என் அன்பே! ஆருயிரே! http://lrdselvam.blogspot.com/2018/07/blog-post_86.html
என் அன்பே! ஆருயிரே!
********************************
"ஆண்டவராகிய கடவுள் களிமண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே, மனிதன் உயிருள்ளவன் ஆனான்."(ஆதி.2:7)
பைபிள் வாசிக்கும்போது அதன் ஒவ்வொரு வசனமும் தரும் இறைச்செய்தியைக் (Divine message) கூர்ந்து கவனித்து,
தியானிக்கவேண்டும்.
வெறுமனே உலக வரலாற்று நூல்களை வாசிப்பதுபோல் வாசிக்கக்கூடாது.
வரலாற்று நூல்களில் நிகழ்வுகள் மட்டும் முக்கியத்துவம் பெறுகின்றன.
பைபிளில் நிகழ்வுகள் தரும் செய்திகளுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
நிகழ்வு உடலென்றால், செய்தி உயிர்.
என் நண்பன் ஒரு பெண்ணைக் காதலித்தான்.
"அந்தப் பெண்ணின் என்ன குணம் உன்னைக் காதலில் தள்ளியது? " என்றேன்.
"ரொம்ப அழகா இருப்பாள்டா."
"உடலழகு இருக்கட்டும். அவளது உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று தெரியுமா?"
"தெரியலிய."
"அதை முதலில் தெரிந்துகொள்."
மனிதரோடு பழகும்போது அவர்களின் மனதை அறியவேண்டும்.
பைபிள் வாசிக்கும்போது அது தரும் செய்தியை அறிய வேண்டும்.
ஒவ்வொரு பைபிள் வசனத்திலும் அதன்மூலம் இறைவன் தரும் செய்தி ஒன்று இருக்கிறது.
அதைப்புரிந்து வாசிப்பதே உண்மையான பைபிள் வாசிப்பு.
ஆதியாகமத்தில் இறைவன் மனிதனைப் படைத்ததுபற்றிக் கூறும் வசனத்தைத் தியானிப்போம்.
"ஆண்டவராகிய கடவுள் களிமண்ணால் மனிதனை உருவாக்கி.."
ஒன்றுமில்லாமையிலிருந்து உலகை உருவாக்கிய கடவுள்,
தான் படைத்த மண்ணிலிருந்து மனித உடலை உண்டாக்குகிறார்.
மண்ணிலுள்ள அத்தனை அம்சங்களும் மனித உடலில் உள்ளன.
பூமிக்குள்ளிருக்கும் இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்களால் ஆன நம் உடலில் தண்ணீரும், காற்றும் பெரும்பங்கு வகிக்கின்றன.
அதனால்தான் ஆன்மா பிரிந்தவுடன் உடல் மண்ணுக்குத் திரும்பி மண்ணோடு மண்ணாய் மக்கிவிடுகிறது.
கடவுள் உடலைப் படைத்ததின் நோக்கம்
ஆன்மாவினால் இயக்கப்பட்டு இறைப்பணி செய்திடத்தான்.
ஆன்மா இறைப்பணி ஆற்றிட உடல் ஒரு கருவியாகப் பயன்படவேண்டும்.
ஆனால் நாம் நமது உடலுக்குச் சேவை செய்கிற அளவுக்குப் ஆன்மாவைக் கவனிப்பதில்லை.
"அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே, மனிதன் உயிருள்ளவன் ஆனான்."
இறைவனின் உயிர் மூச்சுதான் நம் ஆன்மாவின் உயிர்.
ஆகவேதான் இயேசு "நானே உங்கள் உயிர்" என்கிறார்.
அன்புமயமான அவரை , நாம் "அன்பே! ஆருயிரே!" என்று ஆசையாய் அழைக்கலாம்.
ஏனெனில், நம் ஆன்மாவின் உயிர் அவரே.
நாம் அவரை விட்டுப் பிரிந்தால் நம் ஆன்மா தன் உயிரை இழந்துவிடும்.
பாவம் ஒன்றுதான் நம்மை இறைவனிடமிருந்து பிரிக்கும்.
"பாவத்தின் சம்பளம் மரணம்."
நாம் பாவம் செய்யும்போது நமது ஆன்மா மரிக்கிறது.
அதாவது இறைவன் தந்த உயிர் தரும் அருளான தேவ இஸ்டப்பிரசாதத்தை இழக்கிறது.
இதுதான் ஆன்மாவின் மரணம்.
நாம் பாவசங்கீத்தனம் செய்தவுடன்
ஆன்மா தான் இழந்த தேவ இஸ்டப்பிரசாதத்தைத் திரும்ப பெற்று
உயிர்பெறுகிறது.
இங்கே ஒரு முக்கியமான இறையியல் உண்மையை நினைவில் கொள்ளவேண்டும்.
இறைவன் மாறாதவர்.
தனது சுதந்திரத்தின் காரணமாக
அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும்
மனிதனின் நடவடிக்கைகளை
தனது ஞானத்தின் மூலமாக
நித்திய காலமாக அறியும் இறைவன்
அதை மனதிற்கொண்டு
நித்தியகாலமாக ஒரு திட்டத்தை வகுத்து,
அதிலிருந்து மாறாமல் செயல்படுகிறார்.
ஆகவே நம் மீது அவர் கொண்டுள்ள அன்பு ஒருபோதும் மாறாது.
நாம் பரிசுத்தமாய் இருந்தாலும்,
பாவநிலையில் இருந்தாலும்,
ஏன்,
அவரை வேண்டாமென்று சொல்லிவிட்டு
நரகத்துக்கே போய்விட்டாலும்
இறைவனின் அன்பு மாறாது.
நாம் பாவம் செய்யும்போது நாம்தான் இறைவனை விட்டுப் பிரிகிறோம்.
பாவத்திற்காக உத்தம மனஸ்தாபப்படும்போது சேர்ந்துகொள்கிறோம்.
ஊதாரிப் பிள்ளையின் உவமையைக் கூர்ந்து வாசித்தால் இவ்வுண்மை புரியும்.
இறைவன் நமது உயிர்.
நாம் என்றால் இறைவனுக்கு உயிர்.
தந்தை மகனை மிகவும் அதிகமாக நேசித்தார்.
ஊதாரிமைந்தன் தன் சொத்துக்களை எல்லாம் கேட்டபோது
தந்தை அவனது உரிமையில் தலையிடவில்லை.
மகன் செய்தது தப்பு என அவருக்குக் தெரிந்திருந்தாலும்
மகனுடைய சுதந்திரத்தில் (Freedom of choice) குறுக்கிட்டுத் தடுக்காமல்,
அவன் சொத்துக்களோடு போவதை விரும்பாவிட்டாலும்,
அனுமதிதத்தார்.
He did not will his choice, but permiitted it as He respected his freedom.
ஆனாலும் தன் மகன் திரும்பத் தன்னிடம் வருவதற்காகக் காத்திருந்தார்,
வந்தவுடன் மன்னித்து ஏற்றுக் கொண்டார்.
ஏனெனில் அவன் அவருடைய ஆருயிர் மகன்.
நாமும் பாவம் செய்யும்போது ஊதாரி மைந்தர்கள்தான்.
நம் உயிருக்கு உயிரான தந்தையிடம் திரும்புவோம்.
அவர் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்வார்.
ஒரு முறையல்ல,
ஆயிரம் முறை,
ஆயிரமாயிரம் முறை,
கணக்கற்ற முறை
பாவம் செய்தாலும்,
மனஸ்தாபப்பட்டு அவரிடம் திரும்பும்போதெல்லாம்
ஆசையுடன்,
முழுமனதோடு ஏற்றுக்கொள்வார்.
ஏனெனில் நமது உயிர் அவரது உயிர் மூச்சு.
" என் அன்பே! ஆருயிரே!
அடியேன் என்றும் உம்முயிரே,
உயிரோடு உயிரிணைந்து ,
உம்முடனே வாழ்ந்திடவே,
பாவி என்னை மன்னித்து
ஏற்றுக்கொள்ளும் இறைவா,
என்றென்றும் உமைப் பிரியா
வரம் தரவே வேண்டுகிறேன்.
அன்பே! என் ஆருயிரே."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment