Sunday, April 14, 2019

கழுதைக்குட்டி கற்பிக்கும் பாடம்.

கழுதைக்குட்டி கற்பிக்கும் பாடம்.
***************************

ஒரு கழுதைக் குட்டியின்மேல் இயேசு அமர்ந்தார்.

திருவிழாவுக்கு வந்திருந்த பெருங்கூட்டம்

இயேசு யெருசலேமுக்கு வருகிறார் எனக் கேள்வியுற்று,

கையில் குருத்தோலைகளோடு அவரை எதிர்கொண்டுபோய்,    

"ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி! இஸ்ராயேலின் அரசர் வாழி! " என்று ஆர்ப்பரித்து வரவேற்றனர்.

இயேசு அமர்ந்திருந்த கழுதைக்குட்டிக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

தன் மேல் அமர்ந்திருப்பவர் யார் என்று கழுதைக்குத் தெரியாது.

அது மக்கள் தனக்குதான் இவ்வளவு மரியாதையான வரவேற்புக் கொடுத்துக் கொண்டிருப்பதாக நினைத்தது!

அதிலும் "அரசர் வாழி" என்ற வாழ்த்தைக் கேட்டவுடன் தன்னைப் புதிதாக நாட்டின் அரசராகத் தேர்ந்தெடுத்திருப்பதாக அது நினைத்தது!

ஊர்வலம் முடிந்து வீடு திரும்பியவுடன் தன் அம்மாக் கழுதையிடம்,

"அம்மா, இன்று முதல் நீதான் இந்த நாட்டின் அரசி. அரசனின் அம்மா அரசி வாழ்க!"

என்று கனைக்க ஆரம்பித்தது.

அம்மாக் கழுதைக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்னடா உளருத?"

"நான் ஒன்றும் உளரவில்லை. உனக்குச் சந்தேகம் இருந்தால் ஊரின் முக்கிய வீதிகளின் வழியே போய்ப் பார்.

வீதிமுழுவதும்  ஆங்காங்கே குறுத்தோலைகள் கிடக்கும்.

என்னை அரசராக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றமைக்கு அதுவே சாட்சி.

என் கால் தரையில் படாதிருக்க என் முன்னால் துணி விரித்துச் சென்றார்கள்.

ஆயினும் கால்களை அழுத்தி மிதித்து நடந்தேன்.

ஆகவே வீதியின் நடுவில் என் கால்தடம் பதிந்திருக்கும்."

அம்மாக் கழுதைக்கு ஒன்றும் புரியவில்லை.

மறுநாள் காலையில் குட்டி அம்மாவைப் பார்த்து,  "என்னோடு வெளியே வா. எனக்குக் கிடைக்கும் மரியாதையைப் பார்."

அதுவும் குட்டியுடன் வெளியே வந்தது.

இரண்டும் முக்கிய வீதி வழியே நடந்து சென்றன.

ஒரே ஏமாற்றம்.

யாரும் இவர்களைப் பொருட்படுத்தவேயில்லை.

பற்றாக்குறைக்குச் சில சிறுவர்கள் அவற்றின்மீது கல் எறிந்து விளையாட ஆரம்பித்தார்கள்.

கல்லெறியோடும் பெருத்த ஏமாற்றத்தோடும் வீடு திரும்பின.

பாவம் கழுதைகள்!  அறிவில்லா சீவன்கள்!

ஆனாலும் அவற்றிடமிருந்து அறிவுள்ள மனிதர்கள் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம் ஒன்று உள்ளது.

தன்மீது அமர்ந்திருந்த இறைமகனுக்குக் கிடைத்த மரியாதையைத்

தனக்குக் கிடைத்ததாக நினைத்த கழுதையைப் போலவே

தங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கும் பதவிக்கும், அதிகாரத்திற்கும் கிடைக்கும் மரியாதையைத்

தங்களுக்கே கிடைக்கும் மரியாதையாக நினைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

பதவியும் அதிகாரமும் போனபின் அவர்கள் படும் அவஸ்தை அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

எந்த நிலையிலும் தாங்கள் தாங்களாகவே,

அதாவது தாழ்ச்சியுடன்,

இருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.

நாம் மனிதர்கள்,  மிருகங்களைவிட உயர்ந்தவர்கள்.

உடலளவில் நாமும் மிருகங்களும் ஒரே மாதிரிதான்.

மிருகங்களைப் போல்தான் நாம் பிறக்கிறோம், உண்கிறோம், வளர்கிறோம், சாகிறோம்.

ஆனால் நாம் மிருகங்களைவிட உயர்ந்திருக்கக் காரணம் என்ன?

மிருகங்களை  மிருகங்களாகப் படைத்த அதே கடவுள்தான் நமக்குக் கூடுதலாக ஆன்மாவைக் கொடுத்து மனிதர்கள் ஆக்கியிருக்கிறார்.

அப்படியானால் நாம் மனிதர்களாக இருப்பதற்கான உண்மையான பெருமை யாருக்குரியது?

கடவுளுக்குரியது.

ஆகவே நாம் மனிதர்களாய்ப் பிறந்ததற்காக கடவுளுக்குதான் நன்றிகூற வேண்டும்.

நாமே நம்மைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள எதுவுமே இல்லை.

ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மை உருவாக்கி,

நம்முள் வாழும் கடவுள்தான் எல்லா மகிமைக்கும் உரிமையாளர்.

அவருடைய உரிமையைக் களவாட நமக்கு உரிமையில்லை.

எப்படி தனக்கு  இல்லாத பெருமையை தன்னுடையது என்று எண்ணி,

இயேசுவைச் சுமந்த கழுதை மகிழ்ந்ததோ,

அதேபோல நாமும்  கடவுள் தந்ததால் அவருக்கே உரிய மகிமையை

நமக்கே உரியதாக எண்ணிப் பெருமைப்படுகிறோம்.

நாம் நமது வீட்டிற்குப் பொருள் வாங்கி வரச்சொல்லி, வேலைக்காரனிடம் பணம் கொடுத்து அனுப்பினால்

அவன் நமக்கு எதுவும் வாங்காமல், அவன் வீட்டிற்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு போய்விட்டால் அவனைப் பற்றி என்ன நினைப்போம்?

கடவுள் நம்மைப் படைக்கும்போது புத்தி, மனது, இதயம் என்னும் மூன்று தத்துவங்களோடு படைத்தார்.

புத்தி,  அவரை அறிய.

மனது, அவரை நினைவில் வைத்திருக்க.

இதயம்,  அவரை நேசிக்க.

நாம் அவருக்குச் சொந்தமான இவற்றை,

நமக்கே உரியனவாய் நினைத்துக்கொண்டு

அவை எதற்காகத் தரப்பட்டனவோ அதற்காகப் பயன்படுத்தாமல்

இவ்வுலக காரியங்களுக்காக மட்டும் பயன்படுத்தினால் நாம் எப்படிப்பட்வர்கள்?

நம்மிடம் ஏதாவது திறமைகள் இருக்குமானால் அதற்காகப் புகழப்படவேண்டியவர் இறைவன் மட்டுமே, நாமல்ல.

அத்திறமைகள் பயன்படுத்தப்பட வேண்டியது இறைவனுக்காக மட்டுமே, நமக்காக அல்ல.

நாம் பிறக்குமுன்பே இவ்வுலகம் இருக்கிறது.

உலகத்தையும் ஒன்றும் இல்லாமையிலிருந்து படைத்தவர் இறைவன்.

நாம் பிறக்கும்போது சொத்து எதுவும் கொண்டு வரவில்லை.

நமக்கு இறைவன் அளித்த புத்தியைக் கொண்டு  சம்பாதிக்கிற நமது சொத்து உண்மையில் இறைவனுக்கு உரியது.

அவரது வழி காட்டுதலின்படிதான் செலவழிக்கப் படவேண்டியது.

இறைவன் தந்ததை இறைவன் சொற்படிதான் செலவழிக்க வேண்டும்.

"பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள்.

தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்.

அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்.

ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள்.

நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்.

சிறையில் இருந்தேன், என்னைக் காணவந்தீர்கள் " 

இவை நமது சம்பாத்தியத்தை எப்படி கடவுளுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு அவரே காட்டும் வழிமுறைகள்.

இவ்வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது நமது கடமை.

நமக்கு உரியவை மட்டுமல்ல, நாமே கடவுளுக்கு உரியவர்கள்தான் என்பதை உணர்வோம்.

எல்லா மகிமையும் இறைவனுக்கே. நமக்கல்ல.

இது இயேசுவைச் சுமந்த கழுதைக்குட்டி நமக்கு கற்பிக்கும் பாடம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment