Monday, April 29, 2019

சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.

"சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்."
*****************************

நமது மரணத்தின்போது நமது ஆன்மா உடலைவிட்டுப் பிரிந்தவுடன் மண்ணிற்குத் திரும்பிவிடுகிறது.

ஆனால் இயல்பிலேயே, நல்லவனும்சரி, கெட்டவனும்சரி, சாக விரும்புவதில்லை.

பிறந்தது போலவே ஆன்மாவும் உடலும் சேர்ந்த நாம் நித்தியத்துக்கும் இறைவனோடு வாழவேண்டுமென்பது என்பது இறைவனே நம்மில் பதித்த இயல்பான ஆசை.

ஆனாலும் நமது பாவத்தினால் நாமே நம்மீது மரணமாகிய பிரிவை வரவழைத்துக் கொண்டோம்.

ஆனால் கடவுள் நம்மீது இரங்கி, மனிதனாய்ப் பிறந்து, தன் தனது பாடுகளாலும், மரணத்தாலும், உயிர்ப்பாலும் நம் மரணத்தை வென்றார்.

தனது பாடுகளால் நமது துன்பங்களையும்,

மரணத்தினால் நமது மரணத்தையும்

ஆசீர்வாதங்களாக (Blessings) மாற்றியதோடு

தனது உயிர்ப்பினால் நமக்கும் உயிர்ப்பை உறுதிப்படுத்தினார்.

அதாவது நாமும் ஒருநாள் உயிர்ப்போம்,

அதன்பின் இப்போது இயேசுவும், மாதாவும் எப்படி மோட்ச நிலையில் இருக்கிறார்களோ,

அதேபோல் நாமும் உயிர்த்தபின் ஆன்ம சரீரத்தோடு மோட்ச நிலையில் வாழ்வோம்.

அப்போது நமது உடல் சடப்பொருளாக (Material body)இருக்காது.

அதற்கு உணவு, உறக்கம், சிற்றின்பம் போன்ற இவ்வுலகைச் சார்ந்த எதுவும் தேவைப்படாது.

உயிர்த்த இயேசுவின் உடல் எப்படி இருக்கிறதோ அதேபோல் நமது உடலும் இருக்கும்.

'சரீர உத்தானம், நித்திய ஜீவியம்' இரண்டுமே விசுவாச சத்தியங்கள்.

"சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.

நித்திய ஜீவியத்தை விசுவசிக்கிறேன்."

லூர்து செல்வம்.

Saturday, April 27, 2019

சரியான பயந்தாங்கொள்ளிகள்!

சரியான பயந்தாங்கொள்ளிகள்!
*****************************

"என்னாச்சி? ஆள் அசந்துபோய் உட்கார்ந்திருக்கீங்க."

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. இன்றைக்கு வெயில் கொஞ்சம் அதிகம்."

"கொஞ்சந்தானே அதிகம். அதெற்கெல்லாம் அசந்தா எப்படி!

ஆமா, தினமும் காலையில் எழுந்தவுடனே, பைபிளைத் திறக்கீங்களே, எதுக்கு?"

"இதென்னடி கேள்வி, பைபிளை எதுக்குத் திறப்பாங்க? வாசிக்கத்தான்."

"வாசித்திட்டு? "

"மூடிவச்சிடுவேன்."

"இதவிட பைபிளைத் திறக்காமலே இருக்கலாம்."

"ஏண்டி? மூடாமலே வச்சிரணும்னு சொல்லுதியா?"

" 'வாசி, யோசி, விசுவாசி'ன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?

பைபிள நிறந்து மூடுவதைவிட முக்கியமான வேலை

வாசித்ததை யோசிப்பதும் அதாவது தியானிப்பதும்

தியானித்ததை விசுவசித்து, அதன்படி நடப்பதும்."

"வா, உட்கார், இருவரும் சேர்ந்து சப்தமாகத் தியானிப்போம்."

"இயேசு உயிர்த்துவிட்டார் என்ற செய்தியை மதலேன்மரியாள் சொல்லியும் சீடர்கள் நம்பவில்லை.

இதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?"

"முதல்ல நீ நினைக்கிறத சொல்லு."

"சீடர்கள் 12 பேரில் இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் போக

மீதி 11 பேர் பாடுகள் ஆரம்பிக்கும்வரை அவருடன் இருந்தார்கள்.

இயேசு கைது செய்யப்பட்டவுடன் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அனைவரும் இயேசுவைவிட்டு ஓடிவிட்டார்கள்.

சரியான பயந்தாங்கொள்ளிகள்!

அருளப்பர் மட்டும் சிலுவை அடியில் நின்றார்.

பாடுகள் முடிந்தபின்னரும் தங்கள் உயிருக்கு எங்கே ஆபத்து வந்துவிடுமோ என பயந்து ஒரு வீட்டில் ஒழிந்துகொண்டார்கள்.

பக்தியுள்ள சில பெண்கள் சிலுவைப்பாதையில் இயேசுவைப் பின்பற்றியதோடு

சீடர்களைப்போல் ஒழிந்து கொள்ளாமல், துணிச்சலாக கல்லரைக்குச் செல்லுகிறார்கள்.

பக்தியுள்ள, பயமில்லாத இந்தப் பெண்களுக்குதான் இயேசு உயிர்த்த செய்தி அறிவிக்கப்படுகிறது.

ஏழுபேய்களிடமிருந்து விடுவிக்கப்பட்டிருந்த மதலேன்மரியாளுக்குதான் இயேசு முதலில் காட்சி கொடுக்கிறார்.

உயிர்த்த இயேசுவைத் தான் பார்த்ததைச் சொல்லியபிறகும் சீடர்கள் நம்பவில்லை.

ஒருபுறம் சீடர்கள் மீது நமக்கு கோபம் வருகிறது, விசுவாசமற்ற பயந்தாங்கொள்ளிகள்!

இன்னொருபுறம் அவர்கள் மூலம் இயேசுவின் மகிமை வெளிப்படப்போகிறது என்று மகிழ்ச்சியும் ஏற்படுகிது."

"என்ன, பயந்தாங்கொள்ளிகள் மூலம் இயேசுவின் மகிமை வெளிப்படப்போகிதா?"

"ஆமா,

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது

இயேசு மூன்று ஆண்டுகள் அவர்களுக்கு அளித்த பயிற்சியால்

எந்தவித பயனும் ஏற்படாததுபோல் தோன்றும்.

ஆனால் கொஞ்சம் யோசியுங்கள்.

உலகின் கடைசி எல்கைவரை அனைத்து நாடுகளிலும் அவர் நிறுவிய திருச்சபையைப் பரப்ப அவர் தேர்ந்தெடுத்த 12 சீடர்களில் ஒருவன் அவரைக் காட்டிக்கொடுத்தவன், பதினொருவர் பயந்தாங்கொள்ளிகள்!

பயந்தாங்கொள்ளிகள் கையில் திருச்சபையை ஒப்படைத்துவிட்டு அவர் பரலோகம் சென்றுவிட்டார்.

அந்த பயந்தாங்கொள்ளிகள்
மூலமாகத்தான்

திருச்சபையும் உலகம் முழுவதும் பரவி

கோடிக்கான உறுப்பினர்களை விண் நோக்கிய வழியில்

வெற்றிகரமாக வழிநடத்துகிறது.

இதிலிருந்து என்ன புரிகிறது?"

"திருச்சபையை வழிநடத்துவது மனித சக்தி அல்ல,  தெய்வீக சக்தி என்று புரிகிறது.

பரிசுத்த ஆவி வரும்வரை பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த சீடர்கள்,

பரிசுத்த ஆவி வந்தவுடன் எவ்வளவு துணிவோடு வெளியே வந்து,

தங்கள் உயிரைப்பற்றிக் கவலைப்படாமல் நற்செய்தியை அறிவித்தார்கள்."

"திருச்சபை மனிதர்களை இரட்சண்ய பாதையில் வழிநடத்த,

குற்றம் குறைகள் உள்ள மனிதர்களால்,

திருச்சபையின் மொழியில் சொல்லப்போனால், பாவிகளால்

(நாம் அனைவரும் பாவிகள்தான்)

நிருவகிக்கப்படும் ஒரு தெய்வீக நிருவனம்.

திருச்சபையை நிருவகிக்கும் மனிதர்களிடம் தனிப்பட்ட முறையில் ஆயிரம் குறைகள் இருக்கலாம்,

ஆனால் திருச்சபை ஒரு பரிசுத்தமான நிருவனம்.

அதை நிருவகிப்பவர் இயேசு கிறிஸ்து,  சர்வ வல்லப கடவுள்.

திருச்சபைக்கு இராயப்பர் படகு என்ற செல்லப்பெயர் உண்டு.

அது பயங்கர புயற்காற்றும்,  பனையளவு எழுந்து விழும் இராட்சச அலைகளும் உள்ள கடலில் பயணம் மேற்கொண்டிருக்கிறது.

படகிற்கு வெளியே உள்ளவர்கள் சீக்கிரம் படகு மூழ்கிவிடும் என்று நம்பி  மகிழ்ச்சியாக உள்ளனர்.

படகிற்கு உள்ள சிலர் படகு எங்கே மூழ்கிவிடுமோ என்று பயந்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் இயேசுவின் சீடர்களைப் போல

நம்பிக்கை இல்லாதவர்களாய்,

பயப்படக்கூடாது.

இயேசு நம்மோடு படகிற்குள் இருக்கும்போது

நாம் ஏன் பயப்படவேண்டும்?

இயேசு நம் விசுவாசத்தைச் சோதிப்பதற்காக தூங்கிக் கொண்டிருப்பதுபோல காட்டிக்கொள்ளலாம்.

ஆனால் தூங்கமாட்டார்.

படகு அவருடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளது."

"ஆக இந்த உண்மையை நமக்கு அறிவுறுத்ததான் சீடர்களை பயந்தாங்கொள்ளிகளாய்  இருக்க அனுமதித்தார்."

"வாழ்வது நாமல்ல, இயேசுவே நம்மில் வாழ்கிறார்.

நம்மை வழிநடத்துபவர் அவரே."

லூர்து செல்வம்.

Friday, April 26, 2019

இரத்தம், கிறிஸ்தவத்தின் வித்து.

இரத்தம், கிறிஸ்தவத்தின் வித்து.
********************************

"செல்வம், உட்கார்."

"ஏதோ கதை சொல்லப்போகிறேன்னு சொன்னீங்க."

"ஆமா. அதுக்காகத்தான் உட்காரச் சொன்னேன். உட்கார்.

நான் கதையைச் சொல்லி முடிக்குமட்டும் குறுக்கே பேசக்கூடாது"

"பேசினால்?"

"கதை கட் ஆயிடும்."

"சரி, சொல்லுங்க."

"ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாரு."

"நாட்டுயா, ஊர்லயா? "

"இப்பதானே சொன்னேன், குறுக்கே பேசக்கூடாதுன்னு."

"மன்னிச்சிக்கிடுங்க. நாட்டுக்குத்தானே ராசா. அதுதான் கேட்டேன். "

"நாட்டுக்கே ராசாவா இருந்தாலும் அவர் ஒரு ஊர்லதான தங்க முடியும்.

வாயப் பொத்திக்கிட்டு சொல்லுவதக் கேளு.

அவர் ஒரு நாள் மந்திரியை அழைத்துக்கொண்டு நாட்டைச் சுற்றிப்பார்க்கப் போனார்.

வெயில் அதிகமாக இருந்ததினால ஒரு மரத்து நிழலில போய் நின்னார்.

மரத்த ஏறிட்டுப் பார்த்தார், அது அவருக்குப் பிடிக்காத வாதமடக்கி மரம்.

பெரிய மரமாக வளர்ந்திருந்தது.

அவருக்குப் பயங்கர கோபம் வந்தது.

"என் நாட்டில் வாதமடக்கி மரமா? இது யாருடைய வேலை?

மந்திரி! "

"மன்னா! "

"எனக்கு இந்த மரம் பிடிக்காதுன்னு உமக்குத் தெரியுமா இல்லையா? "

"எனக்குத் தெரியும். ஆனால் இந்த மரத்திற்குத் தெரியாதே! தெரியாமல் வளர்ந்துவிட்டது. மன்னித்து விட்டுவிடுங்கள், மன்னா."

"மன்னிப்பா? அது அகராதியிலே கிடையாது!

மந்திரி!"

"மன்னா!"

"இனி என்னை மன்னா என்று அழைக்காதே. அரசே என்று அழை."

"ஏன் மன்னா? "

"திரும்பவும் மன்னாவா? அது மன்னிப்பை ஞாபகப்படுத்துகிறது! "

ஆகட்டும் மன்னா,  சாரி, அரசே."

" மந்....இல்லை, அமைச்சரே, உடனடியாக இந்த மரத்தைக் கொலை செய்யவேண்டும்.

துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யவேண்டும்.

ஒவ்வொரு துண்டையும் மண்ணிற்குள் புதைக்கவேண்டும்.

அதுதான் இம்மரத்திற்கு நான் கொடுக்கும் 'மர ண' தண்டனை. புரிகிறதா?"

"புரிகிறது, மன்,  சாரி, அரசே!
மரம், மரணம்.

ஒரு மரத்திலிருந்து மரணம் வந்தது. இன்னொரு மரம் மரணத்தை வென்றது."

"அதென்ன சம்பந்தம் இல்லாமல் உளரிக்கொண்டிருக்கிறீர்! "

"உளரவில்லை, அரசே,

மரத்திற்கும் மரணத்திற்கும் உள்ள சம்பத்தத்தை நினைத்துப் பார்த்தேன்."

"மரத்துண்டுகளை புதைக்கும்போது ஒரு முக்கியமான விசயத்தைக் கவனிக்க வேண்டும்.

மரத்துண்டுகளின் முக்கால்பகுதி பூமிக்குள் இருக்கவேண்டும். கால் பகுதி பூமிக்கு வெளியே இருக்கவேண்டும்.

புதைக்கப்பட்ட பகுதியில்,

"இதுதான்   அரசருக்குப் பிடிக்காதவர்களுக்குக் கிடைக்கும்  தண்டனை."

என்று எழுதப்பட்ட பலகை ஒன்று வைக்கப்படவேண்டும்.

எல்லாம் இப்போதே என் கண் முன்னே நிறைவேற்றப்பட வேண்டும்.

புரிகிறதா?"

"ஒன்று மட்டும் புரியவில்லை.

துண்டுகளைப் புதைக்கும்போது எதற்ககாகக் கால்பகுதி வெளியே தெரியவேண்டும்?"

"இதுகூடத் தெரியாத உம்மை எந்த மடப்பயல் அமைச்சர் ஆக்கினான்?"

"நீங்கள்தான் அரசே!"

"சாரி. கோபத்தில் என்னையே மறந்துவிட்டேன்."

"நீங்கள்தான் அரசர்,  அரசே."

"யோவ், அது ஞாபகம் இருக்கிறது.

கால்வாசி வெளியே தெரியாவிட்டால் மரம் கொலை செய்யப்பட்டடு புதைக்கப்பட்ட விசயம் வருங்காலத்தவருக்கு எப்படித் தெரியும்?

பலகையில் இருக்கும்,

"இதுதான்   அரசருக்குப் பிடிக்காதவர்களுக்குக் கிடைக்கும்  தண்டனை."

என்ற வாசகத்தை வாசிப்பவர்கள், "எதுதான்?" என்று கேட்பார்கள்.

பதில் சொல்ல நீர் இங்கேயே நிற்கிறீரா?"

"அதுவும் சரிதான்."

"நீரே இங்கேயே நிற்க சம்மதம் என்று சொகிறீரா?"

"ஐயோ! அரசே!  இல்லை! "

அரசனது உத்தரவு அவன் கண் முன்பே நிறைவேற்றப்பட்டது.

அது மட்டுமல்ல, அவன் நாட்டிலுள்ள அத்தனை வாதமடக்கி மரங்களுக்கும் அதே தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அதன் பின் நாடு முழுவதும் நல்ல மழை பெய்தது.

அரசர் தான் வாதமடக்கி மரங்களுக்குக் கொடுத்த மரணதண்டனைதான் மழையாகப் பொழிகிறது என்று பெருமைப்பட்டுக் கொண்டான்.

ஆறு மாதம் கழித்து அமைச்சரை அழைத்து,

"அமைச்சரே! நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாமா?"

இருவரும் புறப்பட்டனர்.

நாட்டிலே மன்னருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

நாடெங்கும் இலட்சக்கணக்கான வாதமடக்கிமரங்கள் பெய்த மழையில் செழித்து வளர்ந்து அவர்களை வரவேற்றன.

எல்லா மரங்களுக்கும் ஆறு மாதம்தான் வயது!

மன்னருக்குப் பயங்கர கோபம்.

"இதெப்படி நடந்தது? ''

மந்திரியைப் பார்த்துக் கத்தினார்.

ஆனால் மக்களுக்கு மகிழ்ச்சி.

"அரசே!  உங்கள் சாதனைக்கு நன்றி!"

"என் சாதனையா? யார்  சொன்னது?"

"எல்லா மக்களும் சொல்கிறார்கள். வாதமடக்கியின் இலை நெற்பயிருக்கு நல்ல இயற்கை உரம்.

அடுத்து நெல் பயிரிடுமுன் மரத்தின் குளையை அறக்கி, வயலில்போட்டு உழவு உழுவோம்.

அது மக்கி உரமாகி விளைச்சலை பன் மடங்கு
அதிகரிக்கும்!

மன்னர் வாழ்க!"

மன்னருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"அமைச்சரே!"

"அரசே. சொல்லுங்கள்."

"இது எப்படி நடந்தது?  மரங்களை வெட்டிப் புதைத்துவிட்டோமே! "

"வாதமடக்கிமரத்தின் இரகசியமே அதுதான்.

புதைக்கப்பட்ட கொப்பின் சிறு பகுதி வெளியே தெரிந்தாலும் அது தளிர்த்து மரமாகிவிடும்.

உண்மையில் நீங்கள் நடத்தியது மரண தண்டனை அல்ல, மரநடுவிழா!"

ஹலோ! கதை நல்லாயிருந்ததா?

"Super!"

"இந்தக் கதையைக் கேட்டவுடன் எதாவது  ஞாபகத்துக்கு வருதா?"

"வேதசாட்சிகளின் இரத்தம், திருச்சபையயின் வித்து."

"கரைக்ட். கிறிஸ்தவர்களை அழிக்கவேண்டுமென்று அவர்களை வெட்டி வீழ்த்தினால்

அவர்கள் சிந்திய இரத்தத்திலிருந்து இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் முளைத்து எழுவார்கள்.

இன்று இலங்கையில் சிந்தப்பட்டுள்ள

நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்களின் இரத்தத்திலிருந்து

இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் முளைத்து எழுவார்கள்.

கிறிஸ்தவத்தைப் பொறுத்தமட்டில் இரத்தம் சிந்துவது ஒன்றும் புதிதல்ல.

கிறிஸ்து நமக்காகக் கல்வாரியில் சிந்திய இரத்தம்தான் கிறிஸ்தவம்.

உண்மையில் கிறிஸ்துவின் இரத்தத்தைக் குடித்துதான் நாமே வளர்ந்து கொண்டிருக்கிறோம்.

நமது ஆன்மீக உடம்பில் ஓடிக்கொண்டிருப்பது கிறிஸ்துவின் இரத்தம்தான்."

"அதுவும் தவிர மரணம் என்பது மோட்சத்தின் வாசல்.

இன்று ஆலயங்களுக்குக் குண்டு வைத்தவர்கள்

350 கிறிஸ்தவர்கட்கு மோட்சவாசலைத் திறந்துவிட்டிருக்கிறார்கள்!

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.

எதுநடந்தாலும் இறைவன் நம்மோடு இருக்கிறார்."

லூர்து செல்வம்

Wednesday, April 24, 2019

இயேசுவின் மரணத்தின் சாதனைகள்

இயேசுவின் மரணத்தின் சாதனைகள்
*************-***************

"செல்வம், கொஞ்சம் நில்லு."

"இந்தா பாருங்க, இப்போ கிச்சின்ல கொஞ்சம் வேலை இருக்கு. வேலைய முடிச்சிட்டு வர்ரேன், உட்கார்ந்து பேசுவோம்."

"சரி, நானே கிச்சினுக்கு வாரேன். ஒரு நிமிடம்தான் நின்னுக்கிட்டே பேசுவோம்.

நேற்று நீ ஒரு கேள்வி கேட்டல்லா, எப்படி இயேசு தன் மரணத்தினாலும், உயர்ப்பினாலும் மரணத்தை வென்றார்னு..."

"ஹலோ! கேள்விய நான் கேட்கல,  நீங்க கேட்டிய நான் பதில் சொன்னேன்."

"கரெக்ட்.  நான்தான் கேட்டேன், நீதான் பதில் சொன்ன. ஆனால் உன் பதிலில முக்கியமான Pointஅ விட்டிட்டிய."

"நான் விட்டத விடியவிடிய தூங்காம தேடி கண்டு பிடிச்சியளாங்கும். சரி கண்டுபிடிச்சத சொல்லுங்க."

"இயேசு தனது மரணத்தினால் நமது இறப்பை பிறப்பாக மாற்றினார். அதாவது ...."

"அதாவது, இவ்வுலகத்தில் நமது இறப்பு, மறுவுலகில் நமது பிறப்பாக மாறுகிறது.

இவ்வுலகின் நமது வாழ்வின் முடிவு மறுவுலக வாழ்வின்ஆரம்பமாகிறது.

அநித்ய துன்பம் நித்ய இன்பமாக மாறுகிறது.

சிற்றின்பத்தைத் தியாகம் செய்தவர்கட்கு பேரின்பம் பரிசாகக் கிடைக்கிறது.

இவ்வுலகில் அழுதுகொண்டே பிறந்த நாம் மறுவுலகில் சிரித்துக்கொண்டே பிறப்போம்.

நமது மண்(உடல்) மண்ணுக்குத் திரும்பும், நமது ஆவி பரிசுத்த ஆவியோடு கலக்கும்.

இவை எல்லாம் இயேசுவின் மரணத்தின் சாதனைகள்."

"இதை எல்லாம் நேற்று ஏண்டி சொல்லல?"

"மூணு பிள்ளைகளையும் ஒரே நேரத்தில் பெறமுடியுமா?  அததன் காலத்தில்தான் பிறக்கும்."

"அதுவும் சரிதான். சூப்பர் கதை ஒண்ணு வச்சிருக்கேன். சாப்பிட்ட பின் சொல்லுகிறேன்"

லூர்து செல்வம்.

இயேசு எப்படி சாவை வென்றார்?

இயேசு எப்படி சாவை வென்றார்?
*****************************

"செல்வம்!"

"வந்திட்டேங்க. இந்தாங்க Tea."

"உட்கார். இண்ணைக்கு உனக்கு ஒரு Mini Test. அதுல நீ பாஸ் பண்ணினால்தான் நான் Tea குடிப்பேன்."

"Testதான, வைங்க, பாஸ் பண்ணினா Tea உங்களுக்கு, இல்லைன்னா எனக்கு.
Tea Waste ஆகாது."

" முதல் கேள்வி,

   கிறிஸ்து தான் உயிர்த்ததனால் சாவை வென்றார்னு சொல்லுகிறோம். ஆனால் இப்பவும்  மனிதர்கள் சாகத்தானே செய்கிறார்கள். பிறகு எப்படி சாவை வென்றார்?"

"கிறிஸ்து தான் மரணித்து நமது மரணத்தை வென்றார்.

மரணம் என்பது ஒரு வார்த்தை. அது மனிதனைக் குறிக்கும்போது அதற்கு இரண்டு அர்த்தங்கள்:

1.ஆன்மீக மரணம், அதாவது ஆன்மீக உயிராகிய தேவஇஸ்டப்பிரசாதத்தை இழத்தல்.

2.நமது உடல் சம்பந்தப்பட்ட மரணம், இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி.

இரண்டு மரணங்களுமே நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவுகள்.

இறைவன் நமது முதல் பெற்றோரை  ஆன்மீக உயிராகிய தேவ இஸ்டப்பிரசாதத்தோடு படைத்தார்.

இதனால் இறைவனுக்கும், அவர்களுக்கும் சுமூகமான உறவு இருந்தது. ஆன்மீக வளர்ச்சி இருந்தது.

அவர்கள் பாவம் செய்தவுடன் ஆன்மீக உயிரை இழந்தார்கள்,

ஆன்மீக மரணத்தின் விளைவாக இறைவனோடு கொண்டிருந்த சுமூகமான உறவை இழந்தார்கள்.

இதனால் விண்ணகம் செல்லும் உரிமையையும் இழந்தார்கள்,

அவர்களுக்காக மட்டுமல்ல,

அவர்களது சந்ததியினராகிய நமக்கும் சேர்த்துதான் இழந்தார்கள்.

அதனால்தான் பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறோம்.

இழந்த ஆன்மீக உயிர் திரும்பவும் கிடைக்க வேண்டுமென்றால்

பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டு,

பாவம் மன்னிக்கப்படவேண்டும்.

இறைமகன் இயேசு மனிதனாய்ப்  பிறந்து,

பாடுகள்பட்டு,

தன் உயிரைப் பலியாகக் கொடுத்து,

  நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து, 

நமது பாவங்களுக்கு   மன்னிப்புப் பெற்றுத் தந்தார்.

பாவமன்னிப்புடன் நம் ஆன்மீக உயிர்,  தேவ இஸ்டப்பிரசாதம் திரும்பவும் கிடைத்தது,

இறைவனோடு நமக்கு சுமூகமான உறவு ஏற்பட்டது.

நாமும் விண்ணக வாழ்வுக்கு உரிமையாளர்களாக மாறியிருக்கிறோம்.

இயேசு தான் மரணித்து, மரணத்தை வென்று உயிர்த்ததால்

நமது ஆன்மீக மரணத்தை வென்றிருக்கிறார்."

"ஆனால் உடலைப் பொறுத்தமட்டில் சாகத்தானே செய்கிறோம்."

"ஹலோ! நான் இன்னும் பதிலை முடிக்கவில்லை. அதற்குள் என்ன அவசரம்."

"சரி, முடி."

"நமது உடல் மரணமும் பாவத்தின் விளைவுதான்.

ஒரு  analogy :

ஒரு ஊர்ல ஒரு அப்பா, அம்மா, மகன் இருந்தாங்க.

நல்ல வசதி வாய்ந்த குடும்பம்.

மகன் அப்பா, அம்மாட்ட நல்ல பாசமாகத்தான் இருந்தான்.

ஒருநாள் அப்பாவுக்குப் பிடிக்காத ஏதோ ஒண்ணச் செஞ்சிட்டான்.

அப்பா கொஞ்சம் கண்டிப்பான ஆள்.

அவர் மகனிடம்,

"நீ செய்த செயல் எனக்குப் பிடிக்கல. இனிமேல் வீட்டில இருக்க உரிமை இல்ல. Outhouse ல தங்கிக்கோ. எல்லா வேலையும் நீதான் செய்யணும். லீவு கிடையாது.  சம்பளம் உண்டு. அம்மாட்ட பேசக்கூடாது. போ."

அன்றுமுதல் மகன் outhouseல் தங்கி வேலையப் பார்த்தான்.

சம்பளம் வாங்கும்போதெல்லாம்
'இது என் பாவத்தின் சம்பளம்' என்று நினைத்துக் கொள்வான்.

ஆறு மாதம் கழிந்தது. ஆறு மாதமும் அம்மா மகனுக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருந்தாள்.

ஆறு மாதம் கழித்து அப்பா மகனைக் கூப்பிட்டு,

"உன் அம்மாவுக்காக உன்னை மன்னிக்கிறேன். நீ இதுவரை சம்பாதித்த பாவத்தின் சம்பளத்தைக்கொண்டு வேளாங்கண்ணி மாதா கோவிலுக்குப் போய், தங்கி, மாதாவுக்குக் காணிக்கை போட்டுவிட்டு வா."

மகனும் அப்படியே செய்தான்.

அம்மாவின் பரிந்துரை மகனின் பாவத்தின் சம்பளத்தை திருயாத்திரைச் செலவாகவும், மாதாவுக்கான காணிக்கையாகவும் மாற்றிவிட்டது.

நமது உடலின் மரணம் பாவத்தின் சம்பளம்தான்.

ஆனால் இயேசு தன் பாடுகளாலும், மரணத்தாலும், உயிர்ப்பாலும் அதை மோட்சத்தின் வாசலாக மாற்றிவிட்டார்.

ஆன்மீக உயிரோடு மரிப்பவர்கட்கு, மரணம் மோட்சத்தின் வாசல்.

இயேசு தன் மரணத்தால் நமது மரணத்தின் தண்டனைத்தன்மையை வென்று,

அதை ஆசீர்வாதமாக மாற்றிவிட்டார். 

ஆகவே இயேசு தன் மரணத்தாலும் உயிர்ப்பாலும் நமது மரணத்தை வென்றார்.

அடுத்த கேள்வி? "

"இதோ வருகிறது.

ஆதாமின் பாவத்தால்தான் மனுக்குலம் பாவக்குழியில் விழுந்தது.

அவர் மோட்சத்திற்குப் போயிருப்பாரா?"

"இயேசு ஆதாமின் பாவத்திற்கும் சேர்த்துதான் பரிகாரம் செய்தார்.

தங்கள் பாவங்களுக்காக வருந்தி, மன்னிப்புக் கேட்ட அத்தனை பழைய ஏற்பாட்டினரும்

இயேசு பாவப்பரிகாரம் செய்யும் வரை லிம்போ நிலையில், அதாவது இறைவனைத் தரிசிக்க முடியாத நிலையில் இருந்தனர்.

இயேசு மரித்தவுடன் அவரது ஆன்மா 'பாதாளங்களில் இறங்கி'

லிம்போ நிலையிலிருந்த ஆன்மாக்களுக்கு தேவ தரிசனத்தைப் பெற்றுக்கொடுத்தது.

கவலைப்படவேண்டாம், ஆதாமும் ஏவாளும் மோட்சத்தில்தான் இருக்கிறார்கள்."

"அடுத்த கேள்வி.

இயேசுதான் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து விட்டாரே.

நாம் ஏன் செய்யவேண்டும்? "

"இங்க பாருங்க, பாவம் செய்தது நாம, பரிகாரம் செய்யவேண்டியதும் நாமதான்."

"பிறகு எதற்கு பரிகாரம் செய்தார்?"

"நாம அளவுள்ள ஜீவன்களாக இருக்கிறதினால நாம செய்கிற பரிகாரமும் அளவு உள்ளதாக இருக்கும்.   

ஆகவே அளவில்லாத தன்மையுள்ள இறைமகனே நமக்காகப் பரிகாரம் செய்தார்.

அவர் செய்த பரிகாரம் அளவில்லாத தன்மையுள்ளது.

ஆனால் நாம் செய்த பாவங்களுக்கு

நாம்தான் வருத்தப்பட வேண்டும்,

நாம்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும்,

நாம்தான் பரிகாரம் செய்ய வேண்டும்.

செய்து அதை இயேசு செய்த அளவில்லாத பரிகாரத்தோடு சேர்த்து

தந்தைக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

இயேசுவின் பரிகாரத்தோடு சேர்த்து ஒப்புக்கொடுக்கப்படும் பரிகாரம்தான் இறைவனுக்கு ஏற்புடையதாக இருக்கும்.

அவர் பரிகாரம் செய்திருக்காவிட்டால் நமது பரிகாரம் செல்லாது.

இயேசுவின் பரிகாரத்தை நாம் பயன்படுத்தாவிட்டால் நம்மைப் பொறுத்த மட்டில் அது வீணாகிவிடும்.

அண்டா நிறைய சோறு இருந்தாலும் நாம் அதைச் சாப்பிட்டால்தானே நமக்குப் பயன்.

நமது ஒவ்வொரு செபத்தையும்

"எங்கள் ஆண்டவராகிய அதே இயேசுகிறிஸ்து வழியாக மன்றாடுகிறோம் - ஆமென்."

என்று கூறி முடிக்கவேண்டும்.

என்ன, Test முடிந்துவிட்டதா? பாக்கி இருக்கிறதா?"

"இன்றைக்கு இவ்வளவுதான்."

"சரி Teaயைக் குடியுங்கள்."

"Tea எங்கே இருக்கிறது? முதல் கேள்வி முடிந்தவுடனே குடித்துவிட்டேன்."

லூர்து செல்வம்.