"உலகிற்கு ஒளி நீங்கள்."
(மத்.5:14)
********************************
சூரியன் ஒரு நட்சத்திரம்.
அது சுயமாக ஒளிதருகிறது.
சூரியனின் ஒளியைப் பெற்ற கோள்கள் அதைப் பிரதிபலிக்கின்றன. (Reflect)
அந்த பிரதிபலிப்பு மற்ற கோள்களுக்குத் தெரியும்.
சூரிய ஒளியைப் பிரதிபலித்துதான் சந்திரன் நமக்கு இரவில் ஒளிதருகிறது.
இயேசு சுயமாக அன்பு ஒளி வீசக்கூடிய நட்சத்திரம்.
அவரை வலம் வரும் நாம் அவரது அன்பு ஒளியைப் பிரதிபலிக்கும் கோள்கள்.
வேறு விதமாக சொல்வதானால்,
இயேசு அன்பின் ஊற்று.
அது பொங்கிவடிந்து நம்மேல் விழுகிறது.
அந்த ஊற்றுத் தண்ணீரை நாம் மட்டும் குடித்தால் போதாது.
மற்றவர்கட்கும் கொடுக்கவேண்டும்.
"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்."
"நானே உலகின் ஒளி"
என்று கூறிய இயேசு
"உலகிற்கு ஒளி நீங்கள்."
என்கிறார்.
'நான்' என்பதற்கும்,
'நானே' என்பதற்கும்
வித்தியாசம் இருக்கிறது.
'நானே' என்றால் 'நான் மட்டும்தான்' என்பது பொருள்.
தர்க்க ரீதியாகப் பார்த்தால்,
"நானே உலகின் ஒளி.
நீங்கள் உலகின் ஒளி.
ஆகவே,
நான் = நீங்கள்.
இயேசு நம்மை அவரோடு சமமாக்குகிறார்.
கிறிஸ்தவர்ககளைத் துன்புறுத்திய சவுலை நோக்கி ஆண்டவர்,
"நீ என்னைத் துன்புறுத்துவதேன்?"
என்று கேட்க,
பவுல்,
"ஆண்டவரே, நீர் யார்?"
என்று கேட்க,
"நீ துன்புறுத்தும் இயேசுதான் நான்."
என்கிறார்.
சவுல் கிறிஸ்தவர்களைத்தான் துன்புறுத்தினார்.
ஆனால் இயேசு,
"நீ துன்புறுத்தும் இயேசுதான் நான்."
என்று கூறினார்.
கிறிஸ்து தன்னைப் பின்பற்றுபவர்களைத் தானாகவே நினைக்கிறார்.
அக்காலக் கிறிஸ்தவர்கள் அந்த அளவிற்கு இயேசுவைப் பிரதிபலித்திருக்கிறார்கள்.
நாம் உலகின் ஒளியாக வேண்டுமென்றால்
முதலில் நாம் கிறிஸ்துவாக மாறவேண்டும்.
கிறிஸ்துவின் பண்புகள் எந்த அளவிற்கு நம்மிடம் பிரதிபலிக்க வேண்டுமென்றால்
நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் கிறிஸ்துவைப் பார்க்கவேண்டும்.
"வாழ்வது நானல்ல, கிறிஸ்து என்னில் வாழ்கிறார். "
என்ற புனித சின்னப்பரின் கூற்றை நம்மில் உண்மையாக்கவேண்டும்.
நாம் முன்பின் தெரியாத ஊர் ஒன்றுக்குப் போகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
நம்மை அறியாதவர்கள்கூட நமது செயல்முறைகளைப் பார்த்து,
"இவர்கள் கிறிஸ்தவர்கள் "
என்று கூறவேண்டும்.
நமது நடைமுறைகளைப் பார்த்து அவர்கள் கிறிஸ்தவர்களாக மாறவேண்டும்.
இது 'செயல் மூலம் வேத போதனை'.
தென்காசிக்கு மேற்கே ஐயாபுரம் என்னும் ஊர் இருக்கிறது.
அந்த ஊரிலிருந்து ஒரு அம்மா
தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு
ஒவ்வொரு வாரமும் தென்காசிப் பங்கு கோவிலுக்குப்
பூசைக்கு வருவார்கள்.
எனது அம்மாவிற்கும் அந்த அம்மாவிற்கும் ரொம்ப பிடிக்கும்.
நாங்கள் எல்லோருமே குடும்ப நண்பர்களாகிவிட்டோம்.
ஒரு நாள் அவர்களுடைய அழைப்பின் பேரில் பூசை முடிந்தபின் அவர்கள் வீட்டிற்கு விருந்துக்குப் போனோம்.
அப்போதெல்லாம் மாட்டுவண்டிப் பயணம்தான்.
அப்போது அந்த அம்மா தனது திருமண வரலாற்றை ரசிக்கும்படியா சொன்னாங்க.
அவர்கள் பிறந்தது ஒரு இந்து குடும்பத்தில்.
அவர்கள் பெற்றோர் அவர்களை ஐந்துக்கு மேல் படிக்கவைக்கவில்லை.
அவர்களது திருமண பருவத்தில் அவர்களது அழகு காரணமாக, அதே ஊரைச்சேர்ந்த ஆசிரியருக்குப் பெண் கேட்டிருக்கிறார்கள்.
மாப்பிள்ளை வீட்டாரும் இந்துக்கள்தான்.
இரண்டுமே வசதியுள்ள குடும்பங்கள்தான்.
பெண்ணின் பெற்றோருக்கு பெண் கொடுக்க விருப்பம்தான்.
ஆனால் ஒரு நிபந்தனை போட்டார்கள்.
"மாப்பிள்ளை கத்தோலிக்க கிறிஸ்தவராக மாறவேண்டும்.
திருமணம் கத்தோலிக்க ஆலயத்தில்தான் நடக்கவேண்டும்."
மாப்பிள்ளை வீட்டாருக்கு நிபந்தனை புரியவில்லை.
"நம் இரண்டு குடும்பங்களும் இந்துக்கள். ஒரே மதத்தில் திருமணம் செய்துகொள்வதில் என்ன பிரச்சனை?''
பெண்ணின் அப்பா சொன்னார், "பெண் ஐந்துக்கு மேல் படிக்கவில்லை.
மாப்பிள்ளை பட்டதாரி ஆசிரியர்.
என்றாவது ஒரு நாள் 'படியாத பெண்ணைக் கட்டிவிட்டோமே' என்ற எண்ணத்தில் Divorce வரைப்போய்விட வாய்ப்பு இருக்கு.
கத்தோலிக்க மதத்திலேதான் திருமணத்துக்கு முழு பாதுகாப்பு.
அங்கே Divorce கிடையாது.
ஒரு கத்தோலிக்க மாப்பிள்ளைக்கு மனைவி ஆனால்தான் என் மகளுக்கு நிரந்தர மகிழ்ச்சி கிடைக்கும்.
உங்கள் பையன் கத்தோலிக்கன் ஆனால் நான் பெண் தரத்தயார்."
மாப்பிள்ளை நிபந்தனைக்குச் சம்மதித்தார்.
நமது ஆலயத்தில் திருமணமும் நடந்தது.
பிறப்பில் இந்துக்களாயினும் திருமணமானபின் மிக பக்தியுள்ள கிறிஸ்தவர்களாக வாழ்ந்தார்கள்.
கத்தோலிக்க திருமணத்தைப்பற்றி பெண்ணின் பெற்றோர் கொண்டிருந்த மேலான எண்ணத்திற்கு என்ன காரணம்?
அவர்கள் பழகிய கத்தோலிக்கர்களின் ஒளி.
ஒளிக்கு இரண்டு குணங்கள் உண்டு.
அதனால் தன்னையே மறைக்கமுடியாது.
அது எப்பொருள் மேல் பட்டதோ அப்பொருளையும் தன்னையே மறைக்கடியாத பொருளாக்கிவிடும்.
இயேசுவின் ஒளி நம்மீது படும்போது
பார்ப்போர் நம்மை மட்டுமல்ல, இயேசுவையும் காண்பர்.
இயேசுவின்
ஒளியில் வாழ்வோம்.
ஒளியாய் வாழ்வோம்.
வாழ்வது நாமல்ல,
இயேசு நம்மில் வாழ்கிறார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment