Thursday, October 31, 2019

"ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள்."(லூக்.13:24)



"ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள்."
(லூக்.13:24)
******      *****     ******     *****

இறைவன் ஆவி.(Spirit) 

அவரால் படைக்கப்பட்ட உலகம் ஒரு சடப்பொருள்.(Matter)

துவக்கமும் முடிவும் இன்றித்    தாமாக இருக்கும் இறைவன்

நம்மை (ஆன்மாவை) தன்னைப்போல் ஆவியாகப் படைத்து,

சடப்பொருளாகிய மண்ணிலிருந்து  உடலை உருவாக்கி, 

நம்மை உடலோடு இணைத்து

ஆவியும், சடப்பொருளும் சேர்ந்த மனிதனாக்கினார்.

எதிர்எதிரான குணங்கள் உள்ள இரண்டு பொருட்களின் இணைப்புதான் மனிதன்.

ஆன்மா ஆவி. 
உடல் சடப்பொருள்.

ஆன்மாவுக்குத் துவக்கம் உண்டு, முடிவு இல்லை,
 அழியாது.

உடலுக்குத் துவக்கமும் உண்டு முடிவும் உண்டு,  அழியும்.

உடல் இவ்வுலகைச் சார்ந்தது, ஆன்மா மறுவுலகைச் சார்ந்தது.

இதன் அடிப்படையில் இரண்டுக்கும் பாரதூர வித்தியாசம் ஒன்று உண்டு.

உலகம்  பிரபஞ்சத்தின் (Universe) ஒரு பகுதி.

பிரபஞ்சம் மிக விசாலமானது.

அது எவ்வளவு தூரம் பரவி இருக்கிறது என்று யாராலும் கணக்கிடமுடியாது.

அதன் பகுதியான உலகமும் விசாலமானதுதான்.
 51,00, 72, 000.   சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது.

ஆகவே நமது உடல் நடப்பதற்கு
விசாலமான பாதையை விரும்புகிறது.

வசிப்பதற்கு விசாலமான வீட்டை விரும்புகிறது.

படுப்பதற்கு விசாலமான அறையை விரும்புகிறது.

சடப் பொருளுக்கு நீள, அகலம் உண்டு.

ஆகவே உடல்  சௌகர்யமாக வாழ விசாலமான இடத்தை விரும்புகிறது.

ஆனால் ஆன்மா?

விசாலம் என்பதற்கு எதிற்பதம்  ஒடுக்கம்.

ஆகவே ஆன்மா ஒடுக்கத்தையே விரும்ப வேண்டும்.

ஆனால், ஆன்மா ஆவி.

ஒடுக்கம் என்ற வார்த்தைக்கு ஆன்மீக ரீதியாகத்தான் பொருள் கொடுக்க வேண்டும்.

அதாவது ஞான ஒடுக்கம். 

ஆன்மீக விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்ட வாழ்வைத்தான் 
"ஒடுக்கமான வாயில்" என்கிறோம்.

விண்ணக வீட்டிற்குள் நுழைவதற்கான வாசல் 'ஒடுக்கமானது'.

என்னுடைய தாத்தா காலத்தில் கட்டப்பட்ட வீடுகளின் வாசல் உயரம் குறைவாக இருக்கும்.

வீட்டிற்குள் போகவேண்டுமானால் தலையைக் குனிந்துதான் வாசல் வழியே போகமுடியும்.

நிமிர்ந்துபோனால் உச்சந்தலையில் நிலையின் அடிவிழும்.

வீட்டிற்குள் நுழைபவர் 'தலை வணங்கிதான்' நுழைய முடியும்.

நமது விண்ணக வீட்டிற்குள் நுழைய வேண்டுமானால் நமது வாழ்க்கை அதற்குறிய விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டதாய் இருக்க வேண்டும்.

விதிமுறைகளை அதாவது கட்டுப்பாடுகளை மீறி உள்ளே நுழைய முயன்றால் தலையில் அடிபட்டு வெளியே விழவேண்டி யிருக்கும்.


அதாவது மனம்போன  போக்கில் வாழ்பவர்கள் 
விண்ணக வீட்டிற்குள் நுழைய முடியாது.

இறைவனால் நேரடியாக நமது மனசாட்சி வழியே தரப்பட்ட பத்துக் கட்டளைகள்

 இறைவனிடமும், நமது அயலானிடமும் 

எப்படி நடந்து கொள்ள வேண்டும், 

எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று கட்டுப் பாடுகளை விதித்துள்ளன.

அவற்றிற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, நம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டுமே ஆராதனை செலுத்த வேண்டும்.

 இறைவனால் படைக்கப்பட்ட,

நமது பயன்பாட்டிற்குத் தரப்பட்ட பூமிக்குப்

 'பூமித்தாய்' (Mother earth)  என்று பெயரிட்டு, 

அதற்குக் கற்பம் அடைந்த பெண்ணைப் போல சிலை செய்து,

அதன் முன் சிலர் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கிய வீடியோ காட்சிகள் உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இது இறைவனால் விலக்கப் பட்ட விக்கிரக ஆராதனை.

இது இறைவனுக்கு விரோதமான பாவம்.

இதைப் போலவே 'பொய், களவு, கொலை, பிறர் மனைவி மேல் ஆசைப்படுதல்' போன்றவையும் கடவுளுக்கு விரோதமான பாவங்களே.

மனம் போன போக்கில் இவற்றைச் செய்பவர்கள் ஒடுக்கமான  விண்ணக வாயிலுள் நுழைய முடியாது.

தலையான பாவங்கள் ஏழையும் விலக்கி, 

அவற்றிற்கு எதிரான புண்ணியங்கள் ஏழையும்

கடைப்பிடிக்க வேண்டும்.

அவ்வாறே திருச்சபையின் கட்டளைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால், இறைவனையும் அயலானையும் நேசித்து,  நற்செயல்களால் சேவை செய்ய வேண்டும்.

ஒரே வாக்கியத்தில், இறைவன் சித்தப்படி வாழவேண்டும்.

நம்  விருப்பப்படி வாழ்வது மிக எளிது.

இறைவன் சித்தப்படி வாழ்வது கடினம்தான்.

இறைவன் சித்தப்படி வாழ்வதுதான் ஒடுக்கமான வழி.

ஒடுக்கமான வழி வாழ்வது கடினமாக இருந்தாலும், 

அதை இலேசாக மாற்ற ஒரு வழி இருக்கிறது.

இறைவனின் சித்தத்தை நமது சித்தமாக ஏற்றுக் கொள்வதுதான் அந்த வழி! 

இறைவன் விருப்பத்தை நமது விருப்பமாக ஏற்றுக் கொண்டால், நமது விருப்பப்படி வாழலாமே!

இதைத்தான் அன்னை மரியும் செய்தாள்!

அன்னை வழியே செல்வோம், ஆண்டவர் பாதம் அடைவோம்! 

லூர்து செல்வம்.

Wednesday, October 30, 2019

""அவர் சொல்லுவதைக் கேட்கவும், தங்கள் நோய்கள் நீங்கிக் குணமாகவும் அவர்கள் வந்திருந்தனர்." (லூக்.6:17)

""அவர் சொல்லுவதைக் கேட்கவும், தங்கள் நோய்கள் நீங்கிக் குணமாகவும் அவர்கள் வந்திருந்தனர்." (லூக்.6:17)
*****     *****     *****    *****

இயேசு உலகில் மனுவுரு எடுத்தது மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னையே பலியாக்க.

இதையே வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,

நம்மை இரட்சிக்க,

நம்மை மீட்க,

நற்செய்தியை அறிவிக்க,

நம்மை விண்ணக வாழ்விற்கு அழைத்துச் செல்ல.

எப்படிச் சொன்னாலும் பொருள் ஒன்றுதான்,

நோக்கமும் ஒன்றுதான்.

அவரைப் பார்க்க வந்தவர்கள் அவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்கவும்,

நோய்கள் நீங்கிக் குணம் பெறவும்  வந்தார்கள் என்று நற்செய்தியாளர் கூறுகிறார்.

இயேசு வந்ததின் நோக்கம் ஒன்று, ஆன்ம இரட்சண்யம்.


ஆனால் மக்களின் நோக்கம் இரண்டு.

மக்களுக்கு ஆன்மாவும், சரீரமும் இருப்பதால்

ஆன்ம நலனுக்காக நற்செய்தியைக் கேட்கவும்,

சரீர நலனுக்காக நோய்கள் நீங்கிக் குணம் பெறவும் 

இயேசுவிடம் வந்தார்கள்.

இயேசு ஆன்மீக மீட்பிற்காக நற்செய்தியை அறிவித்தார்.

அதோடு மக்களின் ஆசையை  நிறைவேற்றுவதற்காக அவர்களது நோய்களைக் குணமாக்கினார்.

ஆனாலும் அவர் உலகிற்கு வந்தது ஆன்மாவை மீட்க மட்டும்தான், நோய்களைக் குணமாக்க அல்ல.

நண்பனைப் பார்க்க அவனது வீட்டிற்குச் செல்கிறோம்.

வீட்டிலே அவனது சிறு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

நண்பனைப் பார்க்கப் போவதுதான் நம் நோக்கம்.

 ஆனாலும் சிறு பிள்ளைகளுக்காக ஏதாவது தின் பண்டம் வாங்கிச் செல்வோம்.

யாராவது  நம்மிடம், 

"தூரமா போய் வருகிறீர்கள்"
என்று கேட்டால்,

"நன்பனைப் பார்த்துவிட்டு வருகிறேன்" என்றுதான் சொல்லுவோம்.

"நண்பனுடைய பிள்ளைகளுக்குத் தின்பண்டம்   வாங்கிக் கொடுத்து விட்டு வருகிறோம்" என்று சொல்ல மாட்டோம்.

யாராவது இயேசுவிடம், 

"ஆண்டவரே, நீர் ஏன் உலகிற்கு வந்தீர்?" என்று கேட்டால்  

"உன்னை இரட்சிக்க வந்தேன்" என்றுதான சொல்லுவார்.

"உன் நோயைக் குணமாக்க வந்தேன்" என்று சொல்லமாட்டார். 

ஆனாலும் 

(நாம் நண்பனின் பிள்ளைகளுக்குப் பண்டம் வாங்கிக்கொண்டு போவதுபோல)

 குணமாக்குவார்.


இறைவன் நம்மைப் படைத்தது ஒரே ஒரு நோக்கத்தோடுதான், அவரை அன்பு செய்ய, இவ்வுலகிலும், மறுவுலகிலும்.

சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவன் விடுமுறைக்காக வீட்டிற்குப் புறப்படுகிறான் என்று வைத்துக்கொள்வோம்.

யாராவது, "தூரமா? " என்று கேட்டால்,

"விடுமுறை ஆரம்பித்து விட்டது,  அதனால் வீட்டுக்குப் போகிறேன்." என்பானா?

அல்லது


"விடுமுறை ஆரம்பித்து விட்டது,  அதனால் Train க்குப் போகிறேன்" என்பானா?

"இறைவன் உன்னை ஏன்படைத்தார்?"

என்று கேட்டால்,

"நிலை வாழ்விற்காக" என்று கூற வேண்டும்.

"இவ்வுலகில் வாழ"என்று கூறினால், அது அறியாமை.

இரயிலில் பயணிப்பது போல இவ்வுலகில் வாழ்கிறோம்.

நாம் பயணிப்பது ஆன்மீகப் பயணம், விண்ணகத்தை நோக்கி.

இயேசு சொல்கிறார்,

"ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும்

 அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், 

அவனுக்கு வரும் பயனென்ன?" (மத்16:26)

நாம் வாழ்வது ஆன்மீக வாழ்வு.

இயேசு தர இருப்பது ஆன்மீக விடுதலை, 

அதாவது பாவத்திலிருந்து ஆன்மா பெறும் விடுதலை.

இயேசு தரும் இந்த விடுதலை வாழ்விற்கு நமது உடல் ஒத்துழைப்பு தரவேண்டும். 

நாம் வாழும் உலகம் நமது ஆன்மீகப் பயணத்திற்கு உதவுவதற்காகத்தான் நமக்குத் தரப்பட்டுள்ளது, நாம் நிரந்தரமாக வாழ்வதற்காக அல்ல.

சில சமயங்களில் நமது பயணங்களில் நமக்கு உதவியாகத் தரப்பட்டுள்ள சாதனங்கள், 

நாம் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால் 

 பயணத்திற்கு இடைஞ்சலாக மாறுவது மட்டுமல்ல

பயணத்தின் போக்கையே மாற்றி விடும்.

ஆன்மீக விடுதலைக்கு உதவியாக இறைவன் தந்தவை:

1.சமூகம். (Society)

2. பூமி.(Earth)

1.சமூகம்:

கடவுள் மனிதனை சமூகப் பிராணியாகப் (Social being) படைத்தார்.

'மனிதன் தனிமையாய் இருப்பது நன்றன்று'  என்று  முதல் மனிதனுக்குக் துணையாக ஒரு மனைவியைக் கொடுத்தார்.

குடும்பமாகிய சமூகத்தை உருவாக்கி,

 அவர்களை ஆசீர்வதித்து, 

 பலுகிப் பெருகிப் பூமியை நிரப்பும்படி கட்டளையிட்டார்.

நாம் நமது முதல் பெற்றோரிடமிருந்து பலுகிப் பெருகிய மனுக்குலமாகிய சமூகத்தில்தான் வாழ்கிறோம்.

சமூகத்திலுள்ள அனைவரும் நமது ஆன்மீகப் பயணத்தில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும் என்பதே அவரது திட்டம்.

அதற்காகத்தான் அன்பு என்னும் பிணைப்புக் கயிற்றை எல்லோருடைய இருதயத்துக்கும் பரிசாகக் கொடுத்தார்.

 
ஆனால் ஆதிப் பெற்றோர் தாங்கள் செய்த பாவத்தின்  காரணமாக எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி விட்டார்கள்.

சமூக ஒற்றுமைக்காகத் தரப்பட்ட அன்புக் கயிற்றை மனிதன் தன் சுய நலத்துக்காக பயன்படுத்த ஆரம்பித்தான்.

இதனால் சமூகத்தின் மக்கள் ஒருவரை ஒருவர் அடிமைப் படுத்த ஆரம்பித்தார்கள்.

இந்நிலையைச் சாத்தான் தன் நோக்கத்தை நிறைவேற்றப் 
பயன் படுத்திக் கொண்டான்.

சமூகத்தில் ஏற்பட்ட அடிமைத் தனங்களை நம் முன் நிறுத்தி, 

அவற்றை தடைக்கல்லாகப் பயன்படுத்தி

நமது ஆன்மீகப் பயணத்தைத் திசை திருப்ப முயற்சிக்கிறான்.

கடவுள் மனுவுரு எடுத்தது நமது ஆன்மீக விடுதலைக்காக.
(Spiritual liberation)

அதாவது நமது  பாவங்களுக்குப் பரிகாரம் செய்து,

பாவத்தின் அடிமைத் தனத்திலிருந்து நம்மை மீட்பதற்காக.

அரசியல், பொருளாதார, சமூக
அடிமைத் தனத்திலிருந்து மீட்பதற்காக அல்ல.


அவர் அரசியல் விடுதலைக்காகப் பிறந்திருந்தால் யூத சமூகத்தை உரோமானிய அடிமைத் தனத்திலிருந்து மீட்டிருப்பார்.

"செசாருக்கு உரியதை செசாருக்குக் கொடு" என்று கூறியிருக்க மாட்டார்.

அவருடைய இராட்சியம் இவ்வுலகைச் சார்ந்தது அன்று,  விண்ணுலகைச் சார்ந்தது.

அவர் போதித்த அன்பை அனைவரும் கடைப்பிடித்தால்

சமூகத்தில் உள்ள அனைத்து ஏற்ற தாழ்வுகளும் தாமாகவே மறைந்துவிடும்.

அதற்கு விடுதலை இறையியல் (Liberation theology) 
தேவை இல்லை!


2.பூமி:


கடவுள் மனிதனைப் படைக்கு முன் பூமியைப் படைத்தார்.

பூமியிலுள்ள மண்ணை எடுத்துதான் நமது உடலைப் படைத்தார்.

அதனால்தான் நாம் 

மண் + இதன் = மணிதன் = மனிதன் என்று அழைக்கப் படுகின்றோம்.

(Man = மண்)

பூமி நமது உடலுக்கு மட்டும்தான் தாய். ஆன்மாவிற்கு அல்ல.

ஆன்மா இறைவனால் நேரடியாகப் படைக்கப்பட்டு உடலோடு சேர்க்கப்படுகிறது.

நமது இறப்பின்போது நமது உடல் தன் தாயிடம் (Mother earth) திரும்பிவிடுகிறது.

ஆன்மா தன் தந்தையிடம் திரும்பிவிடுகிறது.

பூமி (Mother earth) 
அழியக்கூடியது. ஆகவே உடலும் அழியக்கூடியது.

ஆன்மா அழிவற்றது.

பூமியையும், நம்மையும் படைத்த கடவுள் மட்டுமே நமது ஆராதனைக்கு உரியவர்.

அவரால் நாம் பயன்படுத்துவதற்கென்றே படைக்கப்பட்ட 

பூமியைக் குறிக்க ஒரு பெண் சிலையைச் செய்து 

அதன் முன் சாஸ்டாங்கமாக குப்புற விழுந்து வழிபடுவது

 வடிகட்டின விக்கிரக ஆராதனை,  யார் செய்தாலும்.


பூமியில்தான் நாம் பிறந்தோம், அங்கேயே தங்குவதற்கு அல்ல. 

மருத்துவ மனையில் பிறப்பது அங்கேயே தங்குவதற்கா?

பூமி அழகானது. தன்னைப் படைத்த இறைவனின் அழகை அது பிரதிபலிக்கிறது.

பூமியைப் பார்த்தவுடன் அதைப் படைத்து நம்மிடம் தந்த இறைவன் ஞாபகத்திற்கு வர வேண்டும்.


அவருக்கு நன்றி கூறவேண்டும், பூமிக்கு அல்ல.

நமக்கு பிறந்த நாள் பரிசாக நண்பர் ஒருவர் ஒரு கைக்கடிகாரரம் வாங்கித் தந்திருந்தால் 

நாம் நன்றி கூற வேண்டியது நண்பருக்கா?
கைக்கடிகாரத்துக்கா?

ஒவ்வொரு நாளும் படுக்கப் போகுமுன் 
கைக்கடிகாரத்தை மேசையில் வைத்து, அதைப் பார்த்து,

"Hi! my beloved wrist watch, thank you very much for having been with me throughout the day!"  என்று சொன்னால் எப்படி இருக்கும்! 

பூமியைப் பயன்படுத்துகிறோம். அதன் வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும், நம் வருங்கால சந்ததியின் நலன் கருதி.

அதில் மாற்றுக் கருத்து இல்லை.

பூமியின் சூழ் நிலையை மாசு படுத்தக் கூடாது,  நம் நலன் கருதி.

அதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

நாம் சிக்கனமாக, மாசுபடுத்தாமல் இருப்போம்,

ஆனால் அதைக் கண்காணிக்க அரசு இருக்கிறது.

நமது ஆன்மீக வழிகாட்டிகள் நமது ஆன்மீக காரியங்களில் அக்கரை காட்ட வேண்டியவர்கள்.

மக்களின் ஆன்மீக காரியங்களில் அக்கரை காட்டுவதில் முழுக்கவனம் செலுத்தினால் நல்லது.

பூமித்தாயைக் கவனிக்க அதற்குறியவர்கள் இருக்கிறார்கள்.

நாமும்  பூமியைச் சுத்தமாக வைத்துக் கொள்வோம். 

அது சுகாதாரம்.

அதைவிட முக்கியமாக நமது ஆன்மாவைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்வோம்.

அது நமது நித்திய ஜீவாதாரம்!

God, starting point.

World, track for running.

God, finishing point.

நாம் ஆன்மீக ஓட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறோம்

கடவுளில் ஆரம்பித்து,

உலக வழியில் ஓடி,

கடவுளையே அடைய வேண்டும்.

நமது நோக்கம் கடவுளோடு இணைவது,

உலகையே நினைப்பது அல்ல.

லூர்து செல்வம்.

Sunday, October 27, 2019

."கடவுளே, பாவி என்மேல் இரக்கமாயிரும்" (லூக்.18:13)

."கடவுளே, பாவி என்மேல் இரக்கமாயிரும்" (லூக்.18:13)
****      ****    ****    ****      ****
இந்த சிறிய செபத்தை செபித்தவனே

"இறைவனுக்கு ஏற்புடையவனாகி வீடுதிரும்பியவன்"

என்று இயேசு சொல்கிறார்.

இதிலிருந்து இது எவ்வளவு வல்லமை வாய்ந்த செபம் என்று தெரிகிறது.

இந்த செபத்தைச் சொல்லும்போதே

1. கடவுளை ஏற்றுக் கொள்கின்றோம்.

2. நாம் பாவிகள் என்பதை  ஏற்றுக் கொள்கின்றோம்.

3.கடவுள் இரக்கம் உள்ளவர் என்பதை  ஏற்றுக் கொள்கின்றோம்.

கடவுளை ஏற்றுக் கொள்ளும்போது 

அவரே நம்மைப் படைத்தவர்,

படைத்தவர் என்பதாலேயே

 நாம் என்ன செய்ய வேண்டும்,

 என்ன செய்யக்கூடாது என்று

 நமக்கு கட்டளையிட அதிகாரம் உள்ளவர் என்பதை  ஏற்றுக் கொள்கின்றோம்.


நாம் அவரது கட்டளைகளை மீறி பாவம் செய்து  விட்டோம்,

ஆகவே நாம் பாவிகள்,

பாவிகளால் பரிசுத்தரோடு உறவு வைத்துக் கொள்ள முடியாது,

இறை உறவு வேண்டுமென்றால் நாம் பரிசுத்தம் அடைய வேண்டும்,


 நாம் பரிசுத்தம் அடைய   நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும்,

யாருக்கு விரோதமாகப் பாவம் செய்தோமோ அவர்மட்டும்தான் நமது பாவங்ளை மன்னிக்க முடியும்,

மன்னிப்புக் கேட்குமுன் நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொண்டு, பாவங்களைச் செய்தமைக்காக வருந்த வேண்டும்

என்பதையும்  ஏற்றுக் கொள்கின்றோம்.

இறைவன் அன்பும்,  இரக்கமும் உள்ளவர்,

நாம் எத்தனைமுறைப் பாவம் செய்தாலும் நம்மீது அவர் கொண்டுள்ள அன்பும், இரக்கமும் மாறாது,

எத்தனைமுறை மன்னிப்புக்
கேட்டாலும் இரக்கத்தோடு மன்னிப்பார்

என்பதையும்  ஏற்றுக் கொள்கின்றோம்.

இவ்வாறு ஏற்றுக்கொள்வதன் அடிப்படையில்தான் நாம் அவரை நோக்கி,

"கடவுளே, பாவி என்மேல் இரக்கமாயிரும்" என்கிறோம்.

வண்ணவண்ண வார்த்தைகளை அள்ளிக் கொட்டி செபிப்பதைவிட 

ஒரே வாக்கியத்தில் செபிக்கும் இந்த செபம் எவ்வளவோ பொருள் பொதிந்தது,

 வல்லமை உள்ளது.

1. மனதை ஒருநிலைப்படுத்துவது எளிது.

2. எவ்வளவுக்கு எவ்வளவு மனத்தாழ்ச்சியுடன் செபிக்கிறோமோ

அவ்வளவுக்கு அவ்வளவு செப வல்லமையும் கூடும்.

நாம் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்ளும்போதே நாம் இறைவனின் சித்தத்திற்கு எதிராகச் சென்றதாக ஏற்றுக் கொள்வதோடு,

அவரின் வழிக்குத் திரும்ப நமது உறுதியான ஆவலை வெளிப்படுத்துகிறோம்.

ஆன்மீக வாழ்வில் முழுக்க முழுக்க இறைவனையே சார்ந்திருப்பதைப் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

3.இறைவனின் இரக்கத்தை வேண்டும்போதே இறைவனிடம் வேண்டுவது கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையை (Hope) வெளிப்படுத்துகிறோம்

நம்பிக்கையோடு செய்யும் செபத்திற்குதான் முழு வல்லமை உண்டு.

4. இறைவனை "இரக்கமாய் இரும்" என வேண்டும்போதே நாம் நம் அயலான்மேல் இரக்கம் காட்ட வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.

இரக்க சுபாவம் உள்ளவன் மட்டுமே இரக்கத்தை எதிர்பார்க்க  முடியும்.

5.  'கடவுளே' என்று சொல்லும்போது நமது விசுவாசத்தையும்,

 'இரக்கமாயிரும்' என்று சொல்லும்போது நமது நம்பிக்கையையும்,

மொத்த செபத்தில் இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள அன்பையும் வெளிப்படுத்துகிறோம்.

கடவுளின் இரக்கம் நம்மீது இருக்கும்போது நமக்கு வேண்டியது எல்லாம் நம்மிடம் இருக்கிறது என்றுதான் பொருள்.

பணிவோடு வேண்டுவோர் துணிவோடு வாழலாம்!

லூர்து செல்வம்.




Friday, October 25, 2019

"பிரிவினை உண்டாக்கவே வந்தேன்." (லூக்.12:51)

"பிரிவினை உண்டாக்கவே வந்தேன்." (லூக்.12:51)
---------------------------------------------
"ஏங்க, இங்க வாங்க."

"என்னடி விசயம்?  கையில பைபிள வச்சிக்கிட்டு கூப்பிடுற? ஏதாவது சந்தேகமா?"

"பைபிளில சந்தேகம் வந்தால்  கிறிஸ்தவளாக இருக்க முடியாதுங்க. 

ஒரு வசனம் புரியல. அதற்குறிய விளக்கம் உங்களுக்குத் தெரிந்தால்

 உங்களிடமிருந்து நானும் தெரிஞ்சிக்கிடலாம்னு பார்த்தேன்."

"தெரியாட்டா?"

"சாமியாரப் பார்க்கும்போது கேட்கணும்."

"சரி, கேளு. தெரிஞ்சா சொல்றேன்."

"இயேசு 'நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? 

இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்.'

என்ற வசனம்தான் விளங்கவில்லை."

..."நேரடியாக விளக்குவதைவிட ஒரு உதாரணம் மூலம் விளக்கினால் நன்கு விளங்கும்.

ஒருநாள் உன் மகன்கிட்ட சொல்ற

'இன்றையிலிருந்து ஸ்கூல் விட்ட உடனே நேரே வீட்டுக்கு வரணும், Friend வீட்டுக்குப் போனேன், ஹோட்டலுக்குப் போனேன்னு வீட்டுக்குப் பிந்தி வந்தால் அடி கிடைக்கும்.'

மறு நாள் அவன் பிந்தி வருகிறான். நீ வீட்ல இல்லை.

பிந்தி வந்ததுக்காக அடி கொடுக்கிறேன்.

நீ வரும்வரை அழுகிறான்.

நீ வந்தவுடன்  'நான் பிந்தி வந்ததுக்காக அப்பா அடிச்சிட்டாங்க'ன்னு சொல்றான்.

நீ என்ன சொல்லுவ?"

":அப்பாமேல கோபம் வேண்டாம். 

அவங்க அடிச்சதுக்கு நான்தான காரணம். 

உன் நல்லதுக்குதான 'எங்கேயும் போகாம வீட்டுக்கு வா'ன்னு சொன்னேன்'னு சொல்வேன்."

"இப்போ இயேசு சொன்னது விளங்குதா?"


"விளங்குதுன்னு நினைக்கிறேன்.

உங்க உதாரணத்தில நான் என் மகனுக்கு அவனது நன்மைக்காகக் கட்டளை கொடுத்ததுபோல் 

இறைவனும் அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு 'ஒருவரை ஒருவர் நேசியுங்கள், சமாதானமாய் இருங்கள்' என்று கட்டளை கொடுத்திருக்கிறார்.

கட்டளையை மீறுவது பாவம், அதன்படி நடப்பது புண்ணியம்.

மனிதர்களும்  இரண்டாய் பிரிந்திருக்கிறார்கள்: 

1.கட்டளைப்படி நடக்கும் புண்ணியவான்கள்.

2. கட்டளையை மீறி   நடக்கும் பாவிகள்.

கடவுள் இவ்வுலகில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஆதிகாரணர். (Primary Cause)

கட்டளையைக் கொடுத்த கடவுள் ஆதிகாரணர். (Primary Cause)

நமது சுதந்திரத்தைப் பயன்டுத்தி கட்டளைப்படி நடக்கிறோம் அல்லது மீறுகிறோம்.

சுதந்திரத்தைப் பயன்டுத்திச் செயல்படுவதால் நமது செயல்களுக்கு நாம்தான் பொறுப்பு.   

நாம் உடனடிக் காரணிகள் (Secondary cause) 


"நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்?

 இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்."

என்று இயேசு கூறும்போது,

'நான் கடவுள். 

உங்களைப் படைத்து 

எனது பிள்ளைகளாக்கி,

 உங்கள் நலன் கருதி  

'அன்பு செய்து, சமாதானமாய் வாழுங்கள்'  என்று கட்டளை கொடுத்தேன். 

ஆனால் நீங்களோ கட்டளையை அனுசரிப்போர், மீறுவோர் இரண்டு பிரிவினர் ஆகிவிட்டீர்கள். 

உங்கள் பிரிவினைக்கு உங்களைப் படைத்த நான்தான் ஆதிகாரணர்.' என்கிறார்.

சரியா?"

..."Correct. ஆனால் பிரிவினைக்குப் பொறுப்பு ஏற்கவேண்டியது நாம்தான்.

ஏனைனில் நமது சுதந்திரத்தைப் பயன்டுத்தியே செயல்படுகிறோம்.

 அன்பு செய்வதும், செய்யாதிருப்பதும் நாம்தான்.

ஒருநாள் வகுப்பில் ஒரு மாணவனைப் பார்த்து

"ஏண்டா இவ்வளவு மோசமா மார்க் எடுத்திருக்க?"ன்னு கேட்டேன்.

"நீங்கதான் சார் காரணம்."

"நானா?"

"ஆமா. நீங்கதான பரிட்சை வச்சீங்க. பரிட்சை வச்சிருக்கா விட்டால் fail ஆகியிருக்க மாட்டேன்."

எப்படி இருக்கு?"

"ஆனால் உங்க மாணவன் உங்களிடம் கேட்டது மாதிரி நாம் கடவுளிடம் கேட்டுவிடக் கூடாது.

அன்புமயமான கடவுள் தன்னுடைய அளவற்ற அன்பின் காரணமாகத்தான் நம்மைப் படைத்தார்.

அவர் நமக்குக் கொடுத்த கட்டளைகளும் அன்புமயமானவை.

'1. நான் உன் தந்தை, என்னை நேசி.

2. உன் அயலான் உனது  சகோதரன். அவனையும் நேசி.

இவை அன்பின் கட்டளைகள்.
Commandments of love.

கடவுள் அன்புமயமானவர்.
அவரது கட்டளைகளும் அன்புமயமானவை.

கரும்பு தின்னக் கூலியா என்பார்கள்.

ஆனால் கரும்பைப் போன்ற இனிய கட்டளைகளைக் கொடுத்து,

அன்பு செய்பவர்களுக்குக் கூலியாக நித்திய பேரின்பத்தையும் கொடுக்கிறார்.

இந்த நிலையில்

"நீர் படைத்ததனால்தானே அன்பு செய்ய வேண்டி யிருக்கிறது!" என்று குறை சொன்னால் நம்மைப் போல் பைத்தியங்கள் இருக்க மாட்டார்கள்! 



" மண்ணுலகில் தீயை மூட்டவே வந்தேன். இப்போதே அது பற்றியெரிய வேண்டுமென்று எவ்வளவோ விரும்புகிறேன்!"

இயேசு மூட்டவந்தது அன்புத் தீ!  

அன்புத்தீயில் பற்றி எரிவோம்.
பாவ அழுக்கு நீங்கி பரலோக இன்பத்திற்குத் தயாராவோம்."

"இயேசு தரும் அன்பு பிரிவினைக்கு அல்ல, 

அன்போடு இணைவதற்கு!"

லூர்து செல்வம்.









'

Wednesday, October 23, 2019

எந்த நல்ல காரியமும் கடவுளின் உதவி இன்றி நடக்காது.

எந்த நல்ல காரியமும் கடவுளின் உதவி இன்றி நடக்காது.
---------------------------------------------------


 "Good morning!"

..."Good morning! Welcome again!"

 "உற்சாகமா இருக்கிறது மாதிரி தெரியுது!"

"Special ஆ ஒன்றும் இல்லை.
நீங்கள்தான் உற்சாகமா இருக்கிறது மாதிரி தெரியுது!"
 
"எதை வைத்துச் சொல்றீங்க?"

..."நீங்க சொன்ன வாக்கியத்திலேயே உற்சாகம் இருக்கே! உட்காருங்கள்

இரண்டு நாட்களுக்கு முன்னால கோபமா எங்கிட்ட வந்தீங்க, ஞாபகம் இருக்கா?"

"நான் வந்தது எனக்கே மறக்குமா? 

உங்க மேல கோபம் இல்ல, 
கடவுள் மேலதான் கோபம்!"

..."பார்த்தீங்களா,அன்றைக்கே உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்திருக்கு!"

"இன்றைக்கு இருக்கு. அன்றைக்கு இல்லை.''


"உங்க பேரன் மேல உங்களுக்குக் கோபமா?"

ஹலோ! என் பையனுக்கே பத்து வயசுதான் ஆகுது. இல்லாத பேரன்மேல எப்படிக் கோபம் வரும்?"

..."உங்க கருத்துப்படி இல்லாத கடவுள் மேல எப்படிக் கோபம் வந்தது?"


"தெரியல. ஆனால் ஒண்ணு புரியுது, உங்களவிட நான்தான் கடவுள் பெயரை அதிகம் உச்சத்திருப்பேன்!"

..."உங்கள கோப நிலையிலும் இங்கு அனுப்பி வைத்தது எது தெரியுமா?"

"எது?"

"எந்தக் கடவுளை இல்லை என்றீர்களோ அந்தக் கடவுளின் அருள்!"

"நேற்றே அடிக்கடி 'அருள்' என்றீர்கள். இன்று  அதுதான் என்னை அனுப்பிவைத்தது என்கிறீர்கள். புரியவில்லை."

..."எந்த நல்ல காரியமும் கடவுளின் உதவி இன்றி நடக்காது.

நீங்கள் கடவுளை நம்ப ஆரம்பித்தது ஒரு நல்ல காரியம்.

அது கடவுளுடைய உதவியால்தான் நடந்தது. 


கடவுளுடைய உதவியைத்தான் அருள் (Grace of God) என்கிறோம்.

இறைவனுடைய அருள் நற்காரியம் செய்யத் தூண்டும், செய்யும்போதும், செயல் முடியுமட்டும் உதவியாய் இருக்கும்.

இந்த அருளை 'உதவி வரப்பிரசாதம்' (Actual grace) என்போம்.

'உதவி வரப்பிரசாதம்' இல்லாமல் ஆன்மீகவாழ்வில் ஒரு நற்காரியமும் செய்யமுடியாது.

நாம் கேளாமல்கூட ஆண்டவர் இந்த அருளைத் தருகிறார்.

ஆயினும் இதை அதிகமாகப் பெற ஆண்டவரிடம் அடிக்கடி வேண்டவேண்டும்.

எவ்வளவுக்கெவ்வளவு இந்த அருளை அதிகமாகப் பெறுகிறோமோ

அவ்வளவுக்கவ்வளவு அதிக நற்செயல்கள் புரிவோம்.

அதிக நற்செயல்கள் புரிந்தால் இறைவனோடு நெருக்கமும்
அதிகமாகும்,

விண்ணுலகில் சம்பாவனையும் அதிகமாகும்."

"கடவுள் எல்லோருக்கும் இந்த அருளைத் தருகிறார் என்று
நம்புகிறேன்.

ஆனால் எல்லோரும் அருளோடு ஒதுழைப்பதுபோல் தெரியலிய!''

..."உண்மைதான். அம்மா தரும்போது சாப்பிட்டால்தானே வயிறு நிறையும்.

உதாரணத்திற்கு ,பசியால்  வாடிக்கொண்டிருக்கும் ஒரு ஏழையைப் பார்க்கிறோம்.

இறைவனின் அருளின் தூண்டுதலால் அவனுக்கு உணவு கொடுக்கும்படி மனது சொல்கிறது.

 அந்தத் தூண்டுதலை ஏற்று, அதன்படி நடப்போர் தாங்கள் செய்த நற்செயலுக்கான பலனைப் பெறுவர்.

இறைவன் தந்த அருளோடு ஒத்துழைத்தால் பலன், 
இன்றேல் இல்லை."

"ஒரு சந்தேகம். மனித இயல்பின்படி நாம் நமது உறவினர்கட்கோ, அல்லது நண்பர்களுக்கோதான் உதவி செய்கிறோம்.

இறைவன் தன்னோடு உறவில் உள்ளவர்கட்கு மட்டும்தான் உதவி செய்கிறாரா,  அல்லது..?"

..."நீங்கள் கேட்க வருவது புரிகிறது. மனுக்குலத்தோர் அனைவரும் இறைவனால் மட்டுமே படைக்கப் பட்டவர்கள்.

எல்லோருமே இறைவனின் பிள்ளைகள்.

எல்லோருமே இறை உறவில் வாழ்ந்து விண்ணகம் வர அழைக்கப்பட்டவர்கள்.

கடவுள் மனிதனாகப் பிறந்தது, 
பாடுபட்டு தன்னையே சிலுவை மரத்தில் பலியாக ஒப்புக் கொடுத்தது மனுக்குலம் முழுவதன் பாவங்களின்
பரிகாரத்திற்காகத்தான்.

எல்லா மனிதருமே பாவ நிலையில்தான் பிறக்கிறார்கள்.

எல்லோருமே இரட்சிக்கப்பட வேண்டும்.

இறையுறவோடு இருப்பவர்கள்தான் இரட்சிக்கப்பட முடியும்.


பாவநிலையில்  பரிசுத்தரான கடவுளோடு உறவுகொள்ள முடியாது.

பாவ நிலையில் பிறந்த மனிதன் அந்நிலை நீங்கி பரிசுத்தமாவதற்கு ஞானஸ்நானம்  பெறவேண்டும்.

ஞானஸ்நானத்தின்போது நமது பாவநிலைநீங்கி பரிசுத்தமடைய. இறைவனால் நமக்குத் தரப்படும் இறை அருள் 'தேவஇஸ்டப்பிரசாதம்' 
(Sanctifying grace).


நம்மிடம் தேவஇஸ்டப்பிரசாதம் என்ற அருள் இருக்கும்போதுதான் நாம் இறை உறவில் இருக்கிறோம்.

இறை உறவில் இருக்கும்போது மட்டுமே நம்மால் நற்செயல்  செய்ய முடியும்."

"நான் இப்போது கடவுளை நம்புகிறேன்.

நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தபோது நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறேன்.

அவையெல்லாம் நல்ல செயல்கள் இல்லையா?"

..."ஒரு சின்ன கேள்வி. நீங்க எது வரை படிச்சிருக்கீங்க?"

"B.A. B.Ed."

..."அதனால உங்களுக்கு என்ன பயன்?"

"அதனாலதான் ஆசிரியர் வேலை கிடைச்சுது."

"நான் பள்ளிக் கூடத்துக்கே போகல.

வீட்டில இருந்து எழுத வாசிக்கப் படிச்சிருக்கேன்

நீங்க தேர்வு எழுதிய வினாத் தாட்களை வாங்கி

 நானும் தேர்வு எழுதி, நானே  பேப்பர் திருத்தி, நானே மார்க் போட்டு, நானே எனக்கே Certificateம் கொடுத்திருக்கிறேன்.

உங்களை விட அதிக மார்க் போட்டிருக்கிறேன்.

என்னுடைய Certificateஅ எடுத்துக்கிட்டு நீங்க வேலை பார்க்கிற பள்ளிக்கே வந்து வேலை கேட்கிறேன். 

வேலை தருவாங்களா?"

"தரமாட்டாங்க.'

"Your certificate is not valid.
அரசு மூலமாக தேர்வு எழுதி, 
அரசு கொடுக்கிற சான்றிதழ்தான் செல்லும்.

எவ்வளவு நன்றாக எழுதியிருந்தாலும்,

நீங்களாகவே எழுதிய சான்றிதழ் செல்லாது."

..."அதே மாதிரிதான். 

1.திருமுழுக்கு மூலமாகப் பெற்ற

தேவ இஸ்டப்பிரசாத நிலையில்,

 2.இறைவனது மகிமைக்காகச் செய்யப்படும் செயல்தான் நற்செயல்.

இந்த இரண்டில் ஒன்று இல்லாவிட்டாலும் அது நற்செயல் அல்ல, வெறுஞ்செயல்தான்.

ஆன்மீக வாழ்வின் துவக்கமும்

ஓட்டமும்

நோக்கமும்

இறைவனோடு உள்ள உறவுதான்."

"நீங்கள் சொல்வது நன்கு புரிகிறது.

கத்தோலிக்கத் திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்று,

கத்தோலிக்கத் திருச்சபையில்
வாழ்ந்து,

 கத்தோலிக்கத் திருச்சபையில் மரிப்பவர்கள் மீட்பு அடைவார்கள் என்று நீங்கள்  சொல்வது தெளிவாகப் புரிகிறது.

ஆனால் கத்தோலிக்கத் திருச்சபையில் இல்லாதவகளின் கதி என்ன என்ற கேள்விதான் மனதுக்கு உறுத்தலாக இருக்கிறது."

..."கடவுள் எல்லாம் வல்லவர்.

 எல்லா மக்களையும் படைத்தவர்.  

எல்லோரையும் படைத்தது ஒரே
நோக்கத்திற்காகத்தான்.

அவருடைய வழிமுறைகள் அதிசயமானவை.

மீட்பு கடவுளுக்கும் அவர் படைத்த ஒவ்வொரு மனிதனுக்கும் இடையே உள்ள விசயம்.

ஒவ்வொரு மனிதனையும் மீட்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் அவர் செய்வார்.

கிறிஸ்து தன் நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்கத் தன் சீடர்களுக்குக் கட்டளை இட்டார்.

ஆனாலும்,  நற்செய்தியை அறியாத மக்களைக் கடவுள் கைவிடமாட்டார். ஏனெனில் அது அவர்களுடைய தவறு இல்லை.

அத்தகைய மக்கள் கடவுளால் அவர்கட்கு அளிக்கப் பட்டிருக்கிற மனசாட்சிப்படி நடந்தால் மீட்பு அடைவாகள்.


"Those who, through no fault of their own, do not know the Gospel of Christ or his Church,

 but who nevertheless seek God with a sincere heart, and, moved by grace, try in their actions to do his will as they know it

 through the dictates of their conscience—those too may achieve eternal salvation. (CCC 847)

நீங்கள் கடவுளை ஏற்றுக் கொண்டுவிட்ட படியால்

அந்த. உறுத்தல் உங்ளுக்கு வேண்டாம்.''


"அப்படியானால் நான் பெறவேண்டியது ஞானஸ்நானம்.  அதற்கு வேண்டிய ஆயத்தம் செய்வோம்."

..."இயேசுவே, உமக்கு நன்றி."

லூர்து செல்வம். 



Monday, October 21, 2019

பாவம் மட்டுமே தீமை.

பாவம் மட்டுமே தீமை.
-------------------------------------------------
"Good morning. உள்ளே வரலாமா?"

..."Good morning மட்டுமல்ல, 
நீங்களும் உள்ளே வரலாம்."

"Busy யா இருக்கீங்களா? "

..."Busy thinking. உங்களுக்கு இரண்டு நாள் time கொடுத்தேன்.

நான் சொன்னதைப் பற்றிச் சிந்திச்சிங்களா? "

"ஆமா. இப்போநான் குழப்பம்  நீங்கித் தெளிவாய் இருக்கிறேன்..

சில கேள்விகள் எழுந்தன. கேட்கலாமா?"

..."ரொம்ப சந்தோசம். கேளுங்க."

"இயற்கை நிகழ்வுகளில பிரச்சனை இல்லை. சடப்பொருளாகிய உலகம் மாறிக்கிட்டு  இருக்கிறது.

ஆனால் அந்த மாற்ற நிகழ்வுகளில மனிதன் மாட்டிக் கொள்வதால்

எண்ணிறந்த மரணங்கள் ஏற்படுகின்றனவே,

அதைத்தான் எப்படி சீரணிப்பது என்று தெரியவில்லை.

நான் கடவுளைக் குறைகூறவில்லை. குறை கூறவும் முடியாது. என் புத்திக்கு எட்டவில்லை.

 என் புத்திக்கு எட்டவையுங்களேன்."


..."தனது எல்லா பண்புகளிலும் கடவுள் அளவற்றவர். நாம் மிகவும் அளவுள்ளவர்கள்.

அளவற்ற பரம்பொருள் அளவுள்ள மனித புத்திக்கு எப்படி எட்டுவார்?

கடவுளை முழுவதும் புரிந்து கொள்ள ஆசிப்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது மாதிரி.

ஆயினும் கடவுள் தன்னைத் தெரிந்து கொள்வதற்காக 'விசுவாசம்' என்னும் வல்லமை வாய்ந்த சக்தியைப் பரிசாகத் தந்திருக்கிறார்.

விசுவாசக் கண்ணோடு இறைவனைப் பார்க்க வேண்டும். புரியவேண்டிய அளவுக்குப் புரியும்.

கடவுள் தன் அளவுகடந்த அன்பை பகிர்ந்து கொள்வதற்காகத்தான் நம்மைப் படைத்தார்.

நாம் இவ்வுலகில் நிரந்தரமாக வாழ வேண்டுமென்பது கடவுளின் திட்டமல்ல.

அவர் திட்டமிட்ட காலம் இவ்வுலகில் வாழ்ந்து, 

பின் மறு உலகில் அவரோடு என்றென்றும் வாழ வேண்டும் என்பதே அவர் திட்டம்.

பிறப்பின் மூலம் உலகினுள் நுழைந்த நாம், 

இறப்பின் மூலம்தான் விண்ணுலகிற்குள் நுழைய முடியும்.

 மரணம் நாம் வருந்த வேண்டிய விசயம் அல்ல, மகிழ வேண்டிய விசயம்.

ஏனெனில் அதுதான் நித்திய பேரின்பத்திற்கான வழி.

நாம் எங்கே, எப்போது, யார்மூலம் பிறக்க வேண்டும் என்று திட்டமிடும்  இறைவன்தான்

நாம் எங்கே, எப்போது, எப்படி இறக்க வேண்டும் என்றும் திட்டமிடுகிறார்.

நாம் மரணிக்க வேண்டியது நோய் மூலமா, விபத்து மூலமா, சுனாமி மூலமா, நிலநடுக்கம் மூலமா என்று தீர்மானிப்பதும் அவரே.

எல்லாம் அவரது நித்திய திட்டப்படிதான் (Eternal plan) நடக்கும்.

நல்லவர்களாகப் பிறந்த நாம்,  நல்லவர்களாக வாழ்ந்து, நல்லவர்களாக மரிக்க வேண்டும்.

பிறப்பையும் இறப்பையும் விட வாழ்வதுதான் முக்கியம்.

இறைவன் கட்டளைகட்குப் பணிந்து வாழ்ந்தால் என்ன நடந்தாலும், எப்போ நடந்தாலும், எப்படி நடந்தாலும் அஞ்ச வேண்டியதில்லை.


நல்லவர்களாக வாழ்ந்தால்,

எப்படி மரித்தாலும், நிலை வாழ்விற்குள் நுழைவோம்"

" நீங்கள் சொல்வது புரிகிறது.

தோட்ட உரிமையாளர்

 தோட்டத்தை எப்படிக் கண்காணிக்க வேண்டுமோ

 அப்படிக் கண்காணிக்க

 அவருக்கு முழு உரிமை இருக்கிறது.

அவர் என்ன செய்தாலும் அது தோட்டத்தின் நன்மைக்கே."

..."வேறு ஏதாவது கேள்வி?"

"இயற்கை நிகழ்வுகள் மாற்றங்களே, தீமைகள் இல்லை.

அப்படியானால் தீமை என்ற சொல் எதைக் குறிக்கும்?"

..."சரியான கேள்வி. நாம் வாழும் உலகம் ஒரு சடப்பொருள். (material world.)

நமது உடல்கூட matter தான்.
அதனால்தான் அது வளர மண்ணிலிருந்து எடுக்கப்படும் பொருட்களே தேவைப்படுகின்றன.

சடப்பொருளில் நிகழ்வனவெல்லாம் மாற்றங்கள்தான்.

நமது உடல் வளர்வது மாற்றம்.

நோயினால் பாதிக்கப்படும்போது ஏற்டுவதும் மாற்றம்தான்.

சிலர் நினைப்பதுபோல் நோய் ஒரு தீமை அல்ல. ஒரு இயற்கை நிகழ்வுதான்.

நமக்கு உடல் மட்டுமல்ல ஆன்மாவும் இருக்கிறது.

புத்தி, மனது, அன்பு ஆகிய தத்துவங்கள் ஆன்மாவிற்கு உரியவை.

நமது ஆன்மாவிற்கு சிந்திக்க, தேர்வு செய்ய, செயல்புரிய முழு சுதந்திரம் இருக்கிறது.

ஆன்மா ஒரு ஆவி.

ஆன்மா உடலோடு இருக்கும்போது உடல் வாழ்கிறது.

ஆன்மா உடலோடு இருக்கும்போதும் வாழும்.உடலை விட்டுப் பிரிந்த பின்னும் வாழும்.

அதாவது  நமது மரணத்திற்குப் பின்னும் ஆன்மா உயிர்வாழும்.

சரியாகச் சொல்ல வேண்டுமானால் 'நாம்' என்ற சொல் நமது ஆன்மாவைத்தான் குறிக்கும்.

அதாவது நமது ஆன்மாதான் நாம். (உடல், நமது உடல்.)

ஆகையினால்தான் மரணத்திற்குப் பின்னும்,

அதாவது நமது உடலை விட்டுப் பிரிந்தபின்னும்,

உடல் மண்ணுக்குள் போனபின்னும்,

'நாம் வாழ்வோம்.'

நமது ஆன்மா உடன் இருக்கும் போது உடல் வாழும் வாழ்வு லௌகீக வாழ்வு.

நமது ஆன்மாவின் வாழ்வு ஆன்மீக வாழ்வு.(Spiritual life)

லௌகீக வாழ்வுக்கு துவக்கமும் உண்டு, முடிவும் உண்டு.

பிறப்பில் ஆரம்பித்து இறப்பில் முடிந்துவிடும்.

ஆன்மாவுக்கு துவக்கம் உண்டு, முடிவு இல்லை.

உடலை வாழவைப்பது ஆன்மா. ஆன்மா பிரியும்போது உடல் இறந்துவிடும்.

ஆன்மாவிற்கு வாழ்வு தருவது இறை உறவு. 

அதாவது  ஆன்மா இறைவனோடு சுமூக உறவில் இருக்கும்போது ஆன்மீக வாழ்வு இருக்கும்.

உறவு  அறுந்தால் ஆன்மீக வாழ்வு இல்லாமல் போய்விடும். 

ஆன்மா இருக்கும்,
ஆன்மீக வாழ்வு இருக்காது."

"அதெப்படி,  ஆன்மா இருக்கும் 
ஆன்மீக வாழ்வு இருக்காது?
கொஞ்சம் விளக்குங்கள்.''


..."ஆன்மாவுக்கு மரணம் கிடையாது.  

அது படைக்கப் பட்டது இறைவனோடு சுமூகமான உறவோடு வாழ்வதற்காகத்தான்.

உறவு அறுந்தால் வாழ்வும் அறுந்துவிடும்."


"அதாவது கணவவோடு உள்ள உறவை அறுத்துவிட்டு தாய்வீட்டிற்குப் போகிற பெண்ணை ' வாழாவெட்டி' என்கிறோமே, அதுமாதிரி, அப்படித்தானே? "

..."அப்படியேதான். Very good analogy. அவள் சாகவில்லை, அவளுடைய மணவாழ்வு செத்துவிட்டது.

இறைவனுக்கும், ஆன்மாவிற்கும் இடையே உள்ள உறவு அறுந்துபோகக் காரணமாய் இருப்பது ஆன்மா செய்கின்ற 'பாவம்.'

பாவத்தை மட்டும்தான் 'தீமை' என்கிறோம்.

ஆம். பாவம் மட்டும்தான் 'தீமை'.

நாம் எதற்காகப் படைக்கப் பட்டோமோ அதை அடைய விடாமல் தடுப்பதால் பாவம் தீமை.

இயற்கையில் ஏற்படும் மாற்றங்களுக்குக் காரணமாய் இருப்பது இறைவன்.

ஆனால் பாவத்திற்குக் காரணமாய் இருப்பது ,
மனிதன், மனிதன்  மட்டும்தான்."

"வாழாவெட்டியாய் இருப்பவள் அதற்காக வருந்தி, கணவனிடம் மன்னிப்புக் கேட்டால்

மணவாழ்வு திரும்பவும் கிடைத்துவிடுமே, 

அதுமாதிரி வசதி ஆன்மீகவாழ்வில் உண்டா?"

..."சரியாகச் சிந்திக்கிறீர்கள்.

பாவம் செய்தவன் அதற்காக வருந்தி, இறைவனிடம் மன்னிப்புக் கேட்டால் இறைவன் கட்டாயம் மன்னிப்பார்.

கிறிஸ்தவத்தில் பாவங்களுக்காக வருந்துவதோடு, குருவிடம் பாவசங்கீர்த்தனம் செய்யவேண்டும்.

பாவம் மன்னிக்கப்பட்டவுடன் ஆன்மீக வாழ்வு உயிர் பெற்று வளர ஆரம்பிக்கும்.

 இறைவனோடு ஆன்மாவிற்கு இருக்கும் நெருக்கத்தின் அளவைப் பொறுத்து நமது ஆன்மீகத்தின் அளவும் இருக்கும்.

உடலுக்கு உணவு வளர்ச்சியைக் கொடுப்பதுபோல,

 நம் ஆன்மீகத்திற்கு இறைவனுடைய அருள் வளர்ச்சியைக் கொடுக்கிறது.

ஆண்டவரது அருளால் அவரை நெருங்குகின்றோம்.

அவரை நெருங்க நெருங்க அவரது அருள் அதிகமாகக் கிடைக்கிது.

அருளின் அளவு அதிகமாக அதிகமாக நமது ஆன்மீக வளர்ச்சியும் அதிகமாகும்."

"கடவுளை நெருங்குதல் என்றால் என்ன?"

"சாதாரணமான நண்பர்கட்கும், நெருக்கமான நண்பர்கட்கும் என்ன வித்தியாசம்?"

"சாதாரணமான நண்பர்கள் பார்க்கும்போது wish பண்ணிக்கிடுவாங்க. முக்கியமான நிகழ்ச்சிகளில சந்திச்சிக்கிடுவாங்க.

நெருக்கமான நண்பர்கள் 
ஒருவர்மேல் ஒருவர் ரொம்ப பாசம் வச்சிருப்பாக. எப்பவும் ஒன்றாகத் திரிவாங்க. பார்க்க முடியாவிட்டால்கூட ஒருத்தரை ஒருவர் நினைச்சிக்கிட்டு இருப்பாங்க."

..."நெருக்கமான நண்பர்களிடையே உள்ள  அத்தனை குணங்களும் இறைவனோடு ரொம்ப நெருக்கமாக உள்ளவர்களிடம் இருக்கும்.

இறைவனை மிக அதிகமாக நேசிப்பார்கள்.

உள்ளத்தில் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

இடைவிடாது செபிப்பார்கள்.

இறைவனுக்காகச் செய்யும் எல்லா செயல்களும் செபமாக மாறிவிடுகின்றன.

என்ன வேலை செய்தாலும் அதை இறைவனின் மகிமைக்காகவே செய்வார்கள்.

எப்பவும் இறைவனின் சன்னிதானத்தில், இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வோடு வாழ்வார்கள்.


இடைவிடாமல் செபிப்பதால் இடைவிடாமல் அவர்களுக்குள ஆண்டவரின் அருள்மழை பொழிந்து கொண்டிருக்கும்.

ஆன்மீக வாழ்வு செழித்து வளர்ந்து கொண்டிருக்கும்.

முழுக்க முழுக்க இறைவனுக்காக வாழும் வாழ்வே இறைவனோடு நெருக்கமான வாழ்வு.

புரிகிறதா?"

"புரிகிறது.

என் பையன் வருகிறான்.
என்னடா?"

"அம்மா உங்கள வரச் சொன்னாங்க."

"என்னவாம்?"

"அத அம்மாட்ட வந்து கேளுங்க."

"மன்னிச்சிக்கிடுங்க ,வந்த வேலையை முடிக்காமல் போவற்கு. 

காலையில் வருகிறேன். 
அருள்மழை பற்றிபேசவேண்டும்."

..."வாங்க."

லூர்து செல்வம். 

Friday, October 18, 2019

நம்பாதவர்கள் கவனிக்கவும்.

நம்பாதவர்கள் கவனிக்கவும்.
------------------------------------------------

"மிஸ்டர், நில்லுங்க. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்."

"பேசுங்க. நிறையவே பேசுங்க. நிறைய பேசுறவங்கள எனக்கு ரொம்பப் பிடிக்கும்"

"நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். நீங்க கடவுள நம்புறவங்க."

..."கடவுள் நம்பிக்கை இல்லாதவங்கதான் கடவுளைப்பற்றி அதிகம் பேசறீஙங்க. 

இன்று கடவுளைப்பற்றி என்ன பேசப்போறீங்க?"


"நேற்று பக்கத்து ஊர்ல ஒரு மரத்துமேல இடிவிழுந்ததே, அதற்கு யார் காரணம்?"

..."கடவுள் இயற்கையைப் படைக்கும்போது அது இயங்க இயற்கை விதிகளைப் ( Laws of nature) படைத்தார்.

அந்த விதிகள்படிதான் இயற்கை இயங்கிக் கிட்டிருக்கு. இடி மட்டுல்ல, எல்லா இயற்கை நிகழ்வுகளும் அப்படித்தான் நடக்கின்றன."

"சுனாமியால் ஏற்படும் அழிவுகள்?"

..."எல்லா இயற்கை நிகழ்வுகளும் என்று கூறிவிட்டேன். ஒவ்வொன்றாய்க் கூறவேண்டுமா? "

"நான் கேட்பது அழிவுகளைப்பற்றி."

..."இயற்கையில் மாற்றங்கள் மட்டுமே நிகழும். மாற்றங்களை  உடன்பாட்டு(Positive) உணர்வோடு நோக்கினால் ஆக்கம்.

எதிர்மறை (Negative) உணர்வோடு 
நோக்கினால் அழிவு.

மலை உடைந்து பாறைகளாக மாறுகிறது.

பாறை உடைந்து கற்களாக மாறுகிறது.

கற்கள் தேய்ந்து கூழாங்கற்களாக மாறுகின்றன.

கூழாங்கற்கள் தேய்ந்து மணலாக மாறுகின்றன.

மலையை கடற்கரையிலுள்ள மணலாக மாற்றுவது ஆறுகள்.

உடைவதும், தேய்வதும் மாற்றங்கள்தான்.

மாறுவது Positive.

நீங்கள் உங்கள் பாணியில் பாறை அழிந்து மணலாயிற்று என்பீங்க. 
அழிவது Negative."

"ஹலோ! நீங்க பேசுவது தத்துவம். நான் பேசுவது  நடைமுறை.

சுனாமியால் எத்தனை பேர் செத்தார்கள் தெரியுமா?

நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்து எத்தனை பேர் உயிர் இழந்தார்கள் தெரியுமா?

கடவுள் இருந்தால் உலகில் இதுபோன்ற தீமைகளுக்கு இடம் கொடுத்திருப்பாரா?"

..."ஒரு சிறிய வேண்டுகோள். தங்களது பூந்தோட்டம் மிக அழகாக இருக்கும் என்று சொல்லி யிருக்கிறீர்கள்.
அங்கு போய் பேசுவோமா?"  

"எனது கவனத்தைக் கடவுளிடமிருந்து திசை திருப்புவதற்காக இப்படிக் கூறுகிறீர்கள். பரவாயில்லை.தோட்டத்திற்குப் போயே பேசுவோம்.

ஆனால் என் கேள்விக்குப் பதில் வரும்வரை விடமாட்டேன்."

..."பதில் தோட்டத்தில்தான் இருக்கிறது.

 ஒரு சின்ன சந்தேகம். அதை நிவர்த்தி செய்து தொடர்ந்து பேசுவோம்.

கடவுள் நம்பிக்கை அற்ற நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைவிட அதிகமாக கடவுளின் பெயரை உச்சரிக்கிறீர்கள் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?"

"பதில் தோட்டத்தில்தான் இருக்கிறது என்று சொன்னீர்ளே!

அதைப் பார்த்துவிட்டு இதற்குப் பதில் சொல்கிறேன்.

இதோ தோட்டத்திற்கு வந்து விட்டோம்."

..."தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டே பேசுவோம்.

உங்களிடம் உண்மையிலேயே அழகுணர்ச்சி இருக்கிறது.

அது தோட்டத்தின்மூலம்   வெளிப்படுகிறது."

"ரொம்ப நன்றி."

..."ஏன் ரோஜா செடிகளை மொட்டை அடித்து விட்டிருக்கிறீர்கள்? "

"மொட்டை அடிக்கவில்லை. trim பண்ணி விட்டிருக்கிறேன். மழை காலம் ஆரம்பிக்கும்போது இதைச் செய்ய வேண்டும். திரும்பவும் நன்கு தளிர்த்து நிறைய பூக்கள் பூக்கும்."

..."பழைய முற்றிய கிளைகளைக் வெட்டிவிட்டால் புதிய இளம் தளிர் செழித்து வளரும்! "

"ஆமா. வெட்டப்பட்ட கிளைகளை வேறிடத்தில் நட்டு வைத்திருக்கிறேன். அவையும் தளிர்த்து விட்டன."

..."மல்லிகைச் செடிகளில் பூக்களையே காணவில்லை? "

"அவற்றில் மொட்டுக்களையே பறித்து விடுவோம். அவற்றைக் கொண்டு மாலைகள் கட்டுவார்கள். அங்குதான் அவை மலரும்."

..."இந்த இடத்தில இருந்த பூஞ்செடிகளை எல்லாம் வெட்டிவிட்டது மாதிரி தெரியுது!"

"இந்த இடத்த பக்குவப்படுத்தி
 வேற செடிகள் நடணும்.
 சில மரங்களைக் கூட வெட்டிவிட்டோம், புது வித பூஞ்செடிகளை நடப்போகிறோம்."

..."அதாவது தோட்டத்தை இன்னும் அழகு படுத்தப்போறீங்க! ''

"ஆமா. நான் செய்கிற எல்லா வேலைகளுமே புதுசுபுதுசா பூஞ்செடிகளை வளர்க்கத்தான்.

உண்மையில பூந்தோட்டங்கிறது நிலப்பகுதி இல்லை, அங்கு வளரக்கூடிய பூஞ்செடிகள்தான்.

பூஞ்செடிகள் நல்லா வளரணுங்கிற நோக்கத்திலதான் நிலத்த வெட்டுகிறோம், கொத்துகிறோம்.

பூஞ்செடிகளைக்கூட Trim பண்ணிவிடுவோம்."

..."Very good. கடவுள் உண்மையிலேயே ஒரு சிறந்த தோட்டக்காரர்.

இந்த உலகம் அவர் பராமரித்து வரும் தோட்டடம்.

நாம் பூஞ்செடிகளில் மலரும் பூக்கள்."

"ஹலோ! என்ன இது. என் பூந்தோட்டத்தை பார்த்திட்டு கடவுளை ஏன் உள்ளே இழுக்கிறீங்க?

நான்தான் தோட்டக்காரன். கடவுளா?

என்னைக் Comment செய்யாமல், கடவுள உள்ள இழுக்கிறீங்க!

கடவுளா என் தோட்டத்தைப் பராமரிக்றார்?"

..."கொஞ்சம் பொறுங்க. நீங்கள் நல்ல தோட்டக்காரர்தான்.

இப்போ 
இந்த உலகத்தை கடவுள் பராமரித்து வரும் தோட்டடமாகக் கற்பனை  செய்து கொள்ளுங்கள்.

நம்மை அதில் வளரும் பூஞ்செடிகளாகவோ,  அவற்றில் மலரும் பூக்களாகவோ கற்பனை செய்து கொள்ளுங்கள்."

"ஹலோ! நான் கடவுளையே நம்பவில்லை. பிறகு எப்படி கற்பனை செய்து கொள்ளமுடியும்?"

..."'கடவுள் இருந்தால் உலகில்  தீமைகளுக்கு இடம் கொடுத்திருப்பாரா?' என்பதுதான் உங்கள் பிரச்சனை.

நீங்கள் கடவுளை ஒரு தோட்டக்காரராக கற்பனை செய்து கொண்டால், 
இயற்கை நிகழ்வு எதுவும் தீமை அல்ல, மாற்றங்கள்தான் என்பது புரியும்.

ஒரு ஐந்து நிமிடம் தருகிறேன்.
கொஞ்சம் சிந்தியுங்கள்.
உங்கள் தோட்டத்தையும் உலகமாகாகிய தோட்டத்தையும்

நீங்கள் தோட்டத்தைக் கவனிப்பதையும், உலகத்தைக்
கடவுள் கவனிப்பதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்."

(ஐந்து நிமிடம் கழித்து)

"ஒப்பிட்டுப் பார்த்தேன்.
கொஞ்சம் புறியறது மாதிரி தெரியுது.

புரிந்ததைச் சொல்றேன்.

நான் எனது தோட்டத்தைத் தொடர்ந்து அழகாக வைப்பதற்காக அப்பப்போ சில மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறேன்.

ரோசாச் செடிகளை Trim பண்ணிவிடுவது செடிகளைக் காயப் படுத்துவதற்கோ, வெட்டி அழிப்பதற்கோ அல்ல.

செடி நன்கு தளிர்த்து, நிறைய பூத்து, மேலும் அழகாகக் காட்சியளிப்பதற்காகத்தான்.

மல்லிகை மலர்களை மொட்டாக இருக்கும்போது பறிப்பது, அவைச் செல்லவிருக்கும் மாலைகளில் விரிந்து, மாலைகள் அழகாக இருப்பதற்காகத்தான்.

செடிளிலேயே மலரவிட்டால் அவற்றிலேயே வாடிக் கீழே விழும்.

திருமண ஜோடிகளையும் அலங்கரிக்காது, மற்ற பெண்களின் தலைகளையும் அலங்கரிக்காது.

மரங்களை வெட்டியது அவற்றை அவற்றை அழிப்பதற்காக அல்ல.

வெட்டப்பட்ட மரங்கள் நான் கட்டிய புதிய வீட்டின் நிலைகளாகவும், சன்னல்களாகவும்,மேசை நாற்காலிகளாகவும் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக வேறு மரக்கன்றுகளை நட்டிருக்கிறேன்.

பழைய பூஞ்செடிகளை அகற்றி யிருப்பது புதிய செடிகளை நடுவதற்காகத்தான்.

ஆக, தோட்டக்காரன் என்ற முறையில் 

எனது தோட்டத்தில் அழிவு வேலை எதுவும் செய்யவில்லை. 

ஆக்க வேலைகள்தான் செய்திருக்கிறேன்,

 தோட்டத்தை மேலும் மேலும் அழகு படுத்துவதற்காக.

உலகைத் தோட்டமாகவும், கடவுளைத் தோட்டக்காரனாகவும் கற்பனை செய்து பார்த்தால்

இயற்கை நிகழ்வுகள் அழிவு வேலைகள் அல்ல, 

இறைவன் செய்து கொண்டுவரும் ஆக்க வேலைகளே என்பது புரிகிறது."

..."Very good. அப்போ, கடவுளை ஏற்றுக் கொள்கிறாய்!"

"ஏற்றுக் கொள்ளலாம் போல்தான் தெரிகிறது.

ஆனாலும் இன்னும் சில விசயங்கள் புரியவில்லை."

..."இயற்கை நிகழ்வுகளின்போது மனிதர்கள் மரணிப்பது, சூழ்நிலை மாசுபடுவது போன்ற விசயங்கள், சரியா?"

"Correct. மனிதர்கள் வாழத்தானே உலகம், ஏன் அழிகிறார்கள்?

தமிழ்நாட்டில் சுனாமி ஏற்பட்டபோது ஏற்பட்ட மரணங்கள் பற்றிதான் உங்களுக்குத் தெரியுமே."

..."நமது புத்தியின் உதவி கொண்டு இறைவன் இருக்கிறார் என்பதை மட்டும் அறியலாம்.

காரணம் இல்லாமல் காரியம் இல்லை (No effect without cause) என்பது புத்திக்குத் தெரியும்.

மாறாத இயற்கை விதிகளின்படி 

சதா மாறிக் கொண்டும், இயங்கிக் கொண்டிருக்கும் உலகம்

 தன்னைத்தானே உண்டாக்கி யிருக்க முடியாது என்றும் நமது புத்திக்குத் தெரியும்.

உலகின் மேல் வாழும் மனிதனுக்கு மட்டும்தான் புத்தி இருக்கிறது,

மண்ணுக்குப் புத்தி இல்லை என்பதும் நமது புத்திக்குத் தெரியும்.

நாம் பிறந்து வளர்ந்த பிறகே நமக்கு புத்தி இருக்கிறது என்று,

 நமது புத்தி சொன்ன பிறகுதான் நமக்கே தெரியும்.

 புத்தியே இல்லாத சடப் பொருள் தன்னைத் தானே படைத்திருக்க முடியாது என்றும்,

நம்மை நாமே படைக்கவில்லை என்பதும் நமது புத்திக்குத் தெரியும்.

ஆகவே அனைத்துக்கும் ஒரு ஆதி காரணர் இருக்கிறார் என்றும் நமது புத்திக்குத் தெரியும்.

அவர் நமது புத்திக்கு எட்டாதவர் என்றும் நமது புத்திக்குத் தெரியும்."

"புத்திக்கு எட்டாதவரைப் பற்றி எப்படி அறிவது?"

..."இப்போது கடவுள் இருகிறார் என்பதை விசுவசிக்கிறீர்களா?"

"விசுவசிக்கிறீர்களா என்றால்?"

..."எப்போதாவது கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?"

"இல்லை."   

..."இப்போது உங்கள் தோட்டத்தையும், உலகையும் ஒப்பிட்டுப் பேசியபின் 

அவர் இருக்கிறார் என்பதை நம்பணும்போல் இருக்கிறதல்லாவா?"

"கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். இப்போது கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்."

..." Very good.  நீங்கள் விசுவசிக்க ஆரம்பித்து விட்டீர்கள்.

You have entered Faith. But it is not enough. You must go deep into it."

"விசுவாசம் பற்றி விளக்க முடியுமா?''

..."உங்களைப் படைத்த கடவுள் உங்களுடன்தான் இருக்கிறார்.

 உங்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

உங்கள் வாழ்வில் என்ன நடந்தாலும் அவருடைய அனுமதியோடு, உங்கள் நன்மைக்காகவே நடக்கும்.  

இந்தக் கருத்துக்களை மையமாக வைத்து ஒரு இரண்டு நாட்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிந்தியுங்கள்.

மனதில் ஒரு தெளிவு பிறக்கும்.

அப்புறம் சந்தித்து விசுவாசம் பற்றி பேசுவோம்.

மக்களுடைய மரணம், வேதனை, தீமை ஆகியவை பற்றியும் பேசுவோம்.."

லூர்து செல்வம்.

Tuesday, October 15, 2019

நோக்கத்திலேயே குறியாய் இருப்போம்.

நோக்கத்திலேயே குறியாய் இருப்போம்.
****    ****    ****    ****    ****
மீன் பிடிக்கப் படகில போகிற மீனவனுக்கு மீன்தான் குறியாக இருக்க வேண்டும்.

"ஐயோ கடல் ரொம்ப ஆழமாச்சே, படகு கவுந்தா என்ன ஆகிறது"ன்னு பயந்தா மீன் பிடிக்க முடியாது.

தேர்வுக்குத் தயாரிப்பவன் படித்த பாடங்களை திருப்பிப் பார்ப்பதில் குறியாய் இருக்க வேண்டும்.

"ஐயோ! படிப்பதெல்லாம் மறந்து போனால் என்ன செய்வேன்?" 

என்று பயந்து செத்தால் தேர்வுக்குத் தயாரிக்க முடியாது.

ஆன்மீக வாழ்விலும் அப்படித்தான்.

ஆன்மீகத்தின் நோக்கம் விண்ணக வாழ்வு.

விசுவசிப்பவன் 'கடவுள் நம்மை உறுதியாக மீட்பார், நாம் விண்ணகம் செல்வது உறுதி' என்று உறுதியாக நம்ப வேண்டும்.

வேறு எதையும் பற்றிக் கவலைப் படாமல்,

மீட்புக்கு வழியான அன்பிலும், நற்செயல்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

நமது வாழ்வின் நோக்கம் விண்ணகம். 

வழி அன்பு.

அன்பு வழியில் நடந்தால் விண்ணகம் உறுதி.

இதை மட்டும்  மனதில் வைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும்.

அதை விடுத்துவிட்டு 

"ஐயோ! சோதனைகள் வருமே!  செயிப்பேனா? தோற்றால் என்ன செய்வேன்? விண்ணகம் போவேனா?"

என்று கவலை மட்டும் பட்டுக் கொண்டிருந்தால் நம்பிக்கை போய்விடும்.

லௌகீக வாழ்வாக இருந்தாலும்  சரி, 

ஆன்மீக வாழ்வாக இருந்தாலும்சரி

ஆயிரம் பிரச்சனைகள் வரும்.

"தந்தையே! எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்,"

என்று நம்பிக்கையுடன் பிரச்சனைகளை அவர் கையில் ஒப்புவித்துவிட்டு,

நிம்மதியுடன் நம் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைத் தன் தாயின் மடியில் படுத்திருக்கும்போது எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாகத் தூங்கும்.

ஏனெனில் அதற்குத் தன் தாயின் மேல் அவ்வளவு நம்பிக்கை.

எங்கும் இருக்கும் இருக்கும் இறைவன் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார், 

நமக்குள்ளும் இருக்கிறார்,

 நாம் அவருக்குள்தான் இருக்கிறோம் என்ற உறுதியான நம்பிக்கை நம்மிடம் இருந்தால்

தாய்மடியில் தூங்கும் குழந்தையைப்போல நாம் எவ்வித கவலையும், பயமும்  இன்றி வாழ்வோம்.

அவரைத் தாண்டி எதுவும் நம்மிடம் வர இயலாது.

எதுவும் வந்தாலும் அவரது அனுமதியுடன் 

நமது நன்மைக்காகவே வரும்.

இது சொல்வதற்கும், கேட்பதற்கும் இனிமையாக இருக்கிறது,

நடைமுறையில் பிரச்சனைகள், சிக்கல்கள் வந்தால் எப்படி கவலைப் படாமல் இருக்க முடியும்?

உதாரணத்திற்கு டாக்டரைத் தவிர்க்க முடியாத அளவிற்கு நோய் வந்திருக்கிறது.

வைத்தியம் பார்க்கப் பணமில்லை.

எப்படிக் கவலைப் படாமல் இருக்க முடியும்?


நோய்கள் மட்டுமல்ல, தோல்விகள், எதிர்ப்புகள்,இயலாமைகள் போன்றவற்றை 

பிரச்சனைகள் என்று நினைப்பதுதான் பெரிய 
பிரச்சனை.

உண்மையில் உலகியல் வாழ்வில் பிரச்சனைகள் இருக்கலாம்.

ஆனால் ஆன்மீக வாழ்வில்
பிரச்சனைகளே கிடையாது.


நோய் ஒரு பிரச்சனையா?

நமது விசுவாசப் பற்றாக்குறை காரணமாக, 

ஆண்டவருடைய ஆசீர்வாதங்களைக்கூட

 பிரச்சனைகளாக்கி,

 தேவையில்லாமல் வாழ்க்கையை 

கவலைக் கிடங்காக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு ஆழமான விசுவாசம் இருந்தால்,

விண்ணக வாழ்விற்காகவே நம்மைப் படைத்த கடவுள்

அதற்கான பாதையில் நம்மைத் தன் பராமரிப்பின் மூலம் வழி நடத்துகிறார் என்பதை ஏற்றுக் கொள்வோம்.

இறைவனின் பராமரிப்பை ஏற்றுக்கொண்டால் அவரது வழிமுறைகளையும் ஏற்றுக் கொள்வோம்.

துன்பங்கள் (Sufferings) எந்த வடிவத்தில் வந்தாலும், அது நமது இரட்சண்யத்திற்காக இறைவன் பயன்படுத்தும் ஆயுதம்.

கட்டித் தங்கத்தை நகையாக மாற்ற,  அதை உருக்க நெருப்பு ஒரு ஆயுதமாகப் பயன்படுகிறதோ,

அதேபோல உலகவாசியை விண்ணகவாசியாக மாற்ற 
துன்பங்கள் (Sufferings) பயன்படுகிறது.

இயேசு  நமது மீட்பிற்காக சிலுவை மரணமாகிய துன்பத்தை ஏற்றுக்கொண்டதால் 

நமது மீட்பிற்காக நாம் ஏற்கும் துன்பம் சிலுவை ஆகிறது.

நாம் சிலுவையைச் சுமக்கும்போது இயேசுவைப் போலாகிறோம்.

உலகக் கண்ணோக்கில் பார்த்தால் நோய் துன்பம் மட்டும்தான்.

விசுவாசக் கண்ணோக்கில் நோய் ஒரு சிலுவை.

நமக்கு சிலுவை வெற்றியின் சின்னம்.

கசப்பான மருந்தைத் தேனோடு கலந்து சாப்பிட்டால் இனிப்பாக மாறிவிடுவதுபோல்

துன்ப வேதனையை விசுவாசத்தோடு அனுபவித்தால் 

அது நிலை வாழ்வு பெறுவதற்கான ஆசீர்வாதமாக (Blessing) மாறிவிடுகிறது.

வாழ்வின் நோக்கம்  விண்ணக வாழ்வு மட்டும்தான்.

அதைமட்டும்தான் குறிக்கோளாய்க் கொண்டு வாழவேண்டும்.

அப்படியானால் நோய்க்கு வைத்தியம் பார்க்க வேண்டாமா?

பசிக்கும்போது சாப்பிடுவதுபோல,

தாகமாய் இருக்கும்போது நீர் அருந்துவதுபோல,

அழுக்குப் பட்டால் துடைப்பதுபோல

நோய் வந்தால் வைத்தியம் பார்ப்பதும் இருக்கவேண்டும்.

அதைப்பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கக்கூடாது.

நோயை ஒரு தீமையாய்க் கருதாமல்

 ஆண்டவரின்ஆசீரைச் சம்பாதிக்க வல்ல கருவியாய்க் கருதவேண்டும்.

நோய் குணமானாலும் நன்றி கூறவேண்டும்.

குணமாகாவிட்டாலும் 
நன்றி கூறவேண்டும்.

விண்ணக நோக்கத்தில் மட்டுதான் குறியாக இருக்க வேண்டும்.

அநித்திய துன்ப வாழ்வுக்குப் பரிசாக

 ஆண்டவர் நமக்கு நித்திய பேரின்ப வாழ்வைத் தருவார்.

லூர்து செல்வம். 

Monday, October 14, 2019

எவனும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ, மரக்காலின் கீழோ வைப்பதில்லை.  (லூக்11:33)

எவனும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ, மரக்காலின் கீழோ வைப்பதில்லை. 
(லூக்11:33)
-------------         ------------      -----------

"செயல்கள் இல்லாத விசுவாசம் செத்த விசுவாசம்."

மீட்பு பெற விசுவாசம் வேண்டும்.

விசுவாசம்தான் ஞான வாழ்வின் உயிர்.

ஆனால் உயிர்மட்டும் இருந்தால் போதுமா?

உயிர் உள்ள ஒருவன் நாள் முழுவதும் ஆடாமல், அசையாமல் படுத்திருந்தால்

அவனால் அவனுக்கும் பயனில்லை, மற்றவர்கட்கும் பயனில்லை.

அதேபோல்தான் நமது ஆன்மீக வாழ்விலும் நற்செயல்கள் இல்லாவிட்டால் விசுவாசத்தால் பயனில்லை.

"தன்னிடம் விசுவாசம் உண்டு எனச் சொல்லுகிறவன் செயலில் அதைக் காட்டாவிட்டால் அதனால் பயன் என்ன? அந்த விசுவாசம் அவனை மீட்க முடியுமா?"
(யாகப்.2:14)

நற்செயல் என்றால் என்ன?

இறைவனுக்காக, இறைவனது மகிமைக்காகச் செய்யப்படும் செயல்  நற்செயல்.

அதாவது, சுயபெருமைக்காக செய்யப்படும் செயலால் ஆன்மீகரீதியாக எந்தப் பயனும் இல்லை.

"மனிதர் பார்க்க வேண்டுமென்று உங்கள் நற்செயல்களை அவர்கள் முன் காட்டிக்கொள்ளாதபடி கவனமாயிருங்கள்."
(மத்.6:1)

"நீ பிச்சையிடும்பொழுது, மக்கள் புகழ வேண்டுமென்று வெளிவேடக்காரர் செபக்கூடங்களிலும் தெருக்களிலும் செய்வதுபோல், உனக்குமுன் பறைசாற்றச் செய்யாதே."   (மத்.6:2)

ஒரே செயலை ஆண்டவருக்காகச் செய்தால்
அது நற்செயல்.

நமது மகிமைக்காகச் செய்தால் அது வெறுஞ்செயல்.

நோக்கம் (Intention) செயலின் தன்மையைத் தலைகீழாக மாற்றிவிடும்.

இறைவனது மகிமைக்காகச் செய்யப்படும் செயல் இருவகைப்படும்.

1.இறைவன் மட்டும் பார்க்கும்படி செய்யும் செயல்.

நீ பிச்சையிடும்பொழுதோ, உன் வலக்கை செய்வதை இடக்கை அறியாதிருக்கட்டும். அப்பொழுது,

4 நீ இடும் பிச்சை மறைவாயிருக்கும்: மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்.

5 "நீங்கள் செபம் செய்யும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம்:

ஏனெனில், மனிதர் பார்க்கும்படி, அவர்கள் செபக்கூடங்களிலும் தெருக்கோடிகளிலும் நின்று செபம் செய்ய விரும்புவர்.

அவர்கள் தங்கள் கைம்மாறு பெற்றுவிட்டனர் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

6 நீயோ செபம் செய்யும்பொழுது,

உன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு,

மறைவாயுள்ள உன் தந்தையை நோக்கிச் செபம் செய்.

மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்..(மத்.6:3-6)

2.இறைவனை அறியாதவர்களும் அறியச் செய்யும் செயல்.

இயேசுவின் நற்செய்தியை செயல்முறையாக (Practically)
போதிக்கும் செயல்.

நற்செய்தியை வார்த்தைகள் மூலம் வாய்வழியாக அறிவிப்பது வாய்வழி நற்செய்தி.

(Verbal Evangelisation).

நற்செய்தியை வாழ்ந்து, வாழ்க்கைமூலம், செயல் மூலம், அறிவிப்பது செயல்வழி நற்செய்தி.

(Practical Evangelisation)

"எவனும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ, மரக்காலின் கீழோ வைப்பதில்லை."
(லூக்11:33)

"மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு,

வானகத்திலுள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்தும்படி,

உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக."
(மத்.5:16)

நமது மறைவாழ்வு (திருமறைவாழ்வு)

மறைவாழ்வாக(மறைவான வாழ்வாக)

இருக்கக்கூடாது.

மற்றவர்கள் நம்வாழ்வில் நற்செய்தியின் பிரதிபலிப்பைக் காணும்படி நாம் முன்மாதிரிகையாக வாழ வேண்டும்.

இறையன்பு, பிற அன்பு, மன்னிப்பு, கருணை உள்ளிட்ட அனைத்து நற்செய்திப் பண்புகளும் நமது  வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்.

நமது வாழ்வு செயல்முறை பைபிள் ஆக(Bible in action) விளங்க வேண்டும்.

நம்மைக் கிறிஸ்துஅவராகப் பார்ப்போர் இயேசுவின்பால் ஈர்க்கப்பட்டு மனந்திரும்ப வேண்டும்.

முக்கியமாகக் கவனிக்கவேண்டியது

நமது வாழ்வில் தற்புகழ்ச்சிக்கோ,
சுய விளம்பரத்திற்கோ துளிகூட இடம் கொடுத்துவிடக் கூடாது.

எல்லாம் இறைவனின் அதிமிக மகிமைக்கே!

வாழ்வோம், வாழவைப்போம், இறைவனுக்காக.

லூர்து செல்வம்.

Sunday, October 13, 2019

"பத்துப்பேரும் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?" (லூக்.17:17)

"பத்துப்பேரும் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?"
(லூக்.17:17)
--------------------------------------------------

"குருவே, இயேசுவே, எங்கள்மேல் இரக்கமாயிரும்."

என்று செபித்து இயேசுவின் உதவியைக் கேட்டவர்கள் பத்து பேர்.

பத்து பேர் பேரிலும் அவர் இரக்கமாயிருந்தார்.

பத்து பேரும் குணமானார்கள்.

ஆனால் நன்றி கூற ஒருவன்தான் வந்தான்.

மீதி ஒன்பதுபேர் எங்கே என்று இயேசு கேட்டார்.

ஏன் இந்தக் கேள்வி?

நன்றி கூறுவதால் அவருக்கு ஏதாவது கிடைக்குமென்றா?

அவர் நிறைவானவர்.

நித்திய காலமாக நிறைவானவர்.

அவர் அன்பு செய்யக்கூட இன்னொருவர் தேவையில்லை.

ஏனெனில் அவர்தான் அன்பு.

He is Love.

நித்திய காலமாக பூரணமாக அன்பு செய்வதற்காகத்தான் ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கிறார்.

ஆனாலும் அன்பு செய்வதெற்கென்றே மனுக்குலத்தைப் படைத்தார்.

மொத்தமாகச் சொல்வதைவிட நம் ஒவ்வொருவரையும் படைத்தார் என்று கூறுவதே சரியானது.

ஏனெனில் நம் ஒவ்வொருவர் மேலும் முழுமையான தனிக்கவனம் செலுத்துகிறார்.

நாம் முழுமையும் நல்லவர்களாக இருக்க வேடுமென்று இயேசு விரும்புகிறார்.

நன்றி உணர்வுதான் ஒருவனை முழு மனிதனாக்கும்.

மிருகங்களிடம்கூட அந்த உணர்வு இருக்கிறது.

நம்மிடம் அது இல்லாவிட்டால்
நாம் மிருகங்களை விடத் தாழ்ந்துவிடுவோம்.

ஒன்று மில்லாமை யிலிருந்து
நம்மை உண்டாக்கிக்
காப்பாற்றி வருவதற்காக என்றாவது நன்றி கூறியிருக்கிறோமா?

இதே கேள்வியை நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.

"நான் படுகிற கஸ்டங்களை நினைக்கும்போது கடவுள் என்னைப் படைக்காமல் இருந்திருக்கலாம் போலிருக்கிறது." என்றார்.

இவரைப் போன்றோர் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இவர்கள் தங்களுக்குக் கஸ்டங்களை அனுமதிக்கும் கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வது என்று எண்ணுகிறார்கள்.

ஒருமுறை என் பிள்ளைகளிடம்
Picnic போய்வரலாமா என்றேன்.

மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்கள்.

குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்றோம்.

பேருந்தில் பிரயாணம் செய்து மலை அடிவாரத்தில் இறங்கினோம்.

"இனிமேல் கொஞ்சம் நடக்கவேண்டும்" என்றேன்.

"எவ்வளவு தூரம்?" .

"கொஞ்ச தூரம்தான்."

நடக்க ஆரம்பித்தோம், மலை அடிவாரத்திலிருந்து மேல்நோக்கி!

மலை மேல் ஏற ஆரம்பித்தவுடன் பிள்ளைகளின் முகம் மாறிவிட்டது.

"அப்பா, என்ன இது? நடப்போம் என்று கூறிவிட்டு ஏற ஆரம்பித்து விட்டீர்கள்! "

"கொஞ்ச நேரம்தான்."

மலைமேல் ஏறஏற முணுமுணுத்துக் கொண்டே வந்தார்கள்.

அவர்கள் முகத்தில் Picnic போகிற சந்தோசமே இல்லை.

என் மனைவி அவர்களை ஊக்கப்படுத்திப் பார்த்தாள்.

"போங்கம்மா. அப்பா எங்களை ஏமாற்றிவிட்டார்கள்.

Picnic என்று ஆசை காட்டிவிட்டு
மலை மேலே ஏறவைத்து விட்டார்கள்.

இப்படித் தெரிஞ்சிருந்தா Picnic வரச் சம்மதிச்சிருக்கவே  மாட்டோம்."    

"கொஞ்ச நேரம்தானே. அப்பா உங்களுக்காகத்தானே இந்த Picnicஐ ஏற்பாடு செய்திருக்கிறார்."

"எங்களுக்காகத்தான் இவ்வளவு கஸ்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்! நாங்களா கேட்டோம். அவர்தான்,

"Picnic போய்வரலாமா" என்றார்.

ஏமாந்தது நாங்கள்! "

முணங்கிக் கொண்டே ஏறினார்கள்.

முக்கால் மணி நேரம் ஏறியபின் Picnic Spot க்கு வந்து சேர்ந்தோம்.

அது மலைமேலே சம தளத்தில் அமைந்திருந்த ஒரு  Estate.

இயற்கை அழகோடு கூடிய ஒரு  பழத்தோட்டம்.

எல்லா வகையான பழ மரங்களும்,

கண்ணுக்கு ரம்மியமான பலவகை பூஞ்செடிகளும்,

குளிப்பதற்கு வசதியாக நீரோடை ஒன்றும் அமைந்த சமதளமான ஒரு அழகான எஸ்டேட்.

பிள்ளைகளுக்கு ரொம்ப சந்தோசம்! 

ஓடி ஆடி விளையாட ஆரம்பித்தார்கள்.

"ரொம்ப நல்லா இருக்கப்பா!

இவ்வளவு அழகான ஒரு இடத்தைப் பார்த்ததே இல்லை!

ரொம்ப நன்றிப்பா!

ஏறிவந்த கஸ்டமெல்லாம் மறந்தே போச்சி!

அவ்வளவு கஸ்டப் பட்டிருக்கா விட்டால் இவ்வளவு அழகான இடத்திற்கு வந்திருக்க முடியாது!

மோட்சத்திற்கு வந்தது மாதிரி இருக்கு!"

இதே மாதிரிதான்  வாழ்க்கையின் கஸ்டங்களும்.

கடவுள் நாம் கஸ்டப்பட வேண்டுமென்று நம்மைப் படைக்கவில்லை.

கஸ்டங்களைத் தாண்டிச் சென்று

முடிவில்லாத காலம் தன்னோடு பேரின்பமாக வாழவேண்டும்

என்பதற்காகத்தான் படைத்தார்.

நித்திய பேரின்பத்தோடு ஒப்பிடும்போது தற்காலிகமான கஸ்டகாலம் ஒன்றுமேயில்லை!

முடிவில்லா பேரின்ப வாழ்வுக்காக நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றிகூற வேண்டாமா?

படைத்தது மட்டுமல்ல இடைவிடாது கண்காணித்து வழிநடத்தியும் வருகிறார்.

தமது பராமரிப்பினால் நம்மைக் காப்பாற்றி வருகிறார்.

ஒவ்வொரு வினாடியும் நம்மோடு இருந்து, நாம் வழி தவறிவிடாமல் பாதுகாத்துவரும் கடவுளுக்கு

நாம் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டாமா?

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நன்றி கூறுவோம்.

இறைவன் பராமரிப்பில் என்ன நேர்ந்தாலும் நமது நன்மைக்கே.

ஆகவே என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.

லூர்து செல்வம்.