""நானே உலகின் ஒளி: என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான். உயிரின் ஒளியைக் கொண்டிருப்பான்."
(அரு.8:12)
*********-*********-******-******
1958 -1960
எனது ஆசிரியர் பயிற்சி காலம்.
அக்காலப் பயிற்சி ஆதாரக்கல்வியை அடிப்படையாகக் கொண்டது.
புத்தகப் படிப்புக்குச் சமமாக தொழிற்கல்வியும் கற்க வேண்டும்.
நாங்கள் கற்ற கல்வி நூற்பு, நெசவு.
நெசவுத் தறிகள் ஒரு நீண்ட ஹாலில் வைக்கப்பட்டிருந்தன.
பகலில் தறிநெசவு செய்யும் அதே ஹாலில்தான் இரவில் தூங்குவோம்.
ஒரு நாள் இரவில் மின்சாரம் இல்லை.
தூரத்திலிருந்து இலேசான நிலா ஒளி பூமியின்மீது பட்டும் படாமல் வீசிக்கொண்டிருந்தது.
ஹாலில் படுப்பதற்காகச் சென்றபோது
ஒரு மாணவன் கையில் படுக்கையுடன் வெளியே வந்துகொண்டிருந்தான்.
"உள்ளே யாரும் போகவேண்டாம். ஏதோ நெளிந்துகொண்டு படுத்திருக்கிறது."
"நெளிந்துகொண்டா? பாம்பா?"
"அப்படித்தான் தெரிகிறது. கொஞ்சம் நீளமாகவே தெரிகிறது."
அவன் சொன்னதை நம்புவதைத் தவிற வேறு வழி இல்லை.
யாரும் risk எடுக்க வில்லை.
வெளியே வெராண்டாவிலேயே படுத்துக்கொண்டோம்.
இரவில் யாரும் சரியாகத் தூங்கவில்லை.
பாம்பு பயம்.
காலையில் எழுந்தபோது, இரவில் பாம்பைப் பார்த்த அதே மாணவன்,
"இனிப் பயப்படத் தேவையில்லை."
"பாம்பை அடித்துவிட்டாயா? "
"இல்லை. அது பாம்பே இல்லை.
தறியிலுள்ள ஒரு நீளக் கம்பு. கொஞ்சம் வளைந்திருந்ததால்
கும்மிருட்டில் அது பாம்பு போல் தெரிந்திருக்கிறது."
இருட்டு பார்த்த வேலை, பயம், தூக்கமின்மை.
ஒளி இல்லாவிடில் உலகம் இயங்காது.
கடவுள் படைப்பின்போது முதலில் ஒளியைப்படைத்தார்.
"அப்பொழுது கடவுள்: ஒளி உண்டாகுக என்று உரைத்தார்.
உரைக்கவே, ஒளி உண்டாயிற்று." (ஆதி.1:3)
ஒளி இல்லாவிட்டால் உலகில் எந்தப் பொருளையும் நம்மால் பார்க்க இயலாது.
அதனால்தான் நமது பார்வைக்கு உதவும் பகலை உழைப்பதற்கும்,
பார்வைக்கு உதவாத இரவை ஓய்வுக்கும் பயன்படுத்துகிறோம்.
இரவிலும் உழைக்க விரும்பினால் செயற்கை ஒளியை உண்டாக்கிக் கொள்கிறோம்.
ஒளி இருந்தால் மட்டும் போதாது.
போதுமான ஒளி இல்லாவிட்டால் அதை அரைகுறை இருட்டு என்போம்.
அரைகுறை இருட்டில் பொருட்களும் அரைகுறையாகத்தான் தெரியும்.
ஒரு பொருள் வேறொரு பொருள் மாதிரிகூட தெரியும்.
இவ்வுலகப் பொருட்களைப் (Material things) பார்க்க ஒளி தேவைப்படுவது போலவே
ஆன்மீக விசயங்களைப் (Spiritual matters) புரிந்துகொள்ளவும் ஒளி தேவை.
ஆனால் சூரிய ஒளியைக் கொண்டு ஆன்மீக விசயங்களைப் புரிந்துகொள்ள முடியாது.
'எல்லாம் இயேசுவே, எனக்கு எல்லாம் இயேசுவே'
என்ற வரியில் மிக உன்னதமான ஆன்மீக உண்மை பொதிந்திருக்கிறது.
'நமக்கு
ஆரம்பம் இயேசுவே,
முடிவும் இயேசுவே,
வழியும் இயேசுவே,
வழியில் ஒளியும் இயேசுவே,
உண்மையும் இயேசுவே,
உயிரும் இயேசுவே,
வாழ்வும் இயேசுவே,
வாழ்வு தரும் உணவும் இயேசுவே,
எனக்கு எல்லாம் இயேசுவே.'
"நானே உலகின் ஒளி."
உலகில் வாழும்
அனைத்து மக்களுக்கும்
ஆன்மீக வாழ்வின்
ஒளியாய் இருப்பவர்
இயேசு மட்டுமே.
ஆன்மீக சம்பத்தப்பட்ட அனைத்து விசயங்களையும் இயேசு என்னும் ஒளியில்தான் பார்க்க வேண்டும்.
ஒளியின் தன்மை என்ன?
ஒளி பொருட்களின் மேலே படுவதோடு
அவற்றை ஊடுரூவிச் சென்று,
அவற்றின் உண்மைத் தன்மையை
உள்ளது உள்ளபடியே வெளிப்படுத்துகிறது.
ஒளியாகிய இயேசு நம்மீது பட்டால்
நமது ஆன்மா முழுவதுமாக ஊடுரூவிச் சென்று,
அதன் உண்மை நிலையை நாம் உணரச் செய்வார்.
நமது ஆன்மாவின் உண்மைநிலை அறிய,
நற்கருணைப் பேழையின் முன் அமர்ந்து,
நற்கருணைநாதரை நமது உள்ளத்தில் அமர்த்தி,
நம்மை முழுவதுமாய் அவரோடு ஒன்றித்து,
அவரது போதனைகள் அடிப்படையில் நம்மை ஆராய்ந்தால்,
நமது உண்மையான ஆன்ம நிலை நமக்குப் புரியும்.
இயேசுவாகிய ஒளியில்
நம்மைச் சுயபரிசோதனை செய்தால்
நமது ஒவ்வொரு எண்ணமும், செயலும்
எந்த அளவிற்கு
இயேசுவின் போதனையோடு
ஒத்துப்போகின்றது
என்பது தெளிவாகத் தெரியும்.
இயேசுவை மனதில் இருத்தி,
"உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்: உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள்."
என்ற இயேசுவின் போதனை அடிப்படையில்
நம்மைப் பரிசோதித்தால்
அயலானோடு நமது உண்மையான நிலை நமக்குப் புரியும்.
நம்மை நாமே திருத்திக்கொள்ள
இயேசுவின் அருளைத் தேடுவோம்.
இயேசுவே நம்மைத் திருத்துவார்.
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு போதனை ஒளியில்
சுய ஆய்வு செய்தால்
இயேசுவின் ஒளி
நம்மில் பிரதிபலிக்கும்.
அதாவது மற்றோர் நம்மில் இயேசுவைக் காண்பர்.
"வாழ்வது நானல்ல, இயேசு என்னில் வாழ்கிறார். "
என்ற புனித சின்னப்பரின் கூற்று நம்மில் உண்மையாகும்.
நமது ஆன்மீக வாழ்வில் என்ன பிரச்சனை வந்தாலும் அதற்கு இயேசுவாம் ஒளியில் தீர்வுகாண வேண்டும்.
அதாவது அதை இயேசுவின் கண்ணால் நோக்கவேண்டும்.
அதாவது இயேசுவிடம் அப்பிரச்சனை கொண்டுவரப்பட்டால் அவர் எப்படித் தீர்வு காண்பாரோ
அப்படியே நாம் தீர்வு காணவேண்டும்.
"நானே ஒளி.
பிரச்சனைகளை என்னிடம் விட்டுவிடுங்கள்.
நானே தீர்வு காண்கிறேன் "
என இயேசு சொல்கிறார்.
உதாரணத்திற்கு:
ஒரு பள்ளிக்கூட நிருவாகி.
தவறு செய்ததாகக் கருதப்படும் ஆசிரியர் ஒருவர்
நிருவாகி முன் விசாரணைக்கு நிற்கிறார்.
உலக முறையில் நிருவாகி என்ன செய்கிறார்?
விசாரணை செய்கிறார்.
அவரது கண்ணோக்கில் ஆசிரியரைக் குற்றவாளி எனத் தீர்மானித்தால்,
1.அராதம்- fine.
2.பணியிட மாற்றம்-Transfer
3.பணிநீக்ம் - Dismissal
4.எச்சரிக்கை - Warning
இவற்றில் ஏதாவது ஒரு முடிவு
எடுக்கிறார்.
ஆனால் இயேசுவின் முன்பு கொண்டுவப்பட்ட குற்றம் சாட்டப்பற்றவரை
அவர்
மன்னிக்கிறார்.
புத்தி கூறுகிறார்.
யூதாஸைக்கூட இயேசு
திட்டவில்லை,
பணிநீக்கம் செய்யவில்லை.
அவன் காட்டிக்கொடுத்தபோதுகூட
அவனை 'நண்பா' என்றுதான் அழைத்தார்.
இயேசு நிருவாகியாக இருந்தால் என்ன செய்வார்?
அறிவுரை கூறுவார்.
மன்னிப்பார்.
மன்னிப்பு குற்றவாளியைத் திருத்தும்.
"மன்னித்துக்கொண்டே போனால் நிருவாகம் செய்ய முடியாது"
என்று ஒரு நிருவாகி சொன்னால் அவர் கிறிஸ்தவ நிருவாகி அல்ல.
மன்னிப்பன் மட்டுமே கிறிஸ்தவன்.
புனித சின்னப்பர் கூறுகிறார்,
"சகோதரர்களே,
ஒருவன் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டால்,
ஆவியானவரைப் பெற்றிருக்கும் நீங்கள்
சாந்தமான உள்ளத்தோடு
அப்படிப்பட்டவனைத் திருத்துங்கள்."
(கலாத்தியர்.6:1)
இத்தகைய கிறிஸ்தவ அணுகுமுறை
அலுவலகம்,
குடும்பம்,
நட்பு
போன்ற அனைத்து அமைப்புகட்கும் பொருந்தும்.
"நானே உலகின் ஒளி."
உலகின் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் கிறிஸ்து என்ற ஒளியில்தான் காணவேண்டும்.
'அன்பு, (Love)
துன்பம் (Suffering)
தியாகம், (Sacrifice)
இதுதான் கிறிஸ்துவின் வாழ்க்கைச் சுருக்கம்.
உலகில் அன்பைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்.
அன்பு செய்வதாகவும் எல்லோரும் கூறுகிறார்கள்.
உண்மையான அன்பு எது?
கிறிஸ்தவ ஒளியில் பார்த்தால்
கிறிஸ்துவுக்காக
துன்பங்கள் அனுபவிக்கவும்,
தியாகங்கள் செய்யவும்
தயாராக இருக்கும் அன்பே
கிறிஸ்தவ அன்பு.
கிறிஸ்து நம்மை அன்பு செய்தார்.
நமக்காகத் துன்பங்கள் பட்டார்.
நமக்காகத் தன் உயிரையே தியாகம் செய்தார்.
இந்த அடிப்படையில் நாம் வாழ்வை நோக்குவோம்.
நமக்கு வரும் துன்பங்கள்
கிறிஸ்தவ ஒளியில்,
ஆசீர்வாதங்கள்.
ஏனெனில் அவை நம் பாவங்களைப் பரிகரிக்கின்றன.
மரணம்,
கிறிஸ்தவ ஒளியில்,
ஆசீர்வாதம்.
ஏனெனில், அது நமக்கு விண்ணக வாயிலைத் திறக்கிறது.
யாராவது நம்மை நாம் செய்யாத குற்றத்திற்காகத் தண்டிக்கிறார்களா?
கிறிஸ்தவ ஒளியில்,
அது நமக்கு ஆசீர்வாதம்.
ஏனெனில் அது நம்மை இயேசுக்கு ஒப்பாக்குகிறது
ஏனெனில், இயேசுவும் தான் செய்யாத குற்றத்திற்காகத்தான் தண்டனை கொடுக்கப்பட்டார்.
கிறிஸ்துவாகிய வழியில் நடப்போம்.
கிறிஸ்துவாகிய ஒளியில் நடப்போம்.
உண்மைக் கிறிஸ்தவராக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
Glory to God
ReplyDelete