவிடாமல் விரட்டியிருக்கலாம்.
ஆனாலும் நாம் சோதனைகளைக் கண்டு பயப்படக்கூடாது என்பதற்காக சாத்தானை அனுமதித்தார்.
பாவமாசு ஏதும் இல்லாதவராயிருந்தும்
பாவிகளோடு நின்று அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்றார்
நமக்கு முன்மாதிரிகையாக.
இவ்வாறு அவர் செய்த ஒவ்வொரு செயலையும் நமக்கு முன்மாதிரிகையாகவே செய்தார்.
சர்வத்தையும் ஆளும் கடவுள் சாதாரண இரண்டு மனிதர்கட்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தாரென்றால் கீழ்ப்படிதலின் மகத்துவத்தை நமக்கு உணர்த்ததான்.
நமது முதல் பெற்றோரின் கீழ்ப்படியாமை காரணமாக உலகில் பாவம் புகுந்தது.
சர்வ வல்லவ கடவுளின் கீழ்ப்படிதலின் மூலம் இரட்சண்யம் கிடைத்தது.
"இயேசு வளர வளர ஞானத்திலும் முதிர்ந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் மேன்மேலும் உகந்தவரானார்."
என்று ஏன் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார்?
கடவுளாகிய இயேசு சர்வ ஞானமுள்ளவர். கடவுளுக்கு வளர்ச்சி கிடையாது.
ஆனாலும் இயேசு மனித சுபாவத்தில் நம்மைப் போலவே 'வளர்ந்தார்'.
நமது குடும்பங்களும்
திருக்குடும்பத்தைப் போலவே
பிள்ளைகட்கு உடல் வளர்ச்சியோடு
ஞானவளர்ச்சியையும், இறையன்பையும்
ஊட்டி வளர்க்கவேண்டும் என்பதை நாம் உணரவேண்டும்.
திருக்குடும்ப வாழ்வைப் பின்பற்றிதான்
நமது திருச்சபையின் துறவற சபையினர்
கீழ்ப்படிதல், ஏழ்மை, கற்பு
(Obedience, poverty, chastity)
ஆகியற்றை வாழ்நாள் முழுவதும் பின்பற்ற
உறுதிமொழி எடுக்கிறார்கள்.
ஏங்க திருக்குடும்பத்தைப்பற்றி
வேறு ஏதாவது கேட்க வேண்டுமா?"
"மாதாவையும், சூசையப்பரையும் பற்றி நீ ஒண்ணும் சொல்லல.
அடுத்து என் முக்கிய கேள்வியே 'ஏன் 30 ஆண்டுகள்? "
"நல்ல வேளை மாதாவைப்பற்றி ஞாபப்படுத்துனீங்க.
பிற்காலத்தில் தன்னைப் பின்பற்றும் சிலர் தன் தாயைப் புறக்கணிப்பர் என்று இயேசுவுக்குத் தெரியும்.
அவர்கட்குப் பாடம் புகட்டவே இயேசு தனது 33 ஆண்டு வாழ்வில் 30 ஆண்டுகள் தன் தாய்க்குப்
'பணிந்திருந்தார்' என நினைக்கிறேன்.
மாதாவை வெறுப்போர் புரிந்துகொள்ள வேண்டும்,
'மாதா இல்லையேல் இயேசு இல்லை' என்ற உண்மையை.
இயேசு தன் அன்னையைக் கடைசி வரை மறக்கவில்லை.
ஏன் 30 ஆண்டுகள் எனக் கேட்டீர்களே, அது தன் தாய்க்காகத்தான் இருக்க வேண்டும்.
சூசையப்பர் இந்த 30 ஆண்டு காலக்கட்டத்திற்குள் இறந்துவிட்டார்.
இயேசு பிறக்கும்போது மாதாவுக்கு 15 வயதுதான்.
இயேசு மூன்று நாள் காணாமல்போது மாதாவுக்கு 27 வயது.
சூசையப்பர் எப்போது இறந்தார் என்று நமக்குத் தெரியாது.
சூசையப்பர் இறக்கும்போது மாதாவுக்கு என்ன வயது எனவும் நமக்குத் தெரியாது.
சூசையப்பர் இறந்தபின்
அம்மாவிற்குப் பாதுகாப்பாக,
உணவிற்காக உழைக்க
இயேசு அம்மாவோடு தங்க வேண்டிய அவசியம் இருந்திருக்கும்.
இயேசு பொது வாழ்வுக்கு வந்தபோதும் தாயைக் கவனித்துக்கொள்ள மறக்கவில்லை.
அதனால்தான் தான் மரிக்குமுன் தன் தாயை அருளப்பரின் பாதுகாப்பில் விடுகிறார்.
இயேசு நேசித்த தாயை நேசிக்க மறுப்பவர்களை எப்படி கிறிஸ்தவர்கள் என்று அழைப்பது?
ஆனால் அவர்களையும் இயேசு நேசிக்கிறார்.
மரியாள் 'இதோ ஆண்டவரின் அடிமை' என்ற அர்ப்பணிப்போடு இயேசுவை மகனாகப் பெற்றவள்.
அவளுக்கு தான் பெற்ற மகன் தன்னைப் படைத்த கடவுள் என்று தெரியும்.
உலகின் உரிமையாளரே ஒன்றுமே இல்லாதவர் போல் ஏழையானார்.
மாதாவும் கடைசிவரை ஏழையாகவே வாழ்ந்தார்.
சூசையப்பர் ஒரு நீதிமான்.
இறைவனின் குரலுக்கு மறுப்பு கூறாமல் கீழ்ப்படிபவர்.
அவருக்கு இறைவனே கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.
சென்றவிடமெல்லாம் புதுமைகள் செய்த இயேசு தன் அம்மாவுக்காகவும், வளர்த்த தந்தைக்காகவும்
ஒரு புதுமைகூட செய்யவில்லை.
வாத நோயால் கஷ்டப்பட்ட சூசையப்பர் இயேசுவின் மடியிலேயே உயிர்விட்டார்.
அவர் நன்மரணத்தின்
பாதுகாவலர்."
"திருக்குடும்பம்
அன்பில் இணைந்து,
கீழ்ப்படிதலில் உயர்ந்து,
உழைப்பால் வாழ்ந்தது."
நாமும் திருக்குடும்பம் போல் வாழ்வோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment