இயேசுவின் பாடுகளும்.
மனுக்குலத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய மனிதனாகப் பிறந்த இறைமகன் இயேசு
தமது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றால் நாம் செய்த ஒவ்வொரு பாவத்திற்கும் பரிகாரம் செய்தார்.
பாவப் பரிகாரம் செய்வதற்காக பாவம் தவிர அனைத்து மனித பலகீனங்களையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
உண்மையில் அவரது பரிகாரம் செய்தல் அவர் பிறந்த நாளிலேயே ஆரம்பித்து விட்டது.
மனிதன் இவ்வுலக செல்வத்துக்கு அடிமையாக வாழ்வதற்குப் பரிகாரமாகத்தான்
அவர் சாணி நாற்றம் வீசிக் கொண்டிருந்த ஒரு மாட்டுத் தொழுவத்தில்
ஒரு வசதியும் இல்லாத ஏழையாகப் பிறந்தார்.
மனிதன் தனது அதிகார பலத்தால் செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாகத்தான்,
ஏரோது மன்னனின் அதிகாரத்திலிருந்து தப்பிப்பதற்காக எகிப்துக்குப் பயணித்து அங்கு நாடோடியாக வாழ்ந்தார்.
மனிதன் கீழ்படியாமையினால் செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாக,
உலகத்தையே ஆளுகின்ற அவர் தன்னுடைய பெற்றோருக்கு 30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து நடந்தார்.
மனிதன் சுயநலத்தால் செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாக
மூன்று ஆண்டுகள் நற்செய்தி போதித்த காலத்தில் சென்ற இடமெல்லாம் மனிதர்களின் நோய்களைக் குணமாக்கி பிறரன்பு பணியாற்றினார்.
அவரது இறுதி பாடுகள் புனித வியாழன் இரவில் ஆரம்பித்தன.
மனிதன் இறைவனது சித்தத்திற்கு எதிராக வாழும் பாவத்துக்குப் பரிகாரமாக பூங்காவனத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்து பரிகாரம் செய்தார்.
அதற்காகப் பயம் என்ற மனித பலகீனத்தை அவர் ஏற்றுக் கொண்டார்.
புனித வெள்ளியன்று அவர் படவிருக்கும் பாடுகளை நினைத்தவுடன் அவர் மனதில் பயம் தொற்றிக் கொண்டது.
அந்தப் பாடுகளை படத்தான் அவர் நித்திய காலமாகத் திட்டமிட்டு, அதன்படி மனிதனாகப் பிறந்தார்.
அந்தத் திட்டத்திலிருந்து விடுபட பயமாகிய மனித பலகீனம் அவரைத் தூண்டியது.
அதன் விளைவாக
"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்: "
என்று தந்தையிடம் கேட்டார்.
அவரது பயம் நமது பயத்துக்குப் பரிகாரம்.
நாம் விண்ணகத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றாமல் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாக,
தந்தையை நோக்கி,
"எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று செபித்தார்.
பயத்தின் காரணமாக அவருடைய வியர்வை பெரும் இரத்தத் துளிகளாக நிலத்தில் விழுந்தது.
நாம் துன்பப்பட வேண்டும் என்பது இறைவனின் சித்தமாக இருக்கும்போது
அதிலிருந்து விடுதலை பெற இறைவனிடம் நாம் வேண்டுவதற்குப் பரிகாரமாகத் தான்
இயேசு இரத்த வியர்வை வியர்த்து தந்தையிடம் வேண்டினார்.
நாம் வார்த்தைகள் மூலம் செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாக
விசாரணையின் போது அவர் மௌனம் காத்தார்.
மனிதன் தனது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாலும் செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாக
அவர் கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டார்.
அவர் உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் பாவப்பரிகாரமாக அடி வாங்கின.
நம் தலையில் உள்ள மூளை, கண், காது, மூக்கு, வாய் ஆகிய உறுப்புக்கள் மூலம் நாம் செய்கின்ற பாவங்களுக்கு பரிகாரமாக
தலையில் முள்முடி சூட்டப்பட்டு அடிக்கப்பட்டார்.
தலை உறுப்புக்கள் அனைத்தும் முள்ளினால் தாக்கப்பட்டு, ரத்தம் சிந்தி பரிகாரம் செய்தன.
நாம் சிற்றின்பத்தைத் சுமைந்து வாழ்வதற்குப் பரிகாரமாக
அவர் கல்வாரி மலை வரை பாரமான சிலுவையைச் சுமந்தார்.
துன்ப வேளையில் நாம் பாவத்தில் விழுவதற்குப் பரிகாரமாக
சிலுவையைச் சுமந்து சென்ற போது அதன் பாரத்தைத் தாங்க முடியாமல் பல முறை தரையில் விழுந்தார்.
நமது கைகளாலும் கால்களாலும் நாம் செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாக
அவரது கைகளிலும், கால்களிலும் ஆணிகள் அறையப்பட்டன.
நாம் நமது அயலானைப்
பரிகாசம் செய்வதற்குப் பரிகாரமாக
இயேசு அவரைச் சிலுவையில் அறைந்த அவரது விரோதிகளால் பரிகாசம் செய்யப்பட்டார்.
நமது துன்ப காலங்களில் இறைவன் நம்மைக் கைவிட்டு விட்டதாக நாம் நினைக்கும்
அவநம்பிக்கைக்குப் பரிகாரமாக
"என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?" - என்று உரக்கக் கூவினார்.
நமது வாழ்நாளில் நாம் செய்கின்ற அனைத்துப் பாவங்களுக்கும் இயேசு பரிகாரம் செய்தார்.
நாம் பாவங்கள் செய்யாமலிருந்தால்தான் அவரது பாடுகளின் பயனைப் பெறுவோம்.
பாவங்கள் செய்வதைத் தவிர்ப்போம்.
செய்த பாவங்களுக்கு நாமும் பரிகாரம் செய்வோம்.
விண்ணக வாழ்வுக்கு ஏற்றவர்களாக வாழ்வோம்.
அதற்கான அருள் வரங்களைத் தரும்படி இயேசுவிடம் கேட்போம்.
மோட்சம் நமதே.
லூர்து செல்வம்.