"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத்.9:13)
*********---********************
ஆதி காலத்திலிருந்தே மனிதனிடம் ஒரு பழக்கம் இருந்தது.
தான் இறைவனுக்கு எதிராகச் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக,
அவரைத் திருப்திப்படுத்தும் நோக்கோடு
ஆடு, மாடுகளைப் பலியிட்டான்.
ஆனால் ஆண்டவர் ஓசே இறைவாக்கினர் மூலமாக கூறினார்,
"நாம் விரும்புவது பலியை அன்று, அன்பையே நாம் விரும்புகிறோம்." (ஓசே.6:6)
அதாவது, 'மனிதன் இடும் மிருகப்பலிகள் இறைவனைத் திருப்திப்படுத்தாது, மனிதனது அன்புச் செயல்களே அவரைத் திருப்திப்படுத்தும்'.
நம் ஆண்டவர் அதை மேற்கோள் காட்டி
"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன் " என்பதன் கருத்தைப் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்."
என்றார்.
நம்ம ஆட்களுக்கு விசேசமான குணம் ஒன்று உண்டு.
பைபிளை வாசித்து,
வாசித்த வசனங்களுக்கு தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற
விளக்கத்தைக் கொடுப்பது அவர்கட்கு கைவந்த கலை.
நண்பர் ஒருவர் ஒரு ஞாயிறு பூசைக்கு வரவில்லை.
"இன்றைக்கு பூசைக்கு வந்தது மாதிரி தெரியலிய. சுகமில்லையா?"
"நான் வாசித்த பைபிள் வசனம் எனக்கு வேறு வேலை கொடுத்தது.
அதைப் பார்க்கப் போய்விட்டேன்."
"சார், நீங்க சொல்றது புரியல."
"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன்"
இது ஆண்டவர் சொன்னதுதான"
"ஆமா. அதுக்கென்ன?"
"அதுக்கென்னவா? ஆண்டவர் பலியை விரும்பலன்னு சொல்லியிருக்காரு.
ஆண்டவர் விருப்பத்துக்கு மாறா செயல்படலாமா?
அதுதான் திருப்பலிக்கு வரல்ல."
"உங்களச் சொல்லி குற்றமில்ல.
வாசிக்கச் சொல்லி உங்க கையில பைபிளைத் தந்தவங்களச் சொல்லணும்.
கத்தியக் கொடுக்குமுன்னால அதை எப்படிப் பயன்படுத்தணும்னு சொல்லிக்கொடுக்கணும்.
இல்லாட்டி காய்கறியை வெட்டுமுன்னால கையை வெட்டிக்கொண்டு அழுவான்.
பைபிள புதுசு புதுசா மொழிபெயர்த்து
எல்லாருக்கும் கொடுக்கதுக்கு முன்னால
அத எப்படி வாசிக்கணும்,
எப்படிப் பொருள் கொள்ளணும்கதைப்பற்றி நல்லா பயிற்சி கொடுக்கணும்.
இங்க பாருங்க ஆண்டவர் திருப்பலியை விரும்பலன்னு சொல்லல.
மிருகப்பலியைத்தான் விரும்பலன்னு சொன்னார்.
அதற்குப் பதிலா
'அயலானை நேசியுங்கள்,
அயலான்மீது இரக்கம் கொள்ளுங்கள்,
உங்கள் இரக்கச் செயல்களைத்தான் விரும்புகிறேன்'னு சொன்னாரு.
புரியுதா?"
'இரக்கத்தையே விரும்புகிறேன்'னு
வாசித்தால் மட்டும் போதாது.
செயலில் காட்டவேண்டும்.
இரக்கத்தைச் செயலில் காட்டுவது எப்படி?
விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தியை
மறைநூல் வல்லுநரும் பரிசேயரும்
கொண்டுவந்து
இயேசுவின் முன்னால்
நிறுத்துகிறார்கள்.
"இப்படிப்பட்டவர்களைக்
கல்லாலெறிந்து கொல்லவேண்டுமென்பது மோயீசன் நமக்குக் கொடுத்த சட்டம்.
நீர் என்ன சொல்லுகிறீர் ?" என்கின்றனர்.
இயேசுவோ பாவிகளைத் தேடியே உலகிற்கு வந்தவர்.
உலகியல் அரசு எதற்காகக் குற்றவாளிகளைத் தேடுகிறது?
விசாரித்துத் தண்டனை கொடுப்பதற்கு, நீதியின் பெயரால்.
இயேசு கடவுள்,
அளவற்ற நீதியுள்ளவர்,
அளவற்ற இரக்கம் உள்ளவர்.
இயேசு பாவிகளைத் தேடிவந்தது
நீதியின் பெயரால் தண்டிப்பதற்கு அல்ல,
இரக்கத்தின் பெயரால் மன்னிப்பதற்கு.
பாவி மன்னிப்பு பெற செய்ய வேண்டியது,
ஒரே ஒரு செயல்தான்,
பாவத்திற்காக வருந்தி, பாவசங்கீத்தனம் செய்ய வேண்டும்.
இரக்கத்தோடு மன்னித்துவிட்டால்,
நீதிக்கு என்ன வேலை?
பாவம் கடவுளுக்கு விரோதமாகச் செய்யப்படுகிறது.
கடவுள் தன் இரக்கப் பெருக்கத்தின் காரணமாக,
நீதியின்படி பாவி தண்டனை பெறாதிருக்க
பாவத்திற்கான
பரிகாரத்தை அவரே ஏற்றுக்கொண்டார்.
அதாவது
குற்றவாளி செய்ய வேண்டிய பரிகாரத்தை
நீதிபதியே
ஏற்றுக்கொள்கிறார்.
தனக்காக மிருகப்பலியை விரும்பாத கடவுள்
மனித செய்த பாவத்திற்காகத் தானே பலியாகிறார்.
இப்படியாக இறைவன் தனது மட்டற்ற இரக்கத்திற்கு செயல்வடிவம் கொடுக்கிறார்.
மறைநூல் வல்லுநரும், பரிசேயரும்
தன் முன் நிறுத்திய
விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை
இயேசு மன்னிக்கிறார்.
அவர் பாவிகளைத் தேடிவந்ததே மன்னிப்பதற்காகத்தானே.
அவரது சீடர்களென்று நம்மையே அழைத்துக்கொள்ளும் நாம்
இரக்கத்தை விரும்புகிறோமா?
நம்மீது மற்றவர்கள் இரக்கம் காட்டவேண்டும் என விரும்புகிறோம்.
நாம் மற்றவர்கள்மீது இரக்கம் காட்டடுகிறோமா?
நமக்குக் கீழ் பணிபுரிபவர்களை இரக்க உணர்வோடு வழி நடத்துகிறோமா?
அரக்கத்தனமான கண்டிப்புடன்
வழி நடத்துகிறோமா?
குற்றம் செய்தவர்கள் மன்னிப்புக் கேட்கும்போது
மன்னிக்கிறோமா?
தண்டனை கொடுக்கிறோமா?
நமக்குக் கீழ் பணிபுரிபவர்ளிடம் புன்னகையோடு பழகுகிறோமா?
அதிகாரத்தோரணையில் கடுகடுப்பாகப் பழகுகிறோமா?
அதிகாரத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல சாதாரண நிலையில் உள்ளவர்களும் மற்றவர்களோடு பழகும்போது இரக்க உணர்வோடு பழகவேண்டும்.
இரக்க உணர்வுள்ளவன் மற்றவர்கள்மீது தீர்ப்பிடமாட்டான்.
"நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி தீர்ப்பிடாதீர்கள்."(மத்.7:1)
யார்மீதும் தீர்ப்பிட நமக்கு அதிகாரமும் இல்லை, அருகதையும் இல்லை.
ஒரு செயல் எந்த சூழ்நிலையில் செய்யப்பட்டது என்பது நமக்குத் தெரியாது.
தெரியாத ஒன்றைப்பற்றி நாம் எப்படி கருத்து கூறமுடியும்?
நமக்கு இரக்கம் இருந்தால், ஒருவர் செய்த குற்றத்தை அறியவரும்போது,
"ஐயோ பாவம்.
எந்த சூழ்நிலை இவர் இதைச் செய்ய காரணமாயிற்றோ? "
என்று பரிதாபப்படுவோமே தவிர
தீர்ப்பு சொல்லமாட்டோம்.
இதை எழுதும்போது சமீபத்தில் வாசித்த கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.
ஒரு பன்னிரண்டு. வயதுச் சிறுவன்.
அவனுக்கு வேலை செய்ய முடியாத ஒரு அக்கா, ஒரு சின்னத் தம்பி.
நம்ம கதாநாயகன்தான் ஏதாவது கூலிவேலை பார்த்து கிடைக்கிற சிறு வருமானத்தில் உண்ண உணவு வாங்க வேண்டும்.
ஒரு நாள் பையனுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.
பகல் முழுதும் வேலை தேடியும் கிடைக்காததால் அக்காளுக்கும், தம்பிக்கும் அன்று இரவு உணவு எப்படி வாங்குவதென்று
தெரியவில்லை.
அவன் தன்னைப்பற்றி கவலைப்படவில்லை.
அக்காளையும், தம்பியையும் பற்றிதான் கவலைப்பட்டான்.
ஒரு நாள் வேலை செய்த கடைக்காரரிடம் கடன் கேட்டுப்பார்த்தான்.
கிடைக்கவில்லை.
ஒரு ரொட்டிக்கடைக்காரரிடம் இரண்டு ரொட்டிகள் கடனாகக் கேட்டான்.
கிடைக்கவில்லை.
என்ன செய்வதென்று தெரியாமல் கடைமுன் நின்றுகொண்டிருந்தபோது
கடையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த பன் ஒன்று கீழே விழுந்தது.
அதை எடுத்தவன்,
கடைக்காரரிடம்,
"இதற்குக் காசு நாளை தருகிறேன்"
என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.
கடைக்காரன் உள்ளே இருந்துகொண்டே,
"திருடன். பிடியுங்கள். திருடன். பிடியுங்கள்"
என்று கத்தினார்.
பையன் ஓட ஆரம்பித்தான்.
அந்தச் சமயம் பார்த்து அந்த வழியே வந்துகொண்டிருந்த போலீஸ் ஒருவர்,
ஓடிக்கொண்டிருந்தவனை 'லபக்'கென்று பிடித்து கடைக்கு இழுத்து வந்தார்.
"கடையிலிருந்து பன் ஒன்றைத் திருடிவிட்டான்.
பன்னைத் தந்துவிட்டு,
பையனை இழுத்துக்கொண்டு போங்கள்."
கடைக்காரர் கூற,
"திருட்டுக்கு ஆதாரம் வேண்டும். நாளை ஸ்டேசனுக்கு வந்து பன்னைப் பெற்றுக்கொள்ளுங்கள்."
என்று கூறிவிட்டு பையனை இழுத்துச் சென்றார்.
பையன் தன் நிலை பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லிக் கெஞ்சியும் விடவில்லை.
மறுநாள் கோர்ட் திருட்டுக் குற்றத்திற்காக ஒரு மாதம் ஜெயில் தண்டனை விதித்தது.
ஜெயிலில் பையன் தன்னைப் பற்றி கவலைப்படவில்லை.
அக்காளையும், தம்பியையும் பற்றி மட்டுமே கவலைப் பட்டான்.
எப்படியும் தப்பிச்சென்று அவர்களைப் பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தான்.
ஆனால் தப்பிக்க முயன்றபோது பிடிபட்டான்.
ஜெயிலிலிருந்து தப்பிக்க முயன்ற குற்றத்துக்காக
கோர்ட் அவனுக்கு
ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.
இனியும் தப்பிக்க முயன்றால் ஆயுள் தண்டனைகூட கிடைக்கலாம் எனப்பயந்து ஒரு ஆண்டையும் ஜெயிலிலேயே கழித்தான்.
அவனது உடன்பிறப்புகளைப் பற்றிய கவலைதான் அவனை வாட்டி வதக்கியது.
விடுதலை ஆனவுடன்
அவர்களைப் பார்க்கச் செல்லுமுன் ஏதாவது வேலை செய்து, பணம் சேர்த்து ஏதாவது வாங்கிக்கொண்டு போகத் தீர்மானித்தான்.
ஆனால் திருட்டுக் குற்றதிற்காக ஜெயிலுக்குப் போனவனுக்கு யாரும் வேலை கொடுக்கத் தயாராக இல்லை.
பசியும், பட்டினியுமாய் ஒரு கோவில் வாசலில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான்.
அவன் அழுதுகொண்டிருந்ததை அக்கோவில் குருவானவர் பார்த்தார்.
அவன் கதையைப் பரிவுடன் கேட்டார்.
"சரி, வா." என அவனைத் தன் அறைவீட்டிற்கு அழைத்துச் சென்று,
குளிக்கச்சொல்லி,
வயிரார உணவுகொடுத்து,
"இன்று இரவு இங்கே தங்கி ஓய்வெடு. நாளை
பார்க்கலாம்"
என்று கூறி ஒரு அறையில் தங்க வைத்தார்.
இரவில் அவனுக்குத் தூக்கம் வரவில்லை.
தன் உடன்பிறப்புகளை நினைத்துக் கொண்டிருந்தான்.
பணம் இல்லாமல் அவர்களைப் பார்க்கப்போக முடியாது.
அவன் கவலைப் பட்டுக்கொண்டிருந்தபோது
அறையின் ஒரு பகுதியில்
சில வெள்ளித் தட்டுகளைப் பார்த்தான்.
"ஜெயிலிலிருந்து வந்த நமக்கு வேலை கிடைக்கப் போவதில்லை.
இப்பாத்திரங்களில் ஓரிரண்டை எடுத்துச் சென்று, விற்றால் நல்ல காசு கிடைக்கும்.
அதைக்கொண்டு அக்காளுக்கும், தம்பிக்கும் ஏதாவது
வாங்கிக்கொண்டு போகலாம்.
திருடுவது குற்றம்தான்.
ஆனாலும் வேறு வழி இல்லை."
இரண்டு தட்டுக்களை மட்டும் எடுத்தான்.
ஒவ்வொன்றும் ஆயிரம் ரூபாய்க்குப் போகும்.
மெதுவாக அறையை விட்டு நகர்ந்தான்.
பத்து மணி வரை ஒரு இடத்தில் பத்திரமாக இருந்துவிட்டு
பத்து மணிக்கு வெள்ளி பாத்திரக் கடைக்குச் சென்றான்.
பாத்திரக்கடையில் தட்டுகளுக்கான விலையை விசாரித்துக் கொண்டிருந்தபோதே
கடைக்காரர் பாத்திரத்தின் பின்னாலிருந்த பெயரை வைத்து
அது யாருடைய தட்டுக்கள் என்பதைக் கண்டுபிடித்து
பையனிடம் விலை பேசிக்கொண்டே போலீசுக்கு Message அனுப்பினான்.
கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்து பையனை தட்டுக்களோடு அள்ளிக்கொண்டு போயிற்று.
குருவானவருக்கு தகவல் போயிற்று.
அவர் ஸ்டேசனுக்கு வந்தார்.
பையனைப் பார்த்தார்.
இன்ஸ்பெக்டர் அவரிடம் விசயத்தைச் சொன்னார்.
குரு: இன்ஸ்பெக்டர் சார், நீங்க நினைக்கிறது தப்பு.
பையன் எனக்குத் தெரிந்தவன்.
நேற்று இரவு என்னோடுதான் தங்கினான்.
நான்தான் இத்தட்டுக்க்களை அவனுக்குக் கொடுத்தேன்.
அவன் ஏதும் சொல்லவில்லையா? "
போலீஸ்: நான் அவனிடம் ஏதும் கேட்கவில்லை.
கடைக்காரர் சொன்னதைக் கேட்டு கூட்டிவந்தேன்.
குரு: தம்பி, இங்கே வா.
பையன் வந்தான்.
போ :சுவாமி, மன்னியுங்கள்.பையனை அழைத்துச் செல்லுங்கள்.
பையனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
தட்டுக்களைப் பெற்றுக்கொண்டு சுவாமியுடன் நடந்தான்.
அறைவீடு வந்ததும்,
சுவாமி அவனைக் கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்.
பாடுபட்ட சுரூபத்தைக் காண்பித்தார்.
இரக்கத்தின் இலக்கணமான இயேசுவைப் பார்.
மற்றவர்ட்காக இரக்கப்படக் கற்றுக்கொள்."
பையன்: "சுவாமி, மன்னியுங்கள்.
குரு: நானே காலையில் உனக்கு வேண்டிய உதவி செய்யலாமென்றிருந்தேன்.
நீ அவசரப்பட்டுவிட்டாய்.
பரவாயில்லை. நீ விரும்பினால் நானே உனக்கு ஏதாவது வேலை தருகிறேன்."
"சுவாமி, வேண்டாம். நான் முதலில் அக்காளையும், தம்பியையும் காணவேண்டும். மற்றவையெல்லாம். அப்புறம்தான்."
"நான் கொஞ்சம் பணம் தருகிறேன். வீட்டுக்கு ஏதாவது வாங்கிக்கொண்டு போ.
தட்டுக்களையும் வைத்துக்கொள். பிறகு வந்து என்னைப் பார்."
"சுவாமி, உங்களது இரக்க சுபாவத்தை என்னால் மறக்கமுடியாது. ரொம்ப நன்றி."
வீட்டிற்கு வந்தான். வீடு பூட்டியிருந்தது.
பக்கத்தில் விசாரித்தான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பேயே அவனைத் தேடிச் சென்றவர்கள் திரும்வேயில்லை என்றார்கள்.
அவர்களைத் தேடப் புறப்பட்டான்.
மனதில் ஒரு உறுதி எடுத்துக்கொண்டான்.
இனி உலகில் உள்ள அனைவரும் அவனது உடன்பிறப்புக்களே.
இரக்க உணர்வுடன், இறைவனுக்காக அவர்கட்கு சேவை செய்வதே அவன் வாழ்வின் இலட்சியம்.
சிலுவையில் பலியாகித் தன் இரக்கத்தால் உகை இரட்சித்த இயேசுவின் நினைவோடும்,
அவரது ஊழியர் குருவானவர்
நினைவோடும் புறப்பட்டான்.
நாமும் புறப்படுவோம் இரக்க உணர்வுடன்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment