Sunday, January 20, 2019

தந்தையின் சொத்தை அனுபவிக்க வேண்டாமா? அனுபவிப்போம்.


தந்தையின் சொத்தை அனுபவிக்க வேண்டாமா?
அனுபவிப்போம்.
*-*********************---***

"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்."

இறைவன் நம்மைத் தனது சாயலாகப் படைத்தார்.

நமது உடல் களிமண்ணிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும்,

அவர் நமது முகத்தில்  உயிர் மூச்சை   ஊதிப் படைத்த ஆன்மா அவரது சாயலாக இருந்தது.

அவரது உயிர் மூச்சுக்கு அழிவே இல்லை.

ஆகவேதான் அதன் சாயலான நமது ஆன்மாவும் அழியாது.

அந்த ஆன்மாவோடு தனது பண்புகளாகிய அன்பு, இரக்கம், நீதி, ஞானம் ஆகியவற்றையும் பகிர்ந்துகொண்டார்.

அவரது சாயலாகப் படைக்கப்பட்ட நாம்   அவரது சாயலுக்குப் பங்கமில்லாமல் வாழ்ந்து, இறுதியில் அவருடனே இணையவேண்டும்.

அதாவது அவரது சாயலைச் சாராத களிமண்ணாகிய உடலை மண்ணிலேயே விட்டுவிட்டு,

அவரது சாயலில் ஆன ஆன்மா, அவர் தந்த பண்புகளோடு அவரோடு இணையவேண்டும்.

இந்த இணைதல்தான் மோட்சம்.

அவர் தந்த அன்பு, இரக்கம் போன்ற பண்புகளை

நமது வாழ்வில்  பயன்படுத்த வேண்டும்.

இறைவனது பண்புகள்

சதா இயங்கிக்கொண்டே யிருக்கின்றன.

God's attributes are always active.

He is always  loving.

He is always merciful.

இறைவன் அன்பு செய்து கொண்டிருக்கிறார்,

அன்புச் செயல்களும் செய்துகொண்டே யிருக்கிறார்.

நம்மேல் சதா இரக்கப்பட்டுக் கொண்டே யிருக்கிறார்.

நாம் தொடர்ந்து பாவங்கள் பல புரிந்தாலும்

நாம் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான காரணம்

அவரது இடைவிடாத அன்பும், இரக்கமும்தான்.

நம்மோடு தன் பண்புகளைப் பகிர்ந்துகொண்டது

அவற்றைப் பயன்படுத்தி, அதன் விளைவுகளோடு விண்ணகம் செல்வதற்காகத்தான்,

அவற்றைப் துருப்பிடிக்கப் போடுவதற்காக அல்ல.

அதனால்தான் நம் ஆண்டவர் சொல்கிறார்,

''உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்."

அதாவது,

தந்தை இடைவிடாத இரக்கத்தோடு மற்றவர்கட்கு உதவுவது போல, நாமும் நம் அயலானுக்கு உதவவேண்டும்.

இறைவன் சதா நம்மை மன்னித்துக்கொண்டே இருப்பதுபோல நாமும் அயலானை மன்னிக்க வேண்டும்.

நாம் இரக்கமாக இருப்தற்கான அருள் வரத்தைத் தர வேண்டுமென

இறைவனிடம் இடைவிடாது செபிக்கவேண்டும்.

யாராவது தமது   வார்த்தைகளால் நம்மைக் காயப்படுத்தினால் நமக்கு அவர்கள் மீது கோபம் வரக்கூடாது.

மாறாக அவர்ள் நிலை கண்டு அவர்கள் மேல் இரக்கம் வரவேண்டும்.

அவர்களுக்காக இறைவனிடம் வேண்டுவது அவர்கட்கு நாம் செய்யும் பெரிய உதவி.

இது கடினமாகத் தோன்றினால்

சிலுவையில் தொங்கிக் கொண்டே தொங்கவிட்டவர்கட்காகத் தன் தந்தையிடம் வேண்டிக் கொண்ட இயேசுவை நினைத்துக் கொண்டு,

நம்மைக் காயப்படுத்தியவர்கட்காக மன்றாடவேண்டும்.

   

நமது இரக்கம், உள்ளத்திலும், வார்த்தையிலும் மட்டுமல்ல நமது செயலிலும் வெளிப்பட வேண்டும்.

பசியாய் இருப்பவர்ககு  உண்ணக் கொடுக்க வேண்டும்.

தாகமாய் இருப்பவர்கட்குக்  குடிக்கத் தண்ணீர் கொடுக்க  வேண்டும்.

அன்னியமாய் இருப்பவர்களை வரவேற்க வேண்டும்   

ஆடையின்றி இருப்பவர்களை,  உடுத்தவேண்டும்.

நோயுற்றிருப்பவர்களை  பார்க்கச் செல்ல வேண்டும்.

சிறையில் இருப்பவர்களைப் பார்க்கச் செல்ல வேண்டும்.

  எதையாவது பறிகொடுத்து நிற்பவர்கட்கு ஆறுதல் கூற வேண்டும்.

இது போன்ற இரக்கச் செயல்கள் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன.

இரக்கச் செயலை யாருக்குச் செய்தாலும் இயேசுவுக்கே செய்கிறோம் என்பதை

ஞாபத்தில் வைத்துக்கொண்டால்

நாம் பார்க்குமிடமெல்லாம் இயேசு நிற்பார்.

ஆன்மீகரீதியாக நமது இரக்கச் செயல்கள் தேவைப்படுவோர் எண்ணற்றவர் உள்ளனர்.

இயேசுவை அறியாதவர்மீது நாம் இரங்கவேண்டும்.

போகவேண்டிய இடத்திற்கு வழி தெரியாதவர்மீது இரக்கம் காட்டவேண்ணடாமா?
போகவேண்டிய வழியைக் காட்ட வேண்டாமா?

இக்காலத்தில்

அடிப்படை உரிமையான மத சுதந்திரத்தைக் காரணம் காட்டி

நம்மில் அநேகர் நேரடியாக கிறிஸ்துவை அறிவிக்க தயங்குகிறனர்.

அத்தயக்கம் இருந்திருந்தால் தோமையார் கிறிஸ்துவை அறிவிக்க இந்தியா வந்திருப்பாரா?

சவேரியார், அருளானந்தர், வீரமாமுனிவர் போன்ற வேதபோதகர்கள் இந்தியாவிற்கு வந்திருப்பார்களா?

அன்னைத் தெரசா கல்கத்தாவிற்கு வந்து செய்த சேவை

வெறும் சமூக சேவை அல்ல.

கிறிஸ்துவை மக்களுக்கு அளிக்க வந்த

இரக்கத்தில் பிறந்த இறைப்பணி.

பின்வரும்  அவளது வார்த்தைகளே அதற்குச் சான்று,

'When we do ‘our work,’ visiting the families, teaching the children, nursing the sick, helping the dying, gathering the little children for church,

we should do it with one aim in view: ‘the salvation of the poor.’

We want to bring them to Jesus and bring Jesus to them.”

"குடும்பங்களைச் சந்தித்தல், சிறுவர்களுககுப் பாடம் போதித்தல்,
நோயாளிகளைக் கவனித்தல்,
இறப்பவர்கட்கு உதவுதல், சிறுவர்களைக் கோவிலுக்கு அழைத்துச் செல்வதற்காகச் சேகரித்தல்

ஆகியவற்றைச் செய்வது ஒரேஒரு நோக்குடன்தான்,
"ஏழைகளின் இரட்சண்யம்."

ஏழைகளை இயேசுவிடமும்,
இயேசுவை ஏழைகளிடமும்
கொண்டுசெல்லவும் விரும்புறோம்."

ஆக, இயேசுவை மக்களுக்கு அளிப்பதே ஒரு இரக்கச் செயல்தான்.

பாவசங்கீர்த்தனம் ஒரு இரக்கத்தின் தேவத்திரவிய அனுமானம்.

நாம் எத்தகைய கனமான பாவங்ளைச் செய்திருந்தாலும் இரக்கத்தின் தேவன் பாவசங்கீர்த்தனத்தின் மூலம் மன்னிக்கிறார்.

பாவசங்கீர்த்தனத்தின் மூலம் இரக்கத்தின் மன்னிப்பைப் பெறச் செல்லுமுன் நாம் இரக்கம் உள்ளவர்களாக மாறவேண்டும்.

நாம் செய்த பாவங்களுக்கு இரக்கத்தின் தேவனிடம் மன்னிப்பு கேட்குமுன்,

நமக்கு எதிராக செயல்படுபவர்கள்மீது இரங்கி மனதார அவர்களை மன்னிக்க வேண்டும்.

"இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்."
(மத்.5:7)

நாம் நமது அயலான்மீது இரக்கம் காட்டினால்தான் இறைவனின் இரக்கத்தைப் பெற தகுதி உள்ளவர்கள் ஆவோம்.

இந்தத் தகுதியுடன் நாம் பாவசங்கீர்த்தனம் செய்தால் நமக்கு  பாவமன்னிப்போடு இரங்கும் அருள் வரமும்  மிகுதியாக அருளப்படும்.

பணம் கொடுக்கக் கொடுக்கக் குறையும்.

இரக்கமோ கொடுக்கக் கொடுக்க இறையருளை அதிகரித்துக்கொண்டே போகும்.

நமது அயலான்களில் யாராவது ஆன்மீகப் பாதையில் வழிமாறிப் போவது நமக்குத் தெரிந்தால்,

அவர் மீது நமக்கு உண்மையிலே அன்பும், இரக்கமும் இருந்தால்

அவரை அவர் வழியில் தொலைந்துவிட அனுமதிக்க முடியுமா?

நூறு ஆடுகளில்  ஒரு ஆடு காணாமற்போய்விட்டால்,

'நூற்றில் ஒன்றுதானே' என்று விட்டுவிடாமல்,

அதைத் தேடிக்கண்டுபிடிக்கும் நல்ல ஆயனுக்குத்  தன்னை ஒப்பிட்ட இயேசுவின் சீடர்கள் நாம்.

மந்தையை விட்டு வழிதவறிப்போன ஆட்டைத் தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பு நமக்கு இல்லையா?

வழி தவறியவர்மீது இரங்கி, அவருக்காக இறைவனிடம் வேண்டுவதுடன் அவரை வழிக்குக் கொண்டுவர நம்மால் ஆன முயற்சி எடுக்கவேண்டும்.

இம்முயற்சி வெற்றி பெறவேண்டுமென்றால் நாம் எல்லோரிடமும் அன்பாக பேசவேண்டும், பழகவேண்டும்.

அன்பிற்கு மட்டுமே ஈர்க்கும் சக்தி உண்டு, அதிகாரத்திற்கு அல்ல.

மறைபரப்புப் பணியில் நமக்கும் பங்கு உண்டு.

இப்பணியைச் சரியாகச் செய்யவேண்டுமானால் மனதில் அன்பும், இரக்கமும்,

வாயில் கனிவான சொற்களும் இருக்கவேண்டும்.

"You can catch more flies with a teaspoon of honey, than with a barrelful of vinegar.”(Saint Francis de Sales)

"பீப்பாய்நிறை சாராயத்தைவிட, ஒரு கரண்டி தேனினால் அதிக ஈக்களைப்  பிடிக்கமுடியும்."

இயேசுவின் கனிவான பேச்சும், உதவிகளும்தான் மக்களை அவர்பால் ஈர்த்தன.

நாமும் இயேசுவைப் பின்பற்றலாமே.

நம் தாயை ஒரு கவிஞர் இவ்வாறு அழைக்கிறார்,

“Hail Holy Queen,

Mother of mercy,

our life,

our sweetness

and our hope…”

நமது அன்னை இரக்கத்தின் அரசி.

கானாவூர்த் திருமணவீட்டில் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டபோது

அவளது நிறைந்த இரக்கத்தின் காரணமாகத்தான் அவ்வீட்டாருக்காக தன்
மகனை ஒரு புதுமையைச் செய்யவைத்தார்.

தன் ஒரே மகனை நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத்

தந்தை இறைவனுக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தாள்.

"மிகவும் இரக்கமுள்ள தாயே,

உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்,

உமது இதயத்தில் பொங்கி வடியும் இரக்கத்தில் எங்களுக்கும் பங்கு தாரும்.

நீர் தரும் இரக்கம்

உம் இரக்கமுள்ள மகனுக்காக நாங்கள் செய்யும் பணிக்கு

உயிரோட்டமாக இருக்கும்."

தந்தை இறைவன் தன் அளவற்ற இரக்கம்  காரணமாக தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.

அவரும் நம்மீது  கொண்டுள்ள இரக்கம் காரணமாக நமக்காகத் தன் உயிரையே சிலுவையில் பலியாக்கினார்.

இரக்கத்தின் தேவனின் பிள்ளைகள் நாம்.

தந்தையின் சொத்தை அனுபவிக்க வேண்டாமா?

அனுபவிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment