வாருங்கள், அடிமைகளாவோம்.
******************************
மரியாள் எந்த பிரதிபலனையும் எதிர்பார்த்து இயேசுவுக்குத் தாயாய் இருக்கச் சம்மதிக்கவில்லை.
அடிமைக்குக் கூலி கிடையாது என்று அவளுக்குத் தெரியும்.
ஆனாலும், இறைவன் அவளை விண்ணக, மண்ணக அரசியாக முடிசூட்டினார்.
அடிமையாகத் தன்னைத் தாழ்த்தியவள்
அரசியாக உயர்ந்தார்.
சர்வலோகத்துக்கும் அதிபதியான இயேசு
தன் சீடர்களின் பாதங்களைக் கழுவும் அளவிற்குத்
தன்னையே அடிமை நிலைக்குத் தாழ்த்தினார்.
அரசர் அடிமையானதும்,
அடிமையை அரசியாக்கியதும்
எதற்காக?
இயேசுவின் வாழ்வின் ஒவ்வொரு அசைவும் நமக்கு ஏதாவது பாடம் கற்பிப்பதற்காகத்தான் இருக்கும்.
அவர் கற்பிக்கும் பாடம் வெறும் சொல்வழிப் பாடமாக இருக்காது, செயல்வழிப் பாடமாக இருக்கும்.
அவரே ஏழையாகப் பிறந்தும், ஏழையாக வாழ்ந்தும்தான்
'ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்'
என்னும் பாடத்தை விளக்கினார்.
அதேபோல்தான் தாழ்ச்சியின் மகிமையைப் போதிப்பதற்காகத்தான்
தன்னையே தாழ்த்திக்கொண்டார்,
தன்னையே தாழ்த்திக்கொண்ட தன் அன்னையை உயர்த்தினார்
அடிமையாக இருப்பதில் அப்படி என்ன பெருமை இருக்கிறது?
அடிமையாக இருப்பதுதான் ஆன்மீக வாழ்வின் ஆரம்பம்.
அடிமை தனக்கென்று ஒன்றுமில்லாதவன்.
தன் வாழ்வின் ஒவ்வொரு அசைவிற்கும் தன் முதலாளியையே சார்ந்திருக்கிறான்.
அவன் தனக்காக வாழவில்லை, தன் முதலாளிக்காகவே வாழ்கிறான்.
அவன் தன் சேவைக்குச் சம்பளம் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
நமது ஆன்மீக வாழ்வின் ஆரம்பமான ஆன்மா ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கப்பட்டது.
ஆகவே நமது ஆன்மீக வாழ்வு ஒன்றுமில்லாமையிலிருந்து ஆரம்பமாகிறது.
ஆனால் ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கப்பட்ட ஆன்மா தன்னைத் தானே ஆரம்பிக்கமுடியாது.
எல்லாம் உள்ள இறைவன்தான் தன் வல்லமையால் அதை ஆரம்பித்து வைக்கிறார்.
ஆகவே ஆன்மா தன்னால் அல்ல, தன்னைப் படைத்தவராலேயே இயங்க ஆரம்பிக்கிறது,
படைத்தவராலேயே இயங்குகிறது.
அவரின்றி அணுவும் அசையாது.
இதை ஆன்மா,
அதாவது அதற்குரிய மனிதன்,
உணர வேண்டும்.
இந்த
சுய அறிவு(Self knowledge)தான்
ஆன்மீக வாழ்வின் அடிப்படை.
தன் ஒன்றுமில்லாமையை உணர்ந்தவனுக்கு அவனைப் படைத்த இறைவனே எல்லாம் ஆகிவிடுகிறார்.
"எல்லாம் இயேசுவே,
எனக்கு எல்லாம் இயேசுவே,"
என்ற பாடல் வரிகள் இதை உணர்த்தும்.
'தான் ஒன்றுமில்லை, இறைவன்தான் தனக்கு எல்லாம்'
என்று உணர்ந்தவனை இறைவன் எல்லாவித வரங்களாலும் ஆசீர்வதிக்கிறார்.
தனக்கு எல்லாம் இயேசுவே என்பதை உணர்ந்தவன்
இயேசுவுக்காக மட்டுமே வாழ்வான்,
தான் மூச்சு விடுவதிலிருந்து மூச்சை விடுவதுவரை எதைச் செய்தாலும் இயேசுவுக்காகவே செய்வான்.
இயேசுவுக்காக அவன் செய்யும் எந்தக் காரியத்துக்காகவும் சன்மானம் எதையும் எதிர்பார்க்க மாட்டான்.
தனக்கு எல்லாம் இயேசுவே என்பதாலும்,
தன்னை இயக்குபவர் இயேசுவே என்பதாலும்
தனக்கு என்ன நேர்ந்தாலும்,
அது இயேசுவின் சித்தம் என்பதை ஏற்று அவருக்கு நன்றி கூறுவான்.
இயேசுவே அவனிற்குள்ளிருந்து இயக்குவதால் அவனது ஒவ்வொரு செயலும் இயேசுவையே பிரதிபலிக்கும்.
இயேசுவைப்போல் அன்பு செய்வான்,
இயேசுவைப்போல் சேவை செய்வான்,
இயேசுவைப்போல் தியாகம் செய்வான்,
இயேசுவைப்போல் துன்பங்களை ஏற்றுக்கொள்வான்,
இயேசுவைப்போல் பிறருக்காக உயிரையும் கொடுப்பான்.
தான் ஆண்டவருடைய அடிமை என்பதை ஏற்றுக்கொண்டு,
அவருக்காகவே வாழ்ந்து,
அவருக்காகவே மரிக்கும் அடிமையை
இயேசு விண்ணகத்தில் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவார்.
"இதோ ஆண்டவருடைய அடிமை"
என்று தன்னைத் தானே தாழ்த்தினாள் நம் விண்ணகத் தாய்.
"தாயைப்போல் பிள்ளை" என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment