Monday, December 31, 2018

"வார்த்தை உண்மையான ஒளி."

"வார்த்தை உண்மையான ஒளி."
**************************
"செல்வம்! "

"இதோ வந்திட்டேங்க........முதல்ல காபியக் குடிங்க."

"நீ முதல்ல பக்கத்தில உட்கார்."

"உட்காருகிறேன். நீங்க காபியக் குடிங்க.........குடிச்சாச்சா? இப்ப சொல்லுங்க."

"   'ஆதியிலே வார்த்தை இருந்தார்.'

அருளப்பர் தன் நற்செய்தி நூலை இப்படி  ஆரம்பிக்கிறார்.

'ஆதியிலே' என்றால் 'துவக்கத்திலே'ன்னு அருத்தம்.

கடவுளுக்கு துவக்கமும், முடிவும் கிடையாது.

ஆதியே இல்லாத கடவுளை ஏன்  'ஆதியிலே இருந்தார்னு அருளப்பர்  சொல்லுகிறார்? "

"அதிலே இன்னும் இரண்டு சொற்கள் இருக்கின்றனவே, 'வார்த்தை', 'இருந்தார்'.

அவற்றையும் சேர்த்துக் கேளுங்க."

"சரி. கேட்டாச்சு. சொல்லு."

"தமிழிலே ஒரு பழமொழி உண்டு.

'ஆற்றிலே வெள்ளம் கரை புரண்டு ஓடினாலும் நாய் நக்கித்தான் குடிக்கணும்."

"ஏண்டி, மனிதனை 'நாய்'ன்னு சொல்லிட்ட."

"நாய்'ன்னு கெட்ட வார்த்தை இல்லீங்க.

நன்றியுள்ள பிராணி,

நமக்கு எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு தரும் பிராணியுங்கூட.

நமது திருச்சபையில

'ஆண்டவரின் நாய்கள்'ன்னு ஒரு சபை (Religious order)

இருக்கிறது தெரியுமா?"

"என்னடி புதுசுபுதுசா சொல்ற?"

" 'தொமினிக்கன் சபை'ன்னு ஒண்ணு இருக்கு தெரியுமா?"

"தெரியும்."

அந்த சபையை English ல

Dominicans னு சொல்வோம்.

இலத்தீன்ல

'Domini Canes' (The dogs of the Lord)

ன்னு சொல்லுவோம்.

எதிரிகளின் தப்பறையான கொள்கைகளிடமிருந்து (Heresies)

திருச்சபையைப் பாதுகாப்பதற்காக

புனித தொமினிக் (St. Dominic)

ஏற்படுத்திய சபை.

(Dominic’s original focus was the heresy of Albigensianism.)"

"சரி. பழமொழிக்கு வா."

"ஒவ்வொரு பிராணிக்கும் ஒரு இயற்கை குணம் உண்டு. 

அதை மாற்றுவது கடினம்.

மனிதன் மனித மொழியால் மட்டுமே பேச முடியும்.  

மனிதன் அளவுள்ளவன், அவனது மொழியும் அளவுள்ளது.

அதேபோல மனித புத்திக்கும் (Human intellect) ஒரு எல்கை உண்டு.

எல்லையற்ற பரம்பொருளைத் தியானிக்கும்போது

அவரைத் தன் சிந்தனை எல்கைக்குள் கொண்டு வருவான்.

அவனால் உருவுள்ள பொருளைத்தான்
நினைக்க முடியும்.

ஆகவேதான் உருவம் இல்லாத கடவுளுக்கு

ஒரு உருக் கொடுத்து

அப்புறம் அவரைத் தியானிக்கிறான்.

ஆனாலும் கடவுளுக்கு உருவம் இல்லை என்று அவனுக்குத் தெரியும்.

தந்தை இறைவனை

ஒரு நீண்ட தாடியுள்ள தாத்தா உருவத்தில் கற்பனை செய்தாலும்

அவருக்கு உருவம் இல்லை என்ற உள்ளுணர்வோடுதான்

அவரைத் தியானிக்கிறான்.

நான் காலையில் தியானிக்கும்போது தாத்தாவின் மடியில் உட்கார்ந்திருப்பதுபோல கற்பனை செய்துகொள்வேன்.

இது மனதை ஒருநிலைப்படுத்த உதவியாய் இருக்கும்.

கணித ஆசிரியர்

ஒரு கணக்கிற்கான விடைகாணச் சொல்லித்தரும்போது

முதலில் சொல்லுவார்:

'விடையை X என்று வைத்துக்கொள்க'.

அப்புறம் கரும்பலகையில் எழுதுவார்:

Ans. = X.

அப்புறம் சொல்லுவார்:

'நமக்கு விடை தெரிந்துவிட்டது, X.

'Xன் மதிப்பைக் காணவேண்டியது மட்டும்தான் நமது வேலை.

அது ரொம்ப இலேசு.'.

என்று கூறி X ன் உதவியுடன் கணக்கின் விடையைக்காண்பார்.

நமது ஆன்மீகத்திலும் இது உதவியாய் இருக்கும்.

தாடி வைத்த தாத்தா உருவை தந்தை இறைவனாக வைத்துக்கொண்டு தியானிப்போம்.

இந்த தியான வாழ்வின்  இறுதியில் விண்ணகம் செல்லும்போது

தந்தையை அவராகவே காண்போம்."

"ஏண்டி, நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் நான் கேட்ட கேள்வி என்னாச்சி?"

"ஏங்க அடிப்படை வாய்பாடு தெரியாம கணக்கு செய்ய முடியுமா?"

நீ கணக்கில புலிங்கிறது புரியுது. இப்போ ஆன்மீகத்துக்கு வா."

"அளவுள்ள மனித மொழியால அளவற்ற கடவுளை முழுவதுமா விபரிக்க முடியாது.

மனிதனுக்கு துவக்கமும் முடிவும் உண்டு.

அவனைப் பொறுத்தமட்டில் அவனது துவக்கத்துக்கு முன்னால் அவன் இல்லை.

(He was nothing before he was created)

ஆகையினால்தான்
துவக்மே இல்லாத காலத்தைக்கூட மனிதனாகிய அருளப்பர் அவருக்குத் தெரிந்த மொழியில்,

'ஆதியிலே வார்த்தை இருந்தார்.'

என்று குறிப்பிடுகிறார்.

நாம் தாத்தா போன்று உருவம் கொடுத்துள்ள பிதாவை

உருவம் அற்ற தந்தை இறைவன் என்று

எப்படிப்  புரிந்து கொள்கிறோமோ,

அதுபோலவே

'ஆதியிலே'  என்ற என்ற வார்த்தையை

'துவக்கமில்லாத காலத்திலிருந்தே' என்று புரிந்துகொள்ள வேண்டும்.

நமக்கு முக்காலம்.

இறைவனுக்கு நித்திய காலம்.

நமது நிகழ்காலத்திற்கு முன்பு நடந்ததை எல்லாம் நாம் கடந்த காலமாகவே குறிப்பிடுவோம்.

ஆகவேதான் அருளப்பர்
'இருந்தார்' என்று குறிப்பிடுகிறார்.

நாம் அதை 'இருக்கிறார்' என்று புரிந்துகொள்ள வேண்டும்.

கடவுள் நித்திய காலமாகவே தன்னை அறிகிறார்.

God knows Himself from all eternity.

நமது அறிவு ஏதாவது உருவில் இருக்கும், அல்லது வார்த்தையில் இருக்கும்.

ஆகவேதான் இறைவனின் தன்னைப்பற்றிய ஞானத்தை நம் மொழியிலேயே 'வார்த்தை' என்றார்.

அருளப்பர் 'வார்த்தை' எனக் குறிப்பிடுவது பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாம் ஆள், மகன்.

'வார்த்தை மனுவுருவானார்'.

நித்திய காலமாகவே தந்தைக்கும் மகனுக்கும் உள்ள அன்புதான் பரிசுத்த ஆவி."

"பரிசுத்த ஆவியைப்பற்றி அருளப்பர் எங்கே குறிப்பிடுகிறார்? "

"ஏன், அது உங்களுக்குத் தெரியாதா? " 

"உன் வாயினாலே சொன்னா குறைந்தா போயிடுவ. சொல்லேன்."

"இயேசு ஞானஸ்நானம் பெறும்போது,

'ஆவியானவர் புறாவைப்போல வானிலிருந்து இறங்கி, இவர்மேல் தங்கியதைக் கண்டேன்.'

என்று ஸ்நாபக அருளப்பர் கூறுகிறார்.

ஆமா, சாப்பாடு வேண்டுமா, வேண்டாமா?

அல்லது கொஞ்சமுன் குடிச்ச காபியே இன்று முழுதும் தாக்குப்பிடிக்குமா?"

"அதெப்படி? "

"அதெப்படின்னா? உங்க மேஜை மேலேயே Stove ஐ வைத்து இட்டலி அவிக்கடுமா? "

"சரி மீதிய நானே பார்த்துக்  கொள்கிறேன்.நீ கூப்பிடும்போது வந்தால்போதும்"

அருளப்பர் இயேசுவைபப் பற்றி குறிப்பிடும்போது
'வார்த்தை உண்மையான ஒளி.' என்கிறார்.

இயேசுவே அவர் போதிக்கிற காலத்தில்,
.
"நானே உலகின் ஒளி."
என்கிறார்.

உலகிற்கு ஒளி கொடுக்க சூரியனைப் படைத்தவர் அவர்தான்.

இன்று அவர்,

"நானே (நான் மட்டும்
தான்) உலகின் ஒளி."

என்கிறாரே, ஏன்?

இயேசு குறிப்பிடுவது நமது ஆன்மீக உலகம்.

இயேசு உலகிற்கு வந்தது,

விடுதலை இறையியல்வாதிகள் குறிப்பிடுவதுபோல

இவ்வுலக சம்பந்தப்பட்ட விடுதலைகளுக்காக அல்ல, 

அப்படி இருந்திருந்தால் ரோமையரிடமிருந்து யூதர்கட்கு விடுதலை வாங்கிக் கொடுத்திருப்பார், அவர் செத்திருக்கமாட்டார்.

அவர் வந்தது ஆன்மீக விடுதலைக்காக.

பாவத்திலிருந்து விடுதலை பெற்று,

நாம் செல்லும் விண்ணகப் பயணத்தில் இயேசு ஒளியாய் இருக்கிறார்.

இயேசு நம்மோடு வராவிட்டால் நாம் வழி தவறிப்போக நேரிடும்.

அது மட்டுமல்ல, ஆன்மீக சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சனைக்கும்

இயேசு என்ற ஒளியின் மூலம்தான் தீர்வுகாணவேண்டும்.

எந்தப் பிரச்சனைக்கும் தீர்வுகாண இயேசு பயன்படுத்திய வழிமுறைகள்

அன்பு,

இரக்கம்,

மன்னிப்பு மட்டும்தான்.

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை கல்லால் எறிந்துகொல்ல வேண்டுமென்று மற்றவர்கள் கூறும்போது இயேசு அவளை மன்னித்தார்.

தன்னைக் காட்டிக்கொடுத்த யூதாஸைக்கூட அவர் 'நண்பா' என்றுதான் அழைத்தார்.

சிலுவையில் தொங்கும்போது,

இயேசு, "

தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" 

என்று  வேண்டியது யூதாசுக்கும் சேர்த்துதான்.

இயேசு வெறும் formality க்காக வேண்டவில்லை.

உண்மையாகவேதான் வேண்டினார்.

மகன் வேண்டுவதை தந்தை உறுதியாக மறுக்க மாட்டார்.

நிச்சயமாக இயேசுவின் மரணத்திற்குக் காரணமானவர்கள்

கடைசி நேரத்தில் தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப் பட்டிருப்பார்கள்.

நாம் மோட்சத்திற்குச் செல்லும்போது

நிச்சயமாக அவர்கள்தான்

நம்மை வரவேற்று

இயேசுவிடம் அழைத்துச் செல்வார்கள்.

இயேசு நம்மைப் பார்த்து

"உலகிற்கு ஒளி நீங்கள்.''

என்று கூறியிருக்கிறார்.

இயேசு என்னும் ஒளியை நாம் பிரதிபலிக்க வேண்டும்.

மற்றவர்கள் நம்மில் இயேசுவைக் காணவேண்டும்.

"ஏங்க, ஏதாவது வாழ்த்துக் கூறப்போகிறீர்களா?

நானும் சேர்ந்து கொள்கிறேன்."

"செல்வம், வா.

அன்பு நெஞ்சங்களே,

நம்மை இரட்சிக்க,

மனுவுரு எடுத்த

வார்த்தையானவரின்

அன்புடனும்,

பரிவுடனும்,

மன்னிக்கும் மனப்பான்மையுடனும்

பூக்கவிருக்கும்

புத்தாண்டை

வரவேற்போம்.

லூர்து அந்தோனி
செல்வ பாக்கியம்

Sunday, December 30, 2018

2018ன் கவலை.

2018ன் கவலை.
****************************

"ஏண்டா, உன் மூஞ்சியில கொஞ்சங்கூட கவலையே இல்ல? "

"கவலையா? எதுக்கு? "

"365 நாளா நம்ம கூட இரவும் பகலும் பழகிக் கொண்டிருந்த 2018 நம்ம விட்டுப் போய்க்கிட்டிருக்கு. உனக்குக் கொஞ்சங்கூட கவலையே இல்லையா?"

"ஏண்டா, அதுதான் என்னைப்பற்றிக் கவலைப்படாம போய்க்கிட்டிருக்கு.

இந்த வருடம் மட்டுமா?

இதுவரை 25 ஆண்டுகள் கடந்து போயிருக்கின்றன.

இதுக்கெல்லாம் கவலைப் படுததாயிருந்தா நமக்கு கவலைப்படுததத் தவிர வேறு வேலையே இருக்காது."

"ஹலோ! நான்தான் 2018.

ஆமா, ஏது என்னைப் பற்றி பேச்சி  நடக்கு. என்ன விசயம்?"

"ஆமா, உன்னைப்பற்றிதான் பேசிக்கிட்டிருந்தோம்.
நீ போய்க்கிட்டிருக்கியாம். என் மூஞ்சியில கவலையே இல்லையாம். இந்தப் பொடியன் சொல்றான்."

"உண்மைதான. நீ உனக்காகவே கவலைப் பட்டதில்லை,

எனக்காக ஏன் கவலைப்படப்போகிறாய்?"

"எனக்காக நான் ஏன் கவலைப்படவேண்டும்? "

" ஏன்
கவலைப்படவேண்டுமா?

ஏன் தம்பி நான் உன்னோட ஒரு வருசம் இருந்திருக்கேன்.

உன்னிடம் வளர்ச்சிக்கான ஒரு அறிகுறியாவது இருக்கா?

வளர்ச்சிதான் இல்ல, தளர்ச்சியாவது இல்லாம இருக்கா?"

"இங்கபாரு. நீ எங்கிட்ட வரும்போது வயசு 25, இப்போ வயசு26.

அப்போ என் weight 60k.g, இப்போ70 k.g.

இது வளர்ச்சி இல்லையா?"

"இதுக்கு பேர்தான்  வளர்ச்சியா? பக்கத்து வீட்டு நாய்க்குட்டிக்குக்கூட ஒரு வயசு கூடியிருக்கு. இதுக்கு பேர் வளர்ச்சியா?

உன்னுடைய ஆத்தும வளர்ச்சிய பாரு.

போன வருசம் உங்க ஊர்த் திருவிழாவுக்கும், கிறிஸ்மசுக்கும் மட்டும்தான் கோவிலுக்கு உள்ள போய்ப் பூசை பார்த்த,

பார்த்த, கலந்துகொள்ளல.
(Attended, not participated)

இந்த வருடம் அதுவும் இல்ல."

"நன்மை வாங்க உள்ளே வந்தத நீ பார்க்கலியா?"

"ஒருநாளும் பாவசங்கீர்த்தனமே செய்யாம, முழு பாவ மூட்டையோடு வாங்கிறது நன்மை இல்லை."

"நான் எனது பாவங்கள நேரடியாகவே கடவுளிடம் சொல்லிடுவேன். எதுக்குச் சாமியாருட்ட சொல்லணும்?"

"இது, 'நான் நல்லா படிச்சிட்டேன்.எதுக்குப் பரீட்சை எழுதணும்?'னு  சொல்றது மாதிரி இருக்கு.

உண்மையான கிறிஸ்தவன் கிறிஸ்து சொன்னபடி நடப்பான்.  அவருக்கே பாடம் எடுக்கமாட்டான்.

ஒழுங்கா செபம் சொன்னாத்தானே இதெல்லாம் புரியும்."

"நான் செபமாலை சொன்னதைப் பார்த்ததில்லையா? "

"நீ செபமாலையைக் கையில வச்சிக்கிட்டு
அருள்நிறைந்த மந்திரத்த
மனப்பாடம் ஒப்பிச்சதப் பார்த்திருக்கேன்.

தியானம் செய்ததைப் பார்க்கல."

"ஏய் 2018, நீ  குற்றச்சாட்டுகள அடுக்கிக்கிட்டே போற."

"கொஞ்சம் பொறு தம்பி. நான் இன்னும் நாலு நாளில போயிடுவேன்.போனாப் போனதுதான், திரும்ப வரமாட்டேன்.

உன்னோடு இருக்குமட்டும் உன்னைத் திருத்த எவ்வளவோ முயன்றேன். முடியவில்லை.

போகிற போக்கிலாவது கொஞ்சம் திருத்த முயலலாமான்னு பார்த்தேன்."

"என்னைத் திருத்த அப்படி என்ன முயற்சி எடுத்தாய்?"

"கடவுள் நேரத்தைத் தருவதே நாம் திருந்துவதற்காகத்தான், வீணாக்க அல்ல.

கஷ்டங்கள்  வருவதே கடவுளை நினைப்பதற்காகத்தான்.

நீ கஷ்டங்கள் வரும்போதெல்லாம்

கடவுளைக் குறை சொல்லிக் கொண்டிருந்தாயே தவிர

திருந்தவில்லை."

"சரி, இப்போ நான் என்ன செய்ய வேண்டும்? "

"இதற்கு மேலாவது நல்ல கிறிஸ்தவனாக வாழ முயற்சி எடுக்க வேண்டும்.

அதற்காகப் புத்தாண்டுத் தீர்மானம் ஒன்று எடுக்கவேண்டும்."

"ஒன்று போதுமா?"

"நிறைய எடுத்து நிறைவேற்றாமல் போவதை ஒன்றே ஒன்று எடுத்து ஒழுங்காக நிறைவேற்றலாமே!"

"சரிப்பா, என்ன செய்யட்டும், சொல்லு."

"அடுத்து வர்ர ஆண்டுக்குள்ள சுத்தமா நுழையணும்.

நான் போறதுக்கு முன்ன ஒரு குருவானவரிடம் போய் நல்ல பாவசங்கீத்தனம் பண்ணு.

அடுத்து எடுக்கவிருக்கும் தீர்மானம் தொடர்ந்து பரிசுத்தமாய் இருக்க உதவும்.

சர்வ வல்லமையும், அன்பும் நிறைந்த கடவுள் எங்கும் இருக்கிறார்.

உனது உள்ளத்திலும் இருக்கிறார்.

தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு ஐந்து நிமிடம் மட்டும்

உள்ளத்தில்  வாழும் கடவுளை, 

கடவுளை மட்டும்,

வேறு நினைவுக்கு இடம் கொடாமல்

நினைத்துப்பார்.

வார்த்தை எதுவும் தேவையில்லை.

நினைத்தால் மட்டும் போதும்.

'நினைத்தால் மட்டும் போதும்'

என்பது

'ஸ்விட்சை மட்டும் போடு' என்பதற்குச் சமம்.

ஸ்விட்சை மட்டும் போட்டால் போதும்,  பல்பு தொடர்ந்து வெளிச்சம் தரும்.

ஐந்து நிமிட தியானம் பகல் முழுவதும் பயன் தரும்.

நீ எதைச் செய்தாலும்

கடவுள் உன்னுடன் இருந்து

உன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு வரும்.

இதற்குப் பெயர்தான் கடவுள் சன்னிதானத்தில் நடப்பது.

அடுத்த ஆண்டு முழுவதும் கடவுள் சன்னிதானத்தில்  வாழ்ந்துபார். அதன் பயன்தெரியும்."

"5 நிமிடம் தியானி என்று கூறிவிட்டாய்.

மனம் தியானிக்க ஏதாவது விசயம் வேண்டாமா?

நமது மனம் உருவம் உள்ள பொருட்களையே நினைத்துப் பழகிவிட்டது.

உருவம் இல்லாத கடவுளை எப்படி நினைப்பது?"

"அம்மாவுக்கு உருவம் இருக்கிறது.

அம்மாவின் அன்புக்கு உருவமில்லை.

நீ உன் அம்மாவின் அன்பைப் பற்றி நினைத்துப்பார்ப்பதில்லை?"

"அம்மாவின் அன்புச் செயல்களை நினைத்துப் பார்த்திருக்கிறேன்."

"இறைவனுக்கு உருவமில்லை.

அவர் உன்னை உருவாக்கிய செயலுக்கு உருவம் இருக்கிறதே!

அம்மாவின் செயலிலிருக்கும் அன்பை நினைக்கக் கூடிய.
உன்னால்

ஒன்றுமில்லாமை யிலிருந்து

உன்னை உருவாக்கிய இறைவனின் அன்பை நினைத்துப் பார்க்கமுடியாதா?

நீ எத்தனையோ முறை பாவம் செய்திருந்தும்

உன்னை அழிக்காமல் பாதுகாத்து வந்திருக்கிறாரே

அந்த அன்பை நினைத்துப் பார்க்கமுடியாதா?

ஒவ்வொரு நாள் காலையிலும்

ஏதாவது ஒரு அன்புச் செயலை நினைத்து,

அன்பு நிறைந்த அவர்

உன் உள்ளத்தில் தங்கியிருக்கும் அன்பை

நினைத்துப் பார்க்க முடியாதா?"

" ஐயா 18,  ஒவ்வொரு நாள் காலையிலும் ஐந்து நிமிடம்

இறைவனையும், அவரது அன்பையும்

தியானிக்கத்

தீர்மானிக்கிறேன்.

போதுமா?"

"ரொம்ப சந்தோசம்.

இன்னும் நான்கு நாட்களில் மகிழ்ச்சியாய் விடை பெறுவேன்."

Good bye, 2018!
Welcome, 2019!

லூர்து செல்வம்.

ஏன் இயேசு முப்பது ஆண்டுகள் அம்மாவிற்குக் கீழ்ப்படிந்திருந்தார்?

  ஏன் இயேசு முப்பது ஆண்டுகள் அம்மாவிற்குக்
கீழ்ப்படிந்திருந்தார்?
****************************

"செல்வம், கொஞ்சம் இங்கே வா, உட்கார்."

"ஏங்க, உங்களுக்கு ஒரே வேலை வாசிக்கிறதும், எழுதுவதும் மட்டுந்தான்.

எனக்கு இங்க ஆயிரம் வேலை  இருக்கு. அதையெல்லாம்  போட்டுவிட்டு உங்க பக்கத்தில உட்கார்ந்தா என்  வேலையை யார் பார்ப்பா.

நிச்சயமா நீங்க பார்க்க மாட்டீங்க."

"யார் சொன்னா?

நீ செய்கிற எல்லா வேலையையும் 

நான்தான பார்த்துக்கிட்டிருக்கேன்."

"இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.

சரி, உட்கார்ந்தாச்சி, சொல்லுங்க."

"இயேசு ஏன் மனிதனாய்ப் பிறந்தார்? "

"ஏங்க சின்னப் பிள்ளைகளிடம்

கேட்கவேண்டிய கேள்விய எங்கிட்ட கேட்கிறீங்க."

"எனக்கு இப்ப நீதான் சின்னப் பிள்ள. சொல்லு."

"நம்ம பிள்ளைகளுடைய பிள்ளைகளே பெரிய பிள்ளைகளாகி

அவங்களுக்கும் சின்னப்பிள்ளைகள் பிறந்தாச்சி.

நான் சின்னப்பிள்ளையா? கேட்க வேண்டியத நேரடியா கேளுங்க."

"சரி, நேரடியாகவே கேட்கிறேன்.

இயேசு பிறந்தது நற்செய்தியை அறிவிக்கவும் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும்தானே.

அவர் வாழ்ந்ததே 33 ஆண்டுகள்தான்.

அதில் வந்த வேலைக்கு வெறும் மூன்று ஆண்டுகளை வைத்துக்கொண்டு

30 ஆண்டுகளை பெற்றோருடன் செலவழித்து விட்டாரே, ஏன்? "

"இப்போ என்ன சொல்லவர்ரீங்க?"

"கேள்வி கேட்டிருப்பது நான்.

பதில் சொல்லவேண்டியது நீ."

சரி. இயேசு கடவுள் என்பது உங்களுக்குத் தெரியுமா?"

"தெரியும்."

"அவர் எல்லாம் வல்லவர் என்பது தெரியுமா?"

"தெரியும்."

"அவர் எடுத்திருந்த மனித சுபாவம்,

பாவம் தவிர மற்ற எல்லா வகையிலும்,

நம்மைப் போன்றது என்பது தெரியுமா?"

"தெரியும்."

"கடவுளாகிய அவர்

மனிதர்களாகிய நமக்குக் கொடுத்த பத்துக் கட்டளைகளுள்

நான்காவது கட்டளை மனிதன் என்ற வகையில் அவருக்கும் பொருந்தும் என்று....."

"அவருக்கும்  தெரியும், எனக்கும் தெரியும்.

நான் கேட்ட ஒரு கேள்விக்குப் பதில் சொல்லாம நீ பாட்ல கேள்விகளை அடுக்கிக் கொண்டேபோற."

"சரி. கேள்வியைப் பார்த்துப் பயப்படுவது மாதிரி தெரியுது. பயங்காட்ட மாட்டேன்.சொல்றதக் கேளுங்க.

கடவுள் எல்லாம் வல்லவர்.

அவரால் முடியாதது எதுவுமில்லை.

அவர் நினைத்திருந்தால் மனிதனாகித் துன்பங்கள் அனுபவிக்காமலே

நமது பாவங்களை மன்னித்திருக்கலாம்,

அல்லது

மன்னியாமல் நமது முதல் பெற்றோரை அழித்து

மனித இனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.

ஆனால் தனது அன்பின் மிகுதியை நாம் அறிந்து

அவரை அன்பு செய்யவேண்டு மென்பதற்காக

மனிதனாகி, சிலுவைப்பலியை ஏற்றுக்கொண்டார்.

ஒன்றுமே இல்லாத பரம ஏழையாய் மாட்டுத் தொழுவத்தில், மார்கழிக் குளிரில் பிறந்தார்,

நாம் ஏழ்மையை நேசிக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரிகையாக.

தான் கடவுளாக இருந்தும் தன்னைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க அனுமதித்தார்,

நாம் நம்மை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து வாழவேண்டும் என்பதற்காக.

அதேபோல தன்னைச் சோதிக்க வந்த சாத்தானை,

தன்னை நெருங்கவிடாமல் விரட்டியிருக்கலாம்.

ஆனாலும் நாம் சோதனைகளைக் கண்டு பயப்படக்கூடாது என்பதற்காக சாத்தானை அனுமதித்தார்.

பாவமாசு ஏதும் இல்லாதவராயிருந்தும்

பாவிகளோடு நின்று அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெற்றார்

நமக்கு முன்மாதிரிகையாக.

இவ்வாறு அவர் செய்த ஒவ்வொரு செயலையும் நமக்கு முன்மாதிரிகையாகவே செய்தார்.

சர்வத்தையும் ஆளும் கடவுள் சாதாரண இரண்டு மனிதர்கட்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தாரென்றால் கீழ்ப்படிதலின் மகத்துவத்தை நமக்கு உணர்த்ததான்.

நமது முதல் பெற்றோரின் கீழ்ப்படியாமை காரணமாக உலகில் பாவம் புகுந்தது.

சர்வ வல்லவ கடவுளின் கீழ்ப்படிதலின் மூலம் இரட்சண்யம் கிடைத்தது.

"இயேசு வளர வளர ஞானத்திலும் முதிர்ந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் மேன்மேலும் உகந்தவரானார்."

என்று ஏன் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார்?

கடவுளாகிய இயேசு சர்வ ஞானமுள்ளவர். கடவுளுக்கு வளர்ச்சி கிடையாது.

  ஆனாலும் இயேசு   மனித சுபாவத்தில் நம்மைப் போலவே 'வளர்ந்தார்'.

நமது குடும்பங்களும்

திருக்குடும்பத்தைப் போலவே

பிள்ளைகட்கு உடல் வளர்ச்சியோடு

ஞானவளர்ச்சியையும், இறையன்பையும்

ஊட்டி வளர்க்கவேண்டும் என்பதை நாம் உணரவேண்டும்.

திருக்குடும்ப வாழ்வைப் பின்பற்றிதான்

நமது திருச்சபையின் துறவற சபையினர்

கீழ்ப்படிதல், ஏழ்மை, கற்பு

(Obedience, poverty, chastity)

ஆகியற்றை வாழ்நாள் முழுவதும் பின்பற்ற

உறுதிமொழி எடுக்கிறார்கள்.

ஏங்க திருக்குடும்பத்தைப்பற்றி
வேறு ஏதாவது கேட்க வேண்டுமா?"

"மாதாவையும், சூசையப்பரையும் பற்றி நீ ஒண்ணும் சொல்லல.  

அடுத்து என் முக்கிய கேள்வியே 'ஏன்  30 ஆண்டுகள்? "

"நல்ல வேளை மாதாவைப்பற்றி ஞாபப்படுத்துனீங்க.

பிற்காலத்தில் தன்னைப் பின்பற்றும் சிலர்  தன் தாயைப் புறக்கணிப்பர் என்று  இயேசுவுக்குத் தெரியும்.

அவர்கட்குப் பாடம் புகட்டவே இயேசு தனது 33 ஆண்டு வாழ்வில் 30 ஆண்டுகள் தன் தாய்க்குப்
'பணிந்திருந்தார்' என நினைக்கிறேன்.

மாதாவை வெறுப்போர் புரிந்துகொள்ள வேண்டும்,
'மாதா இல்லையேல் இயேசு இல்லை' என்ற உண்மையை.

இயேசு தன் அன்னையைக் கடைசி வரை மறக்கவில்லை.

ஏன் 30 ஆண்டுகள் எனக் கேட்டீர்களே,  அது தன் தாய்க்காகத்தான் இருக்க வேண்டும்.

சூசையப்பர் இந்த 30 ஆண்டு காலக்கட்டத்திற்குள்  இறந்துவிட்டார்.

இயேசு பிறக்கும்போது மாதாவுக்கு 15 வயதுதான்.

இயேசு மூன்று நாள் காணாமல்போது மாதாவுக்கு  27 வயது.

சூசையப்பர் எப்போது இறந்தார் என்று நமக்குத் தெரியாது.

சூசையப்பர் இறக்கும்போது மாதாவுக்கு என்ன வயது எனவும் நமக்குத் தெரியாது.

சூசையப்பர் இறந்தபின்

அம்மாவிற்குப் பாதுகாப்பாக,

உணவிற்காக உழைக்க

இயேசு அம்மாவோடு தங்க வேண்டிய அவசியம் இருந்திருக்கும்.

இயேசு பொது வாழ்வுக்கு வந்தபோதும் தாயைக் கவனித்துக்கொள்ள மறக்கவில்லை.

அதனால்தான் தான் மரிக்குமுன் தன் தாயை அருளப்பரின் பாதுகாப்பில் விடுகிறார்.

இயேசு நேசித்த தாயை  நேசிக்க மறுப்பவர்களை எப்படி கிறிஸ்தவர்கள் என்று அழைப்பது?

ஆனால் அவர்களையும்  இயேசு நேசிக்கிறார்.

மரியாள் 'இதோ ஆண்டவரின் அடிமை' என்ற அர்ப்பணிப்போடு இயேசுவை மகனாகப் பெற்றவள்.

அவளுக்கு தான் பெற்ற மகன் தன்னைப் படைத்த கடவுள் என்று தெரியும்.

உலகின் உரிமையாளரே ஒன்றுமே இல்லாதவர் போல் ஏழையானார்.

மாதாவும் கடைசிவரை ஏழையாகவே வாழ்ந்தார்.

சூசையப்பர் ஒரு நீதிமான்.

இறைவனின் குரலுக்கு மறுப்பு கூறாமல் கீழ்ப்படிபவர்.

அவருக்கு  இறைவனே கீழ்ப்படிந்து  வாழ்ந்தார்.

சென்றவிடமெல்லாம் புதுமைகள் செய்த இயேசு தன் அம்மாவுக்காகவும், வளர்த்த தந்தைக்காகவும்

ஒரு புதுமைகூட செய்யவில்லை.

வாத நோயால் கஷ்டப்பட்ட சூசையப்பர் இயேசுவின் மடியிலேயே உயிர்விட்டார்.

அவர் நன்மரணத்தின்
பாதுகாவலர்."

"திருக்குடும்பம்

அன்பில் இணைந்து,

கீழ்ப்படிதலில் உயர்ந்து,

உழைப்பால் வாழ்ந்தது."

நாமும் திருக்குடும்பம் போல் வாழ்வோம்.

லூர்து செல்வம்