"நானே உயிர்தரும் உணவு."
(அரு.6:35)
********************************
தாயின் வயிற்றில் கருத்தரித்த குழந்தை
தாயின் உதிரத்தையும், தசையையும் உணவாகக்கொண்டு
முழுக்குழந்தையாக வளர்கிறது.
தன் தாயையே உணவாகக்கொண்டு உருப்பெறுவதால் அது தாயின் சாயலைப் பெறுகிறது.
'தாயைப் போல பிள்ளை, நூலைப்போல சேலை.'
இந்த இயற்கை நிகழ்வு
இறைவனது திட்டப்படிதான் நடக்கிறது.
இது இறைவன் திட்டப்படி நிகழும் இயற்கை (natural) நிகழ்வாயினும்,
இயற்கைக்கு அப்பாற்பட்ட (Supernatural) இதையொத்த நிகழ்விலும்
இதே போன்றுதான் நடக்கிறது.
''தாயைப் போல பிள்ளை." என்பதில் தேவசாஸ்திர (Theological) சாயல் இருக்கிறது.
கடவுள் நம்மையும் அவர் சாயலாகவே படைத்தார்.
"கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார்."
(ஆதி.1:27)
தமக்குரிய சுதந்திரம், அன்பு, நீதி, அறிவு போன்ற பண்புகளையும் நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
ஒரு தாய் தனது உதிரத்தையும், தசையையும் கொண்டு தன் பிள்ளையைத் தன் வயிற்றில் உருவாக்குவதுபோல,
இறைவனும் தன் பண்புகளை ஊட்டி நம்மை உருவாக்கினார்.
குழந்தை பிறந்தபின்பும் தாய் உதிரத்தையும், தசையையும் பால் வடிவில் குழந்தைக்கு ஊட்டி வளர்க்கிறாள்.
அதே போன்றுதான் இறைமகன் இயேசு
தன் தசையையும், உதிரத்தையும்
அப்ப ரசக் குணங்களில் நமக்கு ஊட்டி
இன்றும் நம்மை ஆன்மீகரீதியாக வளர்த்துக்கொண்டு வருகிறார்.
இதற்காகத்தான் திவ்ய நற்கருணை என்னும் தேவத்திரவியஅனுமானத்தை ஏற்படுத்தினார்.
திவ்ய நற்கருணை பார்ப்பதற்கு அப்பமும், ரசமுமாகத் (Bread and wine) தோன்றினாலும்
அது உண்மையிலேயே இயேசுவின் தசையும், இரத்தமுமாகும்.
"அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்: முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள். அதை மனுமகன் உங்களுக்குக் கொடுப்பார்."
"வானத்திலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே."
"நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே."
"நானே உயிர் தரும் உணவு. என்னிடம் வருகிறவனுக்குப் பசியே இராது: என்னில் விசுவாசங்கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது."
""வானினின்று இறங்கிவந்த உணவு நானே"
"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுமகனின் தசையை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய
உங்களுக்குள் உயிர் இராது."
" என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்.'
"என் தசை மெய்யான உணவு, என் இரத்தம் மெய்யான பானம்."
மேற்கூறப்பட்ட வார்த்தைகள் உண்மையிலேயே இயேசு கூறியவை.
நம் பூலோகத்தாய் தருவது நமது உடலுக்கான உணவு.
இயேசு தருவது நம் ஆன்மாவிற்கான உணவு.
நம் தாய் தரும் உணவினால் வளர்ந்த உடல் ஒரு நாள் அழிந்துபோகும்.
ஆனால் இயேசுவை உண்ணும் நமது ஆன்மா ஒருபோதும் அழியாது.
அம்மா தரும் பால் நமது உடலை வளர்த்தாலும், பாலில் உயிர் இல்லை.
ஆனால் ஆன்மீக உணவாகிய இயேசு உயிருள்ள உணவு.
இந்த உயிருள்ள உணவை,
அதாவது,
திவ்யநற்கருணையை, அடிக்கடி உட்கொள்வதால்
நமது ஆன்மா
பாவச்சோதனைகட்கு எதிராகப்
பலம் பெறுகிறது.
திவ்யநற்கருணையை ஏன் உயிருள்ள உணவு என்கிறோம்?
நமது ஆன்ம உணவாக வரும் ஆண்டவர் உயிருள்ளவர்.
அவர் நமது ஆன்மாவின் உயிரைப் பலப்படுத்துகிறார்.
ஆன்மாவின் உயிர் தேவ இஸ்ட்டப்பிரசாதம். (Sanctifying grace.)
ஆன்ம உயிரின் எதிரி சாவான பாவம்.
நற்கருணை உணவு நமது ஆன்மாவைப் பாவத்திற்கு எதிராகப் பலப்படுத்துவதால்
நமது ஆன்மா
பாவச் சோதனைகளை வென்று
நித்திய வாழ்விற்கு எப்போதும் தயாராக இருக்கிறது.
ஆகவே
நற்கருணை உயிருள்ள உணவு மட்டுமல்ல,
உயிரளிக்கும் உணவும்கூட.
நற்கருணை உணவை ஒழுங்காக உட்கொள்வோர் என்றென்றும் வாழ்வர்.
நற்கருணை உட்கொள்ளும்போது நமது ஆண்டவரே நம்முள்
வருவதால்
அவரை வரவேற்கக்கதாக பரிசுத்தமாய் இருக்கவேண்டும்.
சாவான பாவத்தோடு நற்கருணை உட்கொள்வது இன்னொரு சாவான பாவம்.
சாவான பாவத்தோடு நற்கருணை உட்கொள்வது,
குளிக்கப்போய் சகதியைப் பூசிக்கொள்வதற்குச் சமம்.
சாவான பாவம் இருந்தால்
நல்ல பாவசங்கீத்தனம் செய்த பின்
நற்கருணை உட்கொள்ளவேண்டும்.
நற்கருணை நாதரை உணவாக வரவேற்க
எப்போதும் பரிசுத்தமாய் இருப்போம்.
உயிர் உள்ள உணவை உண்போம்,
என்றென்றும் உயிர் வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment