Monday, July 23, 2018

ஒரு போப்பாண்டவரை வெளியேற்றும் பாவம் உங்களுக்கு எதற்கு?

ஒரு போப்பாண்டவரை வெளியேற்றும் பாவம் உங்களுக்கு எதற்கு?

*********-*************-**********

ஹலோ! நான் பாக்கியம் பேசறேன்.

எந்த பாக்கியம்னு கேட்கிறீங்களா?

நான்தாங்க இரண்டு வயசு பாக்கியம்,

போன வாரம்

ஞாயிற்றுக்கிழமை பூசை நேரத்தில, 

அதுதாங்க கோவிலில வச்சி,

நான் அழுதபோது,

என் அம்மாவைப் பார்த்து,

"பிள்ளைய தூக்கிக்கிட்டு வெளியே போம்மா.
நாங்க பூசை காண வந்தோமா?

உன் பிள்ள அழுகையை ரசிக்க வந்தோமா?''ன்னு கத்துனீங்களே, 

அதே பாக்கியம்தான் பேசறேன்.

இரண்டு வயசுப் பிள்ள எப்படி இப்படி பேசும்னு கேட்காம,

நான் சொல்றதை மட்டும் கவனிங்க.

கோவில்ல ஆண்டவர் இருக்காரு.

எந்த ஆண்டவர்?

"குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடுக்க வேண்டாம்.

வரவிடுங்கள்."னு சொன்னாரே,

அதே ஆண்டவர்தாங்க.

இயேசுவுக்கும் இரண்டு வயது இருந்திருக்கும்.

நிச்சயமா அவரும் அழுதுருப்பாரு.

அப்போ, "மேரி, பிள்ளையத் தூக்கிக்கிட்டு வெளியே போ"ன்னு சூசையப்பர் கத்தியிருக்கவே மாட்டாரு.

ஏன்னா அவருக்குத் தெரியும்,

இயேசு மெய்யாகவே ஆண்டவர் (Fully God.),

மெய்யாகவே மனிதன், (Fully man) என்று.

பாவம் தவிர மற்ற எல்லாவற்றிலும் இயேசு நம்மைப்போல்தான் இருந்தார்.

"அழுத பிள்ளைகள என் பக்கத்தில வரவிடாதீங்க"ன்னு இயேசு சொல்லவேயில்லை.

சாமியார் பூசை வைக்கிறது எல்லாக் கிறிஸ்தவர்களுக்காகவும்தான்.

நாங்களும் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம்.

நாங்களும் பூசையில் கலந்தகொள்ள வேண்டும்.

ஒருவன் ஒட்டப் பந்தையத்தில் ஓட பயிற்சி பெறவேண்டுமென்றால் விளையாட்டு மைதானத்திற்கு வந்துதானே பழகவேண்டும்.

நாங்கள் ஒழுங்காகப் பூசைக்கு வரும் மக்களாக வளரவேண்டுமென்றால் சிறு பிள்ளைப் பருவம் முதலே பூசைக்கு வரவேண்டும்.

அழுதவுடனே வெளியே தூக்கிக்கிட்டு போகச்சொன்னீங்கன்னா,

வெளியே போகிறதுக்காகவே

அழ ஆரம்பித்துவிடுவோம்.

வெளியே நிற்கும் கிறிஸ்துவர்களாகவே வளர்வோம்.

நாங்கள் அப்படி வளர உங்களுக்கு விருப்பமா?

நாங்கள் கோவிலில் அழுவது பிடிக்கவில்லையென்றால்

நாங்கள் அழாதிருக்க வழிவகைகளை ஆராயவேண்டுமே தவிர,

வெளியே போங்க'ன்னு சொல்லக்கூடாது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

ஒரு வகையில் உலகமே இறைவன் வாழும் ஆலயம்தான்.

இங்கு வாழும் மனிதன் எவ்வளவு தப்பு செய்கிறான்.

Suppose கடவுள் மனிதரைப் பார்த்து, 

"தப்பு செய்கிறவங்க எல்லாம் உலகை விட்டு வெளியே போங்க"ன்னு சொன்னா என்ன ஆகும்?

உலகமே Empty ஆயிராது?

மனிதன் பெரிய பெரிய பாவம் செய்யும்போதெல்லாம் கடவுள் இவ்வளவு பொறுமையா இருக்காரே,

நாங்க, after all, அழுவதற்காக கோவிலை விட்டு வெளியே போகச்சொல்லலாமா?

என் அம்மாவைப் பார்த்தா பாவமாயில்ல?

அவங்களுக்கு நான் இறைவன் கொடுத்த செல்வம்.

அவங்க இறைபக்தியில யாருக்கும் குறைஞ்சவங்க இல்ல.

என்னையும் அவங்களைப்போலவே பக்தியில வளர்க்க பிரயாசைப்படுராங்க.

வீட்டில இரவு செபம் சொல்லும்போது நான்  அழுதா,

"நம்ம பாக்கியம் சொல்ற செபத்தப் பாருங்க. வித்தியாசமாயில்ல?"ன்னு அப்பாக்கிட்ட சொல்வாங்க.

அப்பாவும் பதிலுக்கு, "ஆமாடி.
பூங்காவனத்தில ஆண்டவர் செபிக்கும்போது பார்த்திருப்பா! "ன்னு சொல்வாரு.

இப்போ  பூசை நேரத்தில எங்கள வெளிய போகச்சொல்லலாமா?

பாவமாயில்ல?

நான் அழுதது நீங்க பக்தியோடு பூசை காண்கதுக்கு இடைஞ்சலா இருக்கா?

வீட்ல குழந்தை அழுதா அதுல இன்பம் காண்கிறவங்க பெற்றோர்.

கோவில் ஆண்டவர் நமக்காக வாழும் வீடுதான.

எத்தனை பேர் தங்கள் வீட்டில் குழந்தை அழும் சப்தம் கேட்கணும்கிறதுக்காக கோவில் கோவிலா ஏறி இறங்குகிறாங்க தெரியுமா?

குழந்தையின் குரல் இறைவன் கொடுத்த வரம்.

அதை இறைவன் இல்லத்திலிருந்து வெளியேற்ற முயல்வது இறைவனுக்குப் பிடிக்காதுங்க.

குழந்தை அழுதால் அழுகையை நிறுத்துவது அம்மாவின் வேலை.

அதை கோவிலுக்குள் இருந்தபடியே செய்ய விடுங்கள். 

கோவிலவிட்டு வெளியே போகச்சொல்லாதீங்க.

பிள்ளை அழுதா வெளியே போகச் சொல்லுவாங்கன்னு நினைத்து கோவிலுக்கே வராத பெற்றோர் இருக்காங்க.

அந்நிலையை நாம் உருவாக்கலாமா?

ஒரு முறை ஒரு குருவானவரிடம் என் அப்பா கேட்டார்,

"Father, what do you think about the disruptions from children in the church?"

அவர் சொன்ன பதில்,

"How blessed we are to have life in our church!

I’d rather have the children there being disruptive than have whole families not there at all.”

"குழந்தைகள் கோவிலுக்கு வருவது இறைவன் தரும் ஆசீர்வாதம்.

குழந்தை அழும் எனப்பயந்து

குடும்பமே கோவிலுக்கு வராதிருப்பதைவிட

குழந்தையின் தொந்தரவுடன் கோவிலுக்கு வருவது எவ்வளவோ மேல்."

கோவில்

பிள்ளைகள் இல்லாத பெற்றோருக்காக மட்டும்

கட்டப்பட்ட இறை இல்லம் அல்ல.

குழந்தைகள் உட்பட   எல்லாருக்காகவும் கட்டப்பட்ட
வீடு.

குழந்தைகட்கும் விசுவாசத்தை ஊட்டவேண்டிய கடமை பெற்றோருக்கு இருக்கிறது.

கோவிலில் நாங்கள் அழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது எங்கள் அப்பா, அம்மா பொறுப்பு.

அதையும் மீறி நாங்கள் அழுதால் எங்ளை வெளியேற்ற யாருக்கும் உரிமை இல்லை.

கோவில் என்ன சட்டசபையா? நீங்கள்தான் சபாநாயகர்களா?

நாங்கள் உங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதம்.

அதை விரட்டிவிடாதீர்கள்.

முழுப்பூசையிலும் பங்கெடுக்கும் உரிமை

பெரியவர்கட்கு மட்டுமல்ல,

குழந்தைகட்கும் உண்டு.

திருச்சபை என்னும் குடும்பத்தில் நாங்களும் உறுப்பினர்கள்.

எங்களில் ஒருவர் நாளைக்கு உங்கள் ஆயராக ஆகலாம்.

போப்பாகக்கூட வரலாம்.

ஒரு போப்பாண்டவரை வெளியேற்றும் பாவம் உங்களுக்கு எதற்கு?

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment