Friday, May 10, 2019

பங்குச்சாமியாரும், சமையல்காரரும்.

பங்குச்சாமியாரும், சமையல்காரரும்.
**********************

செல்வம் Tea யுடன் அறைக்குள் நுழையும்போதே கூறிய சொற்கள் அவள் வருமுன்னே வேகமாக உள்ளே வந்து என் காதுகளில் மோதின:

"நாங்கள் உங்களைவிட மேலானவர்கள் தெரியுமா?"

"அப்படியா?  எந்தவிதத்தில் என்று தெரிந்து கொள்ளலாமா? "

"புனித சவேரியார் ஒரு ஆண்.

புனித குழந்தைத் தெரெசம்மாள் ஒரு பெண்.

இந்த இருவருள் கஸ்டப்பட்டு நற்செய்தியை அறிவித்தவர் யார்?"

"அதை  நீயே சொல்லிவிடேன்."

"புனித சவேரியார்தான். ஸ்பெயின் நாட்டிலே பிறந்து,

உயர்தரக் கல்வி கற்று,

கஸ்டப்பட்டு பிரயாணம் செய்து,

தன் நாட்டைவிட வித்தியாசமான காலநிலை (Climate) உள்ள

ஜப்பான், இந்தியா போன்ற கீழைநாடுகளில்,

புதிய மொழிகளைக் கற்று,

மாற்று மதத்தினரின் எதிர்ப்புகளையும் சமாளித்து,

நற்செய்தியை அறிவித்தார்.

சீனாவில் நற்செய்தியை அறிவிக்கப் பயணித்துக் கொண்டிருந்தபோது

ஒரு தீவில் மரணம் அடைந்தார்.

புனித தெரசம்மாள் ஒரு கன்னியர் சபையில் சேர்ந்து, சபை விதிப்படி வாழ்ந்தாள்.

வேத போதக நாடுகளுக்காக செபம் செய்தாள்.

சவேரியாரோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அவ்வளவு கஸ்டப்பட்டிருக்க மாட்டாள்.

சவேரியார் உழைத்தார்.

தெரசா செபித்தாள்.

ஆனாலும் திருச்சபை இருவரையும் வேத போதக நாடுகளின் பாதுகாவலர்களாக நியமித்துள்ளது.

ஒரு ஆண் புனிதர் கஸ்டப்பட்டு சம்பாதித்த பெயரை

ஒரு பெண் புனிதை அவ்
வளவு கஸ்டப்படாமல் சம்பாதித்து விட்டாள் பார்த்தீர்களா?

இப்போது புரிகிறதா நாங்கள் எவ்வளவு மேலானவர்கள் என்று!"

"நான் எப்போவாவது 'நீ கஸ்டப்பட்டு 10 மாதம் சுமந்து, பேறுகால வேதனை அனுபவித்து அம்மா பட்டம் பெற்றாய்.

நான் வேதனையே அனுபவிக்காமல் அப்பா பட்டம் பெற்றுவிட்டேன்' என்று பீத்தியிருக்கேனா? "

"நீங்க தலை கீழ நின்றாலும் உங்களால் பத்து மாதம் சுமக்கவும் முடியாது, பேறுகால வேதனை அனுபவிக்கவும் முடியாது.

இறைவன் வகுத்த திட்டப்படிதான் செயல்படமுடியும்."

"எதன்படி? "

"இறைவன் வகுத்த திட்டப்படி."

"கரெக்ட். இறைவன் வகுத்த திட்டம் எல்லா இடங்களுக்கும் (பாவம் தவிர) பொருந்தும்.

புனித சவேரியார் கீழை நாடுகளில் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்பது இறைவன் வகுத்த திட்டம்.

புனித தெரசம்மாள் கன்னியர் மடத்தில் பணிபுரியவேண்டும் என்பதும்,

தனது செபவாழ்வால் வேதபோதகத்துக்கு உதவ வேண்டும் என்பதும் இறைவன் வகுத்த திட்டம்தான்.

நாம் நமது விருப்பம்போல் வாழ அல்ல, இறைவன் விருப்பம்போல் வாழவே படைக்கப்பட்டுள்ளோம்.

அதைத்தான் சவேரியார் செய்தார்.

தெரசாளும் செய்தாள்."

"அதாவது அவரவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியை அவரவர் சிறப்பாக ஆற்றவேண்டும்."

"கரெக்ட்.

ஆனால் ஒருவர் செய்கிற பணி

மற்றவர் செய்கிற பணியைவிட

சிறந்தது என்றோ, தாழ்ந்தது என்றோ கூறக்கூடாது.

உதாரணதிற்கு,

ஒரு காரை எடுத்துக்கொள்வோம்.

நான்கு சக்கரங்கள்,

ஒரு என்ஜின்,

இந்த இரண்டு உறுப்புக்களில் எது முக்கியமானது?

இந்தக் கேள்வியே பொருத்தமற்றது.

ஒவ்வொரு உறுப்பும் ஒரு குறிப்பிட்ட பணிக்காக காரில் பொருத்தப்பட்டுள்ளது.

அந்தந்த உறுப்பு அததன் பணியைச் சிறப்பாகச் செய்யவேண்டுமே தவிர

தன்னை அடுத்த உறுப்போடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

சக்கரங்கள் சரியாக இருந்தாலும் என்ஜின் சரியாக இல்லாவிட்டால் கார் ஓடாது.

என்ஜின் சரியாக இருந்தாலும் சக்கரங்கள் சரியாக இல்லாவிட்டால் கார் ஓடாது.

இந்த உதாரணம் அவரவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியை அவரவர் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதை விளக்கத்தான்.''

"சிலருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி கடினமாக இருக்கும்,

சிலருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி இலேசாக இருக்கும்,

கடினமான பணிக்கு மோட்சத்தில் அதிக சம்பாவனை இருக்குமா?"

"பணி கடினமா, இலேசா என்பதை அல்ல,

அது என்ன மனநிலையோடு செய்யப்படுகிறது

என்பதைத்தான் இறைவன் பார்ப்பார்.

ஒரே செயலை இருவர் செய்தால் வெளிப்பார்வைக்கு ஒரே மாதிரிதான் இருக்கும்.

நமக்கு செயலின் வெளித்தோற்றம் மட்டும் தெரியும்.

கடவுள் உள்ளத்தை நோக்குவார்.

அர்ப்பண உணர்வோடு செய்கிறாகளா,

இறைவனின் மகிமைக்காகச் செய்கிறாகளா,

தற்பெருமைக்காகச் செய்கிறாகளா,

கடமுறைக்காகச்
செய்கிறாகளா

என்பதை இறைவன் மட்டுமே அறிவார்.

அவர்களது மனநிலைக்கு ஏற்றவாறு சம்பாவனையின் அளவு இருக்கும்.

ஒரு பங்குச்சாமியாரையும், அவரது சமையல்காரரையும் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்.

சாமியாரது பணி மிகவும் கடினமானது,

சமையல் பணி எளிதானது.

சாமியார் நற்செய்திப் பணியில் அர்ப்பண உணர்வோடு ஆண்டவருக்காக உழைக்கிறார்.

சமையல்காரரும் அதே அளவு அர்ப்பண உணர்வோடு,  ஒவ்வொரு சிறு சமையல் வேலையையும் ஆண்டவருக்காகச் செய்கிறார்.

மோட்சத்தில் சாமியாருடைய சம்பாவனையின் அளவுக்கு,

சமையல்காரரின் சம்பாவனையும் இருக்கும்.

இருவரும் அவரவர்க்கு ஆண்டவர் அளித்த பணியைச் செவ்வனே செய்திருக்கிறார்கள்.

நமது உடலில் ஒவ்வொரு உறுப்பும் அததன் வேலையைச் சிறப்பாகச் செய்தாலே மொத்த உடம்பும் சிறப்பாக இயங்கும்.

கிறிஸ்துவின் ஞானஉடலிலும் அப்படித்தான்."

"போப்பாண்டவரைவிட அவரது வேலைக்காரன் அதிக மோட்ச சம்பாவனையை அடையமுடிமா?"

"முடியும், அவரது அர்ப்பண உணர்வைப் பொறுத்து.

ஆனால் நமது ஆன்மீக ஓட்டம் மற்றவர்களோடு போடும் போட்டி அல்ல.

செயலுக்கும், உள்ளத்திற்கும் உறவை விளங்கவைக்கதான் ஒப்பிட்டு விளக்கினேன்.

உண்மையில் போட்டி போட்டுக்கொண்டு நாம் செயல்படக்கூடாது.

ஆன்மீக வாழ்வு நமக்கும் இறைவனுக்கும் உள்ள நேரடி உறவு.

ஒவ்வொருவர் உள்ளத்திலும் செயலாற்றிக் கொண்டிருப்பவர் இறைவன்.

அவரது தூண்டுதல்ளுக்குக் கட்டுப்பட்டு நாம் செயலாற்ற வேண்டும், மற்றவர்களோடு போட்டிபோட்டு அல்ல.

நமது ஆன்மீகவழிகாட்டி (Spiritual Director) இயேசுவின் இடத்திலிருந்து நம்மை வழிநடத்துகிறார்,

அவர் அறிவுரைப்படி நாம் நடக்கவேண்டும்,

நமது ஆன்ம நலனுக்காக,

அவருக்குப் போட்டியாக அல்ல"

"தோமையார் திரும்பவும் வரவேண்டும் என்று எழுதியிருந்தீர்களே!

அவர் எப்படீங்க..."

"வருவார்னு கேட்கிறாயா?

தோமையாருடைய உணர்வு வரவேண்டும்.

இயேசுவை அறியாதவர்களுக்குக் அவரை அளிக்க ஆவல் வரவேண்டும்.

இயேசுவுக்காக எதையும் இழக்க (உயிர் உட்பட) தயார்நிலை வரவேண்டும"

"அவரது சந்தேகம் தவிர மீதி எல்லாம் வரவேண்டும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment