Tuesday, April 9, 2019

நாம் யாருக்கு அஞ்ச வேண்டும்?

நாம் யாருக்கு அஞ்ச வேண்டும்?
*-*********-***-***************

"சாப்பாடு, ரெடி."

"சாப்பாட்டவிட முக்கியமான ஒரு விசயம் ஒண்ணு இருக்கு.

வந்து பக்கதில உட்கார். அதப்பற்றி பேசிட்டு அப்புறம் சாப்பிடலாம்."

"நீங்க எந்த விசயத்தைப் பற்றி பேசப்போறீங்களோ, எனக்குத் தெரியாது.

ஆனால் நான் ஒரு விசயத்தைப் பற்றி உங்களிடம் முதலில் பேசியாகணும்.

அதற்குத் தெம்பு வேண்டும். முதலில் சாப்பிடுங்க. அப்பபுறம் பேசலாம்."

"சாப்பிட்டாச்சி. கேட்கணும்னா கேளு. சொல்லணும்னா சொல்லு."

"நேற்று சமாதானம் பற்றி பேசும்போது அது வடசொல் என்கிறதினால அத எடுத்துட்டு அமைதியைப் போட்டுட்டாங்கன்னு சொன்னீங்க.

எந்த மொழியிலேயிருந்து பிறந்திருந்தாலும், சமாதானமாயிருக்க குறைந்தது இரண்டு பேர் வேண்டும்.

அதனால்தான் கடவுள் முதலில் இருவரைப் படைத்தார்.

அமைதியாய் இருக்க ஒருவர் போதும்.

அப்புறம் அதுல இன்னொரு விசயமும் இருக்கு.

அமைதிக்கு இரண்டு அருத்தம் இருக்கு.

ஒன்று பேசாம இருக்கது.

அடுத்தது, மன அமைதி.

பாவம் இல்லாதவங்கிட்டதான் மன அமைதி (peace of mind) இருக்கும்.

அதாவது கடவுளோடு சமாதானமாய் (at peace) இருப்பவனுக்கு மன அமைதி இருக்கும்..."

"பொறு, இப்போ என்ன. சொல்ல வர்ர?  அமைதிதான் சரியான சொல் என்கிறாயா?"

"பெறுமுன்னால ஆம்பளையா? பொம்பிளையா?ன்னு கேட்கக்கூடாது.

இரண்டு பேருக்கும் நல்ல,  சமாதானமான உறவு இல்லாவிட்டாலும்,

இரண்டு பேருமே அருகருகே அமைதியா

அதாவது Silent ஆ,

அடுத்த சண்டைக்குப் Plan போட்டுக்கொண்டுகூட

இருக்கலாம்.

ஆனால் இரண்டு பேரும் சமாதானமாய் இருந்தால் சப்தமாய்,

நம்மைப்போல,

பேசிக்கொண்டும் இருக்கலாம்.

சமாதானமாய் இருக்கிற இரண்டு பேர் அமைதியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை."

"சரி. சொல்ல வந்தத சுருக்கமாய்ச் சொல்லு. நான் இன்னொரு விசயம் பேசணும்"

"கடவுளோடு சமாதானமாய் இருந்தால்தான்,

உலக சமாதானம் ஏற்படும்.

மன அமைதியும் ஏற்படும்.

இது நேற்றைய Topic.

இன்றைக்கு நான் சொல்ல வந்த விசயமே வேற."

"அப்போ என்ன பேச விடமாட்ட!"

"இல்லீங்க. Positive lineம் negative lineம் சேர்ந்தால்தானே மின்சாரம் ஓடும்.

இப்ப சொல்லுங்க. திருக்குறளில தூயதமிழ் மட்டும் இருக்கா, வடமொழிக் கலப்பும் இருக்கா?"

"நான் திருக்குறள் முழுவதும் படிக்கல.

ஆனால் முதல் குறளில வடமொழி இருக்கு.

ஆதி'பகவன்' = भगवान. 'பகவான்'

கடவுளைக் குறிக்க भगवान என்ற
வடசொல்லைத்தான் திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.

திருவள்ளுவரைவிட நாம் தமிழ் அறிஞர்களா "

"கடவுள் தமிழ்ச் சொல்தானே? "

"அதில என்ன சந்தேகம்?"

"சந்தேகம் இல்ல.

அந்தச் சொல்லிற்குள் அடங்கியிருக்கும் பொருள்! வியப்பா இருக்குதுங்க!"

"அதெப்படிடீ நான் நான் நினைக்கிறதையே நீயும் நினைக்கிற.

நான் அதைப்பற்றிதான் பேச ஆசைப்பட்டேன்."

"அப்படியா? அப்போ நீங்களே  பேசுங்க."

"கடவுள் = கட + உள்.

கடந்தவர் உள்ளே இருக்கிறார்.

காலங்களைக் கடந்தவர், கற்பனையைக் கடந்தவர், கண்டுபிடிப்பைக் கடந்தவர்,
மொழிகளைக் கடந்தவர்

அதாவது,

துவக்கமும் முடிவும் இல்லாதவர்,

நம்மால் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவிற்கு பெரியவர், வல்லவர், நல்லவர்,

நமது சிற்றறிவால் கண்டுபிடிக்க முடியாதவர்

நமக்குள்ளே,

நமது சிறிய மனதுக்குள்ளே,

நமது சிறிய இருதயத்குள்ளே  இருக்கிறார்.

முழுமையாக இருக்கிறார்.

அளவு கடந்தவர் அளவுள்ள இதயத்துக்குள் முழுமையாக இருக்கிறார்.

நாம் கடவுள் என்று சொல்லும்போதெல்லாம்,

" அளவுள்ள எனக்குள்ளே அளவு கடந்த கடவுள் இருக்கிறார்.

கற்பனை அல்ல, உண்மையிலேயே இருக்கிறார்,

அவர் அளவு கடந்தவர்,

அவர் என் மீது கொண்டுள்ள அன்பு அளவு கடந்தது,

இரக்கம் அளவு கடந்தது,

பொறுமை அளவு கடந்தது,

மன்னிப்பு அளவு கடந்தது.

அளவுகளைக் கடந்தவரின் சிற்றாலயம் (chapel) நான்!

அளவு கடந்த கடவுள்

அளவுள்ள என்னுள்

சம தானத்தில் தங்க

நான் எவ்வளவு பாக்கியம் பெற்றவன்!"

"நீங்கமட்டும்தான் பாக்கியம் பெற்றவரா?''

"நான் என்னைப்பற்றிக் கூறியதுபோல அவரவரும் அவரவரைப்பற்றிக் கூறிக்கொள்ள வேண்டியதுதான்."

"இறைவன் என்ற சொல் எப்படி?"

"இறைவன் என்றால் அரசன் என்று பொருள்.

கடவுளை இறைவன் என்னும்போது

அவரை நம்மை ஆளும் மன்னராக ஏற்றுக்கொள்கிறோம்.

ஒருமுறை ஞானோபதேசத் தேர்வில் ஒரு மாணவன் 'இறைவன்'  என்று எழுதுவதற்குப் பதில் 'இரைவன்' என்று எழுதிவிட்டான்.

எழுத்துப்பிழை.

கையில் பேப்பரோடு அவனை அழைத்தேன்.

வந்தான்.

என் கையில் பிரம்பு இருந்ததைப் பார்த்தான்.

செய்த பிழையைப் பார்த்தான்.

"சார் கொஞ்சம் பொறுங்கள். பிழைதான், ஆனாலும் நான் பிழைக்க ஒரு வழி இருக்கிறது."

"என்னல உளறுத, நீ பிழைக்க வழியா? "

"சார் அடிச்சிராதங்க. நான் சொல்லிமுடிச்சபின் விருப்பம் இருந்தா அடிங்க."

"சரி சொல்லு."

"சார், இறைவன் - நம்மை ஆள்பவர்.

இரைவன் - தன்னையே நமக்கு உணவாகத் தருபவர்.

Spelling மாறும்போது பொருள் மாறுகிறது, 

ஆனால் தவறாக மாறவில்லையே."

கையை நீட்டினான், அடிவாங்க.

நான் பிரம்பை மேசையில் வைத்துவிட்டு,

அவன் கையைக் குலுக்கினேன்.

"நீ பிழைத்துக் கொள்வாய். கடவுள் உன்னுள் இருக்கிறார்."

உண்மையில்

சர்வ வல்லப இறைவன்

நமக்கு இரையாய் வரும்போது,

நம்மை விட பாக்கியசாலிகள் யார்?

சர்வ வல்லப கடவுள் நமக்குள் இருக்கும்போது நாம் யாருக்கு அஞ்ச வேண்டும்?"

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment