Sunday, July 22, 2018

காலம் மாறிப்போச்சி!

காலம் மாறிப்போச்சி!
*******************************
சினிமாவுக்கு மட்டும்தானா Flash back?

எனக்குக் கிடையாதா?

வயதான பிறகுதான் பையன் பருவத்தின் அருமை புரிகிறது.

ஆரம்பப் பள்ளிக்கூடப் பருவம்.

வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கிட்டுதான் பள்ளிக்கூடம் போவோம்.

சட்டை போட்டாலும் உண்டு, போடாவிட்டாலும் உண்டு.

நடந்துதான் போவோம்.

வாத்தியாரை 'சார்'ன்னுதான் கூப்பிடுவோம்.

ஆனால் டீச்சரை 'அக்கா'ன்னு கூப்பிடுவோம்.

சாமியார் வந்தா,

"சாமி சர்வேசுரனுக்கு தோஸ்திரம்' என்று சொல்லி அவர் முன் முழங்கால்படியிடுவோம்.

அவர் எங்கள் நெற்றியில் சிலுவை போட்டு,

"ஆசீர்வாதம்" என்பார்.

அந்தக் காலத்தில் சாமியாரை அங்கி இல்லாமல் பார்க்கமுடியாது.

அங்கியோடு சாமியாரைப் பார்க்கும்போது சேசுநாதரைப் பார்த்ததுபோல் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை பல மைல் தூரம் மொட்டை வண்டியில் கோவிலுக்குப் போவோம்.

சில சமயங்களில் நடந்தும் போவோம்.

கோவிலில் பெண்கள் தலையில் முக்காடு போட்டிருப்பார்கள்.

கோவிலில் மட்டுமல்ல, எங்கேயிருந்து செபம் சொன்னாலும் முக்காடு போட்டிருப்பார்கள்.

கோவிலில் முழந்தாள்படி இட்டுதான் நன்மை வாங்குவோம்,  நாவில் மட்டும்தான் வாங்குவோம்.

நன்மை கொடுக்க சாமியார்தான் நாங்கள் முழங்காலில் இருக்கும் இடத்திற்கு வருவார்.

விண்ணிலிருந்து ஆண்டவர் இறங்கி நம்மைத்தேடி வந்தது போலிருக்கும்.

பூசைக்கு அரை மணிக்கு முன்பே சாமியார் பாவசங்கீத்தனத் தொட்டியில் இருப்பார்.

நிறையபேர் பாவசங்கீத்தனம் செய்வார்கள்.

கிளைப்பங்குதளத்தில் ஞாயிறு  பூசை இருந்தால் சாமியார் சனிக்கிழமை மாலையிலேயே அங்கு வந்துவிடுவார்.

உள்ளூர்க்காரர்கள் சனிக்கிழமை மாலையிலேயே பாவசங்கீத்தனம் முடித்துவிடவேண்டும்.

வெளியூர்க்காரர்கள் ஞாயிறு காலையில் பாவசங்கீத்தனம் செய்யவேண்டும்.

கோவிலுக்கு வரும் எல்லோரும் பாவிகள்தானே!

சாமியார் 'பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே, ஆமென்'

என்று சொல்லிதான் பிரசங்கத்தை ஆரம்பிப்பார், முடிப்பார்.

இன்றைய நமது பழக்கங்களோடு பழையனவற்றை ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

காலம் மாறிப்போச்சி, காலத்தோடு பழக்கங்ளும் மாறிப்போச்சி.

அங்கியைக் காணோம்.

முக்காட்டைக் காணோம்.

முழந்தாளைக் காணோம்.

பாவத்தைக் காணோம்.

இன்னும் காலம் எப்படி எல்லாம் மாறப்போகிறதோ தெரியவில்லை.

ஆனாலும் பயப்படத் தேவையில்லை.

திருச்சபை கற்பாறைமீது கட்டப்பட்ட கட்டிடம்.

பரிசுத்த ஆவி அதன் உயிர்.

கடந்த நூற்றாண்டுகளில் இதை விடப் பெரிய சோதனைகளை எல்லாம் சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறது.

இன்னும் வெற்றி பெறும்.

லூர்து  செல்வம்.

No comments:

Post a Comment