நாம் பெற்ற செல்வம்.
********************************
'பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை,
அருளில்லார்க்கு அவ்வுலகில்லை.'
என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
இப்பழமொழிப்படி செல்வம் இருவகைப்படும்,
பொருட்செல்வம்,
அருட்செல்வம்.
பொருட்செல்வம் இவ்வுலகைச் சார்ந்தது
அருட்செல்வம் மறுவுலகைச் சார்ந்தது.
இருவகைச் செல்வங்களும்
இறைவனால் நமக்கு அருளப்பட்டவையே.
இவ்வுலக வாழ்விற்கு பொருட்செல்வமும்,
மறுவுலக வாழ்விற்கு அருட்செல்வமும்
தரப்பட்டுள்ளன.
"ஆண்டவராகிய கடவுள் களிமண்ணால் மனிதனை உருவாக்கி,
அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே,
மனிதன் உயிருள்ளவன் ஆனான்."
களிமண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட உடலின் தேவைகட்காக பொருட்செல்வத்தையும்,
உயிர் மூச்சினால் படைக்கப்பட்ட ஆன்மாவின் தேவைகட்காக அருட்செல்வத்தையும்
ஆண்டவர் அருளியிருக்கிறார்.
பொருட்செல்வத்தை நமது உடலாலும்,
அருட்செல்வத்தை நமது ஆன்மாவினாலும்
உணரமுடியும், அனுபவிக்கமுடியும்.
இவ்விரண்டு செல்வங்களிலும் நிரந்தரமானது அருட்செல்வமே.
ஏனெனில்
நமது ஆன்மா
நிரந்தர,
முடிவில்லா
வாழ்விற்காகப் படைக்கப்பட்டது.
இறைவனது உயிர்மூச்சிலிருந்து படைக்கப்பட்டதால்
இறைவனோடு இணைந்து நிலைவாழ்வு வாழ்வதற்காகவே படைக்கப்பட்டது.
ஒருமுறை நண்பர் ஒருவர் என்னைச் சோதிப்பதற்கென்றே ஒரு கேள்வி கேட்டார்.
"நீங்கள் பெற்ற செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம் எது?"
நான் சொன்னேன், "அருளப்பரிடமிருந்து பெற்ற செல்வமே
நான் பெற்ற செல்வங்களுள்
மிகச் சிறந்த செல்வம்."
"எந்த அருளப்பர்? ஆவுடையானூர் அருளப்பரா?"
"அருள் ஊறும் அப்பராகிய (தந்தையாகிய) ஆண்டவரையே அருளப்பர் என்றேன்.
அவரிடமிருந்து பெற்ற விசுவாசம் என்ற செல்வமே
நான் பெற்ற செல்வங்களுள்
மிகச் சிறந்த செல்வம்."
விசுவாசம் நாம் ஈட்டிய செல்வமல்ல,
இலவசமாகப் பெற்ற அருட் செல்வம்.
ஆண்டரில் நாம் வாழவேண்டிய
அருள் வாழ்வின் அடித்தளமே விசுவாசம்தான்.
நமது விசுவாசம் எந்த அளவிற்கு ஆழமாக இருக்கிறதோ
அந்த அளவுக்கு நமது ஆன்மீக வாழ்வு சிறந்ததாக இருக்கும்.
ஆழமான விசுவாசம் உள்ளவன்
இறைவனை முழுமையாக ஏற்றுக்கொள்கிறான்,
இறைவனுக்காக மட்டுமே வாழ்கிறான்,
தன் வாழ்வில் என்ன நேர்ந்தாலும் அதில் இறைவனின் திட்டத்தைக் காண்கிறான்,
எது நேர்ந்தாலும் நன்றி கூறுகிறான்,
தான் பெற்ற விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறான் '
ஒரே வரியில்,
'விசுவாச வாழ்வு' வாழ்கிறாறன்.
நாம்
விசுவாத்தோடு,
விசுவாசத்தில்,
விசுவாசத்திற்காக
விசுவாச வாழ்வு வாழ்வதற்காகத்தான்
விசுவாசம் இலவசமாக அருளப்பட்டுள்ளது.
நாம் பெற்ற விசுவாசத்தை ஒவ்வொரு வினாடியும்
(instant by instant, moment by moment.)
புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
செபமாலை சொல்லும் ஒவ்வொரு முறையும் நமது விசுவாசத்தை புதுப்பித்துவிட்டுதான் சொல்கிறோம்.
திவ்ய பலியின்போதும் விசுவாசத்தைப் புதுப்பிக்கிறோம்.
"தந்தை, மகன், தூயஆவியாரின் பெயராலே, ஆமென்."
என்று செபிக்கும் ஒவ்வொரு முறையும் பரிசுத்த தமதிரித்துவத்தின்பால் நமக்குள்ள விசுவாசத்தைப் புதுப்பிக்கிறோம்.
ஒரு குழந்தை வீட்டில் விளையாடும்போது
'தாயின் அருகில்தான் விளையாடிக் கொண்டிருக்கிறோம்'
என்ற உணர்வோடு பயமின்றி விளையாடுவதுபோல,
ஒரு ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்தும்போது
'தான் பள்ளியில் பணிபுரிகிறோம்'
என்ற உணர்வுடன் பாடம் நடத்துவதுபோல
நாம் இவ்வுலகில் வாழும்போது
'இறைவன் சந்நிதியில்
இறைவனில்,
இறைவனோடு,
இறைவனுக்காக
வாழ்கிறோம்'
என்ற உணர்வுடன் வாழ்ந்தால்
'இறைவன் எங்கும் இருக்கிறார்' என்ற
விசுவாசத்தைப் புதுப்பிக்கிறோம்.
இவ்வாறாக
வினாடிக்குவினாடி
நமது விசுவாசத்தைப் புதுப்பித்துக் கொண்டிருந்தால்
அது ஆழமாக வேர்விட்டு வளரும்.
ஆனால் இன்றைய உலகளாவி வாழும் கிறிஸ்தவர்களின் உண்மையான நிலை என்ன?
சமீபத்தில் பிரான்ஸ் சென்றுவந்தவரிடம்
"பிரான்சில் கோவில்கள் எப்படி?"
என்று கேட்டேன்.
"மிகப்பெரிய கோவில்கள்.
ஆனால் கோவிலுக்கு வரத்தான் ஆட்களில்லை.
பெரிய கோவிலுக்குள் சிறிய கோவிலொன்று அமைத்து
அங்குதான் பூசை வைக்கிறார்கள்.
ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் பூசைக்கு வருகிறார்கள்.
மற்றவர்கள் கிறிஸ்மஸ் போன்ற பெரிய விழாக்களில் மட்டும் வருவார்கள் போலிருக்கிறது.
ஒரு கத்தோலிக்க நாட்டிலேயே விசுவாச வாழ்வின் நிலை இப்படி என்றால் மற்ற நாடுகளில் எப்படி இருக்கும்!
இப்படிப்பட்ட விழாக் கிறிஸ்தவர்களை நினைத்துதான் இயேசு,
"மனுமகன் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ ?"
(லூக். 18:8)
என்று கூறியிருப்பாறோ?
கோடிக்கணக்கில் பணம் செலவழித்து
கோவில்கள் கட்டுவதை விட,
இதயமாகிய ஆலயங்ளை
பலமான விசுவாச அடித்தளமிட்டுக்
கட்டி எழுப்புவதே
செய்யப்படவேண்டிய முக்கிய பணி.
"என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி கொடுக்கின்றன:
நானும் அவற்றை அறிவேன்.
அவையும் என்னைப் பின்தொடர்கின்றன."
(அரு.10:27)
நல்ல ஆயன் தன் பொறுப்பிலுள்ள ஒவ்வொரு ஆட்டையும் அறிவான்.
நாட்டை ஆளும் பிரதமர்க்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும்பற்றி தனித்தனியாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனால் குடும்பத்தை ஆளும் தந்தைக்கு குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரைபப்பற்றியும் தனித்தனியே (Individually) தெரிந்திருக்க வேண்டும்.
அப்போதுதான் அவர் பொறுப்புள்ள தந்தை.
நமது திருத்தந்தை நாட்டின் பிரதமர்போல் என்றால்,
பங்குத்தந்தை குடும்பத்தலைவர்போல.
நல்ல ஆயன் ஒவ்வொரு ஆட்டையும் அறிவதுபோல,
பங்குத்தந்தையும் பங்கிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தைப் பற்றியும்,
ஒவ்வொரு உறுப்பினர் பற்றியும் அறிந்திருக்கவேண்டும்.
அதனால்தான் பங்குத்தந்தை ஒவ்வொரு குடும்பத்தையும்
கோவிலில் மட்டுமல்ல,
வீட்டிலும் சந்திக்கிறார்.
நாமும் நமது ஆன்ம வழிகாட்டியுடன்
நெருங்கிய
ஆன்மீக உறவு
வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த உறவுதான் நமது விசுவாச வாழ்வுக்கு உதவியாய் இருக்கும்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம்?
நமது ஆன்மாவைக் கவனிக்கவேண்டிய தந்தைமீது
ஆன்மா சம்பந்தமில்லா பொறுப்புகளைச் சுமத்திவிடுகிறோம்.
கோவில்களைக் கட்டுதல்,
அதற்காக நன்கொடை வசூலித்தல்,
பண வரவுசெலவு நிருவாகம்,
நிலநிருவாகம்,
பள்ளிக்கூட நிருவாகம்,
ஆசிரியர் வேலை,
வக்கீல் வேலை
என்று
ஆன்மீக சம்பந்தமில்லா பணிகளைச் சுமத்தியிருக்கிறோம்.
நமது ஆன்மாக்களைக் கவனிக்க அவர்கட்கு நேரம் எங்கிருந்து வரும்?
நாமும் அவர்களை ஆன்மீக வழிகாட்டுதலுக்காகவா அணுகுகிறோம்?
வேலை வேண்டும்,
Transfer வேண்டும்,
Recommendation letter வேண்டும்
போன்ற பணிகளுக்காகத்தானே அவர்களை அணுகுகிறோம்?
இதற்காகவா குருமடத்தில் தேவசாஸ்திரம், தத்துவ சாஸ்திரம் கற்றார்ள்?
நமக்கும் விசுவாச வாழ்வில் அக்கரை இல்லை.
அக்கரை எடுக்க வந்தவர்களையும்
அக்கரை எடுக்க விடுவதில்லை.
பின் எப்படி விசுவாச வாழ்வு வளரும்?
சிந்திப்போம்.
செயல்படுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment