" நான் உங்களுக்குத் தரும் சமாதானம் உலகம் தரும் சமாதானம் போன்றது அல்ல."
(அரு.14:27)
***********************************
.."அடியே, செல்வம், சாப்பாடு டேஸ்ட் சூப்பர்!"
."ஏங்க, தினமும் நான்தான் சாப்பாடு தயாரிக்கிறேன். இன்றைக்கு என்ன அதிசயமாய்
'சாப்பாடு டேஸ்ட் சூப்பர்!?"
.."இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்குமே உன் சாப்பாடு சூப்பர் டேஸ்ட்தான்.
நேற்று ஹோட்டல்ல சாப்பிட்ட சாப்பாட்ட நினைத்துப் பார்த்தேன்.
உன் சாப்பாட்டைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை."
."இப்ப ஒரு கேள்வி.
ஆண்டவர் உயிர்த்தபின் தன் சீடர்களுக்குக் காட்சி கொடுக்கும் போதெல்லாம் 'உங்களுக்கு சமாதானம் உண்டாகுக' என்று வாழ்த்தினார்.
ஒவ்வொரு முறை பாவசங்கீத்தனம் செய்யும்போதும் குருவானவர் கிறிஸ்துவின் இடத்தில் அமர்ந்துகொண்டு,
'சமாதானமாய்ப் போங்கள்' என்கிறார்.
உலகத்தவரும் உலக சமாதானம் பற்றிப் பேசுகிறார்கள்.
உலகம் பேசும் சமாதானத்திற்கும், கிறிஸ்து தரும் சமாதானத்திற்கும் என்னங்க வித்தியாசம்?"
.."ஹோட்டல்காரன் தரும் சாப்பாட்டிற்கும், நீ தரும் சாப்பாட்டிற்கும் உள்ள வித்தியாசம்தான்.
ஹோட்டல்காரன் நமக்கு சாப்பாடு போடுவது நம்மீது கொண்ட அன்பினால் அல்ல. காசுக்காக.
சாப்பாடு கவர்ச்சியாகவும், ருசியாகவும்கூட இருக்கலாம்.
ஆனால் உடல் நலத்திற்கு ஏற்றது என்பதற்கு எந்த உறுதிப்பாடும் கிடையாது.
ஆனால் உனது சாப்பாடு அன்பிற்காகத் தரப்படுவது.
ருசியை மையமாக வைத்து அல்ல, குடும்பத்தினரின் உடல் நலனை மையமாகவைத்துத் தயயாரிக்கப்படுவது.
உலகம் தரும் சமாதானத்திற்கும்,
உண்மையான சமாதானத்திற்கும் சம்பந்தமே இருக்காது.
உலகைச் சார்ந்த குடும்பங்கள்,
சமுதாய அமைப்புகள்,
அரசியல் அமைப்புகள்,
நாடுகள்
ஆகியவற்றில் எல்லாம் சமாதானம் என்ற வார்த்தை அடிக்கடி பேசப்படும்.
வெளிப்படையாக, வன்முறையைப் பயன்படுத்தி, சண்டை போடாது இருப்பதையே சமாதானமாக இருத்தல் என இவ்வமைப்புகள் கருதுகின்றன.
இவற்றின் எண்ணத்தில்,
குடும்ப உறுப்பினர்கள் வாயாலயோ, கைகளாலேயோ, ஆயுதங்களாலேயோ சண்டை போட்டால் குடும்பத்தில் சமாதானம் இல்லை.
சண்டைபோடாமல் அமைதியாக இருந்தால் சமாதானம் நிலவுகிறது.
ஆனால் சண்டைக்குக் காரணமான கோபம், வன்மம் போன்றவை மனதிற்குள் அப்படியே இருக்கும்.
ஒரு கணவன் சொல்கிறான், "எனக்கு என் மனைவி மேல் பயங்கர கோபம். ஆனால் சண்டை போட்டால் நாலுபேர் நாலு விதமாகப் பேசுவார்கள் என்பதற்காகக் கோபத்தை அடக்கி 'வைத்திருக்கிறேன்.' " அதாவது, விடவில்லை.
அப்பப்போ அடக்கி வைக்கும் கோபம் மொத்தமாய்ச் சேர்ந்தால், வெடித்து, குடும்பம் சிதறும்.
நாடுகளுக்கிடையே ஆயுதப்போர் நடந்தால் சமாதானம் இல்லை என்று அர்த்தம்.
ஆயுதப்போர் நின்றுவிட்டால் சமாதானம் திரும்பிவிட்டது என்று அர்த்தம்.
திரும்பிய சமாதான நிலையில் அடுத்த போருக்கான ஆயத்தம், அதாவது, ஆயுதம் தயாரிக்கும் பணி, ஆரம்பிக்கும்.
முதல் உலகப்போர் செர்மனியின் முடிவடைந்தவுடன் வென்ற நாடுகளும், தோற்ற நாடுகளும் வெர்செய்ல்ஸில் சமாதான ஒப்பந்தம் (Treaty of Versailles) செய்துகொண்டன.(on 28 June 1919)
சமாதான காலத்தில் அதே நாடுகள் அடுத்த போருக்காகத் தயாரித்துக் கொண்டிருந்தன.
