Tuesday, December 25, 2018

விளைவுகளின் விளைவுகள்.

விளைவுகளின் விளைவுகள்.
*****************************

மனித இனம் எண்ணங்களாலும், செயல்களாலும்

பின்னிப் பிணைந்த ஒரு சமூகம்.

மனிதர் அனைவருமே

ஒருவருக்கொருவர்

காரண காரியத் தொடர்புடையவர்கள்.

ஒவ்வொரு எண்ணமும்,

செயலும்,

நடப்பும்,

வாழ்வும்

மற்றொரு எண்ணத்தின்,

செயலின்,

நடப்பின்,

வாழ்வின்

விளைவுகளே.

அவையே

அடுத்து வரும்

எண்ணத்தின்,

செயலின்,

நடப்பின்,

வாழ்வின்

காரணங்களாக இருக்கின்றன.

இந்தக் காரண, காரியத் தொடர்பு  உலகின் இறுதிவரை நீடிக்கும்.

ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குக் காரணமாக இருப்பதுபோல,

ஒரு செயல்,

நல்லதோ, கெட்டதோ,

மற்றொரு செயலுக்குக் காரணமாகிவிடுகிறது.

வீட்டிலும்சரி, வெளியிலும்சரி எப்போதும்  புன்னகையோடு பழகிப்பார்த்தால் அதன் விளைவு தெரியும்.

புன்னகையின் விளைவினால்  கோபதாபங்கள் மறையும்.

கோபதாபங்கள் மறைவினால் சமாதானம் உண்டாகும்.

சமாதானத்தின் விளைவாகச் சந்தோசம் பொங்கும்.

ஆக புன்னகையின் விளைவுகள்

கோபதாபங்களின் மறைவு,

சமாதானம்,

சந்தோசம்.

"நன்மனதோற்குச் சமாதானம் உண்டாகுக"

என்பது கிறிஸ்மஸ் நற்செய்தி.

முகத்தில் பூக்கும் புன்னகை நல்ல மனதின் விளைவு.

புன்னகையின் விளைவு சமாதானம்.

ஆகவே நல்ல மனதிலிருந்து வரும் ஒரு புன்னகையாலேயே உலகை சமாதான பூமியாக மாற்றிவிடலாம்!

குடும்ப சமாதானத்தின் இரகசியமும் இதுதான்.

நமது முதல் பெற்றோரின் கீழ்ப்படியாமையின் விளைவு அவர்களது சந்ததியார் அனைவரையும் பாதித்துக் கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரியும்.

நாம் நமது குடும்பமும், நமது சந்ததியும் நன்றாக இருக்கவேண்டும் என்று ஆசிக்கிறோம்.

நமது எண்ணங்கள், ஆசைகள், செயல்கள் ஆகியவை நமது பிள்ளைகளையும் பாதிக்கும்.

நமது எண்ணங்கள்தான் சொற்களாகவும், செயல்களாகவும் உருவெடுக்கின்றன.

நமது சொற்களையும், செயல்களையும் கூர்ந்து கவனிக்கும் பிள்ளைகள் அவற்றை அப்படியே பின்பற்றுகின்றன.

நமது விளைவுகள்தான் நமது பிள்ளைகள்.

நமது பிள்ளைகளின் விளைவுகள்தான்  நமது பேரக்குழந்தைகள்.

விரிவடைந்த விளைவுகளைத்தான் சந்ததி என்கிறோம்.

நமது சந்ததியினர் நல்லவர்களாகவும்,

ஆன்மீக வாழ்வில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும் என்றால்,

நாம் அப்படியே இருக்கவேண்டும்.

நமது பழக்க வழக்கங்கள் நமக்கு அருகில் உள்ளளவர்களையும் பாதிக்கும்.

அப்பாதிப்பு விரிவடைந்து நாம் வாழும் சமூகத்தையே பாதிக்கும்.

ஆகவே சமூகத்தை சீர்திருத்த விரும்புகிறவர்கள்

முதல்முதல் தங்களையேயே சீர்திருத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு ஆசிரியரின் குணமும்,  பழக்க வழக்கங்களும்

அவரது மாணவர்மீதும் விளைவுகளை ஏற்படுத்தும்.

அவ்வாறுதான் பொறுப்பு உள்ளவர்களின் குணமும்,  பழக்க வழக்கங்களும்

அவர்களது பொறுப்பில் உள்ளவர்களைப் பாதிக்கும்.

நாட்டை ஆள்பவர்கள் ஊழல்பேர்வழிகளாக இருந்தால்

அவர்களால் மக்களையும்  ஊழல் பேர்வழிகளாகத்தான் மாற்ற முடியும்.

அது மட்டுமல்ல நல்லவர்களால்தான் நல்ல அரசைத் தேர்ந்தெடுக்க முடியும்.

நல்ல குடிமக்களின் விளைவுதான் நல்ல அரசு.

உலகின் வாழும் ஒவ்வொருவரும் தனிநபர்அல்ல.

மனித குலத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒவ்வொருவரும் மற்றவர்கள்மீது விளைவுகளை ஏற்படுத்தக்  கூடியவர்கள்.

The human family is

not only interrelated

but also interactive,

all the members influencing one another.

ஆகவே உலக சமுதாயத்தை சீர்திருத்த விரும்பும் ஒவ்வொருவரும்

  தங்களைத் திருத்திக்கொண்டாலே

அதன் விளைவுகள் பரவி உலகைத் திருத்திவிடும்.


3 "உன் கண்ணிலே உள்ள விட்டத்தைக் கவனியாது, உன் சகோதரன் கண்ணில் உள்ள துரும்பைப் பார்ப்பதேன் ?


4 உன் சகோதரனை நோக்கி,

" உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுக்க விடு "

என்று நீ எப்படிச் சொல்லலாம் ?

இதோ! உன் கண்ணிலே விட்டம் இருக்கிறதே.


5 வெளிவேடக்காரனே,

முதலில் உன் கண்ணிலிருந்து விட்டத்தை எடுத்து எறி:

பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க நன்றாகக் கண் தெரியும்."
(மத்.7:3-5)

லூர்து செல்வம்.


No comments:

Post a Comment