Thursday, May 16, 2019

சோதனை மேல் சோதனை.

சோதனை மேல் சோதனை.
*************************
"ஏங்க இங்க வாங்க!"

"என்ன விசயம், சொல்லு."

"இது சொல்லக்கூடிய விசயம் இல்ல.பார்க்க வேண்டிய விசயம். "

"புது ட்ரெஸ் போட்டிருக்கியா?"

"ஏங்க, யாராவது சமையலறைக்குப் போகிறதுக்காக புது ட்ரெஸ் போடுவாங்களா?

வந்து பாருங்க."

"இதோ வந்துவிட்டேன் ...ஏண்டி, என்ன இது?

பூரி, கிழங்கு?

இன்று காலையில்தான் ஒரு வாரத்திற்கு மிகவும் பிடித்த உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதில்லை என்று தீர்மானித்தேன்.

முதல் நாளே தீர்மானம் அவுட்டா? "

"ஏங்க, உங்களுக்கான உணவைத் தயாரிக்கிறது நான்.

எனக்குதான் தெரியும் உங்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காதுன்னு.

எங்கிட்ட சொல்லாம எப்படித் தீர்மானம் எடுத்தீங்க?

சரி, போய்க் குளிச்சிட்டு வாங்க, சாப்பிடலாம்."

(குளித்த பிறகு)

"ஏன் அப்படிப் பார்க்கிறீங்க? "

"பூரியக் காணல, உப்புமா இருக்கு? "

"உங்கத் தீர்மானம்! அதுதான் பூரி ஓடிப்போச்சி. "

"பரவாயில்லை. எங்க ஓடிப்போச்சின்னு கேட்கமாட்டேன்.

நல்ல வேளை சோதனையிலிருந்து தப்பிச்சேன்."

"நீங்க எங்க தப்பிச்சீங்க?  நான் தப்பிக்கவச்சேன்."

"என் செல்வம்னா செல்வந்தான்.

ஆமா, பூரி எங்க போச்சி?"

"இங்க பாருங்க, ஒரு சோதனையிலிருந்து தப்பிச்சபின் அத அப்படியே மறந்துவிடணும், அத நோண்டிக்கிட்டே இருக்கக்கூடாது.

ஒரு கதை தெரியுமா? ஒருவன் ஒரு ஒற்றையடிப்பாதை வழியே போய்க் கொண்டிருந்தான்.
பாதை ஓரமா ஒரு பாம்பைக் கண்டான்.

பயந்து வேகமாக ஓடித் தப்பித்தான்.

கொஞ்ச தூரம் போனபின், தப்பித்ததற்கு மகிழ்ந்தாலும்,

அந்தப் பாம்பு அங்கேதான் கிடக்கிறதா, அல்லது போய்விட்டதா என்று பார்க்கவேண்டும் போலிருந்தது.

திரும்பவும் அதைத் தேடி வந்தபோது தெரியாமல் கால் அதன்மேல் பட,  அது கொத்திவிட்டது!

சோதனையிலிருந்து தப்பித்துவிட்டால் 

கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு நமது வேலையைப் பார்க்க வேண்டும்.

எப்படித் தப்பித்தோம் என்று ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்கக் கூடாது.

ஆறாம், ஒன்பதாம் கட்டளைகளுக்கு எதிரான சோதனைகட்கு இது மிகவும் பொருந்தும்."

"சரி, சோதனையைப் பற்றி ஒரு குட்டி ஆராய்ச்சி பண்ணுவோமா? "

"அதென்ன குட்டி ஆராய்ச்சி?"

"நீண்ட ஆராய்ச்சி செய்ய நமக்கு அறிவும், நேரமும் பற்றாது.

நமது குறுகிய அனுபவத்தை அடிப்படையாக வைத்து கொஞ்ச நேரம் பேசுவோம்."

"சரி. சோதனைன்னா என்ன? சொல்லுங்க."

.."எனக்குத் தெரிந்தவரை சோதனை என்பது ஒரு எதிர்மறைக் கவர்ச்சி.

அதாவது செய்யக் கூடாததை செய்யத் தூண்டும் கவர்ச்சி.

ஆண்டவர் நம் முதல் பெற்றோருக்கு 'ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியைச் சாப்பிடக்கூடாது' என்று கட்டளை இட்டிருந்தார்.

ஆனால், சாத்தான் விலக்கப்பட்ட கனியை சாப்பிடும்படி, கவர்ச்சிகரமான பொய்யைச் சொல்லிச் சோதிக்கிறான்.

சோதனைக்குச் சம்மதிக்கா திருந்திருந்தால் ஏவாள் புண்ணியம் செய்திருப்பாள்.

சம்மதித்ததால் பாவம் செய்தாள்."

."இந்த முதல் சோதனையிலிருது ஒரு உண்மை விளங்குகிறது.

ஒரு பக்கம் கடவுள்,

மறு பக்கம் சாத்தான்.

நடுவில் மனிதன்.

கடவுள் மனிதனைத் தனக்காகப் படைத்தார்.

சாத்தான் கடவுளுக்குச் சொந்தமான மனிதனை அபகரிக்க முயல்கிறான்.

கடவுள் மனிதனுக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.

மனிதன் தன் முழுச்சுதந்திரத்தைப் பயன்படுத்தி, இறைவனின் அருள்வரத்தை ஏற்று,

சாத்தானை ஏறிட்டுப் பார்க்காமல்

இறைவனிடம் செல்லவேண்டும்.

ஆனால் மனிதருள் சிலர் சாத்தானின் கவர்ச்சிகரமான சோதனையை வெல்லமுடியாமல் அவன்பக்கமே சாய்ந்துவிடுகிறார்கள்."

.."இறைவனுக்கு எதிராக நம்மைச் சோதிப்பவன் சாத்தான்.

சாத்தானை ஏன் இறைவன் படைத்தார்?"

."இறைவன் சம்மனசுக்களைத்தான் படைத்தார்.

சம்மனசுக்களின் தலைவராக இருந்தவர் லூசிபெர்.

லூசிபெர் தனது தற்பெருமை (Pride) காரணமாக இறைவனை எதிர்த்ததால் சாத்தானாக மாறினான்.

மனுக்குலம் படைக்கப்பட்ட நாளிலிருந்து அவனது ஒரே வேலை இறைவனுக்கு எதிராக மனிதனைச் சோதிப்பதுதான்.

இறைவன் மனிதனாய்ப் பிறந்தபோது அவரையே மூன்று முறைச் சோதித்தான்.

இயேசுவையே சோதித்தவன் நம்மைச் சோதிக்காமல் விடுவானா?

இயேசு அவனை வென்றதுபோல,  நாமும் அவனை இயேசுவின்
துணையுடன் வெல்லவேண்டும்."

.."இயேசு சர்வவல்லபர்.

அவரால் எல்லாம் முடியும்.

அவர் நினைத்தால் சாத்தானை நம்மை நெருங்க விடாமல் தடுக்கமுடியும்.

சோதனைகளே வராமல் நம்மைக் காப்பாற்ற முடியும்.

அவர் ஏன் சாத்தானைத்
தடுக்காமல் இருக்கிறார்?"

."இதற்கான பதிலை நீங்களே சொல்லுங்கள்."

.." 'இறைவன்தான் சர்வஞானம் உள்ளவராச்சே,

அவருக்குதான் மனிதன் பாவம் செய்வான் தெரியுமே,

பின் ஏன் மனிதனைப் படைத்தார்?'

என்றுகூட கேட்கத்தோன்றும்.

ஆனால்,

இறைவன் சர்வ வல்லபர்,
அளவற்ற ஞானமுள்ளவர்

என்பதை ஏற்றுக்கொள்ளும் நாம்

நாம் அளவுள்ளவர்கள் என்பதையும்,

அளவுள்ள நம்மால் அளவற்ற இறைவனின் திட்டங்களைக் கண்டுபிடிக்க முடியாது

என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல

இறைவன்  அளவற்ற நன்மைத்தனம் உள்ளவர் என்பதை விசுவசிக்கும் நாம்

இறைவன் எதைச் செய்தாலும், எப்படிச் செய்தாலும் நமது நன்மைக்காக மட்டுமே செய்கிறார் என்றும் விசுவசிக்க வேண்டும்.

ஆகவே இறைவனின் திட்டத்தை ஆராய்வதை விட்டு விட்டு,

இறைவன் சோதனைகளை அனுமதிப்பதால்  நமது வாழ்வில் என்னென்ன நன்மைகள்  ஏற்பட்டுள்ளன என்பதை நான் கூறுகிறேன்."

."கொஞ்சம் பொறுங்கள்.

Ladies first.

நான் ஆரம்பிக்கிறேன்.

இயேசு நாம் தந்தையை நோக்கி செபிக்கக் கற்றுத்தந்த செபத்தில்

'எங்களை சோதனையில் விழ விடாதேயும்'

என்று செபிக்கக் கற்றுத்தந்திருகிறார்.

ஏன்?

'எங்களுக்கு  சோதனையே வரவிடாதேயும்'

என்று செபித்தால் தப்பா? "

.."அவர் நம் தந்தை.

நம் மீது அளவுகடந்த பாசம் உள்ளவர்.

தந்தையிடம் பிள்ளை எதை வேண்டுமானாலும் கேட்கலாம்.

'நான் உடனடியாக அமெரிக்காவின் ஜனாதிபதி ஆக உதவியருளும்' என்று கேட்டால்கூட தப்பில்லை.

அது அவரது சித்தமாய் இருந்தால் அவர் அதை நிறைவேற்றக்கூட செய்யலாம்.

ஏன் சிரிக்கிற. கேட்கலாம்னுதான் சொன்னேன். கேட்கச் சொல்லல.

ஆனால் நாம் எதைக்கேட்டாலும், நமக்கு நன்மையானதைத்தான் தருவார்.

என் அனுபவத்தின் அடிப்படையில் கூறுகிறேன்,

நமது நன்மைக்காகத்தான் இறைவன் சோதனைகளை அனுமதிக்கிறார்."

."என்னது? நமது நன்மைக்காகவா? புரியவில்லை."

.."உன் பிள்ளைகள் ஏன் உன்னைச் சுற்றிச்சுற்றி வருகிறார்கள்? "

."தாயின் உதவி இன்றி பிள்ளைகளால் வளர முடியாது.

அதனால்தான் தங்களுக்கு வேண்டிய உணவு, உடை, இருப்பிடம் இன்னும் மற்றத் தேவைகட்காக பிள்ளைகள் பெற்றோரைச் சுற்றி வந்துதானே ஆக வேண்டும்."

.."Suppose, உன் உதவியின்றி அவர்களுக்கு நீ குறிப்பிட்டவை எல்லாம் கிடைத்துவிட்டால்?"

."யோசிக்க வேண்டிய விசயம்தான்."

.."யோசிக்கவே வேண்டாம். உன்னைச் சுற்றமாட்டார்கள்.

நீ பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைக்கு நீ பால் கொடுக்காமல் ஆயா பால் கொடுத்தால், பிள்ளை உன்னைத் தேடாது. ஆயாவைத்தான் தேடும்.

இறைவன் நம்மைத் தனக்காகத்தான் படைத்தார்.

அவரை அறிந்து,

அவரை அன்பு செய்து,

அவருக்காகவே வாழ்ந்து,

அவரை அடைந்து,

நித்தியமும் அவரோடு வாழவே

நம்மைப்படைத்தார். 

ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமும்

அவரது சந்நிதியில்,

அவரது நினைப்பில்,

அவரோடு பேசிக்கொண்டு,

அவருக்காகவே வாழவேண்டும்  என்பதுதான் அவரது ஆசை.

'அவரின்றி நாம் ஒன்றுமே இல்லை,

அவரோடு நமக்கு எல்லாம்  முடியும்'

என்பதை நாம் உணர்ந்து வாழ வேண்டும் என்பது அவர் விருப்பம்.

குழந்தை தான் பயப்படுகிற பொருள் எதையும் கண்டால் தாயை இறுகப் பற்றிக்கொள்ளும்.

நமது ஆன்மீக வாழ்விலும் நம்மைப் பாவத்தில் விழத்தாட்டத் துடிக்கும் சோதனைகள் வரும்போது நாம் இறைவனை இறைவனை இறுகப்பற்றிக் கொள்வோம்.

'நான் உம்மை இறுகப்பற்றிக் கொண்டேன், அப்பா, நான் சோதனையில் விழுந்து விடாதபடி  என்னைக் காப்போற்றும்'

என வேண்டுவோம்.

'எங்களை சோதனையில் விழவிடாதேயும்'

என்று ஒவ்வொரு நாளும் பலமுறை வேண்டும்போது

இறைவன் சோதனைகளுக்கு எதிரான சக்தி தரும் அருள்வரங்களால் நம்மை நிரப்புகிறார்.

சோதனைகள் வராமலிருக்கும்போதே நாம் இந்த செபத்தைச் சொன்னால் சாத்தான் நம்மை நெருங்கவே பயப்படுவான்.

சோதனைகள் வராமலிருக்கும்போது நாம் இச்செபத்தை மறந்தால்,

நமக்கு ஞாபகமூட்டவே இறைவன் சோதனையை அனுமதிப்பார்.

அதனால்தான் சொன்னேன்,

'நமது நன்மைக்காகத்தான் இறைவன் சோதனைகளை அனுமதிக்கிறார்' என்று.

புரிகிறதா?"

."புரிகிறது. ஆனால் புரியவில்லை."

.."நீ சொல்வது எனக்குப் புரியவில்லை.

கொஞ்சம் புரியும்படி சொல்லு."

."இறைவன், 

அவரோடு  நாம் 24 மணி நேரமும் செபத்தால் இணைந்து வாழவேண்டும் என்று விரும்புகிறார் என்று

நீங்கள் சொல்ல விரும்புகிறீகள் என்பது புரிகிறது.

ஆனால் இவ்வுலகில் வாழும் நாம் இவ்வுலக காரியங்களையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

24 மணி நேரமும் எப்படி செபிப்பது என்று புரியவில்லை."

.."கடவுள் எங்கு இருக்கிறார்?"

."எங்கும் இருக்கிறார்."

.."நீ எங்கே இருக்கிறாய்? "

."நான் கடவுளுக்குள்தான் இருக்கிறேன்."

.."அதை நீ உணர்கிறாயா?"

."உணர்கிறேன்."

.."அதுதான் செபம்.

நாம் இறைவனின் சந்நிதியில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து வாழ்வதுதான்  செபம்.

சோதனை வரும்போது இறைவன் நம்மோடுதான் இருக்கிறார் என்பதை நாம் நினைத்தாலே சாத்தான் நடுநடுங்கும், சோதனை பறந்துவிடும்."

."ஏங்க, இது உங்களுக்கே நல்லா இருக்கா?"

.."எது? சோதனை பறந்துவிடுவதா"

."Ladies first ன்னு சொன்னேன்.
சரின்னு சொல்லிவிட்டு, இரண்டு வார்த்தை பேசுமுன்னே நீங்களே பேச ஆரம்பிச்சிட்டீங்க!"

.."நான் ஒண்ணும் பேசல.

நீ கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிக்கிட்டிருக்கேன்."

."அதுவும் சரிதான். அப்போ இன்னொரு கேள்வி. சோதனைக்கு சாத்தான் மட்டும்தான் காரணமா? "

.."சரியான கேள்வி.

ஒரு ஊர்ல ஆறு ஒண்ணு இருந்தது.  அதுல எப்போதும் தண்ணீர் நிறைய ஓடும்.     ஆற்றுக்குள் யாரும் இறங்கக்கூடாது,   ஆற்றைக் கடக்க பாலத்தைத்தான் பயன்படுத்தணும்கிறது  ஊர் விதி.   ஒரு ஆள் விதியைப்பற்றிக் கவலைப் படாமல் ஆற்றில் இறங்கினான்.  ஆற்றோடு போய்விட்டான்.

அவனது முடிவுக்குக் காரணம் அவனா? ஆறா? "

."ஆறு என்னங்க செய்யும்? அதன் வேலையே ஓடுவதுதான, அதற்குள் இறங்கிய ஆள்மேலதான் தப்பு."

.."கரெக்ட். அதேபோல்தான் சோதனை விசயத்திலும்.

சாத்தானின் வேலையே சோதிப்பதுதான்.

அநேக சமயங்களில நாம்தான் சோதனையைத் தேடிப்போறோம்.

மோசமான சினிமாக்கள், சீரியல்கள் போன்றவற்றை அடிக்கடி பார்த்துவிட்டு,

'எனக்கு கெட்ட எண்ணணங்களா வருது, அசுசியான ஆசைகளா வருது. சோதனைத் தாங்க முடியல'ன்னு  சொன்னா எப்படி?

சினிமாக்கள்,  சீரியல்கள்,  செல்போன்கள்,  மதுக்கடைகள் போன்றவை வருவோர் கால்களை வாரிவிடுவதற்கு சாத்தான் காத்துக்கிடக்கும் இடங்கள்.

நாம் அவைகளிடம் போகாதிருந்தால்

கெட்ட எண்ணங்கள், ஆசைகளுக்கு எப்படி சோதனை வரும்?

வழியே போற ஓணானப் பிடிச்சி பாக்கட்ல போட்டுக்கிட்டு 'ஐயோ!  குத்துதே, குடையுதே'ன்னு சொன்னா எப்படி?

நாமாகவே பாவ சந்தர்ப்பங்களைத் தேடிப்போய்விட்டு

'எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்' என்று கடவுளைக் கேலிபண்ணுவது போலாகும்.

வேண்டுமென்றே நாற்றம்பிடித்த பீங்காட்டில் போய் நின்று கொண்டு,

'ஆண்டவரே, இந்த துர்நாற்றத்திலிருந்து காப்பாற்றும்'
என்று வேண்டினால் எப்படி?

மருந்துமட்டும் நோயைக் குணமாக்காது.

மருந்தை ஒழுங்காகச் சாப்பிட்டால்தான் நோய் குணமாகும்.

சேரக்கூடாத நண்பர்கள்,

வாசிக்கக்கூடாத புத்தகங்கள்,

சாப்பிடக்கூடாத உணவுக்கடைகள்

இன்னும் இவை போன்ற பாவ சந்தர்ப்பங்கள் நிறைய உள்ளன. நாம் அவற்றைத் தவிர்க்க வேண்டும்."

."புனிதமான இடங்களுக்கு பாவ சந்தர்ப்பங்களைக் கொண்டு வருகிற ஆட்களைப் பற்றி? "

.."கோவில் புனிதமான இடம்.

திவ்ய பலிபூசைக்கு வரும் சிலர்

தங்கள் அழகை விளம்பரப்படுத்த வந்திருப்பது போல

Indecent ஆக dress அணிந்து வருவது மகா பெரிய தப்பு.

கோவிலுக்கு வந்து அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் பீடத்தைப் பார்ப்பார்களா? அவர்கள் அழகை ரசிப்பார்களா?

ஆலயத்துக்கு வரும்போது மற்றவர்கட்கு இடைஞ்சல் இல்லாத வகையில் கௌரவமாக உடையணிய வேண்டும்.

'Dress எங்கள் சொந்த விசயம், அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை'

என்று தத்துவம் பேசக்கூடாது."

."நான் ஒரு தத்துவம் சொல்லட்டுமா?

வியாதிகள் அதிகமாக இருப்பவர்கள்தான் அடிக்கடி டாக்டரைத் தேடுவார்கள்.

மந்தமான மூளையுள்ள மாணவர்கள்தான் அதிகமாக ஆசிரியர்களைத் தேடுவார்கள்.

சக்தி குறைவானவர்கள்தான் அடிக்கடி டானிக் சாப்பிடுவார்கள்.

சோதனைகள் அதிகம் வருபவர்களே ஆண்டவரை  அதிகம் தேடுவார்கள்.

சோதனைகள் பாவமல்ல, அவற்றைக் கண்டு பயப்படவேண்டாம்.

சோதனைகளைத் தேடிப் போக வேண்டாம்.

வரும்போது ஒரு கை பார்த்துவிடுவோம்!

தந்தை நம்மோடு!"

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment