"நானே வழியும் உண்மையும் உயிரும். என் வழியாயன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை."(அரு.14:6)
********************************
சாலையோரங்களில் நாம் போகுமிடத்துக்கு வழிகாட்டும் கைகாட்டிகளைப் பார்த்திருக்கிறோம்.
அவை வழி காட்டுவதோடு சரி. நம்மோடு வந்து வழிநடத்துவதில்லை.
நாம் வழி கேட்கும்போது வழி சொல்லும் ஆட்களும் இருக்கிறார்ள்.
அவர்கள் வழி சொல்வதோடு சரி, உடன் வரமாட்டார்கள்.
ஆங்காங்ககே வழிகேட்டுப் போகவேண்டியதுதான்.
ஒரு ஊருக்குப் போவதற்கு நூறு பேரிடம் வழிகேட்கவேண்டியிருக்கும்.
இவ்வுலக ஊர்களுக்கு வழி கேட்பதே இந்தப்பாடென்றால்
மறுவுலகிற்கான ஆன்மீக பாதையில்
வழி கேட்டுப் பயணிப்பது எவ்வளவு கடினம்!
ஆனாலும் இயேசுவின் துணையோடு
நமது விண்ணகப் பயணம் எளிதாகிவிட்டது.
"இயேசுவே, விண்ணக வாழ்வை அடைய வழி கூறுங்கள், சுவாமி. "
"மகனே, நானே வழி."
இயேசு வழியைக் காட்டிவிட்டுப் போய்விடவில்லை.
ஏனெனில் வழியே அவர்தான்.
நாம் பயணிக்கவேண்டியது அவரோடு மட்டுமல்ல, அவரில்!
நமது விண்ணகப் பயணத்தில் நமக்கு எல்லாம் அவரே!
அவரே வழி,
அவரே ஒளி,
அவரே உணவு,
அவரே உயிர்.
ஒருவர் ஆயரைப் பார்ப்பதற்காக ஆயரில்லம் சென்றார்.
இல்லத்தின் முன்னால் இருந்த தோட்டத்தில் பெரியவர் ஒருவர் வேலை செய்துகொண்டிருந்தார்.
அவரிடம் சென்று, "ஆயரைப் பார்க்கவேண்டும், யாரிடம் கேட்கவேண்டும் என்று தெரியவில்லை. கொஞ்சம் உதவுங்களேன்."
"ஆயரிடம் என்ன கேட்க வேண்டும்?"
"அதை ஆயரிடம்தான் கூறமுடியும். "
"சரி, வாருங்கள்."
வந்தவரை இல்லத்திற்குள் அழைத்துச் சென்று
பார்வையாளர்கள் ' அறையில் அமரவைத்துவிட்டு ஆயரிடம் தெரிவிக்க உள்ளே சென்றார்.
கால் மணி நேரத்தில் ஆயர் வெளியே வந்தார்.
ஆயரைப் பார்த்தவருக்கு ஒரே ஆச்சரியம்!
தோட்டக்காரரும் ஆயரும் ஒரே ஆள்தான்!
தோட்டவேலை பார்த்த ஆயர் வழியே நடந்து அவரையே பார்த்தது போல்,
நமது விண்ணகப் பயணத்தில் நமது வழியும், ஒளியும், உணவும் ஆன, இயேசுவே
பயண இறுதியில் நம்மைத் தன்னோடு நித்தியமாய் இணைத்துக்கொள்வார்.
இயேசுவில் எப்படி நடப்பது?
இயேசு நடந்த அதே வாழ்க்கைப் பாதையில்,
இயேசுவுடன்,
இயேசுவின் பண்புகளுடன்
நடப்பதே
இயேசுவில் நடப்பது.
இயேசுவாகிய வழி
அன்பு வழி,
சமாதான வழி.
அன்புவழி என்றதுமே துன்பங்களும், தியாகமும்
கூடவே வரும்.
இயேசுவின் இவ்வுலக வாழ்க்கைப்பாதை கபிரியேல் தூதர் மரியன்னைக்குத் தூதுரைத்ததுடன் ஆரம்பிக்கிறது.
சர்வ வல்லப கடவுள் தான் படைத்த மனிதனின் சுதந்திரத்தை எவ்வளவு மதிக்கிறார் பாருங்கள்.
மரியாளைத் தன் தாயாக நித்திய காலத்திலிருந்தே தேர்ந்தெடுத்துவிட்ட போதிலும்
"உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது"
என்று மரியாள் ஏற்றுக்கொண்டவுடன்தான்
இயேசு மனுவுரு எடுக்கிறார்.
அன்னை மரியாள் முழுச்சுதந்திரத்துடன் இயேசுவுக்குத் தாயாவதை ஏற்றுக்கொண்டாள்.
நாமும் முழுச்சுதந்திரத்துடன் விண்ணகப் பயணத்தைத் தொடங்கவேண்டும்.
அதே சமயம் எப்படி அன்னை மரியாள் முழுச்சுதந்திரத்துடன்,
"இதோ ஆண்டவருடைய அடிமை,"
என்றாளோ,
அதே போல நாமும்
நம் முழு மனச் சம்மதத்துடன்
நமது சுதந்திரத்தை
ஆண்டவர் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு
அவரது சித்தத்தை மட்டும் நிறைவேற்றும்
அடிமையாக மாறவேண்டும்.
We must tottally surrender our free will to the will of God.
இறைவன் முன் சரண் அடைந்து ஆரம்பிக்கும் விண்ணகப் பயணம்தான் வெற்றிகரமான பயணமாயிருக்கும்.
ஏனெனில் அது இறைவன் சித்தப்படி நடக்கும் பயணம்.
இயேசுவைக் கருத்தரித்தவுடன் மரியாள் செய்த முதல் வேலை
யூதா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்று,
சக்கரியாசின் வீட்டிற்கு வந்து,
எலிசபெத்துக்கு உதவி செய்ததுதான்.
இயேசுவின் பாதை
பிறரன்புப் பாதை என்பதை
அவர் கருவில் உருப் பெற்றுக் கொண்டிருக்கும்போதே
அவரது அன்னையின் செயல் மூலம்
நமக்கு வெளிப்படுத்தினார்.
நாம் நற்கருணை வாங்கும் ஒவ்வொரு முறையும்
இயேசுவை நம் இதயத்தில் தாங்குகிறோம்.
இயேசுவை இதயத்தில் தாங்கும் ஒவ்வொருவரின் பாதையும்
பிறரன்புப் பாதை என்பதை
மனதில் கொண்டு
செயலில் வெளிப்படுத்தவேண்டும்.
பிறரன்புப் பாதைதான் சிலுவைப்பாதையாக மாறுகிறது.
இயேசு அன்னையின் கருவில் இருக்கும்போதே தன் சிலுவைப்பாதையை ஆரம்பித்துவிட்டார்.
அவரது முதல் சிலுவை சூசையப்பரின் சந்தேகம்.
தான் தன் அன்னையின் வயிற்றிலிருந்த ஒரே காரணத்திற்காக
ஒரு புனிதவதியை
ஒரு நீதிமான்
சந்தேகப்பட்டது இயேசுவுக்குச் சிலுவைதானே.
ஆயினும் ஒரு தேவதூதர்மூலம் சந்தேகம் கழையப்பட்டபின்
சூசையப்பரும் சிலுவைப்பாதைக்குள் நுழைந்துவிட்டார்.
அதன்பின் மரியாளும், சூசையப்பரும் இயேசுவின் சிலுவையில் பங்குகொண்ட விதம் நமக்குத் தெரியும்.
நிறைமாத கர்ப்பிணியான மரியாளை அழைத்துக்கொண்டு நசரேத்திலிருந்து பெத்லகேமிற்கு நடந்தே சென்றது,
அங்கே இரவில் தங்க சத்திரம்கூடக் கிடைக்காமல் தவித்தது,
அன்னை மரியாள் மாடுகள் அடையும் தொழுவில் மாட்டுச்சாண நாற்றத்தையும் பொறுத்துக்கொண்டு இயேசுவைப் பெற்றெடுத்தது,
குழந்தையைக் கிடத்த படுக்கை இன்றி மாடுகளின் தீவனத் தொட்டிலில் கிடத்தியது,
இயேசு பாலன் மார்கழி மாதக் குளிர் தாங்கமாட்டாமல் அழுதது,
இரோதுக்குப்பயந்து குழந்தையுடன் எகிப்துக்குப் போனது
இவை எல்லாம் திருக்குடும்பமே பயணித்த சிலுவைப்பாதை.
இயேசுவை நேசிப்பவர்கள்
அவருடன் சிலுவையைச் சுமந்துதான்
விண்ணகம் நோக்கி பயணிக்கவேண்டும் என்பது
இறைவனது திருச்சித்தம்.
இறையன்னையும், சூசையப்பரும் நமது முன்னுதாரணங்கள்.
நாம் விண்ணகப் பயணத்தை ஆரம்பிக்கும்போதே
நமது சுதந்திரத்தை முழுமனதோடு
இறைவனிடம் சமர்ப்பணம் செய்துவிட்டதால்,
நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும்
இயேசுவுக்காக
நமது சிலுவையை சுமந்துதான் ஆகவேண்டும்
விண்ணையும், மண்ணையும் படைத்தவர்
தன்னால் படைக்கப்பட்ட மரியாளுக்கும், சூசையப்பருக்கும்
முப்பது ஆண்டுகள் கீழ்ப்படிந்திருந்தது
இயேசு தாமே தன் மீது சுமத்திக்கொண்ட சிலுவை.
கீழ்ப்படிந்திருந்தது மட்டுமல்ல
திருக்குடும்பத்தின் ஜீவனத்திற்காக தச்சுவேலை செய்தார்.
அன்றாட உணவைப் பெற அன்றாடம் உழைத்தார்.
இயேசுவுக்காக நாமும் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதும்,
உழைத்து நியாயமாகக் கிடைக்கும் வருமானத்தில் வாழ்வதும்
நமது சிலுவைப்பாதையில் ஒரு பகுதிதான்.
சிலுவைப்பாதை அன்புப்பாதை என்பதை அறிவோம்.
இயேசு பொது வாழ்விற்குள் நுழைந்தபின் அவர் செய்த பணியைப் பார்த்து எண்ணற்றோர் அவரது சீடர்களாக மாறினர்.
அவர் சென்றவிடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கினார்,
இறந்தோரை உயிர்ப்பித்தார்.
பாவிகளை மன்னித்தார்,
நற்செய்தியை அறிவித்தார்,
கஸ்டப்பட்டோரைத் தேற்றினார்,
இறுதியில்
நமக்காக,
நமது பாவங்களுக்குப் பரிகாரமாக
பாடுகள் பட்டு,
சிலுவையில் உயிர்த்தியாகம் செய்தார்.
நாம் நடக்கவேண்டிய
சிலுவை வழி இதுதான்.
இயேசுவின் வாழ்வே சிலுவைப்பாதைதான்.
இயேசு எவ்வழி வாழ்ந்தாரோ அவ்வழி வாழ்வதே நமக்கு சிலுவைப்பாதை.
இயேசுவைப்போல்
1. இறைச்சித்தத்தை நம் சித்தமாக ஏற்று நடக்கும்போது,
2. இறையன்பையும், பிறரன்பையும் உயிர்மூச்சாகக் கொண்டு வாழும்போது,
3. பெற்றோருக்குக் கீழ்படிந்து நடக்கும்போது,
4. மற்றவர்களை மன்னிக்கும்போது,
5. மற்றவர்கட்காகத் துன்பப்படும்போது ,
6. மற்றவர்கட்காக நாம் தியாகம் செய்யும்போது
இயேசுவின் சிலுவைப் பாதையில் நடக்கிறோம்.
சிலுவைப்பாதையின் இறுதியில் இயேசு உயிர்த்ததுபோல
இயேசுவாம் வழி நடந்தால் மண்ணில் மரித்த நாம் விண்ணிற்குள் உயிர்ப்பபோம்,
இறையோடு இணைந்து என்றென்றும் வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment