"ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்."
***********--*****************
"ஏங்க, சிக்கலான கேள்வி கேட்டா பதில் சொல்லுவீங்களா?
"நீ சொல்லுறதப் பார்த்தா நீயே ஒரு சாதாரணக் கேள்வியை, உட்கார்ந்து கஸ்டப்பட்டு சிக்கலாக்கியிருக்கிறதுபோல் தெரிகிறது.
சரி கேளு, தெரிஞ்சா பதில் சொல்லப்போறேன்."
"தெரியாட்டா?"
"தெரியாவிட்டாலும் பதில் சொல்லுவேன், தெரியாதுன்னு."
"எப்போதாவது தந்தையாகிய கடவுளை உங்கள் ஊனக் கண்ணால் பார்த்திருக்கிறீர்களா?"
"இதுதான் சிக்கலான கேள்வியா?
எப்போதாது இல்லை, தினமும் பார்க்கிறேனே! தந்தையை மட்டுமா, பரிசுத்த ஆவியையும் பார்க்கிறேனே!"
"அதெப்படீங்க முடியும்? உங்களது கண் சடப் பொருள், ஊனக்கண், கடவுள் ஆவி.
ஊனக்கண்ணால் ஆவியை எப்படீங்க பார்க்க முடியும்?"
"இந்தக் கேள்விய நீ முதல் முதல்ல கேட்கல.
பிலிப்பு கேள்வியக் கொஞ்சம் மாற்றி,
"ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்."
என்றார்.
நீ 'நீங்கள் பார்த்தீங்களான்னு' கேட்ட.
பிலிப்பு 'நாங்கள் பார்க்கணும், காட்டும்'னு கேட்கிறார்.
ஆண்டவருடைய பதில் இருவருக்கும் பொருந்தும்.
ஆண்டவர் சொன்னார்,
"என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான்.
........நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறதாக நீ விசுவசிக்கிறதில்லையா ?
(அரு.14:9,10)
அதாவது,
'நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதால், என்னைக் காண்கின்றவன், என் தந்தையைக் காண்கிறான்' என்கிறார்.
தந்தை, மகன், பரிசுத்த ஆவி மூன்று ஆட்களும் ஒரே கடவுள்.
இயேசு கடவுள்.
ஆகவே, இயேசுவைப் பார்க்கும்போது கடவுளைத்தான் பார்க்கிறோம்.
கடவுள் ஒருவர்தான்.
ஒருவர்தான் மூன்று ஆட்களாய் இருக்கிறார்.
இயேசு இரண்டாம் ஆள்.
இரண்டாம்ஆள் முதல் ஆளுக்குள் இருக்கிறார்.
முதல் ஆள் இரண்டாம் ஆளுக்குள் இருக்கிறார்.
( நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறதாக நீ விசுவசிக்கிறதில்லையா?)
ஆகவே இரண்டாம் ஆளாகிய இறைமகனைப் பார்க்கும்போது முதல் ஆளாகிய தந்தையையும் பார்க்கிறோம்.
புரிகிறதா?"
"நீங்கள் சொல்வது இயேசுவோடு வாழ்ந்தவர்கட்குப் பொருந்தும்.
இயேசு விண்ணகம் எய்தி 1986 ஆண்டுகளுக்குப்பின் வாழும் நமக்கு எப்படிப் பொருந்தும்? "
"ஆண்டருடைய செம்மறிக்குட்டி' யார்?"
"இயேசு."
"இதோ 'ஆண்டருடைய செம்மறிக்குட்டி' என்கிற வாக்கியத்தை எங்காவது கேள்விப்பட்டிருக்கியா?"
"இதென்ன கேள்வி?
ஒவ்வொரு நாளும் திருவிருந்துக்கு முன் குருவானவர்
இயேசுவைக் கையில் எடுத்து இதோ 'ஆண்டருடைய செம்மறிக்குட்டி' என்கிறார்.
இதுகூடத் தெரியாத மடச்சியா நான்?"
அப்போ தினமும் நீ இயேசுவைப் பார்க்கிற! "
"பார்க்கிறது மட்டுமல்ல, அவரைத்தானே ஆன்மீக உணவாக தினமும் உண்கிறேன்!"
"அப்போ நீ தினமும் இயேசுவைப் பார்க்கிற."
"ஆமா."!
"அப்போ தந்தை இறைவனையும் பார்க்கிற!"
"ஆனால் சீடர்கள் பார்த்தது மாதிரி பார்க்கலிய. அப்பரசக் குணங்களுக்குள் இயேசுவைப் பார்க்கிறேன்."
"அப்பரசக் குணங்களுக்குள் இருப்பது
சீடர்கள் பார்த்த அதே இயேசுதான்.
நமக்காக பாடுபட்டு, சிலுவையில் தன்னையே பலியாக்கிய அதே இயேசுதான்.
மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த அதே இயேசுதான்.
நடுப்பூசை எழுந்தேற்றத்தின்போது
குருவானவர் தன் திருக் கரங்களால் உயர்த்திப்பிடிப்பது அப்பத்தை அல்ல,
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத்தான்.
அவரைப் பார்க்கும்போது தந்தை இறைவனையும் பார்க்கின்றோம்."
"பரிசுத்த தம திரித்துவத்தின் தேவரகசியத்தை நாம்
புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே
இயேசு
"என்னைக் காண்கின்றவன், என் தந்தையைக் காண்கிறான்' என்று சொன்னார்.
இன்னொரு மிக முக்கியமான பாய்ண்ட்.
நமக்கு இரண்டு வகையான கண்கள் உள்ளன.
ஒரு வகை நமது உடலில் உள்ள ஊனக்கண்.
இன்னொரு வகை நமது ஆன்மாவிலுள்ள விசுவாசக்கண்.
நமது ஊனக்கண்ணால் அப்ப, ரசக் குணங்களை மட்டும்தான் பார்க்க முடியும்.
விசுவாசக் கண்ணால் மட்டுமே இயேசுவையும், தந்தையையும் காணமுடியும்.
அதனால்தான் இயேசு,
"நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறதாக நீ விசுவசிக்கிறதில்லையா?"
என்றார்.
"கரெக்ட். வேறு ஏதாவது சிக்கல் இருக்கிறதா? "
"மே தினப் பிரசசங்கத்தில் சாமியார் ஒரு கேள்வி கேட்டார்.
உழைப்பு ஒரு சாபமா? ஒரு வரமா? "
"அதற்குதான் சாமியாரே பதிலை விளக்கிவிட்டாரே."
"உங்களுக்கு ஒரு Test, நீங்கள் பிரசங்கத்தைக் கவனித்தீர்களா என்பதைக் கண்டறிய."
"அறிந்து? "
"Test ல் pass செய்தால்தான் Evening Tea."
"சரி.கேளு."
"உழைப்பை சாபம் என்று அழைக்கலாமா? "
"ஆதாம் பாவம் செய்ததால் கடவுள் ஆதாமை நோக்கி,
"வேண்டாமென்று நாம் விலக்கியிருந்த மரத்தின் கனியைத் தின்றதினாலே
உன் பொருட்டு பூமி சபிக்கப்பட்டிருக்கும்:
நீ உழைத்துத் தான் உன் வாழ்நாளெல்லாம் அதன்" பலனை உண்பாய்."
என்றார்
இவ்வசனத்தில் கடவுள் ஆதாமை சபிக்கவில்லை.
"உன் பொருட்டு பூமி சபிக்கப்பட்டிருக்கும்: "
என்றார்!
சபிக்கப்பட்டிருக்கும் பூமியிலிருந்து பலனைப்பெற ஆதாம் கஸ்டப்பட்டு உழைக்கவேண்டியதாயிற்று.
கடவுள் ஆதாமை சபிக்காவிட்டாலும்,
அவன் பொருட்டுதான் அவன் வாழ்ந்த பூமியைச் சபித்தார்.
பூமி சபிக்கப்பட்டதன் விளைவுதான் உழைப்பு.
பாவத்தின் காரணமாகவே பூமி சபிக்கப்பட்டதால்,
துன்பத்தையும், மரணத்தையும்போல
உழைப்பையும் பாவத்தின் விளைவு என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்."
"மார்க் கடைசியில் போடுகிறேன்.
அடுத்த கேள்வி. உழைப்பை வரம் எனலாமா?"
"தாராளமாக.
எப்படி இயேசு தன் பாடுகளாலும், மரணத்தாலும், உயிர்ப்பாலும் துன்பத்தையும், மரணத்தையும் ஆசீர்வாதங்களாக மாற்றினாரோ,
அதேபோல் கடினமான உழைப்பையும் வரமாக மாற்றினார்.
அதனால்தான் தன் வளர்ப்புத் தந்தையாக ஒரு தச்சரை, உழைப்பாளியைத் தேர்ந்தெடுத்தது மட்டுமல்ல,
தானே 30 ஆண்டுகள் சூசையப்பர் செய்த தச்சுத் தொழிலைச் செய்து
உழைப்பை ஆசீர்வதித்தார்.
அதுமட்டுமல்ல தான் நிருவிய திருச்சபையின் முதல் தலைவராக ஒரு மீனவத் தொழிலாழியை நியமித்தார்."
"Good. ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
நமது உழைப்பை ஆண்டவரின் அதி மிக மகிமைக்காக ஒப்புக்கொடுக்க வேண்டும்.
ஆண்டவருக்காகச் செய்தால்தான் அவரிடமிருந்து நித்திய வாழ்வைப் பரிசாகப் பெறமுடியும்."
"மார்க் போட்டாச்சா? Testல பாஸ் பண்ணிட்டேனா? "
"Evening Tea உறுதி!"
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment