காணமுடியாத உறுப்பினர்கள்.
(Invisible members)
***************************
"ஏங்க, உட்காருங்க, உங்ககூட கொஞ்சம் பேசணும்."
"ஏண்டி, ரொம்ப அதிசயமாயிருக்கு. எப்ப பார்த்தாலும் வீட்டுவேல வீட்டுவேலன்னு சுத்திக்கிட்டே இருப்ப. இண்ணைக்கு அதிசயமா உட்கார்ந்து பேசணுங்கிற! என்ன விசயம்?"
"இப்போ சில நாட்களா ஏதோ ஒரு புத்ததகத்த ரொம்ப Interestingஆ வாசித்துக்கிட்டிருக்கீங்க. என்ன விசயம்?"
"The mystical body of Christன்னு கேள்விப்பட்டிருக்கியா?"
"தமிழில சொல்லுங்க."
"கிறிஸ்துவின் ஞான சரீரம்."
"கேள்விப்பட்டிருக்கிறது மட்டுமல்ல, நானே ஞான உபதேச வகுப்பிலே பாடமாகவும் நடத்தியிருக்கேன்."
"அப்போ உனக்கு கிறிஸ்துவின் ஞான சரீரம்னா என்ன என்று தெரியும். Very good. கொஞ்சம் விளக்கு பார்ப்போம்."
'நம் ஆண்டவர் நமது மீட்புக்காக நிறுவிய கத்தோலிக்க திருச்சபைக்கு மற்றொரு பெயர்தான் கிறிஸ்துவின் ஞான சரீரம்.
திருச்சபைங்கிறது அமைப்புரீதியான பெயர்.
ஞான சரீரம்கிறது செயல்ரீதியான பெயர்."
"அதென்ன அமைப்புரீதி, செயல்ரீதி?"
"அமைப்புன்னா நிறுவனம். திருச்சபைங்கிற அமைப்புக்கு தலைவர் போப்பானவர்.
கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள் நிருவாகிகள்.
பொதுநிலையினர் (The laity), தலைவரையும், நிருவாகிகளையும் சேர்த்து, உறுப்பினர்கள்.
திருச்சபையின் பணி நற்செய்தி அறிவித்தல், இரட்சண்யம்."
"அடுத்து என்னமோ செயல்ரீதியான பெயர்னு சொன்னிய, அத விளக்கு."
"திருச்சபை நிறுவப்பட்டதே செயல்படத்தான்.
அது எப்படி செயல்படுறது என்பதை 'கிறிஸ்துவின் ஞான சரீரம்'
அல்லது
'ஞான உடல்' என்ற பெயர் விளக்கும்.
திருச்சபை ஒரு உடல் செயல்படுவது போல செயல்படும்.
கிறிஸ்துவின் ஞான உடலின் தலை கிறிஸ்து.
கத்தோலிக்க திருச்பையைச் சேர்ந்த
அனைவரும்
உடலின் உறுப்புக்கள்.
உடலை இயக்குவது தலை.
ஞான உடலை இயக்குவது கிறிஸ்து.
நமது உடலில் நரம்புகளின் உதவியோடு தலையிலுள்ள் மூளையுடன் இணைக்கப்பட்ட உறுப்புக்கள் மட்டுமே செயல்படும்.
ஏதாவது ஒரு உறுப்புக்கும், மூளைக்கும் இடையே உள்ள நரம்பு
அறுபட்டாலோ, செயல் இழந்துவிட்டாலோ
அந்த உறுப்பு செயல் இழந்துவிடும்.
அவ்வாறே
ஞான உடலின் ஏதாவது ஒரு உறுப்பு,
அதாவது உறுப்பினர்
சாவான பாவத்தின் காரணமாக
தேவஇஸ்டப்பிரசாதத்தை (Sanctifying grace)
இழந்துவிட்டால்
கிறிஸ்துவுடன் உள்ள இணைப்பு
துண்டிக்கப்பட்டுவிடும்.
பாவசங்கீத்தனம் மூலம் பாவமன்னிப்பு பெற்று விட்டால்
இணைப்பு மீண்டும் கிடைக்கும்.
நமது உடலின் ஏதாவது உறுப்புக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அது உறுப்புக்கு மட்டுமல்ல,
உடல் முழுமைக்கும் ஏற்பட்ட பிரச்சனைதான்.
நமது வயிற்றுக்குள் வலி ஏற்பட்டால்
'எனக்கு வயிற்றுவலி' என்றுதான் கூறுவோம்.
'என்னுடைய வயிற்றுக்குவலி' என்று கூறமாட்டோம்.
அவ்வாறே ஞான உடலின் ஒரு உறுப்பினருக்கு ஒரு பிரச்சனை என்றால் அது திருச்சபைக்கு ஏற்படும் பிரச்சனை.
அதனால்தான் சவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியபோது,
"நீ துன்புறுத்தும் கிறிஸ்து நானே" என்று ஆண்டவர் கூறினார்.
அவ்வாறே ஞானஉடலின் ஒரு உறுப்பினருக்கு ஒரு பெருமை என்றால் திருச்சபை முழுமைக்கே பெருமைதான்.
ஞானஉடலின் ஒரு உறுப்பினர் சம்பாதிக்கும் அருள்வரங்களில் அனைவருக்கும் பங்கு உண்டு.
நமது தலையாகிய கிறிஸ்து சிலுவையில் நமது மீட்புக்காக ஈட்டிய
அனைத்துப் பலன்களிலும்
நம் அனைவருக்கும் பங்கு உண்டு.
மரியன்னையும், மற்ற புனிதர்களும் தங்கள் செபம் மூலம் ஈட்டும்
அனைத்துப் பலன்களிலும்
நம் அனைவருக்கும் பங்கு உண்டு.
திருச்சபையின் ஆன்மீகச் சொத்து அனைவருக்கும் பொது.
பானையிலிருக்கும் சோற்றை அகப்பைமூலம் அள்ளி நமது இலையில் போட்டு சாப்பிடுவதுபோல
செபமாகிய அகப்பைமூலம் அருள்வரங்களை அள்ளி நமது ஆன்ம வளர்ச்சிக்குப் பயன்படுத்தவேண்டும்.
நமது உடலின் உறுப்புக்கள் ஒன்றுக்கொன்று உதவிக்கொள்வதுபோல
திருச்சபையின் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உதவிகரமாய் இருக்கவேண்டும்.
விண்ணகத்தில் இறைவனை முகமுகமாய்த் தரிசித்து
நித்திய பேரின்பத்தில் வாழும் நம்மவர் அனைவரும்
ஞான உடலின் உறுப்பினர்கள்தான்.
அவர்களின் செப உதவியையும் அனைவரும் பெற்று மகிழ்கின்றோம்.
சுருக்கமாக கத்தோலிக்கர் அனைவரும் கிறிஸ்துவுக்குள் ஒரே உடலாய் வாழ்கிறோம்."
"சரி.....முழுவதும் சொல்லுமுன் 'சுருக்கமாக' சொல்லி முடித்துவிட்டாய்."
"எனக்குத் தெரிந்ததைச் சொல்லிவிட்டேன்.
பாக்கி இருந்தால் நீங்களே சொல்லுங்கள்."
"கிறிஸ்து யாருக்காக மனிதனாய்ப் பிறந்து, பாடுகள் பட்டு, தன்னையே பலி கொடுத்தார்? "
"அவரால் படைக்கப்பட்ட மனுக்குலம் முழுமைக்கும்தான்."
",அதாவது? "
"மனிதராய்ப் பிறந்த அனைவருக்காகவும்தான்."
"நீ விளக்கிய ஞானஉடலில் கிறிஸ்துவை அறிந்து ஞானஸ்நானம் பெற்றவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்.
கிறிஸ்துவை அறியாதவர்கள் கதி?
நீயும், நானும் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தோம், கிறிஸ்தவர்களாக வளர்ந்தோம்.
கிறிஸ்தவர்களாக வாழ்கிறோம்.
கிறிஸ்துவைப் பற்றியே அறியாதவர்கள் இருக்கிறார்களே,
அவர்களது கதி?
அவர்களுக்காவும் சேர்த்துதான் இயேசு இரத்தம் சிந்தினார்.
கிறிஸ்துவின் ஞான உடலில் உள்ளவர்கள்தான் மீட்புப் பெற முடியும் என்பது உண்மை.
இவர்கள்,
அதாவது கிறிஸ்துவை அறியாதவர்கள்,
கிறிஸ்துவின் ஞான உடலில் சேர வாய்ப்பு இருக்கிறதா?
அதாவது மீட்புப் பெற வாய்ப்பு இருக்கிறதா?"
"கொஞ்சம் பொறுங்கள். இதுபற்றி நான் படிக்கிற காலத்தில ஒரு சுவாமியார் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது."
"நீ படிக்கிற காலத்தில ஒரு சுவாமியார் சொன்னத ஞாபகத்துக்குக் கொண்டுவர நாட்கணக்காய் ஆகும்.
நானே சொல்லிவிடுகிறேன்.
இவ்வுலகில் கிறிஸ்துவின் ஞான உடலில் உள்ளவர்களை இரு வகையாய்ப் பிரிக்கலாம்.
1.காணக்கூடிய உறுப்பினர்கள். (Visible members)
2.காணமுடியாத உறுப்பினர்கள்.
(Invisible members)
காணக்கூடிய உறுப்பினர்களைப்பற்றி நீ விளக்கினாய்.
காணமுடியாத உறுப்பினர்கள் பற்றி நான் விளக்குகிறேன்.
அவர்கள் ஏன் காணமுடியாத உறுப்பினர்கள்?
ஏனென்றால் அவர்களைப்பற்றி அவர்கட்கும், கடவுளுக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
நீ முதலில் ஒரு உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இரட்சண்யம் என்பது ஆன்மாவிற்கும், கடவுளுக்கும் இடையே உள்ள தனி விசயம்.
ஆன்மாவின் அந்தரங்கத்தை ஆண்டவர் ஒருவரே அறிவார்.
அதனால் நாம் யாரையும் தீர்ப்பிடக்கூடாது என இயேசு கட்டளையிட்டிருக்கிறார்.
நமது கண்களுக்கு வெளியரங்கம் மட்டுமே தெரியும்.
அநேக சமயங்களால் கண்களால் பார்ப்பது பொய்யாகிவிடும்.
ஆகவேதான் சொன்னேன் காணமுடியாத உறுப்பினர்களை
அவர்கட்கும், கடவுளுக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்று.
ஆனால் அவர்கள் எப்படிப்பட்டவர்களாக
இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியும்.
அதாவது எப்படிப்பட்டவர்களாக இருந்தால் அவர்கள் காணமுடியாத உறுப்பினர்கள்
(Invisible members) என்பது நமக்குத் தெரியும்.
1.அவர்கள் கிறிஸ்துவைப் பற்றி தவிர்க்கமுடியாத அறியாமையில் , (Invincible ignorance) இருந்து
அதாவது கத்தோலிக்கத் திருச்சபையைப்பற்றி அறிய முடியாதவர்களாய் இருந்து,
2.இறை நம்பிக்கையும், இறைவன் பராமரிப்பில் நம்பிக்கையும்
(Belief in the existence and providence of God)
உள்ளவர்களாக இருந்து,
3.இயற்கைச் சட்டத்திற்கும்,
அவர்களது இருதயத்தில் இறைவனால் எழுதப்பட்ட கட்டளைகளுக்கும்
(பத்துக் கட்டளைகளும் அனைவர் இருதயங்களிலும் இறைவனால் எழுதப்பட்டுள்ளன)
கீழ்ப்படிந்து நடந்தால்
அவர்களுக்கும் இரட்சண்யம் உண்டு.
இத்தகையோர்தான் ஞானஉடலின் காணமுடியாத உறுப்பினர்கள்.
(Invisible members)
"Those who labor under invincible ignorance of our most holy religion,
but who carefully observe the natural law (that is to say, pagans)
and its commandments
written by God in the hearts of all men
are able
through the efficacious power of divine light and grace
to attain etenal life."
(Pius IX)
13."ஏனெனில், திருச்சட்டத்தைக் கேட்பதால் மட்டும் யாரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை: திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்களே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
- 14 திருச்சட்டத்தைப் பெற்றிராத புறவினத்தார் அதில் உள்ள கட்டளைகளை இயல்பாகேவே நிறைவேற்றும்போது, அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாத போதிலும் அவர்கள் உள்ளமே சட்டமாய் அமைகிறது.
- 15 திருச்சட்டம் கற்பிக்கும் செயல்முறை தங்கள் உள்ளத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் எண்பிக்கிறார்கள்: ஏனெனில், அவர்களுடைய மனச்சான்று அதற்குச் சாட்சியாய் நிற்கிறது. பிறர் செய்வது குற்றமா, குற்றமில்லையா என அவர்கள் தங்கள் மனத்திற்குள் தீர்ப்பிடுவதும் அதற்குச் சாட்சி.
- 16 நான் அறிவிக்கும் நற்செய்தியில் உள்ளதுபோல, இயேசுகிறிஸ்துவின் வாயிலாய்க் கடவுள் மனிதர் உள்ளங்களில் மறைந்திருப்பவற்றைத் தீர்ப்பிடும் நாளில் மேற்சொன்னவையெல்லாம் வெளியாகும்.
- (உரோமை. 2:13-16)
கிறிஸ்துவின் ஞானஉடலின் காணமுடியாத உறுப்பினர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்பது இறைவனுக்கும், அவர்களுக்கும் மட்டுமே தெரியும்.
கிறிஸ்து மனுக்குலம் முழுமையும் இரட்சண்யம் பெறவே பலியானதால்
இறைவனை நம்பி, அவரது பராமரிப்பையும் நம்பி, அவரது கட்டளைககளை அனுசரித்து வாழும் அனைவரும்
நம்முறைப்படி ஞானஸ்நானம் பெறாவிட்டாலும்,
(இவர்கள் பெற்றிருப்பது 'ஆசை ஞானஸ்நானம். Baptism of desire.')
கிறிஸ்துவின் ஞானஉலைச் சேர்ந்தவர்களே.
அவர்களுக்கும் இரட்சண்யம் உண்டு,
மோட்ச வாழ்வும் உண்டு."
"ஏங்க, ஒரு சந்தேகம் கேட்கலாமா? "
"உனக்கு சந்தேகம் வேண்டுமா?"
"இல்லை, பதில் வேண்டும்.
நரகத்துக்கும் நிறையபேர் போயிருப்பாங்களோ? "
"1. யாரைப்பற்றியும் தீர்ப்பு சொல்லும் அதிகாரம் நமக்கு இல்லை.
2.மோட்சத்திற்குச் சென்றுள்ள புனிதர்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான ரிக்கார்டு திருச்சபையிடம் உள்ளது.
நரகத்திற்குச் சென்றுள்ள எந்த மனிதரைப்பற்றிய ரிக்கார்டும் இல்லை.
3.நாம் மோசமான பாவிகள் எனக்கருதும் பெரிய கொலைகாரர்கள்கூட இறக்கும் இறுதி நொடியில் மனம்திருந்தி மன்னிப்பு கேட்க வாய்ப்பு உண்டு.
கேட்டால் கொடுக்கப்படும்.
ஏனெனில் அவர்களுக்கும் சேர்த்துதான் இயேசு இரத்தம் சிந்தினார்.
4.நாம் அனைவரும் சேர்ந்துதான் நம் பாவங்களால் இயேசுவின் மரணத்திற்குக் காரணம் ஆனோம்.
ஆகவே "பிதாவே, இவர்களை மன்னியும்"என்ற இயேசுவின் செபத்தில் மனுக்குலத்தின் அனைத்துப் பாவிகளின் பெயர்களும் இடம் பெற்றிருக்க வாய்ப்பு உண்டு.
மகனின் செபத்தை தந்தை அப்படியே ஏற்றிருக்கவும் நூற்றுக்கு நூறு வாய்ப்பு உண்டு.
5..நாம் நல்லதையே நினைப்போமே!
நல்லதை நினைத்தால் பாவமில்லை."
இறைவா!
இரக்கமுள்ள தந்தையே,
உம் திருமகன் தன் விலை மதிப்பில்லா இரத்தத்தை மனுக்குலம் முழுமையும் இரட்சண்யம் பெறத்தானே சிந்தினார்.
அவர் இரத்தத்தின் பயனை மனுக்குலம் அனைத்திற்கும் அளித்தருளும், அப்பா.
அனைவரையும் இரட்சித்தருளும், அப்பா.
'உன்னை நேசிப்பதுபோல் உன் அயலானையும் நேசி' என்பது உமது கட்டளைதானே, அப்பா.
நான் மோட்சத்திற்கு வர ஆசைப்படுகிறேன்.
மனிதர் எல்லோரும் மோட்சத்திற்கு வரவேண்டும் என்று ஆசைப்படுவது தப்பா, அப்பா.
"என் பெயரால் எதைக் கேட்டாலும் என் தந்தை தருவார்"
என்று உமது மகன் சொல்லியிருக்கிறார்.
உம் மகன் சிந்திய விலை மதிப்பில்லா இரத்தத்தின் பெயரால் கேட்கிறேன்.
மனுக்குலம் முழுமையும் இரட்சியும், அப்பா.
ஆமென்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment