Monday, May 6, 2019

நாம் புனிதர்களாக வேண்டுமா?

நாம் புனிதர்களாக வேண்டுமா?
***********************

எதிர்க் குணங்களுள்ள இரு பொருட்களின் இணைப்புதான் மனிதன்.

ஏற்கனவே இறைவனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே படைக்கப்பட்ட பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டது நம் உடல்.

ஒவ்வொரு உடல் உருவாகும்போதும்

ஆன்மா இறைவனால் நேரடியாகப் படைக்கப்பட்டு

உடலோடு இணைக்கபப்படுகிறது.

விண், மண் ஆகியவற்றின் இணைப்புதான் மனிதன்.

ஆகவேதான் அவனுடைய சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றில் விண்ணகச் சார்பும், மண்ணகச் சார்பும் கலந்துள்ளன.

எச்சார்பின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறதோ அதன் அடிப்படையில் அவன் ஆன்மீகவாதியா, உலகியல்வாதியா என்பதைத் தீர்மானிக்கலாம்.

நமது சிந்தனை, சொல், செயல் ஆகியவை விண்ணை நோக்கியவையா, மண்ணை நோக்கியவையா என்பதை வைத்து

நாம் கடவுளுக்காக வாழ்கின்றோமா, உலகுக்காக வாழ்கிறோமா என்பதை அறியலாம்.

கடவுளுக்காக வாழ்வோருடைய கண்ணோக்கில் ஆன்மீகம் இருக்கும்.

உலகிற்காக வாழ்வோருடைய கண்ணோக்கில் உலோகாதயம் (Worldliness)இருக்கும்.

உதாரணத்திற்கு, துன்பங்களை எடுத்துக்கொள்வோம்.

நமக்கு வரும் துன்பங்களை உலகரீதியாக நோக்கினால்,

அவை கஸ்டங்கள்,

உடற்சுகத்துக்கு எதிரானவை,

வேண்டாதவை,

நீக்கப்படவேண்டியவை,

தீர்வு காணப்படவேண்டிய பிரச்சினைகள்.

உலகியல் நோக்குள்ள யாரும் துன்பங்களை விரும்புவதில்லை.

அவை வந்தவுடன் அவற்றிலிருந்து விடுபடவே வழி தேடுவார்கள்.

நோய்நொடி வந்தால் டாக்டர்களிடம் போவார்கள்.

டாக்டர்களால் சுகமாக்க முடியாவிட்டால் கடவுளிடம் வருவார்கள்.

எப்படியாவது துன்பம் நீங்க வேண்டும். அதைப்பார்த்தாலே பயம்!

அதே துன்பத்தை ஆன்மீகக் கண்ணோகில் பார்ப்பவர்களது நடவடிக்கை உலகியல் கண்ணோக்கினருக்கு

நேர்மாறாக இருக்கும்.

ஆன்மீகவாதிகள் அழிந்துபோகக்கூடிய உடற்சுகத்தைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

உடலை அல்லது உலகைச் சார்ந்த கஸ்டங்களை ஆன்மீக நலனுக்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

பட்டணத்தில் உத்தியோகம் பார்ப்பவன்

வீட்டில் சேரும் கழிவுப் பொருட்களை அள்ளி

தெருக்கோடியிலுள்ள குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு நிம்மதியாய் இருப்பான்.

ஆனால்,

கிராமத்து விபசாயி கழிவுப் பொருட்களை எருக்குழியில் போட்டு, 

அவை மக்கியபின் அவற்றை அள்ளி

வயலில் தான் செய்யும் பயிருக்கு உரமாக,

அதாவது,  உணவாகப் போடுவான்.

பட்டணத்தானுக்கு கழிவுப்பொருள் கழிக்கப்பட வேண்டிய பொருள்.

கிராமத்தானுக்குக் கழிவுப்பொருள் உணவாக மாற்றப்பட வேண்டிய பொருள்.

அதேபோல் உலகவாதி துன்பத்தை ஏதோ சாபமாக நினைத்து அதிலிருந்து தப்பிக்க முயல்வான்.

ஆனால் ஆன்மீகவாதி அதை ஒரு வரமாக எண்ணி, அதைத் தன் ஆன்ம நலனுக்குப் பயன்படுத்திக் கொள்வான்.

நமக்கு வழியும், ஒளியும், உயிருமாய் இருப்பவர் நமது இரட்சகராம் இயேசு.

இயேசுவின் வழி அதாவது பாதை சிலுவைப்பாதை.

இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு போகும்போது

நாமும் சிலுவையைச் சுமந்துகொண்டு

அவர்பின்னால் போனால்தான்

நாம் இயேசுவைப் பின்பற்றுபவர்கள்.

நமக்கு வரும் துன்பங்கள் நாம் சுமப்பதற்கென்றே

இயேசுவால் தரப்பட்டவை.

இயேசு எந்தக் கருத்துடன் சிலுவையைச் சுமந்தாரோ அதே கருத்துடன் நாமும் சுமக்க வேண்டும்.

நமது  பாவங்களுக்கும், உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக நமது சிலுவையை அதாவது துன்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயேசு சிலுவையை அனுப்புகிறார் என்றால்,

அவர் நம்மைப் புனிதப்படுத்த, புனிதர்களாய் மாற்ற விரும்புகிறார் என்று அர்த்தம்.

பாவத்தின் விளைவாகத்தான் துன்பம் உலகத்திற்குள் நுழைந்தது, உண்மை,

ஆனால்,

அதே துன்பத்தை ஆயுதமாகக் கொண்டுதான் இயேசு பாவத்தை அழித்தார்.

துன்பத்தில் இருவகை உண்டு.

ஒன்று நமது உடல் சம்ந்தப்பட்ட நோய்கள்.

அடுத்தது நமது மனது சம்பந்தப்பட்ட, நாம் விரும்பாத நிகழ்வுகள்.

நோய்கள்கூட நாம் விரும்பாத நிகழ்வுகள்தான்.

ஆனால் உடல் வேதனை பிரதானமாக இருக்கும்.

மனது சம்பத்தப்பட்டவைகளில் மனவேதனை பிரதானமாக இருக்கும்.

கஸ்டப்பட்டு படித்து தேர்வுக்குப் போவோம்.

வினாத்தாள் நமது எதிர்பார்ப்புக்கு மாறாக இருக்கும்.

விளைவு?

மதிப்பெண்கள் குறையும்.

மனதிற்கு வேதனையாக இருக்கும்.

நாம் எதிர்பார்த்த வேலை கிடைக்காது.

ஏதோ ஒரு வேலை கிடைக்கும்.

இதுவும் சிலுவைதான்.

ஆனால் அதுவே இறைவனுடைய திட்டமாயிருக்கும்.

இறைவனது திட்டம் நமது நன்மையைக் கருத்தில் கொண்டதாகத்தான் இருக்கும்.

ஆகவே சிலுவையை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

துன்பங்கள் (சிலுவைகள்) வரும்போது அவற்றை நீக்க இறைவனிடம் வேண்டலாமா?

தாராளமாக வேண்டலாம்.

இயேசு நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த காலத்திலேயே

அநேகர் தங்கள் நோய் நீங்க அவரிடமே வேண்டியிருக்கிறார்கள்
என்பதும்,

அவரும் குணமளித்திருக்கிறார் என்பதும்

எல்லோருக்கும்  தெரியுமே!

நாமும் சிலுவை நமது சக்திக்கு மீறியதாக நமக்குத் தோன்றினால்

சிலுவையை நீக்க இறைவனிடம் வேண்டலாம்.

இதிலும் இயேசுவின் மனப்பக்குவம் வேண்டும்.

அவரே பிதாவிடம் வேண்டினாரே:

"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்:

எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"

என்று.

நமது செபமும் இது போன்றுதான் இருக்க வேண்டும்.

" உமக்கு விருப்பமானால் என் துன்பத்தை நீக்கும்."

இறைவன் நமது சக்தியை  மீறிய சிலுவையைத் தரமாட்டார்.

நமது பயத்தின் காரணமாக சக்தியை மீறியதாகத் தோன்றும்.

அப்பா நமது செலவுக்குப் பத்தாயிரம் ரூபாய் தருகிறார்.

நாம் "இவ்வளவு வேண்டாம்பா, ஆயிரம் ரூபாய் போதும்" என்கிறோம்.

நாம் குறைந்த பணம் பெற்றால் குறைவாகத்தான் செலவழிக்க முடியும்.

நாம் இவ்வுலகில் சுமக்கும் சிலுவைக்கு ஏற்றபடிதான் மோட்ச பேரின்பத்தின் அளவு இருக்கும்.

நமக்கு அதிக சம்பாவனை வேண்டுமா, குறைவாகப் போதுமா என்று நாம்தான் தீர்மானிக்க  வேண்டும்.

நாம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கவேண்டிய கால அளவையும் தீர்மானிப்பது

நாம் இப்போது சுமக்கும் சிலுவையின் அளவுதான்.

இதை எல்லாம் மனதிற்கொண்டுதான்

புனிதர்கள் இவ்வுலகில் அதிகமான சிலுவைகளை மகிழ்ச்சியுடன் சுமந்தார்கள்.

நாம் புனிதர்களாக வேண்டுமா?

நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

லூர்து செல்வம்.

1 comment: