பழைய ஆண்டு வாழ்த்துக்கள்.
********-*********-**********
"புத்தாண்டு
வாழ்த்துக்கள்."
"பழைய ஆண்டு வாழ்த்துக்கள்."
"பழைய ஆண்டு வாழ்த்துக்களா? புதுசா இருக்கு! "
"ஏங்க, நீங்கள் 'Send off' meeting,
அதாங்க வழி அனுப்பு விழா,
எதுக்கும் போனதில்லையா?
புதிய ஆளை வரவேற்குன் பழைய நபரை வாழ்த்தி வழியனுப்ப வேண்டாமா?
பழைய ஆண்டில நமக்குக் கிடைத்த நன்மைகட்கு நன்றி தெரிவித்து வழியனுப்ப வேண்டாமா?
வேண்டியதைக் கேட்கு முன்னாலே ஏற்கனவே கிடைத்ததற்கு நன்றிகூற வேண்டாமா? "
"சரி, நன்றி கூற வேண்டியது யாருக்கு? 2018க்கா?"
"தெரியாதது மாதிரி கேட்கிறீங்க? 2018ல நம்மை வழிநடத்திய நம் கடவுள்.
காலங்களைக் கடந்த கடவுள்,
நமக்குக் காலத்தைத் தந்து,
அந்தக் காலத்தில்
நம்மை வழி நடத்தி
பராமரித்து வருகிறார்.
வருடம் என்பது காலத்தை அளப்பதற்காக நாமே வைத்துக் கொண்ட ஒரு Concept.
அளப்பதற்கு ஒரு அளவுகோல் வேண்டுமே,
அதற்காக நாள், மாதம், வருடம் ஆகியவற்றை அளவுகோலாகப் பயன்படுத்துகிறோம்.
உண்மையில் ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை உள்ளதுதான் அவருக்குக் காலம்.
அந்தக் காலம் முடிந்துவிட்டால் அவரைக் 'காலமாகிவிட்டார்' என்கிறோம்.
ஒன்றுமில்லாமை யிலிருந்து நம்மை உருவாக்கி,
நாம் வாழ காலத்தையும்,
வாழ்வதற்கான வசதிகளையும் தந்த இறைவனுக்கு நன்றி கூறவேண்டாமா?"
"வாழ்வில் சந்தோசங்கள் வரும்போது கடவுளுக்கு நன்றிகூறும் சிலர்
சங்கடங்கள் வரும்போது அவரை நொந்து கொள்கிறார்களே."
"எனக்குத் தெரிந்த மாணவன் ஒருவன்
அரசுத் தேர்வு எழுதி முடித்தவுடன்
தன் ஆசியரிடம் வந்து
'சார், ரொம்ப நன்றி,
என்னை அடித்துப் படிக்கவைத்தமைக்கு நன்றி.
நீங்கள் கொடுத்த அடியின் காரணமாகதான் நான் நன்கு படித்து,
நன்கு தேர்வு எழுதியிருக்கிறேன்' என்றான்.
இதேமாதிரியான நன்றியுணர்வு
நாம் சங்கடப்படும்போது
கடவுள் மட்டிலும் இருக்க வேண்டும்.
ஆசிரியர் மாணவர்களை அடித்துப் படிக்கவைப்பது போலவே,
கடவுள் சங்கடங்களை அனுப்புவது நமது ஆன்மீக வாழ்வில் நம்மைப் பரிசுத்தப் படுத்துவதற்காகத்தான்.
தங்கத்தின்மேல் படிந்துள்ள அழுக்கை நீக்க
அதை ஆசாரி நெருப்பில் இட்டு உருக்கி புடம் இடுவதுபோல்,
கடவுள் நமது ஆன்மாவில் படிந்துள்ள பாவ அழுக்கை
துன்பம் என்னும் நெருப்பிலிட்டு நீக்குகிறார்.
நாம் செய்யவேண்டிய தெல்லாம்
நமக்குத் துன்பங்களை அனுப்புகிறவர் இறைவன்தான் என்பதை உணர்ந்து,
அவற்றை நன்றியுடன் ஏற்றுக் கொண்டு,
அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக
இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டியது மட்டும்தான்.
துன்பங்களை அனுபவிக்கும் காலத்திற்கு முடிவு உண்டு.
ஆனால் அதனால் கிடைக்கப்போகிற மோட்சப் பேரின்பத்திற்கு முடிவே இல்லை."
"ஆனால் பாவமே செய்யாத புனிதர்கட்கும் துன்பம் வருகிறதே?"
"வங்கியில் கடன் வாங்கியவன் பணம் கட்டினால்...."
"கடன் கழியும்."
"கடனே வாங்காதவன் பணம் கட்டினால் ...."
"பணம் சேரும்."
"அதேமாதிரிதான்.பாவம் இல்லாதவன் படும் துன்பம் அவனுக்கு மோட்சத்தில் அதிக பலன் சேர்க்கும்.
நேர்மறை(Positive) எண்ணத்துடன் துன்பத்தை ஒரு ஆசீர்வாதமாகப் பார்க்கவேண்டும்.
கடவுள் மீது விசுவாசமும், நம்பிக்கையும் இருக்கவேண்டும்.
அதாவது கடவுள் எதைச் செய்தாலும் நமது நன்மைக்கே செய்வார் என்று விசுவசிக்க வேண்டும்.
துன்பங்களை விசுவாச உணர்வோடு ஏற்றுக்கொள்பவர்கட்கு மோட்சத்தில்
நித்திய சம்பாவனை கிடைக்கும் என்று நம்ப வேண்டும்."
"அதாவது இறைவன் அனுப்பும் துன்பங்களை நன்றியுடன் ஏற்றுக்கொள்ளாதவர்கள்
இறைவன் இலவசமாகத்தரும் ஆசீர்வாதங்களை
வேண்டாமென்று தள்ளுபவர்கள்."
"இதையெல்லாம் பார்க்கும்போது
புதிய ஆண்டை வரவேற்பதைவிட
பழைய ஆண்டை பரிசோதிப்பதுதான் முக்கியம் போல் தோன்றுகிறது."
''உண்மைதான். அப்போதான் புதிய ஆண்டைப் பயனுள்ளள முறையில் அனுபவிக்க முடியும்."
"கடைசியாக ஒரு கேள்வி.
கிறிஸ்தவனுக்கு அடையாளம் எது? "
"சிலுவை."
"சிலுவை எதுக்கு அடையாளம்?"
"துன்பத்துக்கு."
"இதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டால் சரி."
"துன்பங்கள் மூலம் எங்களைத் தூய்மையாக்கிய பழைய ஆண்டே, நன்றி."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment