Friday, April 19, 2019

யாருக்காக வாழ வேண்டும்?

யாருக்காக வாழ வேண்டும்? https://lrdselvam.blogspot.com/2019/04/blog-post_19.html

யாருக்காக வாழ வேண்டும்?
******************************

இயேசு சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்தார்.

நாம் எப்படிச் சிந்திக்க வேண்டும், எப்படிப் பேசவேண்டும், எப்படிச் செயலாற்ற வேண்டும் என்று சொன்னவர்,

சொன்னதோடு நிற்கவில்லை, அப்படியே வாழ்ந்து காண்பித்தார்.

இது நன்கு புரியவேண்டுமானால், நமக்கு ஏற்கனவே தெரிந்த சில உண்மைகளை நினைவிற்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் இயேசு  சொன்னதும், செய்ததும் நமக்குப் புரியும்.

நினைவில் கொள்ளவேண்டிய அடிப்படை உண்மைகள்:

1.ஒரே கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார்.

2.மூன்று ஆட்களும் ஒருவருக்கொருவர் ஏற்ற தாழ்வு உள்ளவர்கள் அல்ல. அளவற்றவர்கள்

3.மூவருக்கும்  ஒரே தேவசுபாவம், ஆகவே மூவரும் ஒரே கடவுள். மூவருக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம்.

4.மனித அவதாரம் எடுத்தது இரண்டாம் ஆளாகிய மகன் மட்டும்தான்.

5.கடவுள் நித்தியர், அதாவது துவக்கமும், முடிவும் இல்லாதவர்.

6.கடவுளுடைய எல்லா பண்புகளும் அளவுகடந்தவை.

7.அவருடைய திட்டங்கள் யாவும் நித்தியமானவை.

8.கடவுள் அரூபி, ஆகவே அவர் இருக்க இடம் (material place) தேவை இல்லை.

அவர் எங்கும் இருக்கிறார் என்றால், நம்மைப் போல இடத்தை அடைத்துக்கொண்டு இருக்கவில்லை.

தனது பண்புகளால் எங்கும் இருக்கிறார்.

9. அவர் நிறைவு (Perfect) உள்ளவராய் இருப்பதால் அவர் மாறாதவர்.

இறைமகன் மனிதனாய்ப் பிறந்தது நம்மை இரட்சிப்பதற்காக.

அவர் மனிதனாய்ப் பிறந்து உலகை இரட்சிக்க வேண்டுமென்பது பரிசுத்த தமதிரித்துவத்தின் சித்தம்.

தமதிரித்துவத்தின் சித்தத்தை நிறைவேற்றவே மகன் மனிதன் ஆனார்.

இரட்சண்யம் அடைய நாம் எப்படி வாழவேண்டும் என்பதை அவரே வாழ்ந்து காட்டினார்.

இரட்சண்யம் பெற முதலில் இவ்வுலக பற்று இருக்கக்கூடாது.

இவ்வுலகைப் படைத்து, பராமரித்துவரும் அவரே,

உலகப்பற்று அற்றவராக இருந்தார்.

அதனால்தான் வள்ளுவர்,

"பற்றுக பற்றற்றான்  பற்றினை பற்று விடற்கு."

என்றார்.

தனது பற்றற்ற குணத்தை நமக்கு எடுத்துக்காட்டத்தான்

முழு உலகிற்கும் சொந்தக்காரரான அவரே,

பிறக்கக்கூட இடம் கிடைக்காமல், ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஒரு ஏழைத்தாயிடம் பிறக்கிறார்.

"நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை"(லூக்.9:58)

என்று அவரே சொல்லக்கூடிய அளவுக்கு வசதி இன்றி வாழ்ந்தார். (அவரது பிரதிநிதிகள் இதைக் கொஞ்சம் கவனிக்கவேண்டும்)

அடக்கம் செய்யப்படக்கூட இடம் இல்லாமல் அடுத்தவருக்காக வெட்டப்பட்ட கல்லரையில் அடக்கம் செய்யப்பட்டார்.

இது அவரே போட்டுக்கொண்ட
திட்டம்.

இது மட்டுமல்ல அவரது வாழ்வில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும், அவரது மரணம் உட்பட, அவரே போட்டுக்கொண்ட
திட்டம்தான்.

அளவற்ற தன்மையில்  தந்தைக்கும்,பரிசுத்த ஆவியானவருக்கும்  நிகரான அவர்,

"தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்."

இயேசு நற்செய்தி அறிவிக்கும்போது  தான் தன் தந்தைக்கு நிகர் ஆனவராயிருந்தும்

தன்னையே தாழ்த்தி தந்தையை முன்னிலைப்படுத்திப் பேசினார் என்பதை விளக்க ஒரு  சில வசனங்கள்:

"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான். வானகத்திலுள்ள

'என் தந்தையின் விருப்பப்படி'

நடப்பவனே சேருவான்."
(மத்.7:21)

"ஆம்,

'என் தந்தையின் விருப்பம் இதுவே:' (அரு.6:40)

"நீயோ செபம் செய்யும்பொழுது, உன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு, மறைவாயுள்ள

'உன் தந்தையை நோக்கிச் செபம் செய்.

மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்." (மத்.6:6)

"தந்தாய்,

நானிருக்கும் இடத்திலே நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களும் என்னோடிருக்கும்படி விரும்புகிறேன்" (அரு.17:24)

"உங்கள் வானகத் தந்தை

அவற்றிற்கும் உணவளிக்கிறார். நீங்கள் அவற்றிலும் மிக மேலானவர்களன்றோ?"
(மத்.6:26)

"அவற்றை எனக்களித்த

என் தந்தை அனைவரிலும் பெரியவர்:

என் தந்தையின் கையிலிருந்து

. எவனும் அவற்றைக் கவர்ந்துகொள்ள முடியாது."(அரு.10:29)

"ஒருவன் எனக்கு அன்பு செய்தால் என் வார்த்தையைக் கேட்பான்:

என் தந்தையும் அவன்மேல் அன்புகூர்வார்:

நாங்களும் அவனிடம் வந்து, அவனோடு குடிகொள்வோம்."
(அரு.14:23)

அவர் நற்செய்தி அறிவிக்கும் போதெல்லாம் தன் தந்தையை

முன்னிலைப்படுத்தியே  எப்போதும் பேசினார்.

தந்தையின் சித்தம் இயேசுவின் சித்தம்தான்.

ஆனால், 'என் சித்தத்தை நிறைவேற்ற வந்தேன்' என்று ஒருபோதும் சொன்னதில்லை.

      "என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்." (அரு.6:38)

என்றுதான் சொன்னார்.

இதனால் இயேசு எந்த விதத்திலும் தந்தையைவிட குறைந்தவர் என்று அர்த்தம் அல்ல.

"நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன்."

அவரது  மனத்தாழ்ச்சியே அவரை இவ்வாறு பேசவைக்கிறது.

நாம் மனத்தாழ்ச்சி உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதற்கு
முன்னுதாரணமாக

சர்வ வல்லபரே தன்னையே தாழ்த்திக் கொண்டிருக்கிறார்.

கிறிஸ்து மனிதனாய்ப் பிறந்தது நம்மை இரட்சிபதற்கு.

நாம் மனிதனாய் வாழ்வது இரட்சண்யம் அடைவதற்கு.

நமது இரட்சண்ப் பாதை நாம் வாழும் திருச்சபை.

"நானே வழி" என்று கூறிய இயேசுவின் ஞான சரீரம்தான் (Mystical body) திருச்சபை.

நமக்கு செபிக்கக் கற்றுக் கொடுக்கும்போதுகூட தன்னை முன்னிறுத்தாமல் "விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே" என்றுதான் செபிக்கச் சொன்னார்.

அவரது வழி செல்லும் நாம் நம்மை முன்னிறுத்தி செயல்புரிகிறோமா?

அல்லது இறைவனை முன்னிறுத்தி செயல்புரிகிறோமா?

என்று சிந்திப்போம்.

வழக்கமாக நமது ஆசைகளை முன்னிறுத்தி

அவற்றை நிறைவேற்றவே இறைவனின் உதவியைக் கேட்போம்.

"நான் குருவானவராக ஆசைப்படுகிறேன்,  ஆண்டவரே உதவி செய்யும்.

நான் ஆசிரியர் ஆக விரும்புகிறேன், ஆண்டவரே உதவி செய்யும்.

நான் திருமணம் செய்ய விரும்புகிறேன், ஒரு நல்ல பெண்ணைப் பார்த்துத்தாரும்."

இப்படி நமக்கு வேண்டியதற்ககாகவே வேண்டும் பழக்கம் நம்மிடையே ஏற்பட்டுவிட்டது.

இறைவனைத் தியானித்து,  அவரது சித்தத்தை அறிந்து,

"இறைவா, என் ஆசை அல்ல, உமது சித்தமே என்னில் நிறைவேரட்டும்" நிறைவேரட்டும் என்று

எத்தனை பேர் செபிக்கிறோம்?

நமது ஞானவாழ்வில்கூட நமது ஆன்மீக வழிகாட்டியின் ஆலோசனை கேட்டு

அவர் சொற்படி எத்தனை பேர் நடக்கிறோம்?

நமது நலனைவிட தாய்த் திருச்சபையின் நலனை முன்னிறுத்தி எத்தனை பேர் செயல்படுகிறோம்?

பிறருக்காக மட்டும் எத்தனை பேர் வாழ்கிறோம்?

நாம் இரட்சண்யம் அடைய

1.இறைவனை நேசிக்க வேண்டும்.

2.அயலானை நேசிக்க வேண்டும்.

தன்னை நேசிக்க வேண்டும் என்பதற்கு கட்டளை தேவை இல்லை, மனித இயல்பில் உள்ளது.

இறைவனுக்காகவும், அயலானுக்காகவும் தன்னைத் தியாக செய்யலாம்.

ஆனால் தன் நலத்திற்காக இறைவனையும், அயலானையும் தியாகம் செய்யக்கூடாது.

ஆக, இரட்சண்யம் அடைய இறைவனையும், அயலானையும் முன்னிறுத்திதான் செயல்படவேண்டும்.

தன்னை முன்னிறுத்தினால் இறையன்பும், பிறரன்பும் அடிபட்டுப்போகும்.

இதனால்தான் இயேசு தன் தந்தையை முன்னிறுத்தி நற்செய்தி அறிவித்தார்,

நமக்காகப் பாடுபட்டு மரித்தார்.

தன்னைத் தியாகம் செய்தார்.

தந்தைக்கு நிகரான, தந்தையோடு ஒன்றான சர்வ வல்லபம் உள்ள இறைமகனே

நமது இரட்சண்யத்துக்காக

தன்னையே தாழ்த்தி

தந்தையை முன்னிறுத்தி செயல்பட்டிருப்பதால்,

அவரது சீடர்களாகிய நாம்

நமது எல்லா செயல்களிலும்

நமது விண்ணகத் தந்தையை முன்னிறுத்தி, அவரது அதிமிக மகிமைக்காக அவரை நேசிப்பதோடு

நமது அயலானையும் நேசிக்கவேண்டும்.

இறையன்பும், பிறரன்பும் சேவையாக மாற வேண்டும்.

சுருக்கமாக

இரட்சண்யம் அடைய

நாம்

நமக்காக அல்ல

இறைவனுக்காகவும்

அயலானுக்காகவும்

வாழவேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment