Saturday, July 28, 2018

ஆதியிலே வார்த்தை இருந்தார்.(அரு.1:1)

ஆதியிலே வார்த்தை இருந்தார்.(அரு.1:1)
************---*****-*************

ஆதியும் அந்தமும் அற்றவர் கடவுள்.

அதாவது,

துவக்கமும், முடிவும் இல்லாதவர்.

எக்காலமும் இருக்கிறவர்.

மோயீசனிடம் தன் பெயரை 'இருக்கிறவர் நாமே.'  (I am who I am.)

என்றுதான் வெளிப்படுத்தினார்.

கடவுளுக்கு  துவக்கமும், முடிவும் இல்லாவிட்டாலும்

அவரால் படைக்கப்பட்ட பிரபஞ்சத்திற்கு (Universe) துவக்கமும்,  முடிவும் உண்டு.

அதாவது, நாம் நமது வாழ்வை அவரிடமிருந்துதான்  ஆரம்பித்தோம்.

ஏனெனில் ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மைப் படைத்தவர் அவரே.

அவரிடம்தான் நம் வாழ்வை முடிப்போம்.

அவரோடு இணையவே நம்மைப் படைத்தார்.

நம்மைப் பொறுத்தமட்டில்,

நமது ஆதியும் அந்தமும்,  அவரே.

'அ'கரமும், 'ந'கரமும் அவரே.
(நமது மொழியின் முதல் எழுத்து 'அ'. இறுதி எழுத்து 'ந')

நமக்கு ஆதி (துவக்கம்) இருந்தது.

நமது ஆதியில்,

ஆதியில்லாத கடவுள் இருந்தார்.

ஆதியிலே 'வார்த்தை' இருந்தார்.

'வார்த்தை'  என்று அருளப்பர் குறிப்பிடுவது இறைமகன் இயேசுவை.

"அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார்,

அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்."

இறைமகன் இயேசு நித்தியமாக கடவுளோடு இருக்கிறார்,

அதாவது,

நித்திய காலமாக கடவுளிடமிருந்து பிறக்கிறார்,

ஆகவே நித்திய காலமாகவே அவர் இறைமகனாக இருக்கிறார். 

இறைமகன் நித்திய காலமாக இறைவனாக இருக்கிறார்.

இறைமகன் இறைத்தந்தையினுள்

ஒரே தேவசுபாவத்தோடு இருப்பதால்

தந்தையும், மகனும் ஒரே கடவுள்தான்.

"ஆவியானவர் புறாவைப்போல வானிலிருந்து இறங்கி, இவர்மேல் தங்கியதைக் கண்டேன்."

ஸ்நாபக அருளப்பரின் இவ்வார்த்தைகளோடு  பரிசுத்த தமதிரித்துவத்தின்
இறைவெளிப்பாடு பூர்த்தியாகிறது.

நித்திய காலமாக இறைவனிடமிருந்து பிறக்கிறவரை ஏன் வார்த்தை என்று அழைக்கிறோம்?

இதைப் புரிந்துகொள்ள இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்ட நம்மைப்  புரிந்துகொள்ளவேண்டும்.

அவரை நாம் புரிந்துகொள்ள ஏதுவாகத்தான்

நம்மை அவர் சாயலாகப் படைத்திருக்கிறார் என
நினைக்கிறேன்.

மற்ற ஜீவராசிகட்கு இல்லாத ஒரு முக்கிய பண்பு நமக்கு மட்டும் இருக்கிறது.

அது நமது எண்ணம்.

எண்ணம்தான் பேச்சாகவும், செயலாகவும் வெளிப்படுகிறது.

மற்ற உயிர்ப் பிராணிகள் உள்ளுணர்வினால் (Instinct) இயங்குகின்றன.

நாம் எண்ணியதைத்தான் பேசுகிறோம்.

பேச்சுக்கு அடிப்படை எது?

வார்த்தை.

வார்த்தை எண்ணத்தில் தோன்றி, வார்த்தையில் வெளிப்படுகிறது.

இறைவன் நித்திய காலமாக தன்னைப் பற்றி எண்ணுகிறார்.

எண்ணத்தில் தோன்றுவதை,

நமது மொழிப்படி,

வார்த்தை என்கிறோம்.

நமது எண்ணம் வெறும் எண்ணம்தான்.

ஆனால் இறைவன் தன்னைப் பற்றி எண்ணும் எண்ணம் (வார்த்தை) இறைமகனாகிறது.

இறைவன் தன்னை ('தன்னை' எனும்போது தன்னுள் உள்ள வார்த்தையையும் சேர்த்துதான்)
நேசிக்கிறார்.

அந்நேசமே பரிசுத்த ஆவி.

தந்தை, மகன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்று ஆட்களும் ஒருவருள் ஒருவராக ஒரே தேவசுபாவத்தில் ஐக்கியமாயிருப்பதால் மூவரும் ஒரே கடவுள்.

கடவுளைப் பற்றி யாராலும் முழுமையாக விபரிக்க முடியாது.

இவ்விளக்கம் ஓரளவு உதவும். அவ்வளவுதான்.

மூவொரு கடவுள் மனிதர்களை அவரது சாயலில் படைத்திருப்பதால்

மனித இனமே அன்பில் ஐக்கிமாக வேண்டும் என்று விரும்புகிறார்.

"எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக.

தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல்,

அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்: "

நாம் ஒன்றாய் இருப்பதுபோல்

அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி,

நீர் எனக்கு அளித்த மகிமையை நான் அவர்களுக்கு அளித்தேன்.

"இவ்வாறு

நான் அவர்களுள்ளும், நீர் என்னுள்ளும் இருப்பதால்,

அவர்களும் ஒருமைப்பாட்டின் நிறைவை எய்துவார்களாக:

இங்ஙனம், நீர் என்னை அனுப்பினீர் என்றும், நீர் என்பால் அன்புகூர்ந்ததுபோல்

அவர்கள்மீதும் அன்புகூர்ந்தீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்."
(அரு.17:23)

ஆதி முதல் நம்மமோடு இருக்கும்

வார்த்தையின்

வார்த்தைகள்

நம்மை வழிநடத்துவனவாக.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment