'நான்' ஒழிக.
***************
நமது உடல் தேவைகளை ஒறுப்பது,
உடல் இன்பங்களைத் தியாகம் செய்வது
உடலைப் பட்டினி போடுவது,
மாமிச உணவைத் தவிர்ப்பது,
அப்பப்போ தின்னும் தின்பண்டங்களைத் தவிர்ப்பது,
உடலைக் கசையால் அடிப்பது
போன்றவைமட்டும்தான் தபசு முயற்சிகள் என்று அநேகர் நினைக்கிறார்கள்.
தங்களுக்கு ஒரு ஆன்மா இருக்கிறது,
இரட்சண்யம் அடையவேண்டியது ஆன்மா மட்டுமே,
நமக்கு உடல் தரப்பட்டிருப்பது இரட்சண்யம் அடைய ஆன்மாவுக்கு உதவுவதற்காகவே,
உதவிசெய்தபின் ஆன்மா மட்டுமே கடவுளிடம் போகும்,
உடல் மண்ணுக்கு இரையாகிவிடும்
என்ற உண்மை தெரிந்தும் அதை மறந்துவிடுகிறார்கள்.
எவ்வாறு ஆன்மா இன்றி உடல் வெறும் சடமாகிவிடுறதோ (Lifeless matter)
அவ்வாறே ஆன்மீகத் தபசு இன்றி உடல் தபசினால் ஒரு பயனும் இல்லை.
முதலில் ஆன்மா சுத்தமாக இருக்கவேண்டும்.
ஆன்மாவில் ஒரு சாவான பாவத்தை வைத்துக்கொண்டு எத்தனை முறை உடலைப் பட்டினி போட்டாலும், கசையால் எத்தனை முறை அடித்துக் கொண்டாலும்
ஆன்மீக பலன் எதுவும் இல்லை.
பானையில் அதன் வாய் அளவு ஓட்டையை வைத்துக்கொண்டு எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும்
அது மண்ணுக்குள்தான் போகுமேயொழிய பானை சிறிதும் நிறம்பாது.
எப்படி நம் உடலைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்காவிட்டால் அது பாவ இன்பங்களைத் தேடி அலையுமோ,
அதுபோலவே,
நமது ஆன்மாவிலுள்ள 'நான்'(Ego) என்ற உணர்வைக்
ஒழிக்காவிட்டால்
கடவுள் அமரவேண்டிய இடத்தில் அது அமர்ந்துகொண்டு தனியே
"நான்தான் உலகின் மையம்.
என்னைச் சுற்றிதான் எல்லாம் இயங்கவேண்டும்,
என்க்காகத்தான் எல்லாம்"
என்று லூசிபெர்பாணியில் சிந்திக்க ஆரம்பிக்கும்.
இதற்குப் பெயர்தான் 'கர்வம்' (Pride).
சீமக்கர்வ மரம் வளரும் இடத்தில் மலர்ச்செடிகள் வளர இயலாது.
கர்வம் இருக்கும் இடத்தில் புண்ணியங்கள் எதுவும் வளராது.
சாத்தானின் குணமான கர்வத்தை அகற்றிவிட்டு,
சாத்தானின் தலையை நசுக்கிய மரியன்னையின் தாழ்ச்சியில் நாம் வளர்ந்தால்,
ஆண்டவரின் அடிமைகளாகச் செயல்பட்டால்
நமது எல்லா தவமுற்சிகளும் பலன் தரும்.
இயேசு
பரிசேயனும் ஆயக்கிகாரனும் செய்த செபத்தைப் பற்றி கூறும்போது,
பரிசேயன் தன்னையே பெருமையாக மையப்படுத்திச் செபிப்பதையும்
(வாரத்திற்கு இருமுறை நோன்பிருக்கிறேன். என் வருவாயிலெல்லாம் பத்திலொரு பகுதி கொடுக்கிறேன்.)
ஆயக்காரன் தன்னைப் பாவி எனத்தாழ்த்தி செபிப்பதையும்
(கடவுளே, பாவி என்மேல் இரக்கமாயிரும்.)
குறிப்பிட்டு
இறைவனுக்கு ஏற்புடையவனாகி வீடுதிரும்பியவன் ஆயக்காரனே என்று கூறியதோடு
"தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்: தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்."
என்றும் குறிப்பிடுகிறார்.
கர்வத்தோடு செய்யப்படும் எதுவும் கடவுள் முன் நற்செயல் அல்ல.
"நான் தபசு காலம் முழுவதும்
நோன்பிருக்கிறேன்."
என்று தன்னைப் பற்றியே பெருமையடித்துக் கொள்பவனுக்குத் நோன்பின் பலன் கிடைக்காது.
நமது அயலானை இறைவனில் நம் சகோதரனாக ஏற்றுக் கொண்டு வாழாவிட்டால்,
நம்மை வெறுப்பவரை நேசிக்காவிட்டால்,
மற்றவர்கள் வார்த்தைகளாலோ, செயல்களாலோ அவமானப்படுத்தும்போது
அதை இயேசுவுக்காக பொறுத்துக்கொள்ளா
விட்டால்,
பிறர்மீது ஏற்படும் கோபத்தைப் புன்சிரிப்பாக மாற்றமுடியாவிட்டால்,
சிந்தனை, பார்வை, கேள்வி, பேச்சு மற்றும் செயலில் தூய்மையாக இருக்காவிட்டால்
நாம் செய்யும் தர்மமும், தவமுயற்சிகளும் பலனற்ற வெறும் செயல்களே.
ஆன்மீகத் தவமுயற்சிகள் இன்றி வெறும் உடல் சார்ந்த ஒறுத்தலால் ஒரு பயனும் இல்லை.
ஆண்டவரே,
சர்வ வல்லப தேவனாகிய நீரே
உம்மையே தாழ்த்தி,
மனிதனாகி,
கீழ்ப்படிதல், பொறுமை, சாந்தம் போன்ற புண்ணியங்களைக் கொண்டவராய்,
உமது படைப்புகளாலேயே ஏற்பட்ட அவமானங்களைத் தாங்கிக்கொண்டு
எங்களுக்காகப் பலியானீர்.
நாங்கள் பிறப்பிலேயே தாழ்ந்தவர்களாக இருந்தும்
எங்கள் உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளாமல்,
வீண்பெருமை என்னும் பாவத்தால்
எங்கள் ஆன்மீக வாழ்வைப் பாழடித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆண்டவரே பாவிகளாகிய எங்கள்மீது இரங்கி,
எங்களைத் தாழ்ச்சி உள்ள உமது அடியார்களாக மாற்றும்.
எங்களுக்கான பலியான உமக்காக
நாங்கள் பலியாக வரம்தாரும்.
ஆமென்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment