இயேசு எப்படி சாவை வென்றார்?
*****************************
"செல்வம்!"
"வந்திட்டேங்க. இந்தாங்க Tea."
"உட்கார். இண்ணைக்கு உனக்கு ஒரு Mini Test. அதுல நீ பாஸ் பண்ணினால்தான் நான் Tea குடிப்பேன்."
"Testதான, வைங்க, பாஸ் பண்ணினா Tea உங்களுக்கு, இல்லைன்னா எனக்கு.
Tea Waste ஆகாது."
" முதல் கேள்வி,
கிறிஸ்து தான் உயிர்த்ததனால் சாவை வென்றார்னு சொல்லுகிறோம். ஆனால் இப்பவும் மனிதர்கள் சாகத்தானே செய்கிறார்கள். பிறகு எப்படி சாவை வென்றார்?"
"கிறிஸ்து தான் மரணித்து நமது மரணத்தை வென்றார்.
மரணம் என்பது ஒரு வார்த்தை. அது மனிதனைக் குறிக்கும்போது அதற்கு இரண்டு அர்த்தங்கள்:
1.ஆன்மீக மரணம், அதாவது ஆன்மீக உயிராகிய தேவஇஸ்டப்பிரசாதத்தை இழத்தல்.
2.நமது உடல் சம்பந்தப்பட்ட மரணம், இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி.
இரண்டு மரணங்களுமே நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவுகள்.
இறைவன் நமது முதல் பெற்றோரை ஆன்மீக உயிராகிய தேவ இஸ்டப்பிரசாதத்தோடு படைத்தார்.
இதனால் இறைவனுக்கும், அவர்களுக்கும் சுமூகமான உறவு இருந்தது. ஆன்மீக வளர்ச்சி இருந்தது.
அவர்கள் பாவம் செய்தவுடன் ஆன்மீக உயிரை இழந்தார்கள்,
ஆன்மீக மரணத்தின் விளைவாக இறைவனோடு கொண்டிருந்த சுமூகமான உறவை இழந்தார்கள்.
இதனால் விண்ணகம் செல்லும் உரிமையையும் இழந்தார்கள்,
அவர்களுக்காக மட்டுமல்ல,
அவர்களது சந்ததியினராகிய நமக்கும் சேர்த்துதான் இழந்தார்கள்.
அதனால்தான் பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறோம்.
இழந்த ஆன்மீக உயிர் திரும்பவும் கிடைக்க வேண்டுமென்றால்
பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டு,
பாவம் மன்னிக்கப்படவேண்டும்.
இறைமகன் இயேசு மனிதனாய்ப் பிறந்து,
பாடுகள்பட்டு,
தன் உயிரைப் பலியாகக் கொடுத்து,
நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து,
நமது பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுத் தந்தார்.
பாவமன்னிப்புடன் நம் ஆன்மீக உயிர், தேவ இஸ்டப்பிரசாதம் திரும்பவும் கிடைத்தது,
இறைவனோடு நமக்கு சுமூகமான உறவு ஏற்பட்டது.
நாமும் விண்ணக வாழ்வுக்கு உரிமையாளர்களாக மாறியிருக்கிறோம்.
இயேசு தான் மரணித்து, மரணத்தை வென்று உயிர்த்ததால்
நமது ஆன்மீக மரணத்தை வென்றிருக்கிறார்."
"ஆனால் உடலைப் பொறுத்தமட்டில் சாகத்தானே செய்கிறோம்."
"ஹலோ! நான் இன்னும் பதிலை முடிக்கவில்லை. அதற்குள் என்ன அவசரம்."
"சரி, முடி."
"நமது உடல் மரணமும் பாவத்தின் விளைவுதான்.
ஒரு analogy :
ஒரு ஊர்ல ஒரு அப்பா, அம்மா, மகன் இருந்தாங்க.
நல்ல வசதி வாய்ந்த குடும்பம்.
மகன் அப்பா, அம்மாட்ட நல்ல பாசமாகத்தான் இருந்தான்.
ஒருநாள் அப்பாவுக்குப் பிடிக்காத ஏதோ ஒண்ணச் செஞ்சிட்டான்.
அப்பா கொஞ்சம் கண்டிப்பான ஆள்.
அவர் மகனிடம்,
"நீ செய்த செயல் எனக்குப் பிடிக்கல. இனிமேல் வீட்டில இருக்க உரிமை இல்ல. Outhouse ல தங்கிக்கோ. எல்லா வேலையும் நீதான் செய்யணும். லீவு கிடையாது. சம்பளம் உண்டு. அம்மாட்ட பேசக்கூடாது. போ."
அன்றுமுதல் மகன் outhouseல் தங்கி வேலையப் பார்த்தான்.
சம்பளம் வாங்கும்போதெல்லாம்
'இது என் பாவத்தின் சம்பளம்' என்று நினைத்துக் கொள்வான்.
ஆறு மாதம் கழிந்தது. ஆறு மாதமும் அம்மா மகனுக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருந்தாள்.
ஆறு மாதம் கழித்து அப்பா மகனைக் கூப்பிட்டு,
"உன் அம்மாவுக்காக உன்னை மன்னிக்கிறேன். நீ இதுவரை சம்பாதித்த பாவத்தின் சம்பளத்தைக்கொண்டு வேளாங்கண்ணி மாதா கோவிலுக்குப் போய், தங்கி, மாதாவுக்குக் காணிக்கை போட்டுவிட்டு வா."
மகனும் அப்படியே செய்தான்.
அம்மாவின் பரிந்துரை மகனின் பாவத்தின் சம்பளத்தை திருயாத்திரைச் செலவாகவும், மாதாவுக்கான காணிக்கையாகவும் மாற்றிவிட்டது.
நமது உடலின் மரணம் பாவத்தின் சம்பளம்தான்.
ஆனால் இயேசு தன் பாடுகளாலும், மரணத்தாலும், உயிர்ப்பாலும் அதை மோட்சத்தின் வாசலாக மாற்றிவிட்டார்.
ஆன்மீக உயிரோடு மரிப்பவர்கட்கு, மரணம் மோட்சத்தின் வாசல்.
இயேசு தன் மரணத்தால் நமது மரணத்தின் தண்டனைத்தன்மையை வென்று,
அதை ஆசீர்வாதமாக மாற்றிவிட்டார்.
ஆகவே இயேசு தன் மரணத்தாலும் உயிர்ப்பாலும் நமது மரணத்தை வென்றார்.
அடுத்த கேள்வி? "
"இதோ வருகிறது.
ஆதாமின் பாவத்தால்தான் மனுக்குலம் பாவக்குழியில் விழுந்தது.
அவர் மோட்சத்திற்குப் போயிருப்பாரா?"
"இயேசு ஆதாமின் பாவத்திற்கும் சேர்த்துதான் பரிகாரம் செய்தார்.
தங்கள் பாவங்களுக்காக வருந்தி, மன்னிப்புக் கேட்ட அத்தனை பழைய ஏற்பாட்டினரும்
இயேசு பாவப்பரிகாரம் செய்யும் வரை லிம்போ நிலையில், அதாவது இறைவனைத் தரிசிக்க முடியாத நிலையில் இருந்தனர்.
இயேசு மரித்தவுடன் அவரது ஆன்மா 'பாதாளங்களில் இறங்கி'
லிம்போ நிலையிலிருந்த ஆன்மாக்களுக்கு தேவ தரிசனத்தைப் பெற்றுக்கொடுத்தது.
கவலைப்படவேண்டாம், ஆதாமும் ஏவாளும் மோட்சத்தில்தான் இருக்கிறார்கள்."
"அடுத்த கேள்வி.
இயேசுதான் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து விட்டாரே.
நாம் ஏன் செய்யவேண்டும்? "
"இங்க பாருங்க, பாவம் செய்தது நாம, பரிகாரம் செய்யவேண்டியதும் நாமதான்."
"பிறகு எதற்கு பரிகாரம் செய்தார்?"
"நாம அளவுள்ள ஜீவன்களாக இருக்கிறதினால நாம செய்கிற பரிகாரமும் அளவு உள்ளதாக இருக்கும்.
ஆகவே அளவில்லாத தன்மையுள்ள இறைமகனே நமக்காகப் பரிகாரம் செய்தார்.
அவர் செய்த பரிகாரம் அளவில்லாத தன்மையுள்ளது.
ஆனால் நாம் செய்த பாவங்களுக்கு
நாம்தான் வருத்தப்பட வேண்டும்,
நாம்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும்,
நாம்தான் பரிகாரம் செய்ய வேண்டும்.
செய்து அதை இயேசு செய்த அளவில்லாத பரிகாரத்தோடு சேர்த்து
தந்தைக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.
இயேசுவின் பரிகாரத்தோடு சேர்த்து ஒப்புக்கொடுக்கப்படும் பரிகாரம்தான் இறைவனுக்கு ஏற்புடையதாக இருக்கும்.
அவர் பரிகாரம் செய்திருக்காவிட்டால் நமது பரிகாரம் செல்லாது.
இயேசுவின் பரிகாரத்தை நாம் பயன்படுத்தாவிட்டால் நம்மைப் பொறுத்த மட்டில் அது வீணாகிவிடும்.
அண்டா நிறைய சோறு இருந்தாலும் நாம் அதைச் சாப்பிட்டால்தானே நமக்குப் பயன்.
நமது ஒவ்வொரு செபத்தையும்
"எங்கள் ஆண்டவராகிய அதே இயேசுகிறிஸ்து வழியாக மன்றாடுகிறோம் - ஆமென்."
என்று கூறி முடிக்கவேண்டும்.
என்ன, Test முடிந்துவிட்டதா? பாக்கி இருக்கிறதா?"
"இன்றைக்கு இவ்வளவுதான்."
"சரி Teaயைக் குடியுங்கள்."
"Tea எங்கே இருக்கிறது? முதல் கேள்வி முடிந்தவுடனே குடித்துவிட்டேன்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment