நாமே ஒரு போர்க்களம்.
****************************
உலகம் ஒரு போர்க்களம்.
நாம் பிறந்ததே போராடுவதற்காகத்தான்.
போராட்டம் இன்றி வெற்றி இல்லை.
வெற்றி இன்றி பரிசு இல்லை.
யாரோடு போராட்டம்?
யாரோடு போராட்டம் என்பதைவிட
எவற்றோடு போராட்டம் என்று கேட்டால் பொருத்தமாய் இருக்கும்.
ஏனெனில் நாம் போராடப்போவது நம்மைப் போன்ற ஆட்கள் அல்ல,
உருவமே இல்லாத உணர்வுகள்,
எண்ணங்கள்,
ஆசைகள்,
விருப்புகள்,
வெறுப்புகள்.
இவையெல்லாம் நமக்கு உள்ளேயே இருப்பவை.
நமக்குச் சொந்தமானவை.
ஒரு வகையில் இது உள்நாட்டுப்போர். (Civil war)
நமக்கு உள்ளே உள்ள இவற்றை எதிர்த்து நமது ஆன்மா போராட வேண்டியுள்ளது.
இப்போராட்டத்தில் வெற்றிபெற்றால் நித்திய இன்பம் பரிசு.
நமது உணர்வுள், எண்ணங்கள் etc.டு போராடவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?
நமக்குள் 'விழுந்த சுபாவம்' ('Fallen nature) என்று ஒன்று இருக்கிறதே, அதனால்தான்.
அதென்ன 'விழுந்த சுபாவம்'?
இறைவன் நமது முதல் பெற்றோரைப் படைக்கும்போது தன் சாயலாகப் படைத்தார்.
தன்னுடைய குணங்களை அவர்களோடு பகிர்ந்து கொண்டார்.
அவர்களுடைய
உணர்வுகள்,
எண்ணங்கள்,
ஆசைகள்,
விருப்புகள்
எல்லாம் அவரைச் சார்ந்தே இருந்தன.
அவருடைய சந்நிதானத்திலேயே(In His Presence) வாழ்ந்தார்கள்.
இறைவனுக்கும் அவர்களுக்குமிடையே மிக நெருக்கமான உறவு இருந்ததால் அவர்களுடைய எண்ணங்கள் அவரைப் பற்றியே இருந்தன.
ஆனால் சாத்தான் அவர்களை ஏமாற்றி அவர்களைப் பாவத்தில் விழவைத்த நொடியில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.
" மேலும், மாலையில் தென்றல் வீசும் வேளையிலே இன்ப வனத்தில் உலாவிக் கொண்டிருந்த ஆண்டவராகிய கடவுளின் குரலொலியைக் கேட்டார்கள். கேட்டதும், ஆதாமும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் முன்னிலையில் நில்லாதவாறு இன்ப வனத்து மரங்களிடையே ஒளிந்து கொண்டார்கள்."
(ஆதி.3:8)
அதுவரை இறைவன்பால் அவர்கள் கொண்டிருந்த அன்புணர்வு பய உணர்வாக மாறிவிட்டது.
அவரைப் பார்க்க இருந்த ஆசை போய், அவர் வருவது தெரிந்தவுடன் ஒளிய ஆரம்பித்தார்கள்.
அதுவரை அவர்களிடம் இருந்த நேர்மறை உணர்வுகள் எதிர்மறை உணர்வுகளாக மாறிவிட்டன.
அவை அவர்களுடைய
மரபணுக்களோடு கலந்து அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு வந்துவிட்டன.
நமது ஆதிப்பெற்றோர் பாவத்தில் விழுந்ததால் ஏற்பட்ட சுபாவம்தான்
நம்மிடம் உள்ள 'விழுந்த சுபாவம்'.
இச்சுபாவத்திற்கு உரிய எதிர்மறை உணர்வுகளை
நேர்மறை உணர்வுகளாக
மாற்றினால்தான்
நாம் பாவத்திற்கான வழியிலிருந்து விடுபட்டு
புண்ணியத்திற்கான வழிக்கு வரமுடியும்.
இறைவனது கட்டளைப்படி நடக்க ஆசைப்படுவது நேர்மறை உணர்வு.
கட்டளைகளை மீற ஆசைப்படுவது எதிர்மறை உணர்வு.
நேர்மறை உணர்வுகளின் ஊற்று இறைவன்.
எதிர்மறை உணர்வுகளின் ஊற்று சாத்தான்.
உண்மையில் இவ்வுணர்வுகளின் போர் மனித இனம் படைக்கப்படுமுன்னே ஆரம்பித்துவிட்டது.
"இறைவனுக்குக் கீழ்ப்படிய மாட்டோம்." என்று லூசிபெர்(Lucifer)
போர்முரசு கொட்டிய அன்றே போர் ஆரம்பித்துவிட்டது.
"இறைவனுக்கு நிகர் யார்" என்று
விண்ணுலக தளபதி மிக்கேல் அதிதூதர் எதிர்க்குரல் கொடுக்க,
சாத்தானாக மாறிய லூசிபெர் தோற்று அடிநரகில் வீழ்ந்தான்.
தோற்றாலும் அகங்காரம் சற்றும் குறையாத சாத்தான்
இன்னும் போரைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான்,
இறைவன் படைத்த மனிதன் மூலமாக.
சாத்தானுக்குத் தெரியும் இறைவனை வெல்லமுடியாதென்று.
ஆகவே நம்மை மட்டுமாவது இறைவனிடமிருந்து பிரித்துவிட முயற்சிக்கிறான்.
இப்போரில் வெற்றி பெறுவது நமது கையில்தான் இருக்கிறது.
நாம் இறைவன் பக்கம் நின்றால் நமக்கு வெற்றி,
இறைவனை மறந்தால் நமக்குத் தோல்வி.
இதில் நமக்கு முன்னுதாரணம் நமது அன்னை மரியாள்.
கபிரியேல் தூதர் மரியாளிடம் மங்களவார்த்தை சொன்னபோது,
எதிர்மறையாக எதுவும் பேசாமல்,
"இதோ! ஆண்டவருடைய அடிமை.
உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்."
என நேர்மறையாகப் பதிலளித்தாள்.
இந்த
நேர்மறைப் பதில்தான் மனுக்குலத்திற்கு இரட்சண்யம் கொண்டுவந்தது.
நாமும் செய்யவேண்டியது இதுதான்.
இறைவன் நமக்கு அளித்த சுதந்தரத்தை மனப்பூர்வமாக அவரிடமே ஒப்படத்துவிட்டு,
"இறைவா,
இனி நான் உமது அடிமை.
உமது சித்தப்படி நடப்பதே எனது செல்வமும் பாக்கியமும்.
என்னை ஏற்று, வழிநடத்தும். "
அவரிடம் சரணடைவதே நமது வெற்றியின் முதற்படி.
நமது சுதந்தரத்தை மனப்பூர்வமாக அவரிடமே ஒப்படத்துவிட்டாலும்,
அவர் அதை நம்மிடமிருந்து எடுத்துவிட்டு நம்மைச் சாவி கொடுத்த பொம்மைகளாக மாற்ற மாட்டார்.
நமது சுதந்திரம் நம்மிடமே இருக்கும்.
அதை அவரது சித்தப்படிப் பயன்டுத்தவேண்டிய அருளைத் தருவார்.
நமது அன்னைக்கு நிறைவான அருளைக் கொடுத்திருந்தார்.
ஆகவேதான் அவளால் பரிபூரணமாக இறைவனது சித்தப்படி நடக்க முடிந்தது.
நாம் நேர்மறை உணர்வுகளைப் பயன்படுத்தி இறைவன் சித்தப்படி நடக்க வேண்டிய அருள்வரம் கேட்டு அவரிடம் மன்றாடவேண்டும்.
அவரது சித்தம்
அவரது பத்துக் கட்டளைகள்,
திருச்சபையின் ஆறு கட்டளைகள்,
நமது அந்தஸ்தின் கடமைகள்,
இறைவன் நமக்கு அனுப்பும் சிலுவைகள்
ஆகியவை மூலம் நமக்கு தெரிவிக்கப் படுகிறது.
நம்மைப் படைத்த இறைவனை முழுமையாக அன்பு செய்யவேண்டும்
அவரை வழிபடவேண்டும் என்பது அவர் சித்தம்.
காலையில் எழுந்து நாம் செபம் செய்ய அமரும்போது,
"தூக்கக் கலக்கமாக இருக்கிறது, ஒரு பத்து நிமிடம் தூங்கிவிட்டு அப்புறம் செபம் சொல்லலாமே!" இது சாத்தான் எழுப்பும் எதிர்மறை உணர்வு.
"உடனே அமர்ந்து செபம் சொல். இன்றைய நாள் ஆசீர்வாதமானதாய் இருக்கும்." இறைவன் தரும் நேர்மறை உணர்வு.
இறைவன் குரலுக்கு செவிமடுத்து செயல்பட வேண்டும்.
இவ்வாறே ஒவ்வொரு கட்டளையின்போதும்.
துன்பங்கள் வரும்போது,
"எல்லாம் நன்மைக்கே. எல்லாம் இறைவனின் திட்டப்படிதான் நடக்கும்."
என்று நினைத்து சிலுவையை மகிழ்ச்சியான உணர்வுகளுடன் ஏற்று இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.
நமது Fallen nature காரணமாக நமது ஆன்மீக உணர்வு மந்தமாக இருக்கும்.
நமது எண்ணங்கள் இவ்வுலகை நோக்கியே இருக்கும்.
நமது ஆசைகள் இவ்வுலக இன்பங்களையே மையமமாகக் கொண்டவையாகவே இருக்கும்.
இதில் ஆச்சரியப்படுவதற்கு
ஒன்றுமில்லை,
ஏனெனில், நாம் சென்மப்பாவத்தோடு பிறந்தவர்கள்.
ஆனாலும்,
நாம் பசாசின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு
கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகவே
ஞானஸ்நானம் பெற்று,
சென்மப்பாவத்திலிருந்து விடுபட்டுள்ளோம்.
நாம் இறைவனின் பிள்ளைகள்.
நம் பக்கம் இறைவன்.
எதிர்ப்பக்கம் ஏற்கனவே இறைவனிடம் தோற்ற பல்பிடுக்கப்பட்ட 'பாம்பு'.
நமது மனித பலகீனத்தைப் பயன்படுத்தி சும்மா பாவலா காட்டிக்கொண்டிருக்கிறது.
நாமே அதன் வலையில் விழாதபடி பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டும்.
இப்பாதுகாப்பை இறைவனது அருள் அளிக்கும்.
ஆகவே இவ்வருள் கேட்டு நாம் இறைவனிடம் இடைவிடாது மன்றாட வேண்டும்.
எதற்காக இடைவிடாது?
நாம் பாதுகாப்பாய் இருந்தால் மட்டும் போதாது.
ஆன்மீக வாழ்வில் வளரவேண்டும்.
ஒரு தாவரத்தை ஆடு, மாடுகளின் வாயிலிருந்து காப்பாற்றினால் மட்டும் போதுமா?
அது செழித்து வளர உரமிட்டு, ஒழுங்காக நீர்ப் பாய்ச்ச வேண்டாமா?
நமது ஆன்மீக வாழ்விற்கு உரமும்,நீருமாய் இருப்பது இறைவனின் அருள்தான்.
வளர்ச்சி ஒரு தொடர்ச்சியாக இருப்பதால்
நமது செபமும் தொடர்ச்சியாய் இருக்க வேண்டும்.
இவ்வுலகில் நமக்குள் நடைபெறும் ஆன்மீகப் போரில் நமக்கு உறுதுணையாய் இருப்பவை:
1.நேர்மறை எண்ணங்கள்.
(இறைவன் குரலுக்கு 'ஆம்' என்ற பதில்,
நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கை)
2. இறைவனது அருள்.
3. இடைவிடாத செபம்.
இறைவன் அருளோடு,
நமக்குள் நடக்கும் போரில்
நாமே வெல்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment