உங்களுக்கு விசுவாசமில்லையா?
***********************
சீடர்கள் இயேசுவைப் படகில் அழைத்துச் சென்றனர்.
அவருடன் வேறு படகுகளும் சென்றன.
அப்போது பெரிய புயல் காற்று உண்டாயிற்று.
அலைகள் படகின்மேல் மோத, படகு நீரால் நிரம்பும் தறுவாயிலிருந்தது.
இயேசு பின்னணியத்தில் தலையணை மீது தூங்கிக்கொண்டிருந்தார்.
அவர்கள் அவரை எழுப்பி, "போதகரே, மடிந்து போகிறோமே: உமக்கு அக்கறை இல்லையா?" என்றனர்.
அவர் எழுந்து, காற்றைக் கடிந்து கடலை நோக்கி, "இரையாதே, சும்மாயிரு" என்றார்.
காற்று நின்றது, பேரமைதி உண்டாயிற்று.
"He rose up and checked the wind, and said to the sea, Peace, be still. And the wind dropped, and there was deep calm."
பின், அவர் அவர்களை நோக்கி, "ஏன் இவ்வளவு பயம்? இன்னும் உங்களுக்கு விசுவாசம் இல்லையா?" என்றார்.
உலகில் நடப்பதெல்லாம் இறைவனுடைய நித்திய திட்டப்படிதான் நடக்கின்றன.
தற்செயலாக எதுவும் நடப்பதில்லை.
காரண காரியத் தொடர்போடு கடவுள் ஒவ்வொரு செயலையும் நடத்துவிக்கிறார்.
மாற்கு குறிப்பிடுகிற படகுப் பயணத்தில்
சீடர்களின் விசுவாசத்தைச் சோதிப்பதற்காகவே ஒரு புயற்காற்றை உருவாக்கிவிட்டு
இயேசு நிம்மதியாகத் தூங்குகிறார்.
அலைகள் படகின்மேல் மோதியதால் நீர் படகிற்குள் வந்து படகை நிரப்ப ஆரம்பித்தது.
சீடர்களின் விசுவாசம் ஆழமானதாக இருந்திருந்தால் 'இயேசு நம்மோடிருக்கிகிறார், நமக்கு புயலாலும் அலைகளாலும் எந்த ஆபத்தும் வராது' என்று
அமைதியாய், புயலை இரசித்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும்.
ஆனால் அவர்களோ விசுவாச பற்றாக்குறை காரணமாக
"போதகரே, மடிந்து போகிறோமே: உமக்கு அக்கறை இல்லையா?" என்று அலற ஆரம்பித்தனர்.
இயேசு எழுந்து புயலை அடக்கிவிட்டு,
அவர்களின் விசுவாசக்குறைவுக்காக அவர்களைக் கண்டித்தார்.
இயேசுவை யூத குருக்கள் கைது செய்யும் வரை அவரோடு இருந்த அவருடைய சீடர்கள்,
கைது செய்தவுடன்
'அனைவரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.'
எவ்வளவு விசுவாசம்!
சீடர்களைக் காப்பாற்றுவதற்காக இயேசு,
"என்னை நீங்கள் தேடிவந்திருந்தால் இவர்களைப் போகவிடுங்கள்"
என்று சொன்னது உண்மைதான்.
ஆனால் அவர்மீது ஆழமான விசுவாசம் உள்ள சீடர்களாய் இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?
"எங்களால் எங்கள் ஆண்டவரை விட்டு பிரிந்திருக்க முடியாது. கைது செய்வதானால் எங்களையும் சேர்த்து கைது செய்யுங்கள்." என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்!
சொல்லவில்லையே!
இராயப்பர் 'தொலைவில்' அவரைப் பின்தொடர்ந்தார்.
பின்தொடர்ந்து ஒன்றும் சாதிக்கவில்லை.
இயேசுவை மும்முறை மறுதலித்தார்!
இயேசு சிலுவையில் தொங்கும்போது
சீடர்களில் அருளப்பர் மட்டும்தான் சிலுவையடியில் நின்றுகொண்டிருந்தார்.
படகுப் பயணத்தின்போது இயேசு சீடர்களின் அருகில் இருந்தார். ஆனால் தூங்கிக் கொண்டிருந்தார்.
பாடுகளின்போது ஆண்டவர் விழித்திருந்தார். ஆனால் சீடர்கள் அருகே இல்லை.
நாமும் இயேசுவின் சீடர்கள்தான்.
நமது நிலை என்ன?
நமது விசுவாசம் எந்த நிலையில் உள்ளது?
படகுப் பயணதின்போது இயேசு சீடருடன் இருந்தது போலவே இப்போதும் நம்மோடும் இருக்கிறார்.
நாம் அதை உணர்கிறோமா?
அன்று சீடர்களின் பார்வையில் இருந்தார்.
இப்போது நமது ஊனக்கண்களால் பார்க்க முடியாவிட்டாலும் அவர் நம்மோடு இருக்கிறார்.
அவரை நமது விசுவாசக்கண்ணால் பார்த்து, அந்த உணர்வோடு நாம் வாழ்கின்றோமா?
அவரை மறந்து வாழ்ந்தால்,
பாடுகளின்போது அவரது சீடர்கள் ஓடிப்போனதுபோல
நாமும் ஓடிவந்துவிட்டோம் என்று அர்த்தம்.
நமக்குள் ஒரு பழக்கம் இருக்கிறது.
துன்பவேளையிலும், ஆபத்து வேளையிலும், நமக்கு ஏதாவது வேண்டுமென்றாலும் கடவுளைத் தேடுவது.
பிரச்சினை தீர்ந்ததும் மறந்துவிடுவது.
படகுப்பயண சீடர்கள்கூட புயல் அடித்திராவிட்டால் ஆண்டவரை எழுப்பியிருக்க மாட்டார்கள்.
நம்மை மறக்காமல் நினைத்துக் கொண்டிருக்கும் கடவுள்
நாம் அவரை மறந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்
அவ்வப்போது சிலுவைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்" (1தெசெ..5:18) என்ற புனித சின்னப்பரின் அறிவுரைக்கேற்ப
நம் வாழ்வில் சிலுவையைச் சுமக்க நேர்ந்தாலும்,
மகிழ்ச்சி பொங்கினாலும்
இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்.
ஏனைனில் எல்லா நிலைகளிலும் நம்மைப் பராமரித்து வழி நடத்துபவர் அவரே.
அவர் திட்டமிட்டு நம்மில் செயல்படுத்தும் ஒவ்வொரு நிகழ்வும் நமது ஆன்மீகப் பயணத்தில் நமக்கு உதவி செய்வதாகத்தான் இருக்கும்.
நமது ஒவ்வொரு அசைவிலும் ஆண்டவர் இருப்பதால்
நாம் நம் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும்
அவரது நினைவோடுதான் வாழவேண்டும்.
நாளின் ஒவ்வொரு செயலையும்
"தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயரால்"
ஆரம்பித்து, முடித்தால்
செயல் முழுவதும் கடவுளின் சன்னிதியில் நடைபெறும்.
சில சமயங்களில் இயேசு படகில் தூங்கிக்கொண்டிருந்தது போல
நமது உள்ளத்தின் ஒரு ஓரத்தில்' தூங்குவது போல' அமைதியாக உட்கார்ந்திருக்கலாம்.
ஆனால் தூங்கமாட்டார்.
நாம் இருட்டினில் நடப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.
ஆனால் இயேசுவின்மேல் கொண்டுள்ள விசுவாசத்தில் உறுதியாக இருக்கவேண்டும்.
நம் இயேசு நம்மைவிட்டு எந்தக் காரணத்தை முன்னிட்டும் விலகமாட்டார்.
நாம் எந்தச் சூழ்நிலையிலும் அவரை மறந்துவிடக்கூடாது.
அடிக்கடி திருப்பலி காண்பது,
நற்கருணை உட்கொள்வது, நேரம் கிடைக்கும் போதெல்லாம்
நற்கருணை நாதரைச் சந்திப்பது
போன்றவவை
நாம் எப்போதும் இயேசுவோடு வாழ உதவியாய் இருக்கும்.
இயேசுவின் பாடுகளின்போது அவரது சீடர்கள் ஓடி ஒழிந்து கொண்டார்கள்.
ஆயினும் அவர்கள்மேல் இயேசு கோபம் கொள்ளவில்லை.
அவரது மரணத்துடன் பாடுகள் முடிவடைந்தன.
அடக்கம் செய்யப்பட்ட அவருடைய உடலுக்கு எந்தவித வேதனையும் இல்லை.
உடலை விட்டுப் பிரிந்த அவரது ஆன்மா
நல்ல மரணம் அடைந்து இரட்சண்யத்துக்காக காத்துக்கொண்டிருந்த
பழைய ஏற்பாட்டு ஆன்மாக்களிடம் அவர்கள் இரட்சிக்கப்பட்ட செய்தியை அறிவித்து
அவர்களைத் தந்தையிடம் அழைத்துச் செல்ல சென்றது.
மீட்கப்பட்ட நல்ல கள்ளனும் இயேசுவுடன் விண்ணகம் சென்றான்.
"இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்"
என்று இயேசு கொடுத்த வாக்குறுதிக்கேற்ப, அன்றே அவன் சென்றுவிட்டான்.
மரித்த மூன்றாம் நாள் உயிர்த்த இயேசு தன் சீடர்ளைச் சந்தித்தார்.
தன்னை விட்டு ஓடிப்போனதற்காக அவர்ளைக் கடிந்துகொள்ளவில்லை.
மாறாக "உங்களுக்குச் சமாதானம் உண்டாகுக." என்று வாழ்த்தினார்!
என்னே இயேசுவின் அன்பு!
நமக்கும் இயேசு சமாதான வாழ்த்தைத்தான் கூறுகிறார்.
அந்த வாழ்த்தே நம்மை விண்ணுலகிற்கு அழைத்துச் செல்லும்.
இவ்வுலகில் அவரை விசுவாசக் கண்ணால் பார்த்த நாம்
அவரை நேருக்கு நேர் பார்ப்போம்!
இவ்வுலகில் விசுவாசம் மிக முக்கியம்.
விசுவசிப்போம்,
அதன்படி நடப்போம்,
விண்ணகம் செல்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment