Thursday, July 5, 2018

படகுப் பயணம்.

படகுப் பயணம்.
**************************-******

முனைவர் பட்டம் பெற்ற கல்லூரி பேராசிரியர் ஒருவர் அகலமான ஆறு ஒன்றைக் கடப்பதற்காக படகொன்றில் ஏறினார்.

படகில் பயணித்துக் கொண்டிருந்தபோது பேராசிரியர் படகோட்டியை நோக்கி,

"ஐயா, படிச்சிருக்கீங்களா?"

"ஆமா, சாமி."

"எதுவர படிச்சிருக்க?"

"படிப்புக்கு ஏதுங்க எல்கை.

இப்பவும் படிச்சிக்கிட்டுதான் இருக்கேன், 

இன்னமும் படிச்சிக்கிட்டுதான் இருப்பேன்."

"நீங்க எந்தப் படிப்பச்சொல்றீங்க? "

"அனுபவப்படிப்ப."

"நான் கல்லூரிப் படிப்பச் சொல்றேன்."

"நான் கல்லூரிங்கிற வார்த்தையக் கேள்விப்பட்டிருக்கேன்.
அங்க போனதில்ல, சாமி.

ஆனாலும் பள்ளிக்கூடம் போகாதங்களும் படிக்கலாம்,

நீங்க படிச்சது புத்தகப் படிப்பு,

நான் படிச்சது அனுபவப் படிப்பு.

ஆனால் இரண்டும் படிப்புதான்."

"நல்லா பேசறீங்க. கூடப்பிறந்தவங்க யாரும் இருக்காங்களா? "

"ஆமா, அண்ணாச்சி இருக்காங்க. சாமியார் ஆய்ட்டாங்க"

"Very good. அப்போ அவங்களுக்குத் தேவஅழைத்தல் கிடைச்சிருக்கு.  சந்தோசம்."

"அவங்களுக்குத் தேவஅழைத்தல் கிடைச்சிருக்கா?

அப்போ எனக்கு?"

"நீங்க திருமண வாழ்க்கையைத்தானே தேர்ந்தெடுத்திருப்பீங்க."

"ஆமா. அதனால் என்ன?

சாமி,   திருமண வாழ்க்கையும் தேவ அழைத்தல்தான்.

ஏன், நான் செய்துகொண்டிருக்கும் இந்த படகோட்டும் தொழிலும்கூட அவருடைய அழைத்தல்தானே.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால்,

தேவனுடைய சித்தம்தான்தானே தேவ அழைத்தல்.

நான் திருமணம் செய்து

அவருடைய படைப்புத்தொழிலில் அவருக்கு உதவியாய் இருக்க

என்னை அழைத்திருக்கிறார்.

அப்போ, திருமண வாழ்வும்  தேவஅழைத்தல்தான்."

"படகோட்டியாய் இருந்தாலும், நன்கு பேசுகிறீங்க."

"சாமி, நமது கத்தோலிக்கத் திருச்சபைக்கு ஒரு செல்லப் பெயருண்டு.

'இராயப்பர் படகு'.

அவரைத்தானே

திருச்சபை என்னும் படகை ஓட்ட

ஆண்டவர் நியமித்தார்.

படகில் சென்று மீன் பிடித்தவரைத்தானே

ஆண்டவர் மனிதனைப் பிடிப்பவராக மாற்றினார்.

நாம் எல்லோரும் இராயப்பர் படகில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்."

"ஆமா, பள்ளிக்கூடத்திற்கே போகவில்லை என்கிறீர்கள்.

இவ்வளவு விசயம் எங்கிருந்து கற்றீர்கள்? "

"சாமீ.."

"முதல்ல சாமிசாமிங்கிறத நிறுத்துங்க. நான் கல்லூரியில பேராசிரியர். அவ்வளவுதான். இப்போ சொல்லுங்க."

"ஐயா, கடவுளைப்பற்றி கற்பதற்கு பள்ளிக்கூடம் போகவேண்டிய அவசியம் இல்லை.

பங்குசாமியார் வைக்கிற ஞாயிறு பிரசங்கத்தை ஒழுங்காகக் கவனித்தாலே போதும்."

"இப்போ கேட்கதுக்குப் பதில் சொல்லுங்க பார்ப்போம்.

கொஞ்சம் வித்தியாசமான கேள்வி.

எந்த வகையில சாமியாராகிறதவிட

திருமணம் முடிப்பது சிறந்தது?"

"இறைவனது அழைத்தல்களில எது சிறந்தது என்று கேட்பது சரியல்ல.

ஆனாலும் நீங்க மனசுல ஏதோபதில வச்சிக்கிட்டு கேட்கிறீங்க.

அத யூகிச்சி பதில் சொல்றேன்.

திருமணமானவர்களால்தான்  சாமிமார்களைப் பெற முடியும்.

ஆனால் சாமியார்களால் திருமணமானவர்களைப் பெற முடியாது.

அம்மா இல்லாட்டா சாமியாரே இல்லை.

அம்மாவின் வளர்ப்பைப் பொறுத்துதான் பிள்ளையின் குணம் அமையும்.

நல்ல சாமியார் வேண்டுமா? நல்ல பெற்றோர் வேண்டும்.

குடும்பம் என்ற

நாற்றங்காலிலிருந்து

எடுக்கப்பட்ட நாற்றைத்தான்

குருமடம் என்ற வயலில்

நட்டு உருவாக்குகிறார்கள்.

விதையும், நாற்றும் நன்றாய் இருந்தால்தான்

பயிர் நன்கு வளர்ந்து நல்ல பலன் தரும்."

"Very good. நன்றாய்ச் சொன்னீங்க.

உங்கள் மனைவிக்கு நீங்கள் முதல்முதல் கொடுத்த அன்புப்பரிசு என்ன?"

"அத ஏன் கேட்கிறீங்க?.."

"அத நான் கேட்கல.

என்ன பரிசுன்னுதான் கேட்டேன்.   

வித்தியாசமா பேசரீங்கள.

பரிசும் வித்தியாசமா இருக்குமோன்னு கேட்டேன்."

"முதல் திருமண நாளில் நான் என் மனைவிக்குக் கொடுத்த அன்புப் பரிசு

'ஒரு பாடுபட்ட சுரூபம்'."

"பாடுபட்ட சுரூபமா?

காதலர்கள் தங்கள் காதலைக் குறிக்கும் பொருளைப் பரிசாகக் கொடுப்பார்கள்.

நீங்கள் பக்திப்பொருளைக் கொடுத்திருக்கிறீர்கள்!"

"திருமண வாழ்வின் அடிப்படை எது? "

"அன்பு."

"அளவற்ற அன்பைக் குறிப்பதற்கு

பாடுபட்ட சுரூபத்தை விட

பொறுத்தமான பரிசு

வேறென்ன இருக்க முடியும்?

அன்பின் வடிவம் இயேசு,

அளவற்ற விதமாய் நம்மை அன்பு செய்பவர் இயேசு,

நம்மிடமிருந்து அன்பைத் தவிர வேறெதுவையும் எதிர்பார்க்காதவர் இயேசு,

அன்பின் காரணமாகவே நமக்காக சிலுவையில் உயிர்நீத்தவர் இயேசு.

அவர் உயிர்நீத்த சிலுவைதானே உண்மையான அன்பின் சின்னம்!

சிலுவைதானே தியாகத்தின் சின்னம்!

அன்பை வெளிப்படுத்த

பாடுபட்ட சுரூபத்தைவிட

பொருத்தமான பரிசு

வேறு எதுவும்

இருக்க முடியாது."

"உங்கள் மனைவி உங்களுக்குக் கொடுத்த பரிசு? "

"அவள்  பாடுபட்ட சுரூபத்திற்கு

அவள் கொடுத்த முத்தம்தான்

எனக்கு அவள் கொடுத்த

மிகப் பெரிய பரிசு!"

"உண்மையிலேயே நீங்கள் வித்தியாசமான தம்பதிகள்தான்.

நீங்கள் படகோட்றீங்க. உங்க மனைவி என்ன வேலை பார்க்கிறாங்க?"

"அவங்க திருமண வாழ்வின் உண்மையான பொருளை விளக்கிவிட்டு,

அதன்படியே வாழ்ந்துவிட்டு,

ஆண்டவரிடம் போய்ட்டாங்க."

"Sorry. எப்போ?"

"ஒரு மாதம் ஆகிறது."

"அதென்ன உண்மையான பொருள்?"

"பொதுவாக மக்கள் திருமண வாழ்வின் ஒரு பக்கத்த மட்டும் பார்க்கிறாங்க.

இன்னொரு பக்கத்தப் பார்க்கிறதில்ல.

அநேகருக்கு திருமணம் என்றவுடன் காதலும், இன்பமும் மட்டும்தான் ஞாபகத்திற்கு வரும்.

துன்பமும், தியாகமும் ஞாபகத்திற்கு வராது.

உண்மையான அன்பு தன் அன்பரை நேசிப்பதோடு ,

அவருக்காகவும், அவரைச் சார்ந்தவர்கட்காகவும்,

பிரதிபலனையும் எதிர்பார்க்காமல்

துன்பப்படவும், தியாகம் செய்யவும் தன்னையே அர்ப்பணிக்கும்.

இயேசு அளவற்ற விதமாய் நம்மை அன்பு செய்கிறார்.

நமக்காகவே துன்பங்கள் பல பட்டு, உயிர்த் தியாகமும் செய்தார்.

அவர் தியாகத்தால் நாம் பயன் பெற்றோம்.

நம்மால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை,

ஏனெனில் ஏற்கனவே அவர் நிறைவானவர்.

என் மனைவியின் ஒவ்வொரு நினைவும், செயலும் என்னையும், பிள்ளைகளையும், உறவுகளையும் மையமாக வைத்தே இயங்கின.

தன் உடல் நலனைப்பற்றி அக்கறைப்படாமல் உழைத்ததால் நோய்வாய்ப்படு இறந்தார்கள்.

தன் உழைப்புக்குரிய ஊதியத்தைப்  பெற இறைவனடி சேர்ந்ததார்கள்.

திருமணம் வெறுமனே அன்பு செய்வதில் மட்டுமல்ல,

துன்பங்களிலும், தியாகத்திலும்
(Sufferings and sacrifice) அடங்கியுள்ளது."

"  நல்லா பேசறீங்க. பேசிக்கொண்டே வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

இறங்கிக்கொள்கிறேன்.

தங்கள் அனுபவப் பாடத்திற்கு நன்றி. வருகிறேன்."

"வாருங்கள்."

Love and sacrifice are twins.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment