இரத்தம், கிறிஸ்தவத்தின் வித்து.
********************************
"செல்வம், உட்கார்."
"ஏதோ கதை சொல்லப்போகிறேன்னு சொன்னீங்க."
"ஆமா. அதுக்காகத்தான் உட்காரச் சொன்னேன். உட்கார்.
நான் கதையைச் சொல்லி முடிக்குமட்டும் குறுக்கே பேசக்கூடாது"
"பேசினால்?"
"கதை கட் ஆயிடும்."
"சரி, சொல்லுங்க."
"ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாரு."
"நாட்டுயா, ஊர்லயா? "
"இப்பதானே சொன்னேன், குறுக்கே பேசக்கூடாதுன்னு."
"மன்னிச்சிக்கிடுங்க. நாட்டுக்குத்தானே ராசா. அதுதான் கேட்டேன். "
"நாட்டுக்கே ராசாவா இருந்தாலும் அவர் ஒரு ஊர்லதான தங்க முடியும்.
வாயப் பொத்திக்கிட்டு சொல்லுவதக் கேளு.
அவர் ஒரு நாள் மந்திரியை அழைத்துக்கொண்டு நாட்டைச் சுற்றிப்பார்க்கப் போனார்.
வெயில் அதிகமாக இருந்ததினால ஒரு மரத்து நிழலில போய் நின்னார்.
மரத்த ஏறிட்டுப் பார்த்தார், அது அவருக்குப் பிடிக்காத வாதமடக்கி மரம்.
பெரிய மரமாக வளர்ந்திருந்தது.
அவருக்குப் பயங்கர கோபம் வந்தது.
"என் நாட்டில் வாதமடக்கி மரமா? இது யாருடைய வேலை?
மந்திரி! "
"மன்னா! "
"எனக்கு இந்த மரம் பிடிக்காதுன்னு உமக்குத் தெரியுமா இல்லையா? "
"எனக்குத் தெரியும். ஆனால் இந்த மரத்திற்குத் தெரியாதே! தெரியாமல் வளர்ந்துவிட்டது. மன்னித்து விட்டுவிடுங்கள், மன்னா."
"மன்னிப்பா? அது அகராதியிலே கிடையாது!
மந்திரி!"
"மன்னா!"
"இனி என்னை மன்னா என்று அழைக்காதே. அரசே என்று அழை."
"ஏன் மன்னா? "
"திரும்பவும் மன்னாவா? அது மன்னிப்பை ஞாபகப்படுத்துகிறது! "
ஆகட்டும் மன்னா, சாரி, அரசே."
" மந்....இல்லை, அமைச்சரே, உடனடியாக இந்த மரத்தைக் கொலை செய்யவேண்டும்.
துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யவேண்டும்.
ஒவ்வொரு துண்டையும் மண்ணிற்குள் புதைக்கவேண்டும்.
அதுதான் இம்மரத்திற்கு நான் கொடுக்கும் 'மர ண' தண்டனை. புரிகிறதா?"
"புரிகிறது, மன், சாரி, அரசே!
மரம், மரணம்.
ஒரு மரத்திலிருந்து மரணம் வந்தது. இன்னொரு மரம் மரணத்தை வென்றது."
"அதென்ன சம்பந்தம் இல்லாமல் உளரிக்கொண்டிருக்கிறீர்! "
"உளரவில்லை, அரசே,
மரத்திற்கும் மரணத்திற்கும் உள்ள சம்பத்தத்தை நினைத்துப் பார்த்தேன்."
"மரத்துண்டுகளை புதைக்கும்போது ஒரு முக்கியமான விசயத்தைக் கவனிக்க வேண்டும்.
மரத்துண்டுகளின் முக்கால்பகுதி பூமிக்குள் இருக்கவேண்டும். கால் பகுதி பூமிக்கு வெளியே இருக்கவேண்டும்.
புதைக்கப்பட்ட பகுதியில்,
"இதுதான் அரசருக்குப் பிடிக்காதவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை."
என்று எழுதப்பட்ட பலகை ஒன்று வைக்கப்படவேண்டும்.
எல்லாம் இப்போதே என் கண் முன்னே நிறைவேற்றப்பட வேண்டும்.
புரிகிறதா?"
"ஒன்று மட்டும் புரியவில்லை.
துண்டுகளைப் புதைக்கும்போது எதற்ககாகக் கால்பகுதி வெளியே தெரியவேண்டும்?"
"இதுகூடத் தெரியாத உம்மை எந்த மடப்பயல் அமைச்சர் ஆக்கினான்?"
"நீங்கள்தான் அரசே!"
"சாரி. கோபத்தில் என்னையே மறந்துவிட்டேன்."
"நீங்கள்தான் அரசர், அரசே."
"யோவ், அது ஞாபகம் இருக்கிறது.
கால்வாசி வெளியே தெரியாவிட்டால் மரம் கொலை செய்யப்பட்டடு புதைக்கப்பட்ட விசயம் வருங்காலத்தவருக்கு எப்படித் தெரியும்?
பலகையில் இருக்கும்,
"இதுதான் அரசருக்குப் பிடிக்காதவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை."
என்ற வாசகத்தை வாசிப்பவர்கள், "எதுதான்?" என்று கேட்பார்கள்.
பதில் சொல்ல நீர் இங்கேயே நிற்கிறீரா?"
"அதுவும் சரிதான்."
"நீரே இங்கேயே நிற்க சம்மதம் என்று சொகிறீரா?"
"ஐயோ! அரசே! இல்லை! "
அரசனது உத்தரவு அவன் கண் முன்பே நிறைவேற்றப்பட்டது.
அது மட்டுமல்ல, அவன் நாட்டிலுள்ள அத்தனை வாதமடக்கி மரங்களுக்கும் அதே தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதன் பின் நாடு முழுவதும் நல்ல மழை பெய்தது.
அரசர் தான் வாதமடக்கி மரங்களுக்குக் கொடுத்த மரணதண்டனைதான் மழையாகப் பொழிகிறது என்று பெருமைப்பட்டுக் கொண்டான்.
ஆறு மாதம் கழித்து அமைச்சரை அழைத்து,
"அமைச்சரே! நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாமா?"
இருவரும் புறப்பட்டனர்.
நாட்டிலே மன்னருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
நாடெங்கும் இலட்சக்கணக்கான வாதமடக்கிமரங்கள் பெய்த மழையில் செழித்து வளர்ந்து அவர்களை வரவேற்றன.
எல்லா மரங்களுக்கும் ஆறு மாதம்தான் வயது!
மன்னருக்குப் பயங்கர கோபம்.
"இதெப்படி நடந்தது? ''
மந்திரியைப் பார்த்துக் கத்தினார்.
ஆனால் மக்களுக்கு மகிழ்ச்சி.
"அரசே! உங்கள் சாதனைக்கு நன்றி!"
"என் சாதனையா? யார் சொன்னது?"
"எல்லா மக்களும் சொல்கிறார்கள். வாதமடக்கியின் இலை நெற்பயிருக்கு நல்ல இயற்கை உரம்.
அடுத்து நெல் பயிரிடுமுன் மரத்தின் குளையை அறக்கி, வயலில்போட்டு உழவு உழுவோம்.
அது மக்கி உரமாகி விளைச்சலை பன் மடங்கு
அதிகரிக்கும்!
மன்னர் வாழ்க!"
மன்னருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
"அமைச்சரே!"
"அரசே. சொல்லுங்கள்."
"இது எப்படி நடந்தது? மரங்களை வெட்டிப் புதைத்துவிட்டோமே! "
"வாதமடக்கிமரத்தின் இரகசியமே அதுதான்.
புதைக்கப்பட்ட கொப்பின் சிறு பகுதி வெளியே தெரிந்தாலும் அது தளிர்த்து மரமாகிவிடும்.
உண்மையில் நீங்கள் நடத்தியது மரண தண்டனை அல்ல, மரநடுவிழா!"
ஹலோ! கதை நல்லாயிருந்ததா?
"Super!"
"இந்தக் கதையைக் கேட்டவுடன் எதாவது ஞாபகத்துக்கு வருதா?"
"வேதசாட்சிகளின் இரத்தம், திருச்சபையயின் வித்து."
"கரைக்ட். கிறிஸ்தவர்களை அழிக்கவேண்டுமென்று அவர்களை வெட்டி வீழ்த்தினால்
அவர்கள் சிந்திய இரத்தத்திலிருந்து இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் முளைத்து எழுவார்கள்.
இன்று இலங்கையில் சிந்தப்பட்டுள்ள
நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்களின் இரத்தத்திலிருந்து
இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் முளைத்து எழுவார்கள்.
கிறிஸ்தவத்தைப் பொறுத்தமட்டில் இரத்தம் சிந்துவது ஒன்றும் புதிதல்ல.
கிறிஸ்து நமக்காகக் கல்வாரியில் சிந்திய இரத்தம்தான் கிறிஸ்தவம்.
உண்மையில் கிறிஸ்துவின் இரத்தத்தைக் குடித்துதான் நாமே வளர்ந்து கொண்டிருக்கிறோம்.
நமது ஆன்மீக உடம்பில் ஓடிக்கொண்டிருப்பது கிறிஸ்துவின் இரத்தம்தான்."
"அதுவும் தவிர மரணம் என்பது மோட்சத்தின் வாசல்.
இன்று ஆலயங்களுக்குக் குண்டு வைத்தவர்கள்
350 கிறிஸ்தவர்கட்கு மோட்சவாசலைத் திறந்துவிட்டிருக்கிறார்கள்!
என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.
எதுநடந்தாலும் இறைவன் நம்மோடு இருக்கிறார்."
லூர்து செல்வம்
No comments:
Post a Comment