விளைவு?
1939 ல் இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்தது.
இதுதான் உலகம் தரும் சமாதானம்.
சமாதானம் என்ற உடை அணிந்துகொண்டு,
அதற்கு எதிர்மறையாகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறது உலகம்.
இயேசு தரும் சமாதானம்தான் உண்மையான சமாதானம்.
'நன்மனதோற்கு சமாதானம் உண்டாகுக' என்று பாடினர் விண்ணுலக தூதர்கள், சமாதானத்தின் தேவன் இயேசு பிறந்த நான்று.
நல்ல மனது உள்ளவர்கள் அனுபவிக்கும் சமாதானம்
மட்டும்தான் உண்மையான,
அதாவது,
இறைவன் தரும் சமாதானமாக இருக்க முடியும்.
நல்ல மனது தூய்மையின் இருப்பிடம்.
நல்ல மனது நன்மையை மட்டுமே நாடும்.
"தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்."
(மத்.5:8)
தூய்மையான உள்ளம்தான் இறைவன் வாழும் ஆலயம்.
ஆகவேதான் தூய்மையான உள்ளம் உள்ளவர்களால் மட்டுமே அங்கே வாழும் சமாதானத்தின் கடவுளைக் காணமுடியும்.
"சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்." (மத்.5:9)
ஆக,
தூய உள்ளத்தோரிடம் இறைவன் குடியிருக்கிறார்.
அவர்கள் இறைவனின் மக்கள்.
அவர்கள்தான் சமாதானம் செய்வோர்.
இயேசு தூயவர்.
ஆகவே
அவர் தரும் சமாதானம்
நல்ல, தூய்மையான மனம் உள்ள அனைவரையும் சென்றடையும்.
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், இயேசு தரும் சமாதானத்தைப் பெற நாம் நம்மையே தகுதி உள்ளவர்கள் ஆக்கிக் கொள்ளவேண்டும்.
அதற்கு ஒரே வழி நமது உள்ளத்தை தூயதாக, அதாவது, பாவமாசு இல்லாததாக வைத்துக்கொள்ளவேண்டும்.
நாம் பாவசங்கீர்த்தனம் செய்தவுடன் குருவானவர் சொல்லும் வார்த்தைகள்,
'உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, சமாதானமாகப் போங்கள்'.
இதிலிருந்து புரிகிறது, பாவம் இல்லாதவர்களே சமாதானமாய் இருக்கமுடியும் என்று.
மற்றொரு முக்கிய உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும்,
சமாதானம் என்ற வார்த்தையின் உண்மையான பொருள்,
இறைவனோடு நமக்கு இருக்கும் சுமூகமான உறவு.
இவ்வுறவு பாவம் இல்லாதவர்களிடம் மட்டுமே இருக்கும்.
இறைவனிடம் சமாதானமாக உள்ளவர்கள் இயல்பாக தங்கள் சக மனிதர்களிடமும் சமாதானமாய் இருப்பார்கள்.
இறையன்பிலிருந்து பிறரன்பு பிறப்பது போல
இறைவனோடு நாம் கொண்டுள்ள சமாதானத்தில் இருந்துதான்
பிறரோடு நாம் கொள்ளவேண்டிய சமாதானம் பிறக்கும்.
தூய்மையான உள்ளத்தில் கடவுளின் அருளால் பிறக்கும் சமாதானம்
நமது வார்த்தைகளிலும், செயல்களிலும் பிரதிபலிக்கும்.
இயேசு தரும் சமாதானம் உள்ளவர்கள்
1. பிறரைத் தன்னலமற்ற அன்புடன் நேசிப்பார்கள். (Love.)
2. பிறரது நலமான வாழ்வை விரும்புவார்கள், அதற்காக வேண்டிய உதவிகள் செய்வார்கள். (Service.)
3. பிறர் நலனுக்காக தங்களையே தியாகம் செய்வார்கள். (Sacrifice.)
4.பிறருக்காக விட்டுக்கொடுத்து வாழ்வார்கள். (Adjustment.)
இதுவே இயேசு நமக்குத் தரும் சமாதானம்.
ஆதாம் ஏவாளின் பாவத்தினால்
மனித இனம் இறைவனோடு கொண்டிருந்த சமாதான உறவை இழந்தது.
இழந்த உறவை மீட்கவே இறைமகன் மனிதனாகி, பாவத்திற்கான பரிகாரம் செய்தார்.
ஆகவேதான் இயேசு தரும் சமாதானம் இறைவனோடும், மனிதனோடும் நமக்கு உள்ள உறவை மேம்படச் செய்கிறது."
."சுருக்கமாகச் சொன்னால்,
மனிதன் தரும் சமாதானம் அப்பெயருக்கே லாயக்கற்றது.
இயேசு தருவதுதான் உண்மையான சமாதானம்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment