Thursday, January 10, 2019

'உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது'

'உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது'
****-**********-*************

"ஏங்க,

  இயேசு தன் புதுமைகள் மூலம் நோய்களைக் குணமாக்கிய ஒவ்வொரு முறையும்

குணமானவனை நோக்கி

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது." ன்னு

சொல்றாரே, அது ஏங்க?"

" இதுல உனக்கு என்ன பிரச்சனை?''

"குணமாக்கியது இயேசு.

ஏன் 'உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது'ங்கிறார்? அதுதான் பிரச்சனை."

"இயேசு இவ்வாறு பல முறை சொல்லுகிறார்.

குணமாக்கியது தான்தான் என்று அவருக்கே  தெரியும்.

அவர் யாரைக் குணமாக்கினார்?

யூதேயா, கலிலேயா  நாடுகளிலுமுள்ள அத்தனை நோயாளிகளையுமா குணமாக்கினார்?

அவர்மீது விசுவாசம் கொண்டு,

அவரை அணுகி

அவரிடம் வேண்டினால் குணம் கிடைக்கும்

என உறுதியாக நம்பி

அவரிடம் குணம் பெற வேண்டிக் கொண்டவர்களைக் குணமாக்கினார்."

"கேளாதவர்கட்கும் குணம் புதுமைகள் செய்திருக்கிறார்."

"உண்மைதான்.

கேட்டவர்களையும் சுகப்படுத்தியிருக்கிறார்.

அவர்கள் குணம் பெற்றதற்குக் காரணம்

அவர்கள் விசுவாசத்தோடும்,

நம்பிக்கையோடும்

வேண்டிக் கொண்டதுதானே.

ஆகவேதான் தன்னிடம் வேண்டியவர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,

'உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது' என்கிறார்.

"அப்படியானால் சுகமான அனைவரும்     இயேசு இறைமகன் என்று விசுவசித்தார்களா? "

"விசுவாசம் (Faith) என்ற சொல்லுக்குப் பொருள் அதுதான்.

'என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார்.'

என்று ஸ்நாபக அருப்பர் இயேசுவைப் பற்றிக் கூறியபின்,

'இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, செபித்துக்கொண்டிருக்க, வானம் திறந்தது.


22 பரிசுத்த ஆவி புலப்படும் வடிவெடுத்து, புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து குரலொலி உண்டாகி, " நீரே என் அன்பார்ந்த மகன். உம்மிடம் நான் பூரிப்படைகிறேன் " என்றது.'

பரிசுத்த ஆவியே மக்களுக்குப்  புலப்படும் வடிவெடுத்து,

இயேசு மேல் இறங்கினார்.

பரிசுத்த ஆவி இறங்கியதையும்,

 

'நீரே என் அன்பார்ந்த மகன்.'

என்று இறைத் தந்தை கூறியதையும்

மக்கள் நேரிலேயே கண்டார்கள், கேட்டார்கள்.

அதை விசுவசித்த மக்கள்தானே இயேசுவிடம் வந்திருப்பார்கள்.

இயேசு போதிக்க ஆரம்பித்தபின்

'அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.'

அவர் தச்சுவேலை செய்து வந்திருந்த நசரேத் ஊர் மக்கள் மட்டும் பழக்கதோசம் காரணமாக,

'இவர் சூசையின் மகனன்றோ?' என்றார்கள்.

அவர்களது விசுவாசமின்மை காரணமாக

'அங்கே பிணியாளர் ஒருசிலர்மீது கைகளை வைத்துக் குணமாக்கியது தவிர வேறு ஒரு புதுமையும் செய்ய முடியவில்லை.

6 அவர்களுக்கு விசுவாசமில்லாததைக் கண்டு அவர் வியப்புற்றார். (மாற்க்.6:5,6)


ஆனால் அவரை விசுவசித்த மற்ற ஊர்களில் இயேசு புதுமைகள் செய்து, நோயாளிகளைக் குணமாக்கினார்.

'நீர் யாரென்று எனக்குத் தெரியும். நீர் கடவுளின் பரிசுத்தர்.'(லூக்.4:34)

என்று கூறி,  பசாசுகூட மக்கள் முன் இயேசுவுக்கு சாட்சி அளித்தது.

'பேய்கள், "நீரே கடவுளின் மகன்" என்று கூவிக்கொண்டு பலரிடமிருந்து வெளியேறின.' (லூக்.4:41)

      12 'அவர் ஓர் ஊரில் இருந்தபோது, இதோ! உடலெல்லாம் தொழுநோயாயிருந்த ஒருவன் இயேசுவைக் கண்டு முகங்குப்புற விழுந்து, "ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" (லூக்.5:12)


இங்கு நோயாளி இயேசுவை, 'ஆண்டவரே' எனக்கூறி தன் விசுவாசத்தை அறிக்கையிடுகிறான்.

தான் கடவுள் என்பதை இயேசுவே பின்வரும் புதுமை மூலம் தெளிவுபடுத்துகிறார்.


முதலில் வாசிப்பதைக் கேள்.

      
'1 சில நாட்களுக்குப்பின் அவர் கப்பர் நகூம் ஊருக்கு மீண்டும் வந்தார். வீட்டில் அவர் இருக்கிறார் என்ற செய்தி பரவிற்று.

2 பலர் வந்து கூடவே, வாசலுக்கு வெளியே முதலாய் இடமில்லை. அவர் அவர்களுக்குத் தேவ வார்த்தையை எடுத்துச் சொன்னார்.

3 அப்பொழுது திமிர்வாதக்காரன் ஒருவனை நால்வர் சுமந்து கொண்டு அவரிடம் வந்தனர்.

4 கூட்ட மிகுதியால் அவர்முன் அவனைக் கிடத்த முடியாமல் அவர் இருந்த வீட்டின் மேல்தட்டைப் பிரித்து, திறப்பு உண்டாக்கி, திமிர்வாதக் காரன் படுத்திருந்த படுக்கையை இறக்கினர்.

5 இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

6 அங்கிருந்த மறைநூல் அறிஞருள் சிலர். "என்ன, இவர் இப்படிப் பேசுகிறார்? கடவுளைத் தூஷிக்கிறார்.

7 கடவுள் ஒருவரே யன்றிப் பாவத்தை மன்னிக்கவல்லவர் வேறு யார்?" என்று உள்ளத்தில் எண்ணினர்.

8 இவர்கள் தமக்குள் இவ்வாறு எண்ணுவதை இயேசு உடனே மனத்தில் அறிந்து, அவர்களை நோக்கி, "உங்கள் உள்ளத்தில் இப்படி நினைப்பதேன்?

9 எது எளிது ? இந்தத் திமிர்வாதக்காரனை நோக்கி, "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்பதா? "எழுந்து உன் படுக்கையை எடுத்துகொண்டு நட" என்பதா?

10 மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"

11 திமிர்வாதக்காரனை நோக்கி -- "நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப்போ" என்றார்.'
(மாற்க்.2:1-11)

கடவுள் ஒருவரால் மட்டுமே பாவங்களை மன்னிக்கமுடியும் என்று அங்கு இருந்த அனைவருக்கும் தெரியும்.

இயேசு தான் கடவுள் என்பதை எண்பிக்கும் வகையில்

'மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்கிறார்.

இதில் இன்னொரு உண்மயையும் புரிந்துகொள்ள வேண்டும்.

பாவ மன்னிப்புப் பெற பாவம் செய்தவன் தான் செய்த பாவங்களுக்காக வருந்த வேண்டும்.

ஆகவே சம்பந்தப்பட்ட நபர் பாவங்கட்காக மனஸ்தாபப்பட்டிருப்பார்
என்ற உண்மையையும் அறிந்துகொள்ளலாம்.

இயேசு உலகிற்கு வந்தது டாக்டர் உத்யோகம் பார்க்க அல்ல.

பாவிகளைத் தேடி அவர்களது பாவங்களை மன்னிக்கவே மனிதன் ஆனார்.

உடல் நோய்களைக் குணப்படுத்தும்போது ஆன்மீக நோயையும் சேர்த்துதான் குணமாக்கினார்.

உடலுக்கு சுகம் அளிப்பது மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது.

ஆனால் ஒவ்வொரு முறைக் குணமளிக்கும்போதும்

விசுவாச அறிக்கை,

  இயேசுவிடம்      கேட்பது உறுதியாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை,

பாவங்களுக்காக மனஸ்தாபம்,

பாவ மன்னிப்பு,

இறைவனைப் பின்பற்றுதல்

(அவன் உடனே பார்வை பெற்று, இயேசுவுக்குப் பின்னே வழி நடந்தான்.
மார்க்.10:52)

ஆகிய ஆன்மீகப் பணிகள் ஒழுங்காக நடைபெற்றுக்கொண்டு வந்திருக்கின்றன."

" குணம் பெற்றோர் பாவங்களுக்காக மனஸ்தாபப்  பட்டதாக எங்கும் குறிப்பிடப்பட வில்லையே.

குறிப்பிடப்படாததை நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்?"

"உனது அறையில் இரவு 2 மணிக்கு லைட் எரிகிறது,

நீதான் Switch அ போட்டிருப்பாய்ன்னு யாரும் சொல்லணுமா?

பாவங்கள் மன்னிக்கப் பட்டாலே, பாவி மனஸ்தாபப்  பட்டிருப்பான்னு அருத்தம்.

சிலுவையில் தொங்கும்போது நல்ல கள்ளனை மன்னித்து ஏற்றுக்கொண்டார்.

ஏனெனில்  அவன் குற்றத்தை ஏற்றுக்கொண்டான்.

(நாம் தண்டிக்கப்படுவது முறையே. ஏனெனில், நம் செயல்களுக்குத்தக்க பலனைப் பெறுகிறோம்.)

ஆனால்  தனது மரணத்திற்குக் காரணமானவர்களை மன்னிக்கத் தன் தந்தையிடம் வேண்டுகிறார்.

ஏனெனில் சம்பத்தப்பட்டவர்கள் மனஸ்தாபப்பட கால அவகாசமும், இறையருளும் தேவையல்லவா?

தந்தை மகனின் வேண்டுதல்படி அருளை அளித்திருப்பார்.

அவர்களும் மனஸ்தாபப்பட்டு மன்னிப்பும் பெற்றிருப்பார்கள்.

நல்லதையே நம்புவோம்."



"நாமும் விசுவசிக்கிறோம்,

நம்புகிறோம்,

நேசிக்கிறோம்.

வேண்டியது வேண்டிய உடனே கிடைக்கவில்லையே."

"அப்படியானால் நம்மிடம் போதிய அளவு விசுவாசம்,  நம்பிக்கை,  அன்பு இல்லை என்று அருத்தம்.

போதிய அளவு கிடைப்பதற்காக இறையருளை வேண்டுவோம்.

நமக்கு போதுமான விசுவாசம் இருந்தால்,

வேண்டும்போதே,

'உமக்குச் சித்தமிருந்தால்' என்ற வசனத்தைச் சேர்த்துக் கொள்வோம்.

எது நடந்தாலும் நன்மைக்கே என்று ஏற்றுக்கொள்வோம்.

'கேட்டது கிடைக்கவில்லை'
என்று கூறவே மாட்டோம்.

என்ன நேர்ந்தாலும்
'உமது சித்தம் எனது பாக்கியம்' என்று மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள் வோம்.

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.

"இதோ ஆண்டவரின் அடிமை. உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது."

என்று கூறிய அன்னை மரியின் விசுவாசம் நமக்கு வேண்டும்.

"ஆண்டரே நான் கேட்பதை எல்லாம் தரவேண்டும்"

என்று கூறாமல்,

"ஆண்டரே, கேட்கிறேன்.

உமக்குச் சித்தமிருந்தால் தாரும்"

என்று செபிப்பதுதான் உண்மையான விசுவாசத்திற்கு அடையாளம்.

விசுவாசத்தோடு கேட்போம்.

இறைவனுக்குச் சித்தமானால் கிடைக்கும்
என உறுதியாக நம்புவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment