Monday, February 28, 2022

குழந்தையைப் போல வாழ்வோம்.

குழந்தையைப் போல வாழ்வோம்.



", குழந்தைக்குச் சொந்தமான,
உனக்குப் பிடித்தமான இன்னொரு குணத்தைச் சொல்லு."

"குழந்தை மாசற்றது. (Innocent)
நாமும் குழந்தையைப் போல மாசற்றவர்களாக இருந்தால் இறையரசுக்குள் நுழைவது மிக எளிது."

",குழந்தையைப் போல மாசற்றவர்களாக இருந்தால் இறையரசுக்குள் நுழைவது மிக எளிது.

ஆனால் மாசற்றவர்களாக இருப்பது எளிதா?"

"அது குழந்தையாகவே இருந்தால்தான் முடியும் என்று நினைக்கிறேன்.

ஆனால் அது முடியாதே!

நாம் குழந்தையாகவே இருக்க முடியாது என்று கடவுளுக்குத் தெரியும்.

ஆனால் முடியாத ஒன்றைக் கடவுள் சொல்ல மாட்டார் என்று நமக்குத் தெரியும்."

", நிச்சயமாக. ஆனால் குழந்தையின் மாசற்ற தன்மைக்கு காரணத்தைக் கண்டறிந்து அதன்படி வாழ முடியும் என்று நினைக்கிறேன்."

"மாசற்ற தன்மை என்றால் பாவம் இல்லாத தன்மை தானே?"

", ஆமா. குழந்தை ஏன் பாவம் இல்லாமல் இருக்கிறது?"


"ஏனெனில் குழந்தையால் பாவம் செய்ய முடியாதே."

", ஏன் பாவம் செய்ய முடியாது?"

''பாவம் செய்ய வேண்டுமென்றால் கடவுளின் கட்டளைகள் தெரிந்திருக்க வேண்டும்.

அவற்றை மீறுவது பாவம் என்றும் தெரிந்திருக்க வேண்டும்.

இந்த இரண்டும் குழந்தைக்கு தெரியாது. ஆனால் நமக்குத் தெரியும்.

ஆகவேதான் குழந்தையால் பாவம் செய்ய முடியாது. நம்மால் முடியும்.''


",பின் ஏன் கடவுள் ஏன் நம்மை குழந்தையைப் போல் இருக்க வேண்டும் என்கிறார்?"

"அதுதான் தெரியவில்லை."

",கடவுள் முன் உட்கார்ந்து தியானித்து பார். தெரியும்." 

"அப்படியானால் குழந்தையின் பாவம் செய்ய முடியாமைக்கு வேறொரு காரணம் இருக்க வேண்டும்.

கொஞ்சம் பொறுங்கள்.

ஏதோ மனதில் தோன்றுகிறது.

வேறொரு காரணம் இருக்கிறது.

குழந்தைக்கு சூதுவாது தெரியாது. யாருக்கும் தீங்கு செய்ய வேண்டும் என்று நினைக்காது.

கட்டளைகளை மீறுவதுதான் பாவம். ஆனால் யாருக்கும் தீங்கு நினைக்காதவன் கட்டளைகளை மீற மாட்டான்.

'உன்னைப் போல் உனது அயலானையும் நேசி' என்று ஆண்டவர் கட்டளை கொடுத்திருக்கிறார்.

யாராவது தனக்கு யாரும் தீங்கு செய்ய வேண்டும் என்று நினைப்பார்களா?

நிச்சயமாக நினைக்க மாட்டார்கள்.

தங்களை தாங்களே நேசிப்பவர்கள் தங்களுக்கு தீங்கு நினைக்க மாட்டார்கள்.

தங்களை நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிப்பவர்கள் மற்றவர்களுக்கு 
தீங்கு நினைக்க மாட்டார்கள்.

அப்படியானால் மற்றவர்களுக்கு 
தீங்கு நினைக்காதவர்கள்

மற்றவர்களை நேசிப்பவர்களுக்குச் சமம்தானே!

குழந்தைகளைப் போல மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காதவர்கள்

பிறருக்கு எதிரான எந்த பாவத்தையும் செய்ய மாட்டார்கள்.

குழந்தைகளுக்கு அன்பைப் பற்றியோ, தீங்கைப் பற்றியோ, கட்டளைகளைப் பற்றியோ கொள்கை ரீதியாக (Theoretically) எதுவும் தெரியாதிருக்கலாம்.

ஆனால் செயல் முறையில் (Practically) அவர்கள் கட்டளைப் படிதான் வாழ்கிறார்கள்.

நாமும் குழந்தைகளைப் போல பிறருக்குத் தீங்கு நினையாதிருப்போம்.

பிறருக்கு எதிரான எந்த பாவத்தையும் செய்ய மாட்டோம்."

", நாம் பள்ளிக் கூடத்தில் படிக்கும்போதே ஞான உபதேசம் கற்றோம். இப்போ பைபிள் வாசிக்கிறோம். அதுவும் போக ஞான விஷயங்கள் போதிக்கப்படும் கூட்டங்களுக்குப் போகிறோம்.

 இவற்றிலிருந்து கடவுள், உலகப் படைப்பு, கட்டளைகள், பாவம், புண்ணியம், நரகம், மோட்சம் பற்றி நிறைய அறிவு பெற்றிருக்கிறோம்.

இவற்றைப் பற்றி பட்டிமன்றம் போட்டால் வெற்றிகரமாகப் பேசுவோம்.

இவ்வளவு அறிவு பெற்றிருந்தாலும் பாவங்களுக்குப் பஞ்சமில்லையே! 

அறிவுக்கும் பாவம் செய்யாமைக்கும் சம்பந்தமில்லை.

நற்கருணையில் ஆண்டவர் இருக்கிறார் என்று தெரிந்திருந்தும் தயாரிப்பு இன்றி நற்கருணை வாங்குவோம்.

ஆனால் நம்மில் சிலர் பள்ளிக்கூடம் போயிருக்க மாட்டார்கள்.

எழுத, வாசிக்கத் தெரியாது.

ஞான உபதேசம் என்றால் என்னவென்றே தெரியாது.

பைபிள் வாசிக்கத் தெரியாது.

பைபிளைப் பற்றி தெரியாது.

அறிவைப் பொறுத்த மட்டில் குழந்தைகள் மாதிரியே இருப்பார்கள்.

ஆனால் பக்தி உள்ளவர்களாக
 இருப்பார்கள்.

கடவுளையும், அவரால் படைக்கப் பட்டவர்களையும் அளவு கடந்து நேசிப்பார்க்ள்.

பங்கு சாமியார் பிரசங்கம்தான் அவர்களுக்குப் பைபிள்.

பிரசங்கத்தில் கூறியபடி வாழ்வார்கள்.

வாழத் தவறினால் உடனே பாவ சங்கீர்த்தனம் செய்து விடுவார்கள்.

தகுந்த ஆன்மீக தயாரிப்போடுதான் நற்கருணை வாங்குவார்கள்.

எப்போதும் ஆண்டவருக்குப் பிரியமானவர்களாக நடப்பார்கள்.

படித்து, பட்டம் பெற்று, நிறைய அறிவை சேமித்து வைத்திருப்பவர்களின் ஆன்மாக்களை விட,

பக்தி மிகுந்த படிப்பறியாத பாமர மக்களின் ஆன்மாக்கள் தான் கடவுளுக்குப் பிடித்தமானவைகளாக இருக்கும்.

மீட்பைத் தருவது கடவுளைப் பற்றிய அறிவு அல்ல,

 அன்பு நிறைந்த, பாவம் இல்லாத வாழ்க்கைதான்.

குழந்தையிடம் அன்பு இருக்கிறது, பாவம் இல்லை.

நாமும் குழந்தையைப் போல அன்புடனும், பாவம் இல்லாமலும் வாழ்ந்தால்

இறையரசில் நுழைவது மிக எளிது."

"உண்மைதாங்க.

அறிவு வேண்டாமென்று சொல்லவில்லை.

அன்பில்லாத, பாவம் நிறைந்த வாழ்க்கை வாழ்வோருக்கு அறிவால் எந்த பயனும் இல்லை.

ஆகவே, குழந்தையைப் போல,

யாருக்கும் தீங்கு நினைக்காமல் அன்புடன் வாழ்வோம்.

பாவம் நம்மை நெருங்காது.

பாவம் இல்லாத பரிசுத்தமான ஆன்மாவிற்கு விண்ணக வாசல் எப்போதும் திறந்தேயிருக்கும்."

லூர்து செல்வம்.

Sunday, February 27, 2022

"கடவுளின் அரசைக் குழந்தைபோல் ஏற்றுக்கொள்ளாத எவனும் அதனுள் நுழையவே முடியாது" (மாற்கு. 10:15)

"கடவுளின் அரசைக் குழந்தைபோல் ஏற்றுக்கொள்ளாத எவனும் அதனுள் நுழையவே முடியாது" 
(மாற்கு. 10:15)

"ஏங்க, நமக்குக் குழந்தை பிறந்தால் அது வளர்ந்து பெரிய ஆள் ஆகவேண்டும் என்றுதானே ஆசைப் படுவோம்.

ஆனால் நம்ம ஆண்டவர் வித்தியாசமாகச் சொல்கிறார்.

கடவுளின் அரசு நிரந்தரமானதுதானே.

அதற்குள் நுழைய விரும்புவோர் குழந்தையைப் போலவே இருக்க வேண்டும்  என்று ஆண்டவர் சொல்கிறார்.

அப்போ வளர்ந்தவர்களுக்கு மோட்சத்தில் இடமில்லையா?"

", ஏன்டி உன் இஷ்டம்போல் அர்த்தம் சொல்ற.

ஆண்டவர் 'குழந்தையைப் போலவே' என்றுதான் சொன்னார்.

'குழந்தையாகவே' என்று சொல்லவில்லை.''

"இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?"

", விசுவாச வாழ்வில் வெற்றி பெற விரும்புவோருக்கு இருக்க வேண்டிய  சில நல்ல குணங்கள் குழந்தைகளிடம் இருக்கின்றன.

கடவுளின் அரசுக்குள் நுழைய விரும்புவோருக்கு அந்த குணங்கள் இருக்க வேண்டும்."

"நீயும் குழந்தையைப் பெற்றவள்தானே. உன் மகன் குழந்தையாய் இருந்தபோது அவனிடம் இருந்த உனக்குப் பிடித்தமான குணங்களைச் சொல்லேன்."

"அவனுக்கு என் மேல் அளவுக்கு மேலான பாசம் இருந்தது.

என் மேல்  அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தது.

எப்போதும் என்னுடனே இருக்க ஆசைப்படுவான். இடுப்பை விட்டு இறங்கவே மாட்டான்.

நான் என்ன சொன்னாலும்  அப்படியே நம்புவான். 'ஏன், எப்படி' என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்க மாட்டான்."

". கொஞ்சம் பொறு. தொடருமுன் இந்த இரண்டு குணங்களையும் அப்படியே ஒரு விசுவாசிக்குக்  கொடு."

"உண்மையான விசுவாசிக்கு கடவுள்மேல் அளவு கடந்த பாசம் இருக்கும். இறைவன் நினைவு எப்போதும் அவன் மனதில் இருக்கும்.

தாய்த் திருச்சபை மீது அளவு கடந்த நம்பிக்கை இருக்கும்.

திருச்சபை சொல்வதை எதிர்க் கேள்வி கேட்காமல் விசுவசிப்பான். திருச்சபையால் பொய் சொல்ல முடியாது என்று உறுதியாக நம்புவான்."

", இந்த இரண்டு குணங்கள் இருந்தாலே விசுவாசிக்கு விண்ணகம் உறுதி.

குழந்தையிடம் இருக்கும் இந்த குணங்கள் பெரியவர்களிடமும் இருக்க வேண்டும்.

இருந்தால் அவர்கள் குழந்தையைப் போன்றவர்கள்.

நம்மில் எத்தனை பேர் எப்போதும் இறைச் சந்நிதானத்தில் வாழ்கிறோம்.

இறைச் சந்நிதானத்தில் வாழ்பவர்களால் இறைவனுக்கு எதிராகப் பாவம் செய்ய முடியாது.

குழந்தை  தாயை நம்புவது போல திருச்சபையை நம்பியிருந்தால்  சீர்திருத்தம் என்ற பெயரில் இத்தனை பிரிவினை சபைகள் தோன்றியிருக்குமா?

பைபிளை வாசிக்கும் நம்மில் எத்தனை பேர் பைபிள் வசனங்களுக்குத் தாய்த் திருச்சபை கொடுக்கும் விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறோம்?

எத்தனை பேர் பிரிவினை சபையாரது விளக்கத்துக்கு செவி மடுக்கிறோம்?

எத்தனை பேர் சொந்த விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்?

ஞாயிற்றுக் கிழமை பிரசங்கத்தைக் கேட்பவர்களில்  எத்தனை பேர் சுவாமியார் கூறும் கருத்துக்களைக் கவனிக்கிறோம்.

எத்தனை பேர் ஏதாவது குறைகள் உள்ளதா என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்?"

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது."


", என்ன பயம்?"

"மக்களில் பலர் குழந்தைகள் போல இருப்பது போல் தெரியவில்லை.

குழந்தையாய் இருக்கும் போது பெற்றோர்களைச் சுற்றிவந்த பையன்களில் அநேகர் வளர்ந்தபின் அவர்களை ஏறிட்டும் பார்ப்பதில்லை.

பெற்றோரை உறுதியாக நம்பியவர்கள் அவர்களைப் பற்றி மற்றவர்கள் கூறுவதை நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.

இதனால்தான் அநேக விசுவாசிகள் பிரிவினை சபையார் கூட்டங்களுக்கு அடிக்கடி போக ஆரம்பிக்கிறார்கள்."

", ஒரு குழந்தை எப்படி தன் தாயின் மடியில் அமர்ந்து, அவளது முகத்தையே பார்த்து புன்முறுவல் பூக்க ஆசிக்கிறதோ

அதேபோல ஒவ்வொரு விசுவாசியும் தன்னைப் படைத்தவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பதில் ஆர்வம் காட்டினால்

அவனது உள்ளத்தில் கடவுளது எண்ணத்தைத் தவிர வேறு எண்ணம் இருக்காது.

அவருக்கு தன் அன்பைக் காட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பான்.

தனது ஒவ்வொரு செயலையும் தனது அன்பின் காணிக்கையாக அவருக்கு ஒப்புக் கொடுத்துக் கொண்டேயிருப்பான்.

கடவுளையே  நினைத்துக் கொண்டிருப்பவன் விண்ணக பேரின்பத்தை உலகிலேயே அனுபவிக்க ஆரம்பித்து விடுவான்.

அவனுக்கு உலக இன்பங்களின் மேல் நாட்டம் இருக்காது.

கொரோனா போன்ற தொற்றுக் காலத்தில் கூட அவனுக்குப் பயம் ஏற்படாது.

ஏனெனில் இருந்தாலும், இறந்தாலும் கடவுள் மடியிலேயே இருக்க விரும்புகிறவன் எதற்கு இறப்புக்குப் பயப்பட வேண்டும்?"

"ஒரு குழந்தைக்குத் தாய் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதுபோல 

ஒரு விசுவாசிக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தால் அவருடைய பராமரிப்பிற்குள் தன்னை ஒப்படைத்து விட்டு கவலை இல்லாமல் வாழ்வான்.

தனக்கு என்ன நடந்தாலும் அது இறைப் பராமரிப்புக்கு உட்பட்டதுதான் என்று  அவன் நம்புவதால்

என்ன நடந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல்லுவான்.

அவனது வாழ்வின்போது நடக்கும் ஒவ்வொரு செயலும் இறைவனின் நித்திய திட்டத்திற்கு உட்பட்டது.

நமக்கு நாளை என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது, ஆனால் கடவுளுக்குத் தெரியும்.

ஆகவே கடவுள் நம்பிக்கை உள்ளவன் தன்னைப் பற்றி கவலைப் பட மாட்டான்.

கடவுளுக்கு சேவை செய்வதிலேயே முழுக்கவனத்தையும் செலுத்துவான்.''

", குழந்தைக்குச் சொந்தமான,
உனக்குப் பிடித்தமான இன்னொரு குணத்தைச் சொல்லு."

(தொடரும்)

லூர்து செல்வம்.







 
.

Friday, February 25, 2022

''ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருங்கள்."(மாற்கு. 9:50)

''ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருங்கள்."
(மாற்கு. 9:50)

"தாத்தா!"

"என்னடே? சந்தேகங்கள் ஊறிக்கிட்டே இருக்கா?"

"உங்களைக் கூப்பிட்டால் சந்தேகம் என்றுதான் அர்த்தமா?"

", என்ன விசயம்? சொல்லு."

"ஆண்டவர் ஒரு வசனத்தை உப்பிலே ஆரம்பித்து, சமாதானத்தில் முடிக்கிறாரு.
உப்புக்கும் சமாதானத்துக்கும் என்ன சம்பந்தம்?"

".உப்பைப் பற்றி என்ன சொல்கிறார்?"

" "உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு உவர்ப்பு அற்றுப்போனால் எதைக்கொண்டு அதற்குச் சாரம் ஏற்றுவீர்கள்?" என்று கேட்கிறார்.

அப்புறம் "உங்களுக்குள் உப்பு இருக்கட்டும்." என்கிறார்."

",அப்புறம் "ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருங்கள்." என்கிறார். அப்படித்தானே?"

"ஆமா.இப்ப விளக்குங்கள்."

". உப்பை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோம்?"

"உணவோடு சேர்த்து சாப்பிடவும், உணவுப் பொருட்களைக் கெடாமல் பக்குவப் படுத்தவும் பயன்படுத்துகிறோம்."

", சீனி இனிப்பாக இருப்பதால் அதைப் பயன்படுத்துகிறோம்.

உப்பு எப்படி இருப்பதால் அதைப் பயன்படுத்துகிறோம்?"

"உவர்ப்பாக இருப்பதால்,"

".Suppose, சீனி இனிப்பாக இல்லை, மண்ணுபோல இருக்கு, அதை என்ன பண்ணுவ?"

"மண்ணுக்குள்ளதான் போடுவேன்."

", உட்பு தன் உவர்ப்புத் தன்மையை இழந்து விட்டது.
அதை என்ன பண்ணுவ?"

"நிச்சயமாக சாப்பாட்டுக்குள்ள போடமாட்டேன்."

".ஏன்?"

"உடுக்க முடியாத வேட்டியை என்ன பண்ணுவீங்க?"

", உடுக்க மாட்டேன்."

"அதேமாதிரிதான். நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் நீங்க கேள்வி கேட்டுக் கொண்டேயிருக்கிறீர்கள்!" 

", கெட்டுப்போன உப்பு ஒன்றுக்கும் உதவாது."

"அது எனக்கும் தெரியும். ஏன் ஆண்டவர் "உங்களுக்குள் உப்பு இருக்கட்டும்." என்கிறார்?

அப்புறம் உப்பைப் பற்றி பேசாமல் "ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருங்கள்." என்கிறார்.

உப்புக்கும், சமாதானத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன். அதுக்குப் பதில் சொல்லுங்கள்."

", சாப்பாட்டுக்கு உப்புபோல உங்களுக்கு சமாதானம் என்கிறார்.

தெரிந்த ஒன்றைச் சொல்லி தெரியாததை விளக்குவது ஆண்டவருடைய வழக்கம்.

அதனால்தான் அவருடைய போதனையில் உவமைகள் நிறைய இருக்கும்.

"சாப்பாட்டுக்கு உப்புபோல உங்களுக்கு சமாதானம்" என்று ஆண்டவர் சொல்கிறார்.

உனக்கு உப்பைப் பற்றி தெரியும். அதைப்போல சமாதானம் என்று சொன்னதைக் கேட்டவுடன் சமாதானத்தைப் பற்றி என்ன தோன்றுகிறது?"

"சாப்பாடு ருசியா இருக்கணும்னா உப்புப் போட்டுச் சாப்பிட வேண்டும்.

நமது வாழ்க்கை இனிமையா இருக்கணும்னா நாம் ஒருவரோடு ஒருவர் சமாதானமாக இருக்க வேண்டும்."

", இன்னா சரியாச் சொல்லிட்டிய,

 அப்போ எனக்கு விடை தெரியுமான்னு test பண்றதுக்காக என்னிடம் கேள்வி கேட்டிருக்க, அப்படித்தானே?"

"தாத்தா, சமாதானத்தைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்வீங்கன்னு பார்த்தேன்."

", கிறிஸ்து பிறந்த அன்று வான தூதர்கள் சமாதானம் பற்றிப் பாடிய பாடல் வரி ஞாபகம் இருக்கிறதா?"

"பூவுலகில் நன்மனதோர்க்குச் சமாதானமும் உண்டாகுக."

", Correct. அப்போ யார்ட்ட சமாதானம் இருக்கும்?"

"நல்ல மனது உள்ளவர்களிடம்."

", அதாவது?"

"மனதில் நல்லதையே நினைப்பவர்களிடம்.

நல்லதையே நினைப்பவர்கள்
நல்லதையே பேசுவார்கள்,
நல்லதையே செய்வார்கள்.

நல்லதையே நினைப்பவர்கள் எல்லோரையும் நேசிப்பார்கள்.

 யாருக்கும் தீங்கு செய்ய நினைக்க மாட்டார்கள்.

எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

எல்லோருக்கும் நல்ல மனம் இருந்தால் மக்களிடையே சமாதானம் வளரும்,

 சண்டை சச்சரவுகள் ஏற்படாது.

 சமாதானம் நிறைந்த வாழ்க்கை இனிமையாக இருக்கும்."

",உலகில் சண்டை சச்சரவுகள் நிறைந்திருக்க காரணம் என்ன?"

"யாரிடமும் நல்ல மனது இல்லை."

".இன்று ரஷ்யாவுக்கும், உக்ரேனுக்கும் போர் நடக்கக் காரணம் என்ன?"

"அவற்றை ஆள்பவர்களிடம் நல்ல மனது இல்லை."

",இப்போது ஏன் ஆண்டவர் சமாதானத்தை உப்புக்கு ஒப்பிட்டார் என்பது புரிகிறதா?"

"உப்பு தான் சேர்ந்த உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு அதைக் கெடாமல் பாதுகாக்கும்.

சமாதானம் தான் இருக்கும் மக்களின் வாழ்க்கையை இனிமையாக்குவதோடு

, அது கெட்டுப்போகாதபடி பாதுகாக்கும்."

", இப்போ புரிகிறதா?"

" புரிகிறது. எங்கே உப்பு இருக்கிறதோ அங்கே உணவு ருசியாக இருக்கும்.

எங்கே சமாதானம் இருக்கிறதோ, அங்கே வாழ்க்கே இனிமையாக இருக்கும்."

",ஒருவர் ஒருவரோடு சமாதானமாயிருப்போம்."

லூர்து செல்வம்.

Thursday, February 24, 2022

"ஒவ்வொருவனும் நெருப்பினால் உப்பிடப்படுவான்."(மாற்கு. 9:49)

"ஒவ்வொருவனும் நெருப்பினால் உப்பிடப்படுவான்."
(மாற்கு. 9:49)

நெருப்பு என்று சொன்னவுடன் நமது ஞாபகத்துக்கு வருபவை சமையல், சுத்திகரிப்பு, வேண்டாதவற்றை அழித்தல், வேதனை.

சில உணவுப் பொருட்களை அப்படியே உண்கிறோம். 
சிலவற்றை நெருப்பில் வேக வைத்து, பக்குவப். படுத்தினால்தான் சாப்பிட முடிகிறது. நெருப்பு இல்லாமல் சமையல் இல்லை, சமையல் இல்லாமல் சாப்பாடு இல்லை, சாப்பாடு இல்லாவிட்டால்
வளர்ச்சி இல்லை.

தங்கத்தை உருக்கி சுத்தப் படுத்த நெருப்புதான் பயன்படுகிறது.

வீட்டில் வேண்டாத கழிவுப் பொருட்களை எரித்து அழிக்கவும் நெருப்பு
பயன்படுகிறது.

இவ்வளவு நல்ல காரியங்களுக்குப் பயன்படும் நெருப்பைத் தொட்டால் சுடும், உடலுக்கு வேதனை ஏற்படும்.

உப்பு என்று சொன்னவுடன் நமது ஞாபகத்துக்கு வருவது சாப்பாட்டை ருசியாக்க பயன் படும் உப்புதான்.

உப்பு உணவுப் பொருட்களை கெட்டுப் போகாமல் பாதுகாக்கவும் (Preservative ஆக ) பயன்படுகிறது. மீன் கெடக்கூடியது. ஆனால் உப்பில் போட்டு வைக்கப்படும் மீன் கருவாடாகி கெடாது.

ஆண்டவர் ஏன் நம்மை,
"ஒவ்வொருவனும் நெருப்பினால் உப்பிடப்படுவான்." என்கிறார்.

இக்கேள்விக்கு விடை காண முந்திய வசனங்கள் வழியே வரவேண்டும்.



42 ஆம் வசனத்தில் மற்றவர்களுக்கு இடரலாய், அதாவது, துர்மாதிரிகையாய் இருப்பவர்கள்,

அதாவது மற்றவர்கள் பாவத்தில் விழ காரணமாய் இருப்பவர்கள்,

 கடலில் ஆழ்த்தப் பட வேண்டும் என்கிறார்.

43 - 47 வசனங்களில் நமது உடல் உறுப்புக்கள் நாம் பாவம் செய்ய காரணமாய் இருந்தால் அவற்றை வெட்டி எறிய வேண்டும் என்கிறார்.

எல்லா உறுப்புக்களோடும் நரக நெருப்பில் விழுவதை விட, உறுப்புக்கள் இல்லாமல் மோட்சத்துக்குப் போவது நலம் என்கிறார்.

பாவத்திற்கு காரணமான உறுப்புகளை வெட்டி எறிவது வேதனை தரும் நெருப்புக்கு நிகரானது.

எப்படி தொட்டால் சூடும் வேதனையும் தரும் நெருப்பு வாழ்க்கைக்குப் பயனற்ற கழிவுப் பொருட்களை எரித்து அழிக்கிறதோ

அப்படியே பாவத்திற்கு காரணமானவற்றை வெட்டி அகற்றுவது 

ஆன்மீக வாழ்க்கைக்குப் பயனற்ற கழிவுப் பொருட்களை எரித்து அழிக்கிறது.

கடவுள் இந்த ஆன்மீக நெருப்பினால் நமது ஆன்மாவை உப்பிடுகின்றார்,

 அதாவது, உப்பு உணவைக் கெடாமல் பாதுகாப்பது போல வேதனை தரும் ஆன்மீக நெருப்பாகிய துன்பங்களால் (Sufferings) 

ஆன்மாவைக்  கெடாமல் பாதுகாக்கிறார்.

இதைத்தான் 

"ஒவ்வொருவனும் நெருப்பினால் உப்பிடப்படுவான்." என்ற பைபிள் வசனம் கூறுகிறது.

துன்பங்கள் மூலம் நமது ஆன்மாவைப் பக்குவப் படுத்தி பாதுகாப்பதைத்தான்

"நெருப்பினால் உப்பிடப்படுதல்"
(salted with fire) என்கிறோம்.

கடவுள் நமக்கு துன்பங்களை அனுப்புவது நம்மை துன்பப் படுத்துவதற்காக அல்ல,

நமது ஆன்மாவைப் பாவத்தில் விழாமல் பாதுகாத்துப் பக்குவப் படுத்துவதற்காகத்தான்.  

நெருப்பு எவ்வாறெல்லாம் நமது ஆன்மாவை உப்பிடுகிறது?

வேறு வார்த்தைகளில்,

துன்பங்கள் எவ்வாறெல்லாம் நமது ஆன்மாவை பக்குவப் படுத்துகின்றன?

அழுக்கு உள்ள தங்கத்தை நெருப்பில் இட்டால் அது உருகி அழுக்கு நீங்கி தங்கம் சுத்தமாவது போல,

நமக்கு வரும் துன்பங்களை நமது ஆன்மா,

 பாவசங்கீர்த்தனம் மூலம் மன்னிக்கப்பட்ட தனது பாவங்களுக்குப் பரிகாரமாக முழு மனதோடு ஏற்றுக் கொண்டு, 

அவற்றை அனுபவித்து, ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தால்

ஆன்மா பாவ அழுக்கு நீங்கி பரிசுத்தமாகும்.

உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனை குறையும்.

நெருப்பு நமது உணவுப் பொருட்களை வேகவைத்து உணவாக பக்குவப் படுத்துவதுபோல,

துன்ப வடிவில் நாம் அனுபவிக்கும் தவ முயற்சிகள் பட்டினி கிடத்தல் போன்ற சாதாரண நிகழ்ச்சிகளை

ஆண்டவரது அருளை ஈட்டும் ஆன்மீக நிகழ்ச்சிகளாக மாற்றுகின்றன.

நெருப்பு வேதனை தருவதுதான், ஆனால் அதுவே உலகில் மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

துன்பங்கள் வேதனை தருபவைதான், ஆனால் அவைதான் நம்மை விண்ணுலக வாழ்வுக்குத் தயாரிக்கின்றன.

ஆண்டவர் பட்ட பாடுகளால்தான் நாம் விண்ணுலக வாழ்வுக்கு ஏற்றவர்களாகிக் கொண்டிருக்கிறோம்.

வேத சாட்சிகள் பட்ட வேதனை நிறைந்த துன்பங்களாலும், அனுபவித்த மரணத்தினாலும் தான் நேரடியாக விண்ணகம் சென்றதோடு,

அங்கு புனிதர்களாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமது ஆன்மா எவ்வாறு உப்பிடப்படுகிறது?

உப்பு நாம் உண்ணும்  உணவை ருசி உள்ளதாக மாற்றுகிறது.

நமது ஆன்மீக வாழ்வை உணவாக எடுத்துக் கொண்டால்,

அதற்கு ருசி கொடுப்பது இறைவனது அருள்.

எவ்வளவுக்கெவ்வளவு நமது ஆன்மீக வாழ்வில் இறையருள் கலக்கிறதோ  அவ்வளவுக்கவ்வளவு ஆன்மீக வாழ்வு அனுபவிக்கக் கூடியதாய் இருக்கும்.

நமக்கு அபரிமிதமான அருளை ஈட்டித்தருவது இறைவனுக்கு நாம் ஒப்புக் கொடுக்கும் நமது துன்பங்கள்தான்.

இயேசு சிலுவையில் மரிக்கும்போது அவரது தந்தைக்கு ஒப்புக் கொடுத்த அவரது பாடுகள்தான்

நமக்கு இரட்சண்ய அருளைப் பெற்றுத் தந்தன.

இயேசுவின் முன்மாதிரிகையை நாமும் பின்பற்றுவோம்.

உப்பு நமது உணவைக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதுபோல,

இயேசுவுக்கு நாம் ஒப்புக் கொடுக்கும் நமது துன்பங்களும் இயேசுவுடனான நமது உறவைக் கெடாமல் பாதுகாக்கின்றன.

நாம் சுமக்கும் சிலுவைதான் நம்மை இயேசுவின் சீடனாக்குகிறது.

வாழ்வின் இறுதி வரை நாம் இயேசுவின் சீடனாக வாழ்ந்து மரிக்க துன்பங்கள்தான் உதவுகின்றன.

துன்பங்கள் என்னும் நெருப்பினால் உப்பிடப் படுவோம்.

பரிசுத்தமாய் வாழ்ந்து இயேசுவுடன் பரலோக வாழ்வில் பங்கு பெறுவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, February 23, 2022

"நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதற்காக உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன், கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்." "(மாற்கு. 9:41)

"நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதற்காக உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன், கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்." "
(மாற்கு. 9:41)

"தாத்தா, ஆண்டவர்

 'நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதற்காக

 உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன்,

 கைம்மாறு பெறாமல் போகான்' என்று சொல்கிறாரே,

அப்படியானால் கிறிஸ்துவைச் சாராதவர்களுக்குக் கொடுத்தால் சன்மானம் கிடைக்காதா?"

", கிறிஸ்து சொல்லும் வார்த்தைகள் கொடுப்பவர்களைப் பற்றியா? பெறுபவர்களைப் பற்றியா?"

"சன்மானம் பெறப்போவது கொடுப்பவர்கள்தானே, அவர்களைப் பற்றிதான்."

",பெறுபவர்கள் அனைவரும்,

 அதாவது மனிதர்கள் அனைவரும்,

 கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள்தான்.

அதாவது அவரால் படைக்கப் பட்டு அவரது பராமரிப்புக்கு உட்பட்டவர்கள்தான்.

 பெறுபவர்கள் மனிதர்கள் என்பதற்காக அல்ல, 

அவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்பதற்காக கொடுப்பவர்கள் கொடுக்க வேண்டும்.

கடவுளின் பிள்ளைகள் என்பதற்காகக் கொடுத்தால்தான் கடவுளின் சன்மானம் இறந்த பிறகு விண்ணுலகில் கிடைக்கும்.

வெறுமனே மனிதர்கள் என்பதற்காக,

அதாவது மனிதாபிமான அடிப்படையில் மட்டும் கொடுத்தால்,

கடவுளின் சன்மானம் கிடைக்காது."

"ஏன் அப்படி?"

",கடவுளின் பிள்ளைகள் என்பதற்காகக் கொடுத்தால் கடவுளுக்காகக் கொடுக்கிறோம்.

அவருடைய சன்மானம் கிடைக்கும்."

" ஏன் என்பதை கொஞ்சம் விளக்குங்களேன்."

",கொடுப்பது எதன் விளைவாக?"

"அன்பின் விளைவாக."

", யார் மேல் கொண்டுள் அன்பின் விளைவாக?"

"கடவுள் மீது கொண்டுள்ள அன்பின் விளைவாக."

", இறையன்பையும், பிறரன்பையும் பிரிக்க முடியாது.

இறைவனை நேசிப்பவனால் அவரது பிள்ளைகளையும் நேசிக்காமல் இருக்க முடியாது.

நமது எல்லா செயல்களிலும் இறையன்பும் பிறரன்பும் இருக்க வேண்டும்.

இறைவனை அவருக்காக நேசிப்பதுபோல, நமது பிறனையும் இறைவனுக்காகவே நேசிக்க வேண்டும்.

நமது பிறனுக்கு நாம் என்ன செய்தாலும் இறைவனுக்காகவே,

அவன் இறைவனுடைய பிள்ளை என்பதற்காகவே 
 செய்ய வேண்டும்.

அப்போதுதான் விண்ணகத்தில் அதற்கான சன்மானம் உண்டு.

அதனால் தான் இயேசு,

"நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதற்காக உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன், கைம்மாறு பெறாமல் போகான்"

 என்று சொன்னார்."

"அப்போ மனிதாபிமானச் செயலுக்கு விண்ணகத்தில் பலன் கிடையாதா?"

",மனிதனை மனிதன் என்று ஏற்றுக் கொள்வதுதான் மனிதாபிமானம்.

அதில் தவறு இல்லை.

ஆனால் இறைவனின் சன்மானம் வேண்டுமென்றால் அவனை அவருடைய பிள்ளையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் பிறந்தவர்களை இந்தியர்கள் என்று ஏற்றுக் கொள்வது நாட்டுப் பற்று.

அவர்களை இறைவனுடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொள்வது இறைப்பற்று.

நாட்டில் வாழ நாட்டுப் பற்று வேண்டும்.

விண்ணில் வாழ இறைப்பற்று வேண்டும்.

நமது ஆன்மீக வாழ்வின் மையம் இறைப்பற்றுதான்.

நமது பிறரன்புச் செயல்கள் அனைத்தும் ஆன்மீகத்தைச் சார்ந்தவை.

இறைவனை மையமாகக் கொண்டதுதான் ஆன்மீகம்.

இறைவன் இல்லை என்று கூறுபவர்கள் கூட மனிதனை மனிதன் என்று ஏற்றுக் கொள்கிறார்கள்.

அவர்கள் மனிதாபிமானம் என்ற பெயரில் என்ன செய்தாலும் 

அவர்களிடம் இறையன்பு இல்லாததால் விண்ணக சன்மானத்திற்கு இடம் எங்கே இருக்கிறது?

ஆனால் இறை நம்பிக்கை  இல்லாதவர்களையும் இறைவன் அன்பு செய்கிறார்.

அவர்கள் இறைவனையும், அவரது அன்பையும் ஏற்றுக் கொண்ட வினாடி அவர்களுக்கும் விண்ணக வாசல் திறந்திருக்கும்.

இறைவனை வெறுப்பவர்களையும் இறைவன் நேசிக்கிறார்,

அவரது அன்பு மாறாதது.

சாத்தான் இறைவனை வெறுக்கிறான்,

 ஆனால் அவனையும் இறைவன் நேசிக்கிறார்."

"கடவுளின் பிள்ளைகளுக்கு உதவி செய்யும்போது விண்ணகத்தில் சன்மானம் காத்திருக்கும்.

உபத்திரவம் செய்யும்போது?"

", பாவத்திற்காக என்ன காத்திருக்குமோ அது காத்திருக்கும்."

"அப்போ பிறருக்கு உபத்திரவம் கொடுத்தால் பாவமா?"

", இறைவனுடைய கட்டளைக்கு எதிராக என்ன செய்தாலும் பாவம்தான்.''

"அப்படியானால் இயன்ற மட்டும் நம் அயலானுக்கு உதவ வேண்டும்.

உதவ முடியாவிட்டால் உபத்திரவம் செய்யாமலாவது இருக்க வேண்டும்."

", ஆன்மீகத்தில் வளர வேண்டுமானால் பாவத்தை விலக்கினால் மட்டும் போதாது,

புண்ணியம் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

ஆன்மீக வளர்ச்சிதான் நமது செயல்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.

நாம் செய்யும் நற்செயல்கள்தான் நம்மை விசுவாசத்தில் வளரச் செய்யும்.

நற்செயல்களை,

அதாவது பிறர் உதவிச் செயல்களைச்,
செய்வோம்,

செய்து கொண்டேயிருப்போம்.

விண்ணகத்தில் நமக்கான சன்மானம் வளர்ந்து கொண்டேயிருக்கும்."

லூர்து செல்வம்.

Monday, February 21, 2022

வாழ்வதற்காகவே பிறந்திருக்கிறோம்.

வாழ்வதற்காகவே பிறந்திருக்கிறோம்.


"அண்ணாச்சி, கொஞ்சம் நில்லுங்க, உங்ககூட கொஞ்சம் பேசணும்."

"எவ்வளவு நேரம்?"

"நான் கேட்கப் போகிறது ஒரு சின்ன சந்தேகம். நேரம் உங்கள் பதிலைப் பொறுத்தது."

"அப்போ உட்கார்ந்தே பேசுவோம். உட்கார். இப்போ கேள்"

"கடவுள் நம்மை வாழ்வதற்காகத்தானே படைத்தார்."

", அதில் என்ன சந்தேகம்?"

"வாழ்வதற்காக படைத்தால் ஏன் இயேசு,

'உயிரை காத்துக் கொள்ள விரும்பகிறவன் அதை இழந்துவிடுவான்' என்று சொல்கிறார்?"

"இயேசு கூறிய முழு வசனத்தையும் சொல்லு."


''தன் உயிரை காத்துக் கொள்ள விரும்பகிறவன் அதை இழந்துவிடுவான். 

என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தன் உயிரை இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்."
(மாற்கு. 8:35 )

", அதற்கு முந்திய வசனத்தில் இயேசு என்ன கூறுகிறார்?"


"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்." என்கிறார்.

", இப்போ கவனி.

இயேசுவைப் பின்செல்ல விரும்புகிறவன்,

அதாவது அவரது நற்செய்தியை வாழ்வதன் மூலம் அவரது சீடனாக வாழ விரும்புகிறவன்,

இயேசுவைப் போலவே தன் சிலுவையை சுமந்து வரவேண்டும்.

இயேசு சிலுவையைச் சுமந்தது மட்டுமல்ல, அதில் மரணமும் அடைந்தார்.

இயேசுவைப் போல சிலுவையைச் சுமப்பவர்கள் அவரைப் போலவே அதில் மரணம் அடையவும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

சிலுவையினால் ஏற்படும் மரணத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விருப்புகிறவனால்,

நித்திய மரணத்திலிருந்து தன்னைப் பாதுக்காக்க முடியாது.

(தன் உயிரை காத்துக் கொள்ள விரும்பகிறவன் அதை இழந்துவிடுவான்.)

நாம் சிலுவையைச் சுமப்பது நற்செய்தியின் படி வாழ்வதற்காகத்தான்.

நற்செய்தியின் படி வாழ்வதற்காக இவ்வுலகில் மரணிப்பவன் நித்தியத்துக்கும் வாழ்வான்.

(என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தன் உயிரை இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்.)

இப்போது புரிகிறதா?"

"புரிகிறது. கடவுள் நம்மை வாழ்வதற்காகத்தான் படைத்தார்.

இவ்வுலகில் வாழ்வதற்காக அல்ல,

மறுவுலகில் வாழ்வதற்காக."


", இயேசுவின் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வாழ்வது என்றாலே

சிலுவையைச் சுமந்து வாழ்வதுதான்.

சிலுவையைச் சுமந்து வாழ்வது
என்றாலே இவ்வுலக இன்பங்களுக்கு மரணிப்பதுதான்.


இவ்வுலக இன்பங்களுக்கு மரணிப்பதுதான் மறுவுலக நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைவது.

ஆகவேதான் ஆண்டவர் சொல்கிறார்,

"நற்செய்தியின் பொருட்டும் தன் உயிரை இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்."

"நீங்கள் இதுவரை சொன்னதிலிருந்து நமது ஆன்மீக வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய கருத்துக்களாக நான் புரிந்து கொண்டது எவை என்று சொல்லட்டுமா."

",சொல்லு பார்ப்போம்."

"1.இயேசு போதித்த நற்செய்தி அவரது சிலுவை மரணத்தைப் பற்றிய நற்செய்திதான்.

அதாவது நாம் நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்று மீட்பு அடைவதற்காக 

 பாவப் பரிகாரப் பலியாக இயேசு தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்ததைப் பற்றிய நற்செய்தி.

2. இயேசு செய்த 
பாவப் பரிகாரத்தின் பலனை நாம் அடைய வேண்டுமென்றால் 

நாமும் அவரைப் போலவே சிலுவைப் பாதையில், நடந்து மரணம் அடைய வேண்டும்.

சிலுவைப் பாதைதான் நமது மீட்புக்கான பாதை. 

சிலுவைப் பாதையை ஏற்றுக் கொள்வோர் மீட்பையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.


சிலுவைப் பாதையை ஏற்றுக் கொள்ளாதோர் மீட்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

3.சிலுவைப் பாதையில் நடந்தால்தான் மீட்புப் பெற முடியும் என்பதால்

 நாம் சுமப்பதற்கான சிலுவைகள் வரும்போது நாம் அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

4. தவக்காலம் நெருங்குகிறது.
மகிழ்ச்சியோடு வரவேற்போம்.

சரியா?"

", Super சரி!"

லூர்து செல்வம்.

Friday, February 18, 2022

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்." (மாற்கு. 8: 34)

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."
(மாற்கு. 8: 34)

"தாத்தா, 'என்னைப் பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுக்க வேண்டும்' என்று இயேசு ஏன் சொல்கிறார்?"

", ஒரு நல்ல செயலைச் செய்ய வேண்டும் என்று விரும்புவது மட்டும் வாழ்க்கை அல்ல. செய்ய வேண்டிய விதமாய்ச் செய்வதுதான் வாழ்க்கை.

படிப்பதற்காக பள்ளிக்கூடத்தில் சேர வேண்டும் என்று ஆசைப் பட்டாலே படிப்பு வந்து விடாது.

பள்ளிக்கூடத்தில் சேர்ந்தபின் அங்குள்ள விதிகளின்படி செயல்படாமல்,

 இஷ்டப்படி செயல்பட்டால் படிப்பு வந்துவிடாது.

பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் முதல்நாளிலேயே தலைமை ஆசிரியர் இதைக் கூறிவிடுவார்.

பள்ளிக்கூடத்தில் படிக்க ஆசைப்பட்டால் மட்டும் போதாது.

'உங்களது சொந்த ஆசைகளை வீட்டில் விட்டு விட்டு வாருங்கள்.

இங்கு உங்கள் விருப்பப்படி அல்ல, பள்ளிக்கூடத்தின் விதிகளின் படிதான் நடக்க வேண்டும்.'

இதேயேதான் இயேசுவும் சொல்கிறார்.

'எனக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது . உங்களது சொந்த விருப்பங்களை மறந்துவிட்டு என்னுடைய விருப்பப்படிதான் செயல்பட வேண்டும்.'

என்னைப்போலவே நீங்களும் உங்களுக்கு தரப்படும் சிலுவையைச் சுமந்து வாழ வேண்டும்." என்கிறார்.

"சிலுவை ஏன் அவ்வளவு முக்கியம்?"

", இயேசுவைப் பின்பற்ற வேண்டுமானால் சிலுவை முக்கியம், ஏனென்றால் இயேசுவின் வாழ்வின் மையமே சிலுவை மரணம்தான்.

அவருடைய சிலுவை மரணத்தில்தான் நமது மீட்பும், நிலை வாழ்வும் அடங்கியிருக்கிறது.

சிலுவையின்றி மீட்பு இல்லை.

இயேசுவைப் பின்பற்றுகிறோம் என்றாலே மீட்பின் பாதையில் நடக்கிறோம் என்றுதான் அர்த்தம்.

சிலுவை இல்லாமல் எப்படி மீட்பின் பாதையில் நடக்க முடியும்?

மீட்பின் பாதை என்றாலே சிலுவைப் பாதைதான்.

சிலுவை, பாடுகள், மரணம், உயிர்ப்பு, விண்ணகம்."

"இயேசு ஏன் சிலுவைப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்?"


",மனுக்குலத்தின் மீது அவருக்கு இருக்கும்  அளவுகடந்த அன்பை வெளிப்படுத்தவே அவர் பாடுகள் நிறைந்த சிலுவைப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். 

 அவர்மீது நமக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தவே அவர் தேர்ந்தெடுத்த அதே பாதையை நாமும் தேர்ந்தெடுக்க வேண்டும்."

"அவர் மரத்தினால் ஆன சிலுவையைச் சுமந்தார், அதில் அறையப்பட்டார். நாம்?"

", நமது வாழ்வின்போது நமக்கு ஏற்படும் துன்பங்களை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக,

இயேசுவின் பெயரால் தாங்கிக் கொள்ளும்போது அவை சிலுவையாய் மாறிவிடுகின்றன.

இயேசுவுக்காக நம்மை நாமே மறுப்பதும்,

அதாவது நமது விருப்பங்களையும், ஆசைகளையும் தியாகம் செய்வதும் சிலுவைதான்."

"ஒரு உதாரணம் சொல்லுங்கள்."

", ரோட்டின் வழியே நடந்து செல்கிறாய். ஓரத்தில் ஒரு சினிமா போஸ்டர் ஒட்டப் பட்டிருக்கிறது. அது என்ன சினிமா என்று பார்க்க ஆசையாய் இருக்கிறது.

'ஆண்டவரே எனது இந்த ஆசையைத் தியாகம் செய்து எனது பாவங்களுக்குப் பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்' 

என்று ஒப்புக்கொடுக்கும் தவ முயற்சியே ஒரு சிலுவைதான்."

"அப்படியா? இதுவே ஒரு சிலுவை என்றால் தினமும் நூற்றுக் கணக்கான சிலுவைகளைச் சுமக்கலாம் போலிருக்கிறதே!"

", ஆமா, அதற்காகத்தானே தவக் காலமே வருகிறது.

பெரிய பெரிய கஷ்டங்களை மட்டுமல்ல,

நாமே வரவழைத்துக்கொண்ட சிறிய சிறிய, பொடிப்பொடி கஷ்டங்களை ஆண்டவருக்காக ஒப்புக் கொடுத்தாலே ஆண்டவருக்காக சிலுவையைச் சுமந்தது மாதிரிதான்."

"அப்போ மாணவர்கள் Study நேரத்தில அங்கே இங்கே திரும்பாமல் பாடப்புத்தகத்தைப் படித்து, அதை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தால் அதுவே சிலுவைன்னு சொல்லுங்க."

", கட்டாயமா. நாம் திருப்பலி நேரத்ல நமது கண்களையும், மனதையும்

 பீடத்தையும், குருவானவரையும், நற்கருணை ஆண்டவரையும் விட்டு வேறு எங்கும் திருப்பாமல் இருந்தால் அதுவே நமக்கு பெரிய சிலுவை."

"நாம் உயிர் வாழும் ஒவ்வொரு வினாடியும் ஆண்டவரது பிரசன்னத்திலேயே வாழ்ந்தால் நமது வாழ்வே ஒரு பெரிய சிலுவையாக மாறிவிடும்."

", Sure. இறைப் பிரசன்னத்தில் வாழ்ந்து உலகிலேயே விண்ணக பேரின்பத்தை ருசித்துப் பார்ப்போம்!

Let us have a pretaste of Heaven by living in the presence of God now itself!

லூர்து செல்வம்.

Wednesday, February 16, 2022

"பரிசேயருடைய புளிப்பு மாவையும், ஏரோதுடைய புளிப்பு மாவையும் குறித்து விழிப்பாயிருங்கள், எச்சரிக்கை" (மாற்கு. 8:15)

"பரிசேயருடைய புளிப்பு மாவையும், ஏரோதுடைய புளிப்பு மாவையும் குறித்து விழிப்பாயிருங்கள், எச்சரிக்கை"
 (மாற்கு. 8:15)

"புளிப்புமாவுன்னா என்ன தாத்தா?" 

".உங்கள் வீட்ல பால் இருக்கா?"

"இரண்டு பால் மாடு இருக்கு. பாலுக்குப் பஞ்சமே இல்லை."

", தயிர், மோர் இருக்கா?"

"பால் இருக்கும்போது தயிர், மோர் இல்லாமயிருக்குமா?"

", பால மாட்லயிருந்து பசுவிடமிருந்து கரப்பீங்க. தயிர  எதிலயிருந்து கரப்பீங்க?"

"தயிர கரக்க மாட்டோம். கொதிக்க வைத்து ஆறிய பாலில் இரவு கொஞ்சம் உரமோர் கலந்தால் காலைக்குள் அது தயிராகி விடும்."

",உரமோர்னா என்ன?"

"கொஞ்சம் புளிப்பாக இருக்கும் மோர். அதைப் பாலோடு  சேர்த்தால் அது  புளிப்பு இல்லாத பாலையும் புளிப்புள்ள தயிராக மாற்றி விடும்."

", அதாவது புளிப்பு இல்லாத பால் புளிப்பான மோரோடு சேர்ந்தால், அதுவும் புளிப்பாகி விடும், அப்படித்தானே?"

"அப்படியேதான்."

",அதேபோல புளிப்பான கொஞ்சம் மாவை புளிப்பு இல்லாத மாவோடு சேர்த்தால்

புளிப்பு இல்லாத மாவும் புளிப்பான மாவாக மாறிவிடும்."

"பரிசேயருடைய புளிப்பு மாவுன்னா என்ன, தாத்தா?"

', ஆண்டவர் காலத்தில் வாழ்ந்த யூத குலப் பெரியவர்கள், சட்டம் படித்தவர்கள், யூத மக்களை வழி நடத்தியவர்கள்.

ஆனால் தாங்களும் ஆண்டவரின்  நற்செய்திப்படி வாழாமல், மக்களையும் நற்செய்திப்படி வழிநடத்தாமல்,

சட்டத்தின் கருத்திற்கு அல்லாமல், எழுத்திற்கு மட்டும்
(Only to the letter of the law, not to its spirit) முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

சட்டத்தை அனுசரித்தார்கள், வாழ வில்லை.

அவர்கள் வெளி வேடக்காரர்களாக (Hypocrites) வாழ்ந்து வந்தார்கள்.

 ஆண்டவரைச் சிலுவையில் அறைந்து கொல்லக்கூடிய அளவுக்கு அவர் மேல் அவர்களுக்கு வெறுப்பு இருந்தது.

அவர்களிடமிருந்த வெளி வேடக்காரத்தன்மைதான்
(Hypocrisy) அவர்களின் புளிப்பு மாவு.

எப்படி புளிப்பு மாவு தான் சேர்ந்த புளிக்காத மாவையும் புளிப்புள்ளது ஆக்கிவிடுகிறதோ,
 
அப்படியே பரிசேயர்களின் உறவில் இருப்பவர்களை அவர்களின் வெளி வேடக்காரத்தன்மை தொற்றிக் கொள்ளும்.

எல்லா துர்க்குணங்களுமே புளிப்பு மாவின் தன்மை உடையவைதான்.

கெட்டவர்களோடு தொடர்பில் உள்ளவர்களை அவர்களின் கெட்ட குணங்கள் தொற்றிக் கொள்ளும்.

இதுகுறித்து எச்சரிக்கையாய் இருக்கும்படிதான் .நமது ஆண்டவர் அப்போஸ்தலர்களுக்குப் புத்திமதி கூறினார்.

அப்போதுதான் அவர்கள் தங்களிடம் போதிய அப்பமில்லையே என்பது குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் புத்திமதியை நாம் ஏற்றுக் கொள்வோம்.

ஆண்டவரின்  செயல் முறையையும் ஏற்றுக் கொள்வோம்.

அவரும் பாவிகளைத் தேடித்தான் உலகிற்கு வந்தார்,

அவர்களை மன்னிப்பதற்காக, திருத்துவதற்காக.

பரிசேயர்களையும் தேடித்தான் உலகிற்கு வந்தார்.

ஆனால் அவர்கள் அவரை விரும்பவில்லை, திருந்தவும் விரும்பவில்லை.

ஆனால் மன்னிப்புப் பெறவும், திருந்தவும் விரும்பிய பாவிகள் அவர் சென்ற இடமெல்லாம் அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.

அவரது நற்செய்தியைக் கேட்டார்கள்.  அவரை விசுவசித்தார்கள். பாவமன்னிப்பும், நற்சுகமும் பெற்றார்கள்.

பரிசேயர்களும் அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்,

 ஆனால் அவரைக் கேள்விகள் கேட்கவும், அவரைக் கொல்ல வழி தேடவுமேசென்றார்கள்.

ஆண்டவர் சாதாரண, படிக்காத, பாவிகளை நேசித்தது போலவே

 படித்த, ஆனால் பாவிகளாக இருந்தாலும் தங்களை உத்தமர்கள் போல காட்டி வெளிவேடக்காரர்களாய் வாழ்ந்த பரிசேயர்களையும் நேசித்தார்.

 நாமும் வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் நேசிக்க வேண்டும்.

 ஆண்டவரைப் போலவே அனைவருக்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.

  ஆண்டவர்  'புளிப்பு மாவாகக்' கருதும்  குற்றம் குறைகள் எல்லோரிடமும் இருக்கலாம்.

நாம் நற்செய்தி அறிவிக்க ஆரம்பிக்கும் முன்னே  நம்மிடம் உள்ள குற்றம் குறைகளைக் கண்டுபிடித்து அவைகளை திருத்திக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் நாம் அறிவிக்கும் நற்செய்தியை கேட்பவர்கள் அதை கவனிக்க மாட்டார்கள் 

நமது குற்றம் குறைகளை மட்டுமே கவனிப்பார்கள்.

நாமும் நற்செய்தியை  அல்ல, குற்றம் குறைகளையே பரப்புபவர்களாக ஆகிவிடுவோம்.

எதிர்த் தரப்பில் உள்ளவர்களின் குற்றம், குறைகளை நாம் பற்றிக்கொண்டு வந்து விடக் கூடாது.

நாம் நல்ல முறையில் நற்செய்தியை அறிவித்தால்
எதிர்த் தரப்பில் உள்ளவர்கள் நற்செய்தியை உள்வாங்கி, தமது குற்றம், குறைகளைத் திருத்திக் கொள்வர்.

நாம் நற்செய்திப்படி வாழ்ந்தால்,

 அதாவது பரிசுத்தமாக வாழ்ந்தால்,

நமது வாழ்க்கையே நற்செய்தியைப் பரப்பும்.

ஆண்டவர் குறிப்பிடும் புளிப்பு மாவைப் பற்றி எச்சரிக்கையாகவே இருப்போம்.

லூர்து செல்வம்.

Monday, February 14, 2022

"நம்மிடம் அப்பம் இல்லையே" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்."(மாற்கு. 8:16)

"நம்மிடம் அப்பம் இல்லையே" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்."
(மாற்கு. 8:16) 

சில சமயங்களில் அப்போஸ்தலர்களுடைய மனநிலையும், பேச்சும் கொஞ்சம் விசித்திரமாகவே உள்ளது.

அவர்கள் இயேசுவாலேயே நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

தங்களுடைய உடைமைகளை எல்லாம் விட்டு விட்டு அவரைப் பின்தொடர்ந்தவர்கள்.

அவர் சென்ற இடமெல்லாம் அவருடன் சென்றவர்கள்.

மற்ற மக்கள் அவரவர் பகுதிக்கு இயேசு வரும்போது அவரது போதனையைக் கேட்டிருப்பார்கள்,

அவரது புதுமைகளைப் பார்த்திருப்பார்கள்.

ஆனால் அப்போஸ்தலர்கள் இயேசு சென்ற இடமெல்லாம் அவரோடு சென்றதால் அவரது போதனை முழுவதையும்   கேட்டிருப்பார்கள்.

அவரது எல்லா புதுமைகளையும் பார்த்திருப்பார்கள்.

அதுமட்டுமல்ல, மக்களுக்குப் போதித்தபின் இயேசு அப்போஸ்தலர்களுக்குத் தனியாகவும் விளக்கினார்.

ஏனெனில் இயேசு விண்ணகம் எய்தியபின் அவர்கள்தான் நற்செய்தியை உலகம் எங்கும் சென்று அறிவிக்க வேண்டும். 

ஐந்து அப்பங்களை கொண்டு இயேசு 5000 பேருக்கு உணவு அளித்த போதும்,

ஏழு அப்பங்களை கொண்டு 4000 பேருக்கு உணவு அளித்த போதும்,

அவர்கள் இயேசுவுடன்தான் இருந்தார்கள்.

இயேசு இறைமகன் என்றும், யூதர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த  மெசியா என்றும் அவர்களுக்குத் தெரியும்.

தெரிவதனால் மட்டுமே விசுவாசம் ஆகிவிடாது 

தெரிவது அறிவு (Knowledge) மட்டுமே.
விசுவாசம் (Faith) அல்ல.

இன்று கூட  உலகில் பெரும்பாலோருக்கு கடவுள் இருக்கிறார் என்பது தெரியும்.

 ஆனால் எத்தனை பேருக்கு அவர்மேல் விசுவாசம் இருக்கிறது?

நம்மையே எடுத்துக் கொள்வோம். நமக்கு உண்மையான விசுவாசம் இருந்தால் கொரோனாவைக் கண்டு பயப்படுவோமா? 

ஒரு நாள் அப்போஸ்தலர்கள் இயேசுவுடன் கடலில் பயணித்து கொண்டிருந்த போது,

 அப்பம் கொண்டுவர மறந்துவிட்டார்கள். படகில் ஒரே ஓர் அப்பந்தான் இருந்தது.

"நம்மிடம் அப்பம் இல்லையே" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

 இது இயேசுவின் காதில் விழுந்தது.

அவர் அவர்களை நோக்கி,

 "உங்களிடம் அப்பம் இல்லை என்று பேசிக்கொள்வானேன்? இன்னுமா உணரவில்லை? இன்னுமா விளங்கவில்லை?"

என்று கேட்டுவிட்டு ஐந்து அப்பங்களைக்  கொண்டு 5000 பேருக்கும்,

ஏழு அப்பங்களைக்  கொண்டு 4000 பேருக்கும்

உணவு கொடுத்ததை ஞாபகப்படுத்தினார்.

இது அவர்களுக்கு தெரியும்.

 ஆனால் அவர்களிடம் இயேசு எதிர்பார்க்கும் விசுவாசம் இருந்திருந்தால் 

அவர் அவர்களோடு பயணிக்கும்போது உணவைப் பற்றி கவலைப் பட்டிருப்பார்களா?  

அவர் அவர்களை நோக்கி, "இன்னும் உங்களுக்கு விளங்கவில்லையா?" என்றார்.

அதாவது,

"நான் உங்களோடு இருக்கும் போது உங்களது தேவைகளை பற்றி கவலைப்பட தேவையில்லை என்பது உங்களுக்கு இன்னும் விளங்கவில்லையா என்ற பொருளில் கேட்டார்.

இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழும்.

அப்போஸ்தலர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த இயேசு சர்வ வல்லமை உள்ள கடவுள். 

அவர் விண்ணகம் எய்து முன் அவர்களைப் பார்த்து

"பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது, 

அவரது வல்லமையைப் பெற்று

 யெருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், மண்ணுலகின் இறுதி எல்லை வரைக்குமே நீங்கள் என் சாட்சிகளாயிருப்பீர்கள்" என்றார்.

ஒரே, ஆனால் இரண்டு வகையான அப்போஸ்தலர்களைப் பார்க்கிறோம்.

பரிசுத்த ஆவியின் வருகைக்கு முந்தியவர்கள், அதாவது இயேசுவின் பயிற்சி காலத்தில் வாழ்ந்தவர்கள்,

பரிசுத்த ஆவியின் வருகைக்கு பிந்தியவர்கள், அதாவது

அவரது வல்லமையைப் பெற்றவர்கள்.

இயேசுவின் பயிற்சி காலத்தில் வாழ்ந்தவர்கள் பயிற்சியின் பலனைப் பெற்றிருந்தது போலவே தெரியவில்லை.

பயிற்சியின் பலனைப் பெற்றிருந்தால்

இயேசு இரத்த வியர்வை வியர்த்தபோது தூங்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

 இயேசுவின் பாடுகளின்போது தைரியத்துடன் அவருடனேயே இருந்திருப்பார்கள்.


இயேசு கைது செய்யப் பட்டபோது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போயினர்.
(மத்.26:56)

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்ததைக் 
கேள்விப்பட்ட பின்பும் அதை உறுதி செய்து கொள்ள கல்லறையைப் பார்க்கச் சென்றிருக்க மாட்டார்கள்.

இயேசு அழைத்தபோது மீன் பிடிக்கும் வலையை விட்டு விட்டு அவரைப் பின் சென்றவர்கள் 

இயேசு உயிர்த்தபின் மீன் பிடிக்கச் சென்றிருக்க மாட்டார்கள்.

ஆனால் பரிசுத்த ஆவியின் வருகையின்போது அவரது வல்லமையைப் பெற்று

தைரியத்தோடு இயேசுவின் போதனையை போதிக்க ஆரம்பித்தார்கள்.

முதல் நாளே ஏறத்தாழ மூவாயிரம் பேர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

இயேசு பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் வராத தைரியம்,

பரிசுத்த ஆவி வந்தவுடன் எப்படி வந்தது?

இயேசுவால் செய்ய முடியாததைப் பரிசுத்த ஆவி செய்து விட்டாரா?

ஒரு இறை உண்மையின் அடிப்படையில் இதைத் தியானிக்க வேண்டும்.

இயேசுவும் (பரிசுத்தத் தம  திரித்துவத்தின் இரண்டாம் ஆள்)

பரிசுத்த ஆவியும் (பரிசுத்தத் தம  திரித்துவத்தின் மூன்றாம் ஆள்)

ஆள்வகையில் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் இருவரும் ஒரே கடவுள்.

தந்தை, மகன், பரிசுத்த ஆவி மூவரும் ஒரே கடவுள்.

மனிதனாய்ப் பிறந்த அதே கடவுள்தான் பெந்தெகொஸ்தே என்னும் திருநாளின்போது அப்போஸ்தலர்கள் மீது இறங்கிவந்தார்.

தந்தை மனிதனாகப் பிறக்கவில்லை.

பரிசுத்த ஆவி மனிதனாகப் பிறக்கவில்லை.

மகன் மனிதனாகப் பிறந்தார்.

கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

ஆகவேதான் கன்னி மரியாளை கடவுளின் தாய் என்கிறோம்.


மனிதனாய்ப் பிறந்த அதே கடவுள்தான் 

பெந்தெகொஸ்தே என்னும் திருநாளின்போது அப்போஸ்தலர்கள் மீது இறங்கிவந்தார் என்றால்,

பெந்தெகொஸ்தே திருநாளின்போது பெற்ற கடவுளின் வல்லமையை பயிற்சியின் போது ஏன் பெறவில்லை?

அதாவது மூன்றாவது ஆள் கொடுத்த வல்லமையை இரண்டாம் ஆள் ஏன் கொடுக்க வில்லை? இருவரும் ஒரே கடவுள்தானே?

இதைத் தியானிக்கும்போது மனதில் தோன்றும் உண்மை:

 கத்தோலிக்க திருச்சபையை நிறுவியவரும், அதனோடே இருந்து அதை உலகெங்கும் பரப்புகிறவரும் கடவுளே.

அப்போஸ்தலர்கள்?

கடவுள் பயன்படுத்திக் கொண்டிருக்கிற கருவிகள். (Instruments)

அவர்கள் தாங்கள் பெற்ற பயிற்சியின் மூலம் கிடைத்த திறமையினால் திருச்சபையை பரப்பவில்லை.

கடவுள் தான் தனது வல்லமையால்  திருச்சபையை ஆண்டு கொண்டும், பரப்பிக் கொண்டுமிருக்கிறார்.


அப்போஸ்தலர்களும் சரி, அவர்களுடைய வாரிசுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் பாப்பரசர், ஆயர்கள், குருக்களும் சரி மனிதர்கள் என்ற  முறையில் தவறு செய்யக் கூடியவர்கள்தான்.

ஆனால், பாப்பரசர் திருச்சபையின் தலைவர்  என்ற முறையில் 

இயேசுவின் ஸ்தானத்தில் இருந்து கொண்டு

விசுவாசம் மற்றும் அறநெறி சார்ந்தவற்றில் 

திருச்சபை கடைப்பிடிக்கப்படவேண்டிய  கோட்பாட்டை வரையறுத்துப் பிரகடனம் செய்யும்போது

 அவரால் தவறு செய்ய முடியாது.

பாப்பரசரோடு இயங்கும் ஆயர்களின் கூட்டமைப்புக்கும் இந்த வரம் உண்டு.

குருக்கள் மூலமும் செயலாற்றிக் கொண்டிருப்பவர் கடவுளே.

குருக்கள் நிறைவேற்றும் தேவத்திரவிய அனுமானங்கள் மூலமாக கடவுள் தனது அருள் வரங்களை அள்ளித் தருகிறார்.

குருக்கள் மூலமாக நமது பாவங்களை மன்னிக்கிறார்.

குருக்கள் மூலமாகவே இயேசு திவ்ய நற்கருணை வடிவில் நமது ஆன்மீக உணவாக வருகிறார்.

ஆயர்களும், குருக்களும் தாங்கள் குருமடங்களில் (Seminaries) பெற்ற பயிற்சியின் விளைவாக திருச்சபையை வழிநடத்தவில்லை.

அவர்களைக் கருவிகளாகக் கொண்டு திருக்சபையை வழிநடத்துபவர் பரிசுத்த ஆவியே, அதாவது கடவுளே.

இதை நமக்கு உணர்த்தவே அப்போஸ்தலர்கள் மூன்று ஆண்டுகள் தாங்கள் பெற்ற பயிற்சியினால் அல்ல,

ஒரு நாள் பெற்ற பரிசுத்த ஆவியின் வல்லமையால் கடவுளின் கருவிகளாக மாறி,

நற்செய்தியைப் போதிக்க ஆரம்பித்தார்கள்.

அவர்கள் கருவிகள்தான், உண்மையில் நற்செய்தி அறிவிப்பதும், திருச்சபையை வழிநடத்துவதும்

"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

என்று கூறிய ஆண்டவர்தான்.

ஆண்டவரால் வழிநடத்தப் 'படுவதால்தான் திருச்சபையால் தவறவே முடியாது.

திருச்சபை கிறிஸ்துவின் சரீரம்.

நாம் மீட்பு பெற வேண்டுமென்றால்

திருச்சபை, 
அதாவது கிறிஸ்து,
அதாவது கடவுள், 

போதிப்பதை நாம் விசுவசித்து,  அதன்படி நடக்க வேண்டும்.

அதனால்தான் இயேசு கூறினார்,


"விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரமும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். 

பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். 

இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

இயேசு, அதாவது கடவுள்,
 அப்போஸ்தலர்களோடும்,

அவர்களின் வாரிசுகளோடும் இருப்பதால்தான்

அவர்களின் போதனை வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒரு சிறிய ஒப்புமை:

வேடன் கையில் வில் இருக்கிறது.

வில்லில் அம்பு  இருக்கிறது.

வில்லால் தானே ஒன்றும் செய்ய முடியாது.

வேடன் வில்லை இயக்கினால் அம்பு பாயும்.

அதே போல் ,

கடவுள் இயக்கினால்தான் , அப்போஸ்தலர்களிடமிருந்து 
நற்செய்தி புறப்படும்.

கத்தோலிக்க திருச்சபையை இயக்கிக் கொண்டிருப்பவர் கடவுளே.

திருச்சபையின் எதிரிகளால் திருச்சபையை, அதாவது, கிறிஸ்துவை ஒன்றும் செய்ய முடியாது.

வெற்றி அவருக்கே.

லூர்து செல்வம்.

Saturday, February 12, 2022

அகமகிழ்வோம். ஏனெனில், வானகத்தில் நமது கைம்மாறு மிகுதியாகிக் கொண்டிருக்கிறது.

.அகமகிழ்வோம். ஏனெனில்,  வானகத்தில் நமது கைம்மாறு மிகுதியாகிக் கொண்டிருக்கிறது.

"நமக்கு உதவி செய்கின்றவர்கள் மீது நமக்கு கோபம் வரலாமா, தாத்தா?"

"இப்போ எதற்கு இந்த திடீர்க் கேள்வி?"

"திடீர்க் கேள்வி அல்ல. உங்களிடம் கேட்க வேண்டும் என்று நான் விடிய விடிய திட்டமிட்டிருந்த கேள்வி."

",இதற்குக் கூட விடிய விடிய திட்டமிட வேண்டுமா?"

"நேற்று படுக்கப் போகும்போது ஒரு பைபிள் வசனம் வாசித்தேன்.  அதிலிருந்து விடிய விடிய யோசித்துக் கொண்டிருந்தேன். விடிந்தவுடன் உங்களிடம் வந்துவிட்டேன்."

"என்ன வசனம்?"

."மனுமகன் பொருட்டு மனிதர் உங்களை வெறுத்துப் புறம்பாக்கி வசைகூறி, உங்கள் பெயரே ஆகாது என்று இகழ்ந்து ஒதுக்கும்பொழுது நீங்கள் பேறுபெற்றவர்கள்.

அந்நாளில் துள்ளி அகமகிழுங்கள். ஏனெனில், இதோ! வானகத்தில் உங்கள் கைம்மாறு மிகுதியாகும்."
(லூக்.6:22, 23)

நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்ற ஒரே காரணத்திற்காக நம்மை வெறுத்து ஒதுக்குபவர்கள் நமது நாட்டில் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள்.

நற்செய்தியின்படி இப்போது நாம் துள்ளி அகமகிழ வேண்டும். 

ஏனெனில் விண்ணகத்தில் நமக்கு கைமாறு அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது.

ஆனால் 

நமக்கு மகிழ்ச்சி வருவதற்குப் பதிலாக 

அவர்கள்மீது கோபம் வருகிறதே, இது தவறு இல்லையா?"

",தவறுதான். அவர்கள்மீது நமக்கு கோபம் வரக்கூடாது.

அவர்களது நிலைக்காக வருத்தப்படுவதோடு, ஆண்டவரிடம்  அவர்களுக்காக செபிக்க வேண்டும்.

அவர்களுக்காகவும்தானே இயேசு பாடுபட்டு மரித்தார்.

அவர்களும்தானே மீட்கப்பட வேண்டும்.

இறைவனில் அவர்களும் நமது சகோதரர்கள்தானே.

ஆகவே அவர்களுக்காக நாம் தினமும் செபிக்க வேண்டும்.

நம்மைப் பொறுத்த மட்டில் நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்காக மற்றவர்கள் நம்மை 
வெறுக்கும்போது நாம் பாக்கியவான்கள்.

நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் எல்லாம் விண்ணகத்தில் பேரின்பமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

இயேசுவுக்காக நாம் வேத சாட்சிகளாக மரித்தால், 

நாம் நேரடியாக நமக்காக காத்துக் கொண்டிருக்கும் பேரின்பத்தை அனுபவிக்க விண்ணகத்திற்கு சென்றுவிடுவோம். 

நமக்காக காத்துக் கொண்டிருக்கும் நித்திய வாழ்வை நினைத்து நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்."

"ஆனால் நாம் போராட அல்லவா ஆசைப்படுகிறோம்!"

",நமக்கு நமது ஆண்டவர் தான் முன்மாதிரிகை.

அவரை யூதர்கள் கைது செய்தபோது அவர் அவர்களை எதிர்த்து போராடவில்லை.

அப்போஸ்தலர்களையும் போராடச் சொல்லவில்லை.

அவரைப் பெற்றெடுத்து வளர்த்த அன்னை மரியாள் கூட
 போராடவில்லை.

பரிசுத்த ஆவியின் வரவுக்குப்பின் அப்போஸ்தலர்கள் தங்கள் உயிரை கொடுத்துதான் நற்செய்தியை அறிவித்தார்கள்.

போராடி அறிவிக்கவில்லை.

வேத சாட்சிகளின் ரத்தத்தில்தான் திருச்சபை வளர்ந்திருக்கிறது."

"இந்தியாவிலும் அதே போல் வளரும் என்று நினைக்கிறீர்களா?"

",நிச்சயமாக வளரும். ஆண்டவர் வாழ்வில் வெள்ளிக்கிழமைக்கு பிறகு உயிர்த்த ஞாயிறு வந்தது.

நாம் இப்போது வெள்ளிக்கிழமையில் ஆண்டவரைப் பின்பற்றி கொண்டிருக்கிறோம்.

நமக்கும் ஈஸ்டர் ஞாயிறு வரும்.

ஆகவே அகமகிழ்வோம், அக்களிப்போம்.

லூர்து செல்வம்.

Friday, February 11, 2022

"பின், வானத்தை அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சுவிட்டு அவனை நோக்கி, "எப்பெத்தா" -- அதாவது, "திறக்கப்படு" -- என்றார்."(மாற்கு.7:34)

"பின், வானத்தை அண்ணாந்து பார்த்துப் பெருமூச்சுவிட்டு அவனை நோக்கி, "எப்பெத்தா" -- அதாவது, "திறக்கப்படு" -- என்றார்."
(மாற்கு.7:34)

செவிடனும் திக்குவாயனுமாகிய ஒருவனைக் குணமாக்க இயேசு கூறிய வார்த்தைகள் இவை.

அவனை இயேசுவிடம் அழைத்து வந்தவர்கள் அவனது உடல்ரீதியான நோயைக் குணப்படுத்தவே அழைத்து வந்திருப்பார்கள்.

ஆனால் அவன்  தான் பெற்ற குணத்தை  இயேசுவின் போதனையை கேட்கவும்,

 அவர் செய்த புதுமையை சென்றவிடமெல்லாம் சொல்லி அவரது புகழைப் பரப்பவும் பயன்படுத்தினான். 

அவனை அழைத்து வந்தவர்களும் அதையே செய்தார்கள்.

இயேசு தான் படைத்த மக்களுக்கு உடலைத் தந்திருப்பது வெறுமனே உலக வாழ்வு வாழ்வதற்கு மட்டுமல்ல.

ஆன்மீக வாழ்வு வாழ்வதற்கே.

ஆன்மா வாழ உதவி செய்வதே உடல் படைக்கப்பட்டதன் நோக்கம். 

இறைமகன் மனிதனாகப் பிறந்ததன் நோக்கம் உடலைச் சார்ந்த நோய்களை குணமாக்குவது அல்ல, ஆன்மீக நோயைக் குணமாக்குவதுதான்.

உடல் சார்ந்த நோய்களைக் குணமாக்கியதே மக்களைத் தன்பால் ஈர்த்து, ஆன்மாவை சார்ந்த நற்செய்தியை அவர்களுக்கு அறிவிப்பதற்காகத்தான். 

பள்ளிக்கூடங்களில் சத்துணவு போடுவது மாணவர்களை கல்வி கற்க வரவழைப்பதற்காகத்தான்,

சாப்பிட வரவழைப்பதற்காக அல்ல.

இயேசு சென்றவிடமெல்லாம் நோய்களைக் குணமாக்கியது 

தனது நற்செய்தியால் மக்கள் பயன் பெறுவதற்காகத்தான்.

செவிடனும் திக்கு 
வாயனுமானவனுக்கு இயேசு சொன்ன அதே வார்த்தைகளை இன்று நமக்கும் சொல்ல வேண்டும்,

"எப்பெத்தா" -- "திறக்கப்படு".

அநேக சமயங்களில் நாம் உடல்ரீதியாக நன்கு காது கேட்பவர்களாகவும், பேசுபவர்களாகவும் இருக்கிறோம்.

ஆனால் ஆன்மீக ரீதியாக செவிடர்களாகவும், ஊமைகளாகவுமே இருக்கிறோம்.

கோவிலுக்கு போகும்போதும் பேசுகிறோம், மற்றவர்கள் பேசுவதையும் கேட்கிறோம்.

ஆனால் செபம் சொல்ல வேண்டிய நேரத்திலும்,

வாசகங்களையும், பிரசங்கத்தையும் கேட்கவேண்டிய நேரத்திலும்

ஊமைகளாகவும், செவிடர்களாகவும் மாறிவிடுகிறோம்.

வாயினால் சத்தமாக செபம் சொல்லும்போதுகூட நமது மனது எங்கேயோ சென்றுவிடுகிறது.

அதேபோல்தான் 
சுவாமியாருடைய பிரசங்கம் காதில் விழுகிறது, கருத்தில் விழுவதில்லை.

ஆன்மரீதியாக வாயும் பயன்படவில்லை, காதும் பயன்படவில்லை.

எங்கெல்லாமோ போகிறோம். யாரிடமெல்லாமோ, என்னவெல்லாமோ பேசுகிறோம்.

அரசியல் பேசுகிறோம். 
அறிவியல் பேசுகிறோம்.
சுகாதாரம் பேசுகிறோம்.
உணவு வகைகள் பற்றி பேசுகிறோம்.
சமூகத்தை விமர்சிக்கிறோம்.
பட்டி மன்றம் பேசுகிறோம்.

ஆண்டவரைப் பற்றி யாரிடமாவது பேசுகின்றோமா?

நற்செய்தியை யாருக்காவது அறிவிக்கின்றோமா?

லௌகீக வாழ்வில் ஐந்து உறுப்புக்களும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.

ஆன்மீக வாழ்வில் எல்லா உறுப்புக்களும் படுத்துக் கொள்கின்றன.

 கிறிஸ்மஸ் போன்ற திருவிழா கொண்டாட்டங்களில் கூட என்றும் நினைவில் நிற்பது நாம் சாப்பிடும் பிரியாணி விருந்துதானே!

செலவின்றி பார்க்கும் திருப்பலியைவிட, இலட்சங்கள் செலவழித்து பவனி வரும் சப்பரப் பவனியைத்தானே அதிகம் விரும்புகிறோம்!

"ஆண்டவரே! ஆன்மீகத்தில் நாங்களும் செவிடர்களும், பேசத் தெரியாதவர்களுமாகவே இருக்கிறோம்.

எங்கள் மீதும் உம்முடைய கையை வைத்து,

"எப்பெத்தா" -- "திறக்கப்படு".

என்று சொல்லும்.

நாங்களும் குணமாகி, உமது புகழை உலகெங்கும் பரப்புவோம்."

லூர்து செல்வம்.

Thursday, February 10, 2022

"பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று"(மாற்கு. 7:27)

"பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று"
(மாற்கு. 7:27)

இன்றைய இறைவாக்கைத் தியானிப்பதற்கு முன்பு,

வார்த்தைகளுக்குப் பொருள் காண்பதற்கான இரண்டு அடிப்படை விதிகளை நினைவில் கொள்ள வேண்டும்.

வார்த்தைகளுக்கான பொருள் வார்த்தைகளிலோ, அகராதியிலோ இல்லை.

அவற்றைக் கூறுபவர்களிடம்தான் உள்ளது.
கூறுபவர்களின் தன்மையை வைத்துதான் பொருள் கூற முடியும்.

வார்த்தைகளின் அகராதிப் பொருளை வைத்து கூறுபவர்களின் தன்மையைத் தீர்மானிக்கக் கூடாது. கூறுபவர்களின் தன்மையை வைத்துதான் வார்த்தைகளின் பொருளைத் தீர்மானிக்க வேண்டும்.

"பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று"

என்ற வார்த்தைகளுக்கு அகராதிப்படி பொருள் பார்த்தால், 

ஏதோ உதவி கேட்போருக்கு அன்பே இல்லாமல் கூறப்படும் பதில் போல தோன்றும்.

ஆனால் நற்செய்தி நூலில் அவற்றைக் கூறுபவர் அன்பே உருவான இறைமகன் இயேசு.

அன்பே உருவானவர் கூறும் வர்த்தைகளில் அன்பைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது.

இயேசுவின் தன்மையை வைத்துதான் வார்த்தைகளுக்குப் பொருள் காணவேண்டும்.

இயேசு எப்படிப்பட்டவர்?

அன்பே உருவானவர்.

நம்மை நமது பாவங்களிலிருந்து மீட்பதற்கு என்றே மனிதனாய்ப் பிறந்து,
பாடுபட்டு, மரித்தவர்.

உதவி கேட்டு வருபவர்களுக்கு உறுதியாக உதவக் கூடியவர்.

நன்மை மட்டும் செய்யக் கூடியவர்.

அவரது பொது வாழ்வின்போது சென்றவிடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கியவர்.

அப்படிப் பட்டவர் இந்த கடினமாகத் தோன்றும் வார்த்தைகளை ஏன் கூறினார்?

(அவற்றுக்குள் இயேசுவின் அன்பு மறைந்திருக்கிறது. தியானிக்கும்போது வெளிப்படும்.)

சீரோபெனீசிய குலத்தைச் சார்ந்த ஒரு பெண் தன் மகளிடமிருந்து பேயை ஓட்டுமாறு அவரைக் கேட்டுக்கொள்கிறாள்.

அவரோ, அவளைப் பார்த்து, "முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். 

பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று" என்கிறார்.

அவளோ மறுமொழியாக: "ஆமாம் ஆண்டவரே, ஆனால் மேசைக்கடியில் நாய்க்குட்டிகளும் குழந்தைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்கின்றனவே" என்கிறாள்

அதற்கு அவர், "இவ்வார்த்தையின் நிமித்தம் நீ போகலாம்: பேய் உன் மகளை விட்டுவிட்டது" என்கிறார்.

உடனே சிறுமியிடமிருந்து , பேய் அகன்று விடுகிறது.

உதவி கேட்ட பெண் புற இனத்தவள்.

இயேசுவைப் பொறுத்த மட்டில் உதவி கேட்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் விசுவாசம் இருக்க வேண்டும்.

இயேசு கடவுள். யார் யாருக்கு எந்த அளவு விசுவாசம் இருக்கிறது என்று அவருக்குத் தெரியும்.

ஆயினும் நமது விசுவாசத்தை நாம் அறிக்கையிட்டால் அவர் மிகவும் மகிழ்வார்.

அந்த புற இனத்துப் பெண் தன் விசுவாசத்தை அறிக்கையிடுவதற்கு வசதியாகவே இயேசு அந்த வார்த்தைகளைக் கூறினார்.

"பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுதல் நல்லதன்று"

என்று இயேசு கூறியதும் அவள் உதவி கேட்பதை நிறுத்தி விடவில்லை.

இயேசு மீது அவளுக்குக் கோபம் வரவில்லை. 

மாறாக அவர் மீது அவள் கொண்டிருந்த விசுவாசமும், அவளது தாழ்ச்சியும் அவளை இயக்க ஆரம்பித்தன.

அவள் மிகுந்த தாழ்ச்சியுடன்,

"பிள்ளைகளுக்கு உணவு போடும்போது கீழே சிந்தும் உணவை நாய்க் குட்டிகள் சாப்பிடும், ஆண்டவரே." என்றாள்.

அதாவது 

"நான் பிள்ளையாக இல்லாவிட்டாலும் சிந்தும் உணவைத் தின்னும் நாய்க் குட்டியாக இருந்து விடுகிறேனே.".

என்ற பொருள்பட அவ்வாறு கூறினாள்.

அவளது விசுவாசமும், தாழ்ச்சியும் இயேசுவுக்கு மகிழ்ச்சியைத் தந்தன.

அவற்றின் நிமித்தம் அவளது மகளைக் குணமாக்கினார்.

இந்தப் புதுமையிலிருந்து நாம் ஒரு பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் விசுவாசத்தோடும், தாழ்ச்சியோடும் செபிக்க வேண்டும்.

நமது செபம் கேட்கப்படாதது போல் தோன்றினாலும் நமது விசுவாசத்தைக் கைவிட்டு விடக் கூடாது

ஆண்டவர் விரும்பும்போது நாம் கேட்டது கட்டாயம் கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையோடு தொடர்ந்து செபிக்க வேண்டும்.

இறுதிவரைக் கிடைக்கா விட்டாலும் நமது விசுவாசத்தை நாம் கைவிடக் கூடாது.

நாம் கேட்பது நமக்கு கேடு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம்.

அது நமக்கு தெரியாமல் இருக்கலாம், ஆனால் கடவுளுக்கு தெரியும். ஆகவே நமது நன்மை கருதியே அதை அவர் நமக்கு தராமல் இருக்கலாம்.

நாம் கேட்டது கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் விசுவசிப்பது உண்மையான விசுவாசம் அல்ல.

இறைவனை அவரது 
நன்மைத்தனம் கருதி, அவருக்காகவே விசுவசிப்பதே உண்மையான விசுவாசம்.

நாம் எதைச் செய்தாலும் அவருக்காகவே செய்ய வேண்டும்.

அவருக்காக நமது வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்து மரிப்பதே விசுவாச வாழ்வு.

நாம் கேட்டதைத் தராமல் இருப்பது நமது உண்மையான விசுவாசத்தை பரிசோதிப்பதற்காகக் கூட இருக்கலாம்.

பரிசோதனையில் நாம் வெற்றி பெற வேண்டும்.

நாம் கேட்பது கிடைப்பது முக்கியமல்ல.

விசுவாசத்தில் வெற்றி பெறுவதே முக்கியம்.

லூர்து செல்வம்.

Wednesday, February 9, 2022

",புறத்தேயிருந்து மனிதனுக்குள்ளே சென்று அவனை மாசுபடுத்தக்கூடியது ஒன்றுமில்லை. மனிதனுள்ளிருந்து வெளிவருவதே அவனை மாசுபடுத்தும்."(மாற்கு. 7:15)

",புறத்தேயிருந்து மனிதனுக்குள்ளே சென்று அவனை மாசுபடுத்தக்கூடியது ஒன்றுமில்லை. மனிதனுள்ளிருந்து வெளிவருவதே அவனை மாசுபடுத்தும்."
(மாற்கு. 7:15)

"தாத்தா, நாமெல்லாம் தினமும் சாப்பிடு முன்னும், சாப்பிட்ட பின்னும் கைகளைக் கழுவுகிறோம், பாத்திரங்களைக் கழுவுகிறோம், வெளியே போய்விட்டு வந்தால் குளிக்கிறோம்.

இதெல்லாம் தவறா, தாத்தா?"

",தவறு என்று யார் சொன்னா?"

"யாரும் சொல்லல. எதைப்பற்றியெல்லாமோ போதித்த இயேசு,

இதைப்பற்றி ஒன்றும் சொல்லலிய, அதான் கேட்டேன்."

", இதைப் பற்றி சொல்லத்தான் இறைமகன் மனிதனாகப் பிறந்தாரா?"

"இல்ல. அவருடைய சீடரில் சிலர்  கழுவாத கைகளால் உண்பதைக் கண்ட பரிசேயரும் மறைநூல் அறிஞரும் 

இதைப்பற்றி இயேசுவிடம் கேட்டபோது அவர் சீடர்களுக்கு இதைப்பற்றி புத்திமதி சொல்லவில்லையே."

", அதற்குப் பதிலாக இயேசு என்ன சொன்னார்?"

"கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டு மனிதர்களுடைய பரம்பரையைக் கைப்பிடிக்கிறீர்கள்" என்று சொன்னார்."

", ஏன் அப்படிச் சொன்னார்?"

"அது தெரியாமல்தானே உங்க கிட்ட கேட்கிறேன்."

", வகுப்பில் ஆசிரியர் ஆங்கில பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது நீ எழுந்து, "எலிகளை உயிரோடு பிடிப்பது எப்படி, சார்?" என்று கேட்டால் அவர் என்ன சொல்லுவார்?"

"அதை Biology ஆசிரியரிடம் போய்க் கேளு. ஆங்கில வகுப்பில் எலிகளை அறுக்க வேண்டிய அவசியம் இல்லை, என்பார்."

", இயேசு கடவுளுடைய மகன்.

கடவுளுடைய கட்டளைகளை மனிதர் அனுசரிப்பது பற்றிய நற்செய்தியைப் போதிக்கவே அவர் மனிதனாகப் பிறந்தார்.

அவரிடம் போய் சாப்பிடுமுன் கை கழுவது பற்றியும், பாத்திரம் கழுவது பற்றியும் கேட்டால் அவர் என்ன சொல்லுவார்?


"கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டு 

மனிதர்களுடைய பரம்பரையைக் கைப்பிடிக்கிறீர்கள்."

என்றுதான் சொல்லுவார்.

மனிதர்களுடைய பரம்பரையைக் கைப்பிடிக்க வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை.

கடவுளுடைய கட்டளைகளைக் கைவிட்டது ஏன்? என்றுதான் கேட்கிறார்.

அவர் போதிக்க வந்தது கடவுளுடைய கட்டளைகளைக் கடைபிடிப்பது பற்றிதானே.

கைகழுவாமல் சாப்பிடும்போது உணவோடு நமது வயிற்றுக்குள்ளே செல்லும் அழுக்கு நமக்கு, அதாவது, நமது ஆன்மாவிற்கு எந்த தீங்கும் செய்யாது.

இயேசு முக்கியமாக கருதுவது நமது ஆன்மாவின்  நலனைப் பற்றிதான்.

உடலுக்கு நலனோ, தீங்கோ செய்யும்   எதையும் பற்றி ஆண்டவர் பேசவில்லை.

பேசுவது அவர் செய்ய வந்த பணியைச் சார்ந்தது அல்ல.

ஆன்மா சுத்தமாக இருந்தால் அங்கு உற்பத்தியாகி வெளிப்படும் எண்ணங்கள் யாவும் சுத்தமாக இருக்கும்.

மனிதர் உள்ளத்தில் 
 தீய எண்ணம்,
 மோகம்,
 களவு,
கொலை,
 விபசாரம், 
 பேராசை, 
தீச்செயல், 
கபடு, 
கெட்ட நடத்தை, 
பொறாமை, 
பழிச்சொல், 
செருக்கு, 
மதிகேடு 
ஆகியவை இருந்தால்

 அவை வெளியே வந்தாலும்,
 உள்ளத்தில் இருந்தாலும்  மனிதனை மாசுபடுத்தும்" என்று ஆண்டவர் கூறுகிறார்.

இயேசு பேசுவது ஆன்மீகத்தைப் பற்றி மட்டுமே.

ஒரு முறை ஒருவன், "போதகரே, என் சகோதரன் என்னுடன் சொத்தைப் பங்கிட்டுக்கொள்ளுமாறு சொல்லும்" என்றான்.

அதற்கு அவர், "அன்பனே, நியாயம் தீர்க்கவோ பாகம்பிரிக்கவோ என்னை ஏற்படுத்தியவர் யார்?" என்றார்.
( லூக். 12:13, 14)

இதிலிருந்து என்ன தெரிகிறது?"

"செபத்தின்போது ஆன்மீக உதவிகளை மட்டுமே கேட்க வேண்டும்.

'கேளுங்கள், கொடுக்கப்படும்' என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.

நமது ஆன்மாவுக்கு உதவக்கூடிய உதவிகளை மட்டுமே கேட்க வேண்டும்."

",உலகைச் சார்ந்த உதவிகளைக் கேட்கக் கூடாதா?"

"கேட்கலாம். ஆனால் அவை  நமது ஆன்மீக வாழ்க்கைக்கு கேடு விளைவிக்கக் கூடியவையாய் இருந்துவிடக் கூடாது.

அப்படி இருந்தால், கேட்டது கிடைக்காது."


", மகனோ, மகளோ, பேரனோ, பேத்தியோ அமெரிக்காவில் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

அவர்களைப் பார்க்கச் செல்ல வேண்டுமென்றால் bus ல் போக முடியாது.. Flight லதான் போக வேண்டும்.

ஆனால் Flight ல போவதற்காக அமெரிக்கா போகவில்லை.

அதேபோல் இவ்வுலகில் வாழ்ந்துதான் விண்ணகம் போகவேண்டும்.

விண்ணகம் போவதற்காகத்தான்  இவ்வுலகில் பிறந்திருக்கிறோம்.

இவ்வுலகில் வாழ்வதற்காக பிறக்கவில்லை.

இவ்வுலகில் வாழ்வதற்காக சுவாசிக்கவில்லை.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஆன்மீகம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும்.

செபம் சொல்லும்போது ஆண்டவரின் அருளைக் கேட்டு தான் இறைவனிடம் மன்றாட வேண்டும், இவ்வுலக பொருளைக் கேட்டு அல்ல.

முழுக்கமுழுக்க ஆன்மாவின் மீட்புக்காக வாழ்பவனே உண்மையான கிறிஸ்தவன்.

அதெப்படி முழுக்கமுழுக்க?

ஆன்மாவின் மீட்புக்காக ஆலயம் செல்லலாம், ஆபீசுக்குச் செல்வது எப்படி?

ஆபீசில் பார்க்கும் வேலையை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்து விட்டால் அதுவும் மீட்புக்கான பணிதான்.

வயலில் தான் பார்க்கும் வேலையை விபசாயி ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்து விட்டால் அதுவும் மீட்புக்கான பணிதான்.

ஆண்டவருக்காக மட்டும் வாழ்பவனுக்கு உலகமே மீட்புக்கான பணியிடம்தான்."

"உலக மீட்புக்காக நம் ஆண்டவர் வாழ்ந்ததும், மரித்ததும் உலகில் தானே."


", நாம் வாழ்வது இவ்வுலகிலாக இருக்கலாம்,

ஆனால் இவ்வுலகிற்காக அல்ல என்பதை நினைவில் கொள்வோம்.

நாம் வாழும் ஒவ்வொரு வினாடியையும் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்து வாழ்வோம்.

விண்ணுலகு நம்முடையதே."

லூர்து செல்வம்.

Tuesday, February 8, 2022

"குருவே, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை: ஆயினும் உமது சொல்லை நம்பி வலைகளைப் போடுகிறேன்"(லூக்.5:5)

"குருவே, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை: ஆயினும் உமது சொல்லை நம்பி வலைகளைப் போடுகிறேன்"
(லூக்.5:5)

இராயப்பர் இரவு முழுவதும் மீன் பிடிக்க முயன்றும் ஒன்றும் கிடைக்கவில்லை.

காலையில் வெறும் வலைகளை அலசிக்கொண்டிருந்தார்.

இயேசு அவரது படகில் ஏறி மக்களுக்குப் போதித்தார்.

போதித்து முடிந்தபின் ஆண்டவர் இராயப்பரை நோக்கி,

 "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய் மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்றார்.

இராயப்பர் இயேசுவைப் பார்த்து,

"குருவே, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை: 

ஆயினும் உமது சொல்லைக் நம்பி வலைகளைப் போடுகிறேன்" என்றார்.

ஆண்டவர் சொன்னபடி வலைகளைப் போட்டார்.

ஏராளமான மீன்கள் கிடைத்தன. 

வலைகளைப் போட்டதையும், மீன்கள் ஏராளமாக கிடைத்ததையும் விட, இராயப்பர் கூறிய வார்த்தைகள்தான் முக்கியம்.

"நான் இரவு முழுவதும் வலைகளைப் போட்டிருந்தேன். எதுவும் கிடைக்கவில்லை.

ஆயினும் உமது சொல்லை நம்பி போடுகிறேன்."

இராயப்பருக்கு தனது அனுபவத்தின் மீது நம்பிக்கை இல்லை.

ஆனால் இயேசுவின் வார்த்தைகள் மீது முழுமையான நம்பிக்கை இருந்தது.

அந்த நம்பிக்கையை செயல் படுத்தினார். வெற்றியும் பெற்றார்.

திருச்சபையின் தலைமைப் பதவிக்குப் பொறுத்தமான ஆள் என்பதை ஆரம்பத்திலேயே நிரூபித்துவிட்டார்.

ஆண்டவர்மீது அவருக்கு இருந்த முழுமையான நம்பிக்கை

இறைவனோடு நமக்கு உள்ள உறவின் ஒவ்வொரு வினாடியும் நமக்கும் இருக்க வேண்டும்.

  சீமோன் இராயப்பரின் சகோதரரான பெலவேந்திரர்

"மெசியாவைக் கண்டோம்"

என்று கூறித்தான் அவரை ஆண்டவரிடம் அழைத்துச் சென்றார்.

ஆண்டவரைக் காணும் முன்னே இராயப்பர் அவரை மெசியா என்று விசுவசித்தார்.

முதல் சந்திப்பிலேயே
இயேசு அவரை உற்றுநோக்கி,

 "நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார். 

 கேபா என்பதற்கு இராயப்பர் என்பது பொருள். .

அவரை இராயப்பர் என்று அழைத்ததில்  
 
அவர்மேல் திருச்சபையை கட்டுவதென்ற இயேசுவின் நித்திய திட்டம் தெரிகிறது.

இராயப்பர் மெசியாவை விசுவசித்தது மட்டுமல்ல அவர் மீது முழுமையான நம்பிக்கையும் கொண்டார்.

இந்த நம்பிக்கைதான் இயேசு வலைகளை வீசச் சொல்லும்போது வெளிப்பட்டது.
 
நம்பிக்கை இருந்தால்தான் விசுவாசம் வெற்றி பெறும்.

நாம் ஞானஸ்நானம் பெறும்போது விசுவாசத்தையும் பெறுகிறோம்.

இவ்வுலகில் நாம் செய்யவிருப்பது விண்ணகத்தை நோக்கிய ஆன்மீகப் பயணம் என்பதை விசுவசித்து ஏற்றுக் கொள்கிறோம்.

பயணத்தின் இறுதியில் நாம் உறுதியாக விண்ணக வாழ்வை அடைவோம் என்ற நம்பிக்கையுடன்தான் விசுவசிக்க ஆரம்பிக்கிறோம்.

இறைவனை விசுவசிப்பது மட்டுமல்ல ஒவ்வொரு வினாடியும் அவரை நம்பவும் வேண்டும்.

நமது நம்பிக்கைதான் நமது விசுவாசத்திற்கு வெற்றியைத் தரும்.

கஷ்டங்கள் ஏற்படும் போது நமது நம்பிக்கையில் தளர்ச்சி ஏற்பட்டுவிடக்கூடாது.

தளர்ச்சி ஏற்படுவது போல் தெரிந்தால் நமது நம்பிக்கையை உறுதிப்படுத்தும்படி இறைவனிடம் வேண்ட வேண்டும்.

தேவத் திரவிய அனுமானங்களை அடிக்கடி பெற்றால் நமது நம்பிக்கை உறுதியாக இருக்கும்.

பச்சாத்தாபம், திவ்ய நற்கருணை 
போன்ற தேவத் திரவிய அனுமானங்களை அடிக்கடி பெற வேண்டும்.

அடிக்கடி திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும்.

இயேசு அடிக்கடி நமக்குள் உணவாக வரும்போது அவரோடு நமக்கு உறவின் நெருக்கம் அதிகரிப்பதால்

அவரோடு உறுதியாக விண்ணகத்தில் வாழ்வோம் என்ற நம்பிக்கையும் அதிகரிக்கும்.

இயேசுவும் நம்மோடே பயணிப்பதால் நாம் அவருக்கு விரோதமாக எதுவும் செய்ய மாட்டோம்.
எதற்கும் பயப்படவும் மாட்டோம்.

நமது ஆன்மீக பயணத்தில் உதவியாய் இருக்கும் விசுவாசமும், நம்பிக்கையும் பயணம் முடியும் வரைதான் நம்மோடு இருக்கும்.

பயணம் முடிந்து விண்ணகத்திற்குள் நுழையும் போது இரண்டுமே காணாமல் போய்விடும்.

ஏனெனில் விசுவசித்ததை எல்லாம் நேரில் பார்ப்போம்.

நம்பினது எல்லாம் நிறைவேறி விடும்.

இனிமேல் விசுவாசத்துக்கும்,
 நம்பிக்கைக்கும் வேலை இல்லை.

   அப்புறம் நித்திய காலமும் நம்மோடு இருப்பது அன்பு மட்டும்தான்.

நமது அன்பின் அளவுக்கு ஏற்பதான் நமது பேரின்பத்தின் அளவும் இருக்கும்.

லூர்து செல்வம்.

Monday, February 7, 2022

நமது வாழ்வின் நோக்கம்.

நமது வாழ்வின் நோக்கம்.


"தாத்தா!  எங்கு பார்த்தாலும் கட்டாய மதமாற்றம் பற்றியே பேசுகிறார்களே, அப்படின்னா என்ன, தாத்தா?"

"பேசுகின்றவர்களுக்கே அது என்ன என்று தெரியாது."

"பொருள் தெரியாமலா பேசுகின்றார்கள்?"

",ஆமா. பொருள் தெரிந்திருந்தால் வேறொன்றும் தெரிந்திருக்கும். கிறிஸ்தவர்கள் கட்டாய மதமாற்றம் செய்ய மாட்டார்கள் என்ற உண்மையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும்."

"நாம் அவர்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே !"

"உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையிலா அவர்கள் இருக்கிறார்கள்!

அவர்களுடைய ஒரே நோக்கம் கிறிஸ்தவத்தை இந்தியாவை விட்டு ஒழித்துவிட வேண்டும் என்பதுதான்."

"அவர்களை விடுங்கள். என்னிடம் விளக்குங்கள்."

"கிறிஸ்தவப் போதனைப்படி இறைவன் மனிதனை முழுமையான சுதந்தரத்தோடு படைத்தார்.

அவனுக்குக் கட்டளைகளைக் கொடுத்தார். ஆனால் மனிதன் அவற்றை முழுமனச் சுதந்தரத்தோடு ஏற்று அனுசரிக்க வேண்டும்.

ஆகவே சுதந்திரமாக மனிதன் கட்டளைகளை மீறும்போது தடுக்கவில்லை.

சுதந்திரமாக அவன் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக தானே மனிதனாகப் பிறந்து, பாடுபட்டு மரித்தாரேயொழிய,

 மனிதன் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படவேயில்லை.

அவர் நற்செய்தி அறிவிக்கும்போது அதை மக்கள் முழு மனச் சுதந்திரத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே விரும்பினார்.

மக்களை கட்டாயப்படுத்த விரும்பியிருந்தால் அவர் அரசராக பிறந்து, நற்செய்தியை நாட்டின் சட்டமாக்கி, ராணுவத்தை கொண்டு அதை அமுல்படித்தியிருப்பார்.

ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லையே!

கிறிஸ்துவின் நற்செய்தி முழுக்க முழுக்க ஆன்மீகமானது.

முழு மன சுதந்திரத்தோடு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது.

"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்."

 என்பது அவரது அப்போஸ்தலர்களுக்கு அவர் கொடுத்த கட்டளை.

அவர்களும் தங்களது உயிரை கொடுத்துதான் நற்செய்தியை அறிவித்தார்கள்,

 அதற்காக வேறு யாருடைய உயிரையும் வாங்கவில்லை.

இப்போதும் கத்தோலிக்க திருச்சபை அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

நாம் கிறிஸ்துவின் சொற்படி நற்செய்தியை அறிவிக்கிறோம்.

ஏற்றுக்கொள்ள மனது உள்ளவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

இதில் கட்டாய மதமாற்றம் எங்கே இருக்கிறது?

மதம் மாறுபவர்கள் அவர்கள் மனம் மாறுவதன் அடிப்படையில்தான். கட்டாயத்தின் அடிப்படையில் அல்ல."

"கிறிஸ்தவ மிசனரிகள் மக்களுக்கு கிறில்துவை அளிக்கதான் இந்தியாவுக்கு வந்தார்கள், இதை மறுக்க  முடியாது.

அப்படியானால் அதற்காகத்தானே பள்ளி கூடங்களை நிறுவியிருப்பார்கள்?"

",கிறிஸ்தவ மிசனரிகள் செய்த ஒவ்வொரு செயலும் கிறிஸ்துவை மக்களுக்கு அளிப்பதற்காகத்தான் என்பதை மறுக்கக்கூடாது.

அவர்கள் செய்தது இறைவன் அவர்களுக்கு கொடுத்த பணியை.

ஆனால் மக்களாகவே கிறிஸ்துவை முழு மன சுதந்திரத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 கட்டாயத்தின் அடிப்படையில் அல்ல.

கிறிஸ்தவ பள்ளிக்கூடங்கள் மக்களுக்கு இறையன்பு, 
பிறரன்பு, 
மன்னிப்பு, 
தீமைக்கு நன்மை செய்தல், 
தியாகம் 
போன்ற கிறிஸ்தவ மதிப்பீடுகளை (Christian values) மக்களுக்குக் கொடுத்தன.

அது கிறிஸ்துவை மக்கள் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ள உதவிகரமாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம்.

ஆனால் பள்ளிக்கூடங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.

கட்டாயப்படுத்தியிருந்தால் அங்கு படித்தோர் யாவரும் கிறிஸ்தவர்களாக மாறியிருக்க வேண்டுமே.

ஏற்றுக்கொண்டோர் எண்ணிக்கை மிகக் குறைவாகத்தான் இருக்கும்.

ஆனாலும் கிறிஸ்தவ மதிப்பீடுகள்  மக்களை மக்களாக வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன.  

நம் நாட்டு மக்களின் அறிவார்ந்த நாகரீக வாழ்வுக்கும், மக்களின் தரமான வாழ்க்கைக்கும் கிறிஸ்தவ பள்ளிக்கூடங்கள்தான் காரணம்.

இறைவன் எந்த வேறுபாடுமின்றி அனைவரையும் காப்பாற்றிக் கொண்டு வருவது போல,

அவருடைய திருச்சபையும் எந்த வேறுபாடும் இன்றி அனைவருக்கும் கல்வி அறிவு கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அனைத்து இனத்தவரும், அனைத்து மதத்தவரும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களால் பயன் பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனாலும், நமது கிறிஸ்தவ வாழ்வின் நோக்கமே கிறிஸ்துவை அனைவருக்கும் அளிப்பதுதான் என்பதை நாம் மறுக்க முடியாது.

மறுத்தால் நாம் கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்கு ஏற்றவர்கள் அல்ல."

"நானே உலகின் ஒளி" என்று கூறிய இயேசு,

நம்மைப் பார்த்து  "உலகிற்கு ஒளி நீங்கள்" என்றும் கூறியிருக்கிறார்.

அப்படியென்றால்  "நான் செய்ததையே நீங்களும் செய்யுங்கள்" என்றுதானே அர்த்தம்.

அவர் தன்னையே உலகிற்கு அளிக்க வந்தார்.

அப்படியானால்,

நமது பணியும் அவரை உலகிற்கு அளிப்பதுதானே!"

", Exactly! நாம் வாழ்வதே அதற்காகத்தான்."

லூர்து செல்வம்.