Sunday, May 12, 2019

வாருங்கள் மோட்சத்திற்குள் நுழைவோம்!


வாருங்கள் மோட்சத்திற்குள் நுழைவோம்!
******************************

திருப்பலி காண்பதற்காக கோவிலுக்குள் நுழையும்போது உண்மையில் நாம் மோட்சத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம்.

மோட்சத்தில் நாம் பரிசுத்த தமதிரித்துவத்தோடு நித்திய பேரின்பத்தில் இணைவோம்.

அந்த பேரின்பத்தின் முன்சுவையைத்தான் நாம் ஒவ்வொரு திருப்பலியிலும் அனுபவிக்கிறோம்.

திருப்பலியின்போது நமது இரட்சகராகிய இயேசுவே

தனது ஆன்மாவோடும், சரீரத்தோடும்

திருப்பீடத்தில் இறங்கி, 

பின் திருவிருந்தின்போது

நம் நாவில் இறங்கி,

நம்மோடு கலந்துவிடுகிறார்.

இங்கு நமது உணவாக நம்மோடு கலக்கும் அதே இயேசுதான்

விண்ணில் நித்தியத்துக்கும் நமது ஆன்மாவோடு இணையப்போகிறார்.

அதன் முன்சுவையைத்தான் இம்மண்ணில் நாம் அனுபவிக்கிறோம்.

இறைமகன் திவ்ய நற்கருணையில் நம்மோடு இணைவது

விண்ணகத்தில் நிகழவிருக்கும் இணைப்பிற்காக இயேசு தரும் வாக்குறுதி.
(A pledge for our eternal union with Him.)

'ஆண்டவர் எவ்வளவு இனிமையானவரென்று சுவைத்துப் பார்க்க' நற்கருணை விருந்து சந்தர்ப்பம் தருகிறது.

"நான் தந்தையினுள் இருக்கிறேன், தந்தை என்னுள் இருக்கிறார்."

தந்தையினுள் இருப்பதுபோலவே இயேசு பரிசுத்தஆவியினுள்ளும் இருக்கிறார். பரிசுத்த ஆவி இயேசுவினுள் இருக்கிறார்.

ஆக, திவ்ய நற்கருணையில் இயேசுவோடு இணையும்போது பரிசுத்த தமதிரித்துவத்தோடு இணையும் பேரின்பத்தைத்தான் சுவைக்கிறோம்.

இதனை வார்த்தைபூர்வமாக தெரிந்துகொண்டால் மட்டும் போதாது,

உணர்வுபூர்வமாக அனுபவிக்க வேண்டும்.

Ice cream உண்ணும்போது அதை அப்படியே விழுங்கி விடுவதில்லை.

நாவில் படரச்செய்து அதன் சுவையை அவசரம் இல்லாமல் மெதுவாக சுவைத்துப் பார்த்துவிட்டுதான் விழுங்குகிறோம்.

நற்கருணை நாதர் நமது நாவிற்கு வந்தவுடன், அவரைத் தொடும் உணர்வே நம்மை பேரின்பத்திற்குள் இழுக்கவேண்டும்.

நாவினால் நன்கு சுவைத்தபின் அவரை நமது இதய இல்லத்திற்கு ஆராதனை உணர்வுகளோடு அழைத்துச் செல்ல வேண்டும்.

அங்கே

அவரிடம் நமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

நன்றி கூறலாம்.

இயேசு கூறுவதைக் கேட்கலாம்.

எல்லாவற்றுக்கும்மேலாக, எதுவுமே பேசாமல்,

பிள்ளை தன் தாயின் முகத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பதுபோல்,

இயேசுவின் பிரசன்னத்தைத் (Presence) தியானித்துக் கொண்டிருக்கலாம்.

இதற்கு வார்த்தைகள் தேவை இல்லை.

மனதைமட்டும் இயேசுவின்மேல் ஒருநிலைப்படுத்தி அவரோடு ஐக்கியப்படுத்திவிட வேண்டும்.

இந்த ஐக்கியம்(Union)தான் மோட்சத்தில் நித்திய காலமாக நீடிக்கப்போகின்றது.

உள்ளங்கள் இணைய வார்த்தைகள் தேவை இல்லை.

மோட்ச பேரின்பத்தின் இந்த முன்சுவையை ஒவ்வொரு நற்கருணை விருந்திலும் அனுபவிக்கலாமே!

   "நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான்."   (அரு.6:51)

இயேசுவாகிய உணவை (நற்கருணையை) உண்பவர்கள் நித்தியமும் அவருடன் வாழ்வர்.

"அவருடைய நிறைவிலிருந்து நாம் அனைவரும் அருளுக்குமேல் அருளைப் பெற்றுள்ளோம்."
(அரு.1:16)

இயேசுவே அருளின் ஊற்று.

நற்கருணை அருந்தும்போதெல்லாம்

நமக்குள்ளேயே அவரிடமிருந்து சுரந்து கொண்டிருக்கும்

இவ்வூற்றில் நீராடும் அனுபவம் கிடைக்கிறது.

அவரது விலாவிலிருந்து வெளிவரும் இரத்தமும் நீரும் நம் இதயத்தை அவரது இரத்தத்தால் நிரப்பும்.

"வாழ்வது நான் அல்ல, இயேசுவே என்னில் வாழ்கிறார்" என்று புனித சின்னப்பர் கூறியதுபோல,

நாமும் துணிந்துகூறலாம்,

"என்னில் ஓடுவது என் இரத்தமல்ல,

இயேசுவின் இரத்தமே என்னில் ஓடுகிறது,

ஏனெனில் இயேசுவின் இரத்தத்தையே தினமும் பானமாக அருந்துகிறேன்." என்று.

சுருக்கமாகச் சொன்னால்,

நற்கருணையால் நாம் இயேசுவோடு  முற்றிலும் ஐக்கியமாகி விடுகிறோம்.

மறுவுலகில் நிகழவிருக்கும் நித்திய ஐக்கியத்தின் முன்சுவையை

இவ்வுலகிலேயே அனுபவிக்கிறோம்.

எத்துணை சுவையானவர் நம் இறைவன்!

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment