Monday, April 15, 2019

"என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?"

"என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?"

******************************

நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக இயேசு சிலுவையில் அறையப்பட்டு,

சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது

உடல்வேதனையோடு மனவேதனையும் தாங்கமாட்டாமல் அவர் கூறிய,

"என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?"

என்ற வார்த்தைகள் நமக்குக் கண்ணீரை வரவழைப்பதோடு,

சில சிந்தனைகளையும் எழுப்புகின்றன.

அவர்தான் கடவுள்.

அவர்'தான்' என்றேன், ஏனெனில் அவர்  பிதாவோடும், பரிசுத்த ஆவியயோடும்  ஒரே கடவுளானவர்.

கடவுளைப் பிரிக்கமுடியாது.

அவரே பிரிக்கமுடியாத கடவுளாக இருக்கும்போது ஏன்

"என் கடவுளே" என்று தன்னையே அழைக்கவேண்டும்?

அவரே அவரைக் கைவிட்டு விட்டாரா?

"ஏன் என்னைக் கைவிட்டீர் ?"  என்றால்,  அவர்மேலேயே  நம்பிக்கை போய்விட்டதா?

இது போன்ற கேள்விகள் எழும்.

எழவேண்டும், அப்போதுதான் அவற்றுக்கு விடைகாண முயல்வோம்.

கேள்வியே எழாவிட்டால் நாம் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை என்று அர்த்தம்.

மனிதனைப் படைத்த அதே கடவுள்தான்

மனிதன் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய மனிதனாய்ப் பிறக்கத் திட்டமிடுகிறார்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் (பாவம் தவிர) திட்டமிடும் அவர்,

அவர் செய்ய வேண்டிய ஒவ்வொரு செயலையும் திட்டமிடாதிருப்பாரா?

பாவத்தாலேயே புவிக்குள் புகுந்த துன்பத்தைப் பாவப்பரிகாரம் செய்யும் கருவியாகத் தேர்ந்தெடுத்தார்.

அதாவது,  பாவம் தான் புகுத்திய துன்பத்தாலேயே அழியத் திட்டமிட்டார்.

தனது உடல் மரணத்தாலேயே நமது ஆன்மீக மரணத்தை வெல்ல திட்டமிட்டார்.

பாவத்தின் சம்பளமான மரணத்தை மோட்சத்தின் வாசலாக மாற்ற திட்டமிட்டார்.

பாவத்தின் காரணங்களில் ஒன்றான நமது பலகீனத்தை அழித்திட பலகீனத்தையே கருவியாக பயன்படுத்தத் திட்டமிட்டார்.

சுருக்கமாகச் சொன்னால் முள்ளை முள்ளாலேயே எடுக்கத் திட்டமிட்டார்.

சர்வ சக்தி வாய்ந்த கடவுள்,  மிகவும் பலகீனமானமான மனிதனாய்ப் பிறந்தார்..

இயேசுவின் பாடுகளைக் கூர்ந்து கவனித்தால்

நம்மைப் பலம் உள்ளவர்களாக மாற்ற

அவரே திட்டமிட்டு தன் மீது தானே வரவழைத்துக் கொண்ட பலகீனத்தை எப்படிப் பயன்படுத்தினார் என்பது புரியும்.

பயம் அவர் அவராகவே ஏற்றுக்கொண்ட பலகீனம்.

பாடுகளின் ஆரம்பத்தில் பூங்காவனத்தில் பிதாவைநோக்கி செபிக்கும்போது,

தானே மனமுவந்து படப்போகிற பாடுகளின் வேதனை அவரை மிகவும் பயமுறுத்தியது.

"என் தந்தையே, கூடுமானால் இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்."

பயமாகிய பலகீனத்தை ஏற்றுக் கொண்டிருந்ததே இப்படிச் செபித்திருப்பதற்குக் காணம்.

அவர் கடவுள். அவரால் எல்லாம் கூடும்.

மனிதனாய்ப் பிறக்காமலேயே மனித பாவப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டிருக்க அவரால் கூடும்.

ஆனாலும் மனிதன் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பின் காரணமாகவே,

தன் அன்பை மனிதனுக்குப் புரியவைக்கவே மனிதன் ஆனார்.

ஒரு Analogy.

மகன் சென்னையில் படித்துக் கொண்டிருக்கிறான்.

கிராமத்தில் வாழும் தந்தை மகனுக்குப் பணம் அனுப்ப வேண்டும்.

பணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு,

வீட்டில் மகனுக்கென்றே செய்த பண்டவகைககளையும் எடுத்துக்கொண்டு,

இரவு முழுவதும் தூங்காமல் பஸ் பிரயாணம் செய்து,

சென்னைக்குச் சென்று

மகனைப் பார்க்கிறார்.

மகன் கேட்கிறான்,  "எதற்கு அப்பா இவ்வளவு சங்கடம்?

Bankல என் Account க்கு பணத்தை Transfer பண்ணிட்டு வீட்ல ரெஸ்ட் எடுக்கவேண்டியதுதான.

ஏன் தூக்கத்தக் கெடுத்து அலைஞ்சீங்க?" என்றான்.

அப்பா சொன்னார்,

" Bank ல பணத்தைப் போடலாம்.

என் அன்பைப் போடமுடியுமா? அம்மா செய்த பண்டத்தைப் போட முடியுமா?

மகனைப் பார்க்கும்போது கிடைக்கும் இன்பம் Bank ல பணத்தைப் போடும்போது கிடைக்குமா? "

இதேபோலதான் பாடுகள் படாமலேயே பாவங்களுக்குத் தீர்வு காண கடவுளால் முடியும்.

அது அவரது வல்லமையைக் காட்டும்.

ஆனால் கடவுள் அன்பை அல்லவா காட்ட விரும்பினார்!

"இத்துன்பக்கலம் என்னைவிட்டு அகலட்டும்."
என்று ஒரு வார்த்தை அவரே நினைத்திருந்தாலே அது அகன்றிருக்கும்!

ஏனெனில் பிதாவோடும் பரிசுத்த ஆவியோடும் அவர் ஒரே கடவுள்.

ஆனால் துன்பக் கலத்தை நீக்குவது அவர் திட்டமல்ல.

பாடுபட்டு மரிக்கவேண்டும் என்பதுதான் அவரது நித்திய காலத்திட்டம்.

பின் ஏன் அப்படி செபித்தார்?

மனித பலகீனமான பயத்தை பிதாவுக்கு ஒப்புக்கொடுத்து

நமது பயத்தை நீக்கி நம்மைத் தைரியப்படுத்துவதற்காக.

நமது ஆன்மீகப் பயணத்தில் பயம் வந்தால்,

"மகனே/மகளே, கவலைப்படாதே. எனக்கே பயம் வந்தது, உனக்காக நானே ஏற்றுக்கொண்ட பயம்,

உனக்கு முன்னுதாரணம் காட்ட.

அதை எப்படி அகற்றினேன்?

"எனினும், என் விருப்பப்படி அன்று, உமது விருப்பப்படி ஆகட்டும்"

என் பிதாவிடம் செபித்தேன், உனக்கு முன்மாதிரியாகத்தான்.

நீயும் உன் பயத்தைத் தந்தையிடம் ஒப்புவித்துவிட்டு,

"அப்பா, உம் சித்தப்படியே ஆகட்டும்.  நீர் என்னுள் இருக்கும்போது நான் ஏன் பயப்பட வேண்டும்? "

என்று செபி.

நான் உன் நிலைக்கு இறங்கிவந்து,

பாவமே செய்யமுடியாத நான் உன் பாவமூட்டையைச் சுமந்தது  ஞாபகம் இல்லை?

நான் நினைத்திருந்தால் என்னைக் கைது செய்ய வந்தவர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கியிருக்கலாம்.

ஆனால் உனது பாவங்களுக்குப் பரிகாரமாக,

என்அளவற்ற அன்பை உனக்குப் புரியவைக்க

என்னையே அவர்கள் கையில் ஒப்படைத்தேன்.

லூசிபெரும், அவனது கோடிக்கணக்கான சகாக்களும் என்னை எதிர்த்துப் பாவம் செய்தமையால் என்னை நித்தியதுக்கும் இழந்தனர்.

உனக்கும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காக,

நீ செய்த ஒவ்வொரு பாவத்துக்கும் பரிகாரமாக,

உன் பாவத்திற்கு உதவிய உனது ஒவ்வொரு உறுப்புக்கும் கொடுக்கவேண்டிய தண்டனையை

என்னுடைய ஒவ்வொரு உறுப்புக்கும் கொடுக்கச் செய்தேன்.

எனது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் அடிவாங்காத உறுப்பே கிடையாது.

அதற்காகத்தான் என்னைக் கற்றூணில் கட்டிவைத்து அடிக்கவிட்டேன்.

மூளையின் உதவியோடு உன் சிந்தனையாலும்,

கண்களின் உதவியோடு உன் பார்வையாலும்,

காதுகளின் உதவியோடு உன் கேள்வியாலும்,

மூக்கின் உதவியால் உன் நுகர்ச்சியாலும்,

வாயின் உதவியோடு உன் பேச்சாலும்,  பேருண்டியாலும்

செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக முண்முடி சூட்டவைத்தேன்.

முள்முடியைத் தலையில் வைத்து சுத்தியலால் அடிக்கும்போது முட்கள் தலைக்குள் ஆழமாக இறங்கி,

தாங்கவொண்ணாணா வலியைக் கொடுக்கவைத்து

தலையுறுப்புகளால் நீ செய்த பாவங்களுக்கு நான் பரிகாரம் செய்தேன்.

நீ தற்பெருமையால் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக

எனக்கு அரசவேடமிட்டு அவமானப்படுத்த அனுமதித்தேன்.

உனது கனமான பாவமூட்டையை சிலுவை வடிவில் கல்வாரி வரை சுமந்தேன்

நீ அடிக்கடி பாவத்தில் விழுந்தாலும்

சோர்ந்துவிடாமல் எழுந்து

விண்ணகப் பயணத்தைத் தொடரவேண்டும்
என்பதற்காக

நானே மூன்று முறை சிலுவையோடு விழுந்து எழுந்தேன்.

வண்டி இழுக்கும்போது விழுந்த மாட்டை எழுப்ப வண்டிக்காரன் தார்க்கம்பால் குத்தி, சாட்டையால் அடிப்பதைப் பார்த்திருக்கிறாயா?

அதைவிட மோசமாக என்னைக் கசையால் அடிக்கச் சம்மதித்தேன்.

எல்லாம் உனக்காக.

என்னைச் சிலுவையில் ஆணிகளால் அறையும்போதும்,

சிலுவையில் தொங்கும்போதும்
நான் என்ன வேதனை அனுபவித்திருப்பேன்  என்று எண்ணிப்பார்.

ஒரு முக்கியமான விசயத்தை மறந்திருக்கமாட்டாய் என நம்புகிறேன்.

நான் இரண்டாம் ஆளாகிய,
இறைமகன்.

பிதாவோடும், பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுளானவன்.

தேவ சுபாவத்தில் பாடு பட முடியாது.

மனித சுபாவத்தில் பாடுபட்டேன்.

பலகீனமான மனித சுபாவத்தில் பாடுபட்டேன்.

உனக்கே தெரியும் சாதாரண, பலகீனமான மனிதனுக்கு அளவுக்கு மீறிய, தாங்க முடியாத வேதனை வரும்போது நம்பிக்கையை இழக்க சோதனை வரும்.

இச்சோதனையில் மனிதன் வெல்லவேண்டுமென்றால்,

என் மனித சுபாவத்தை அந்த அளவுக்கு பலகீனமானதாக்கி,

நம்பிக்கைக்கு எதிரான சோதனைக்கு அனுமதி கொடுத்து அதை வென்று

மனிதனுக்கு  அத்தகைய சோதனை வரும்போது நம்பிக்கையை இழக்காதிருக்க ஆன்மீக பலம் பெறச் செய்ய வேண்டும்.

நான் மெய்யாகவே மனிதன் என்பதற்கு,

அதிலும்,

பாவம் தவிர,

எல்லா மனித பலகீனங்களோடும் மனிதன் ஆனேன் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட சோதனைகளே அத்தாட்சி.

"என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?"

என்ற என் வார்த்தைகள் நான் அனுபவித்த வேதனையின் அளவையும்,

நான் திட்டமிட்டே ஏற்றுக்கொண்ட மனித பலகீனத்தையும்

விளக்குகின்றன.

நான் உடல் மரணத்தின் உதவியால் மனிதனின் ஆன்மீக மரணத்தை வென்றது போல்,

எனது மனித பலகீனத்தின் உதவியால்

மனிதனின்ஆன்மீக பலகீனத்தை வென்றேன்."

இவை இயேசுவின் ஆறுதல் வார்த்தைகள்.


நாம் இங்கே மற்றொரு உண்மையையும் ஞாபகப்படுத்தியாக வேண்டும்.

மனிதனுக்கு இருக்க வேண்டிய தேவ சம்பந்தமான புண்ணியங்கள் மூன்று.

1.விசுவாசம் - கடவுளை இப்போது காணமுடியாவிட்டாலும் அவர் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வது.

2.நம்பிக்கை- இறைவன் நம்மை இரட்சிப்பார்,  கைவிடமாட்டார் என்று உறுதியாக நம்புவது.

3.இறைவனை நேசிப்பது.

மனிதன் இரட்சண்யம் பெற இந்த முன்று புண்ணியங்களும் அவசியம்.

ஆனால் மோட்சத்தில் உள்ளவர்கட்கு    விசுவாசம்     
தேவை இல்லை, ஏனெனில் இறைவனை முகமுகமாய்த்  தரிசிக்கிறார்கள்.     

நம்பிக்கை தேவை இல்லை, நம்பியதைப் பெற்றுவிட்டார்கள்.

அவர்களிடம் இருப்பது நேசம் மட்டும்தான்.         

கடவுளைப் பொறுத்த மட்டில் நேசமே உருவானவர்.

இயேசு கடவுள்.

மனித சுபாவத்தில் பாடுபட்ட தேவ ஆள்.

நமது பலகீனத்தைப் போக்க   அதையே கருவியாக எடுத்துக் கொண்டவர்.

அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்,

உறுதியாக நம்புவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment