Friday, May 31, 2019

"கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்." (மத்.23:10)

"கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்." (மத்.23:10)
********************************

ஆசிரியர்கள் இரண்டு வகை.

முதல் வகையினர்

போதிக்கப்படக்கூடிய பாடங்களை நன்கு தயாரித்து,

மாணவர்கட்குப் போதித்துவிட்டு,

பாடங்களுக்கான கேள்விகளையும், பதில்களையும் அவர்களே தயாரித்து,

எழுதிப்போட்டு,

விளக்கி,

அவற்றை மனப்பாடம் செய்யவைத்து,

திரும்பத் திரும்ப எழுதப் பயிற்சி கொடுத்து,

தேர்வுக்கு அனுப்பி,

எல்லா மாணவர்களையும் பாஸ் பண்ண வைப்பர்.

நானே இந்த வகையைச் சேர்ந்தவன்தான்.

இதில் மாணவர்களின் மூளைக்கு வேலையேயில்லை.

அவர்கள் வேலையெல்லாம் மனப்பாடம் செய்யவேண்டியது,

வீட்டில் மனப்பாடம் செய்ததை தேர்வுத் தாளில் கக்க வேண்டியது.

இரண்டாவது வகையினர் பாடம் நடத்துவதுவரை முதல் வகையினரைப்போல்தான்.

அடுத்து கேள்விகளை மட்டுமே ஆசிரியர் கொடுப்பார்.

பதில்களை மாணவர்களே தயாரிக்க வேண்டும்.

எனது ஆசிரியர் இவ்வகையைச் சேர்ந்தவர்.

மாணவர் தயாரித்த பதில்களில் உள்ள பிழைகளைத் திருத்திக் கொடுப்பார்.

மாணவர்கள் படிப்பதும்  தேர்வுகளில் எழுதுவதும் அவரவர் சொந்த தயாரிப்புகளையே.

மாணவகளின் உழைப்புக்குக் காரணமாயிருப்பவரும், தூண்டுதலாயிருப்பவரும் ஆசிரியரே.

ஆசிரியர் இன்றி மாணவர் இல்லை.

உழைப்பு இன்றியும் மாணவர் இல்லை.

நமது ஆன்மீக வாழ்வில் நமது ஆசிரியர் நமது ஆண்டவர் கிறிஸ்துவே.

"கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்." (மத்.23:10)

நாம் குறிப்பிட்ட ஆசிரியர் வகையில் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.

கத்தோலிக்கத் திருச்சபை என்னும் பள்ளிக்கூடத்தில், தலைமையாசிரியரும், உதவியாசிரியர்கள் மூலமாகச் செயல்படுபவரும் இறைமகன் இயேசுவே. 

மாணவர்களாகிய நாம் பயின்று வெற்றி பெற வேண்டிய பாடம் இயேசுவின் நற்செய்தி.

நாம் வெற்றி பெறவேண்டிய தேர்வு நமது வாழ்வு.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் விண்ணக வாழ்வு.

இயேசு தன்  நற்செய்தியை நமக்குக் கற்றுத்தருவது மனப்பாடம் செய்து வாய்வழியாகவோ,  பேப்பர் வழியாகவோ ஒப்பிப்பதற்காக அல்ல.

கற்றுக்கொண்ட நற்செய்தியை உள்ளத்தில் தியானித்து,  நமது வாழ்க்கைக்கான செய்தியாக மாற்ற வேண்டியதே நமது வீட்டு வேலை.(Home work)

இந்த வேலையில் ஏதாவது பிழையிருந்தால் இயேசுவிடம்  காட்டித் திருத்திக்கொள்ள வேண்டும்.

எப்படி இயேசுவிடம் காட்டுவது?

அதற்காகத்தான் உதவி ஆசிரியர்களாகக் குருக்களை நியமித்திருக்கிறார்.

நாம் குருக்களிடம் பேசும்போது இயேசுவிடம் பேசுகிறோம்.

நற்செய்தியை நமது வாழ்வாக மாற்ற நமக்கு ஆலோசனை நல்கிடவும், நமது தவறுகளைத் திருத்தி சரியான வழியில் நடத்திடவுமே குருக்கள் இயேசுவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இயேசுவின் நற்செய்தியை
நம் வாழ்வாக்கி வாழும்போது
நம் வாழ்வில் இயேசுவாக மாறுகிறோம்.

நற்செய்தியால் நாம் வாழும்போது நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் இயேசுவைப் பார்ப்பார்கள்.

நாமும் நமது வாழ்வால் நற்செய்தியைப் போதிக்கும் ஆசிரியர்களாக மாறிவிடுகிறோம்.

நாம் செல்லுமிடமெல்லாம் நற்செய்தி பரவும்.

நல்ல மாணவன் தான் கற்ற கல்வியை மற்றவர்கட்குக்
கொடுக்கும்போது செயலில் ஆசிரியராக மாறிவிடுகிறான்.

அப்படியானால் நற்செய்தி பயிலும் நாமும் நற்செய்திப் பணியாளர்களே.

கற்ற நற்செய்தியைக் கொண்டு வாழ்வாகிய தேர்வை எழுதும்போது ஒவ்வொரு சரியான விடைக்கும் விண்ணக சான்றிதழில் மதிப்பெண்கள் பதிவாகிக்கொண்டேயிருக்கும்.

உதாரணத்திற்கு, காலையில் நற்செய்தி வாசகத்தில்,  'உனது எதிரியை நேசி' என்ற
நற்செய்தி அறிவிக்கப்பட்டால், அதைத் தியானித்து வாழ்வில் எதிரியை நேசிக்க முடிவெடுத்துக்கொள்ள வேண்டும்.

நேசத்தைச் செயலில் காட்டும்போது எதிரிகளை மன்னிப்போம்,  அவர்கட்கு நன்மை செய்வோம்.

நம்மை வெறுப்போருக்கு நற்செய்தியின் அடிப்படையில் நாம் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் விண்ணகத்தில் மதிப்பெண் ஏறிக்கொண்டேயிருக்கும்.

இயேசுவின் நற்செய்திப் பள்ளியில் நமக்கு எவ்வளவு தெரியும் என்பது முக்கியமல்ல, எவ்வளவு
செய்கிறோம் என்பதே முக்கியம்.

ஒவ்வொரு நாளும் நாம் பெறும்  நற்செய்தியை அன்றைய நாளிலும், அடுத்து வரும் வாழ்நாழிலும்  நம் வாழ்வாக்க வேண்டும்.

இயேசுவின்

நற்செய்தியை

வாசிப்போம்,

வாழ்வாக்குவோம்,

வான் வீட்டில்

வளமான

வாழ்வடைவோம்.

லூர்து செல்வம்.

Monday, May 27, 2019

" நான் உங்களுக்குத் தரும் சமாதானம் உலகம் தரும் சமாதானம் போன்றது அல்ல." (அரு.14:27)

" நான் உங்களுக்குத் தரும் சமாதானம் உலகம் தரும் சமாதானம் போன்றது அல்ல."
(அரு.14:27)
***********************************
.."அடியே, செல்வம், சாப்பாடு டேஸ்ட் சூப்பர்!"

."ஏங்க, தினமும் நான்தான்  சாப்பாடு தயாரிக்கிறேன். இன்றைக்கு என்ன அதிசயமாய்
'சாப்பாடு டேஸ்ட் சூப்பர்!?"

.."இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்குமே உன் சாப்பாடு  சூப்பர் டேஸ்ட்தான்.

நேற்று ஹோட்டல்ல சாப்பிட்ட சாப்பாட்ட நினைத்துப் பார்த்தேன்.
உன் சாப்பாட்டைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை."

."இப்ப ஒரு கேள்வி.

ஆண்டவர் உயிர்த்தபின் தன் சீடர்களுக்குக் காட்சி கொடுக்கும் போதெல்லாம் 'உங்களுக்கு சமாதானம் உண்டாகுக' என்று வாழ்த்தினார்.

ஒவ்வொரு முறை பாவசங்கீத்தனம் செய்யும்போதும் குருவானவர் கிறிஸ்துவின் இடத்தில் அமர்ந்துகொண்டு,

'சமாதானமாய்ப் போங்கள்' என்கிறார்.

உலகத்தவரும் உலக சமாதானம் பற்றிப் பேசுகிறார்கள்.

உலகம் பேசும் சமாதானத்திற்கும்,  கிறிஸ்து தரும் சமாதானத்திற்கும் என்னங்க வித்தியாசம்?"

.."ஹோட்டல்காரன் தரும் சாப்பாட்டிற்கும், நீ தரும் சாப்பாட்டிற்கும் உள்ள வித்தியாசம்தான்.


ஹோட்டல்காரன் நமக்கு சாப்பாடு போடுவது நம்மீது கொண்ட அன்பினால் அல்ல. காசுக்காக.

சாப்பாடு கவர்ச்சியாகவும், ருசியாகவும்கூட இருக்கலாம்.

ஆனால் உடல் நலத்திற்கு ஏற்றது என்பதற்கு எந்த உறுதிப்பாடும் கிடையாது.

ஆனால் உனது சாப்பாடு அன்பிற்காகத் தரப்படுவது.

ருசியை மையமாக வைத்து அல்ல,  குடும்பத்தினரின் உடல் நலனை மையமாகவைத்துத் தயயாரிக்கப்படுவது.

உலகம் தரும் சமாதானத்திற்கும்,

உண்மையான சமாதானத்திற்கும் சம்பந்தமே இருக்காது.

உலகைச் சார்ந்த குடும்பங்கள்,

சமுதாய அமைப்புகள்,

அரசியல் அமைப்புகள்,

நாடுகள்

ஆகியவற்றில் எல்லாம் சமாதானம் என்ற வார்த்தை அடிக்கடி பேசப்படும்.

வெளிப்படையாக, வன்முறையைப் பயன்படுத்தி,  சண்டை போடாது இருப்பதையே சமாதானமாக இருத்தல் என இவ்வமைப்புகள் கருதுகின்றன.

இவற்றின் எண்ணத்தில்,

குடும்ப உறுப்பினர்கள் வாயாலயோ, கைகளாலேயோ, ஆயுதங்களாலேயோ சண்டை போட்டால் குடும்பத்தில் சமாதானம் இல்லை.

சண்டைபோடாமல் அமைதியாக இருந்தால் சமாதானம் நிலவுகிறது.

ஆனால் சண்டைக்குக் காரணமான கோபம், வன்மம் போன்றவை மனதிற்குள் அப்படியே இருக்கும்.

ஒரு கணவன் சொல்கிறான்,  "எனக்கு என் மனைவி மேல் பயங்கர கோபம். ஆனால் சண்டை போட்டால் நாலுபேர் நாலு விதமாகப் பேசுவார்கள் என்பதற்காகக் கோபத்தை அடக்கி 'வைத்திருக்கிறேன்.' "  அதாவது, விடவில்லை.

அப்பப்போ அடக்கி வைக்கும் கோபம் மொத்தமாய்ச் சேர்ந்தால்,  வெடித்து, குடும்பம் சிதறும்.

நாடுகளுக்கிடையே ஆயுதப்போர் நடந்தால் சமாதானம் இல்லை என்று அர்த்தம்.

ஆயுதப்போர் நின்றுவிட்டால்  சமாதானம் திரும்பிவிட்டது என்று அர்த்தம்.

திரும்பிய சமாதான நிலையில் அடுத்த போருக்கான ஆயத்தம், அதாவது, ஆயுதம் தயாரிக்கும் பணி, ஆரம்பிக்கும்.

முதல் உலகப்போர் செர்மனியின் முடிவடைந்தவுடன் வென்ற நாடுகளும், தோற்ற நாடுகளும் வெர்செய்ல்ஸில் சமாதான ஒப்பந்தம் (Treaty of Versailles) செய்துகொண்டன.(on 28 June 1919)

சமாதான காலத்தில் அதே நாடுகள் அடுத்த போருக்காகத் தயாரித்துக் கொண்டிருந்தன.

விளைவு?

1939 ல் இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்தது.

இதுதான் உலகம் தரும் சமாதானம்.

சமாதானம் என்ற உடை அணிந்துகொண்டு,

அதற்கு எதிர்மறையாகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறது உலகம்.

இயேசு தரும் சமாதானம்தான்  உண்மையான சமாதானம்.

'நன்மனதோற்கு சமாதானம் உண்டாகுக' என்று பாடினர் விண்ணுலக தூதர்கள், சமாதானத்தின் தேவன் இயேசு பிறந்த நான்று.

நல்ல மனது உள்ளவர்கள் அனுபவிக்கும் சமாதானம்
மட்டும்தான் உண்மையான,

அதாவது,

இறைவன் தரும் சமாதானமாக இருக்க முடியும்.

நல்ல மனது தூய்மையின் இருப்பிடம்.

நல்ல மனது நன்மையை மட்டுமே நாடும்.

"தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்."
(மத்.5:8)

தூய்மையான உள்ளம்தான் இறைவன் வாழும் ஆலயம்.

ஆகவேதான் தூய்மையான உள்ளம் உள்ளவர்களால் மட்டுமே அங்கே  வாழும் சமாதானத்தின் கடவுளைக் காணமுடியும்.

"சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவர்." (மத்.5:9)

ஆக,

தூய உள்ளத்தோரிடம் இறைவன் குடியிருக்கிறார்.

அவர்கள் இறைவனின் மக்கள்.

அவர்கள்தான் சமாதானம் செய்வோர்.

இயேசு தூயவர்.

ஆகவே

அவர் தரும் சமாதானம்

நல்ல, தூய்மையான மனம் உள்ள அனைவரையும் சென்றடையும்.

வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், இயேசு தரும் சமாதானத்தைப் பெற நாம் நம்மையே தகுதி உள்ளவர்கள் ஆக்கிக் கொள்ளவேண்டும்.

அதற்கு ஒரே வழி நமது உள்ளத்தை தூயதாக, அதாவது, பாவமாசு இல்லாததாக வைத்துக்கொள்ளவேண்டும்.

நாம் பாவசங்கீர்த்தனம் செய்தவுடன் குருவானவர் சொல்லும் வார்த்தைகள்,

'உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, சமாதானமாகப் போங்கள்'.

இதிலிருந்து புரிகிறது, பாவம் இல்லாதவர்களே சமாதானமாய் இருக்கமுடியும் என்று.

மற்றொரு முக்கிய உண்மையையும் புரிந்துகொள்ள வேண்டும்,

சமாதானம் என்ற வார்த்தையின் உண்மையான பொருள்,

இறைவனோடு நமக்கு இருக்கும் சுமூகமான உறவு.

இவ்வுறவு பாவம் இல்லாதவர்களிடம் மட்டுமே இருக்கும்.

இறைவனிடம் சமாதானமாக உள்ளவர்கள் இயல்பாக தங்கள் சக மனிதர்களிடமும் சமாதானமாய் இருப்பார்கள்.

இறையன்பிலிருந்து பிறரன்பு பிறப்பது போல

இறைவனோடு நாம் கொண்டுள்ள சமாதானத்தில் இருந்துதான்

பிறரோடு நாம் கொள்ளவேண்டிய சமாதானம் பிறக்கும்.

தூய்மையான உள்ளத்தில் கடவுளின் அருளால் பிறக்கும் சமாதானம் 

நமது வார்த்தைகளிலும், செயல்களிலும் பிரதிபலிக்கும்.

இயேசு தரும் சமாதானம் உள்ளவர்கள்

1. பிறரைத் தன்னலமற்ற அன்புடன் நேசிப்பார்கள். (Love.)

2. பிறரது நலமான வாழ்வை விரும்புவார்கள், அதற்காக வேண்டிய உதவிகள் செய்வார்கள். (Service.)

3. பிறர் நலனுக்காக தங்களையே தியாகம் செய்வார்கள். (Sacrifice.)

4.பிறருக்காக விட்டுக்கொடுத்து வாழ்வார்கள். (Adjustment.)

இதுவே இயேசு நமக்குத் தரும் சமாதானம்.

ஆதாம் ஏவாளின் பாவத்தினால்

மனித இனம் இறைவனோடு கொண்டிருந்த சமாதான உறவை இழந்தது.

இழந்த உறவை மீட்கவே இறைமகன் மனிதனாகி, பாவத்திற்கான பரிகாரம் செய்தார்.

ஆகவேதான் இயேசு தரும் சமாதானம் இறைவனோடும், மனிதனோடும் நமக்கு உள்ள உறவை மேம்படச் செய்கிறது."

."சுருக்கமாகச் சொன்னால்,

மனிதன் தரும் சமாதானம் அப்பெயருக்கே லாயக்கற்றது.

இயேசு தருவதுதான் உண்மையான சமாதானம்."

லூர்து செல்வம்.

Saturday, May 25, 2019

எதிர் முனைகளின் கவர்ச்சி. Attraction of opposite poles.

எதிர் முனைகளின் கவர்ச்சி.
Attraction of opposite poles.
***********************************

"செல்வம், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்."

"கணவன் மனைவிக்குள் நன்றி சொல்லக்கூடாது என்பார்கள். ஆகவேதான் சொல்லவில்லை.

அறிவியலில் 'எதிர் முனைகள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன'

(Opposite poles attract each other)

என்ற விதி ஒன்று உண்டு.

இறப்பும், பிறப்பும் எதிர்முனைகள்.

இவ்விரண்டு முனைகளும் ஒன்றையொன்று ஈர்க்கும் புள்ளியில்தான்

இவ்வுலக வாழ்வு முடிந்து மறுவுலக வாழ்வு  ஆரம்பமாகிறது.

இறப்பு இறந்து  பிறப்பு பிறக்கிறது."

.."தன்னுயிர் ஈந்து மன்னுயிர் மீட்ட நம்பெருமான் இயேசு,

தன் மரணத்தால் நம் மரணத்தை வென்றார்.

இவ்வெற்றியின் விளைவாகத்தான்

இறவா வரத்தோடு நிலை வாழ்விற்குள் பிறந்திருக்கிறாய்.

22-05-19தோடு உனக்கு விண்ணுலகில் ஒரு வயது ஆகியிருக்கிறது.

மீண்டும் பிறந்த நாள்
வாழ்த்துக்கள்.

இவ்வுலகு 'எதிர் முனைகள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன'

என்ற விதிப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது.

விண்ணுலகு எப்படி?"

." உலகம் சடப்பொருள், சடப்பொருளுக்குறிய விதிப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது.

விண்ணுலகை 'உலகு' என்று மண்ணுலக மொழியால் அழைத்தாலும்

மண்ணுலக மொழியால் விண்ணுலகை விளக்கமுடியாது.

Heaven is a spiritual world. We cannot explain it exactly with a material language.

விண்ணுலகம் ஒரு இடமல்ல.
வாழ்க்கை நிலை. (State of life.)

இறைவனின் அன்புதான் மோட்சம்.

இறைவனோடு இணைந்து இறையன்பை நித்தியகாலம் அனுபவிப்பதுதான் மோட்சம்.

மனிதமொழியில் நித்தியமும், அநித்தியமும் எதிர்ப்பதங்கள்,

ஆனால்

விண்ணுலகில்

அநித்தியம் நித்தியத்தோடு சங்கமித்துவிடுகிறது.

அதாவது உலகில் அநித்திய வாழ்வுள்ள மனிதன்  விண்ணுலகில் நித்திய இறைவனோடு ஐக்கியமாகிவிடுகிறான்.

அளவும் அளவின்மையும் எதிர்ப்பதங்கள்.

ஆனால் உலகில் அளவுள்ள மனிதன் விண்ணுலகில் அளவற்ற இறைவனோடு ஐக்கியமாகிவிடுகிறான்.

எதிர்முனைகள், எதிர்ப்பதங்கள் உலகின் மொழியியல் கருத்துக்கள்.

விண்ணுலகில் உலகின் மொழிக்கு வேலை இல்லை.

வேறு வழி இல்லாமல் விண்ணுலகை உலக மொழியால் விபரிக்கிறோம்.

புரிந்துகொள்ளக்கூடிய விதமாய்ப் புரிந்து கொள்ளவேண்டும்"

.."கடவுள் எங்கும் இருக்கிறார். அவரோடு ஐக்கியமான விண்ணுலகவாசிகள் எங்கும் இருக்கிறார்களா? "

."உலக மொழியில் 'எங்கும்' என்ற சொல்லுக்கு 'சடப்பொருள்' (Material) அர்த்தம்தான் உள்ளது.

இறைவன் சடப்பொருள் அல்ல,  ஆவி.

  'கடவுள் எங்கும் இருக்கிறார்.'   என்பதை உலகியல் பொருளில் புரிந்து கொள்ளக் கூடாது.

உலகில் சடப்பொருட்கள் 'இடத்தில்' (Space) உள்ளன.

ஆவிக்கு இடம் தேவை இல்லை.

Spirit does not occupy space.

கடவுள் உலகியல் அர்த்தத்தில் எங்கும் இல்லை.

அதாவது இடத்தை அடைத்துக்    
(occupy) கொண்டிருக்கவில்லை.

தனது வல்லமையால், ஞானத்தினால், காரணத்தினால் எங்கும் இருக்கிறார்.

'எங்கும்'  என்ற வார்த்தையால் இந்த பிரபஞ்சம் (Universe) முழுவதையும்குறிப்பிடுகிறோம்.

'கடவுள் எங்கும் இருக்கிறார்' என்று சொல்லும்போது

இப்பிரபஞ்சம் முழுவதும், அதன் ஒவ்வொரு அணுவும் அவருடைய வல்லமையால் இயங்குகிறது,

அதைப்பற்றி  சர்வ ஞானம் உள்ளவர் அவர்,

அதன் ஒவ்வொரு அசைவுக்கும் முழுமுதற்காரணர் அவர்தான்'

என்று சொல்லுகிறோம்.

அவரால் படைக்கப்பட்ட எல்லா பொருட்களும், மனிதர் உட்பட, அளவுள்ளவை.

விண்ணுலகவாசிகளும் அளவுள்ளவர்களே.

அளவுள்ள அவர்களால் எப்படி எங்கும் இருக்கமுடியும்?

கடவுள் எங்கும் இருக்கிறார். விண்ணுலகவாசிகள் அவரோடு ஐக்கியமாக (United) உள்ளார்கள்.

'எங்கும் இருப்பது' கடவுளுக்கு மட்டும்தான் பொருந்தும்.

படைக்கப்பட்ட யாருக்கும் பொருந்தாது.

விண்ணகத்தில் நாம் 

சர்வ வல்லப, சர்வ ஞானமுள்ள, ஆதிகாரண கடவுளோடு ஐக்கியம் ஆகி,

அவரோடு பேரின்பம் அனுபவிக்கலாம்.

ஆனால் நாம் சர்வ வல்லபர்கள் ஆக முடியுமா?

சர்வ ஞானமுள்ளவர்கள் ஆகமுடியுமா? 

ஆதிகாரணர்கள் ஆகமுடியுமா?

அப்பண்புகளால் எங்கும் உள்ளவர்கள் ஆக முடியுமா?

அளவற்ற கடவுளோடு ஐக்கியமானாலும் நாம்
அளவுள்ளவர்கள்தான்."

."புனிதர்கள் எங்கும் இல்லாவிட்டால் எப்படி உலகெங்கிலுமுள்ள மக்களின் செபத்தைக் கேட்கமுடிகிறது?"

."ஏனெனில் எங்கும் உள்ள இறைவனோடு ஐக்கியமாயிருக்கிறார்கள்.

விண்ணகம் ஒரு வாழ்க்கைநிலை, இடம் அல்ல.

ஆகவே இங்கே 'தூரம்' என்ற கருத்தே கிடையாது.

There is no concept of 'distance'
in heaven.

  இந்தியாவிலுள்ள பாவூர்சத்திரத்திகும், அமெரிக்காவிலுள்ள ஆஸ்டினுக்கும் இடையில் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரமிருக்கலாம்.

ஆனால் இரண்டு இடங்களும் கடவுளின் அளவற்ற ஞானத்திற்குள்தான் உள்ளன.

மோட்சத்தில் உலகக் கருத்துக்களான நேரம், தூரம் எதுவும் கிடையாது.

ஆகவே உங்களையும், பேத்தியையும் ஒருசேரப் பார்க்கமுடிகிறது.

இருவரும் கடவுளின் சர்வ ஞானத்திற்குள் இருப்பதால்
அவரோடு ஐக்கியமாயுள்ள என்னால் இருவரையும் உலகக்கணக்குப்படி ஒரே நேரத்தில் பார்க்கமுடிகிறது.

'உலகக்கணக்குப்படி' என்றேன்.
ஏனெனில் இங்கே அந்தக் கணக்கெல்லாம் கிடையாது."

.."இன்னும் நிறைய கேட்கவேண்டியிருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.

விண்ணகத்தில் ஒரு வயதுக் குழந்தையே மீண்டும்

'அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்'.

லூர்து செல்வம்.

Tuesday, May 21, 2019

பார்த்தால் மட்டும் போதுமா?

பார்த்தால் மட்டும் போதுமா?
********************************

"ஏங்க! Teaயைக் குடிக்காமல் கையில வச்சி அழகு பார்த்துக் கிட்டிருக்கீங்க! "

"Teaக்குள்ள உன் முகம் தெரியுதான்னு பார்த்துக்கிட்டிருக்கேன்! "

"டீ மட்டும்தான் தெரியுது!"

"சினிமாவில மட்டும்தான் காதலிக்கிறவங்க முகம் தெரியும். நாம் வாழ்கிறது நிஜ வாழ்க்கை!
Graphicsல்லாம் போட முடியாது."

"நிஜ வாழ்க்கையிலேயும் முடியும்.  அது அவங்கவங்களுடைய அன்பின் ஆழத்தைப் பொறுத்தது.

இறைவன் படைத்த உலகைப் பார்க்கும்போது

உனக்கு உலகம் தெரிகிறதா? 

அல்லது

இறைவன் தெரிகிறாறா?"

"நான் கவிஞி கிடையாது.

உலகைப் பார்க்கும்போது இறைவன் தெரியவேண்டும். அந்த அளவிற்கு பக்தி வளரவேண்டும்.

இங்க பாருங்க."

"உன்னைத்தானடி பார்த்துக் கிட்டிருக்கேன்"

."இல்ல டீயைப் பார்த்துக் கொண்டு இருக்கீங்க."

.."ஆமா பொண்டாட்டீய!"

."உலகைப் பார்க்கும்போது இறைவன் தெரியவேண்டும்.

அதாவது விசுவாசக் கண்ணுக்குத் தெரியவேண்டும்.

நமது  விசுவாசத்தின் ஆழத்தைப் பொறுத்து இறைவனை உணரும்

தன்மையும் இருக்கும்."

.."அடியே, பேச்சோடு பேச்சாய் வினைச்சொல்லை மாற்றிவிட்டாய்!

முதலில் 'தெரிய' என்றாய்.
அப்புறம் 'உணர' என்றாய்.

எது கரெக்ட்?"

."இரண்டுமே கரெக்ட்தான்

உங்களிடம் உள்ள உங்கள் புகைப்படங்களில் எல்லாவற்றிலும், ஒரே மாதிரியா இருக்கீங்க?

ஒரு படத்தில குழந்தையாய் இருக்கீங்க.

ஒரு படத்தில பையனா இருக்கீங்க.

ஒரு படத்தில வாலிபனா இருக்கீங்க.

ஒரு படத்தில கிழவனா இருக்கீங்க.

இப்போ புகைப்படம் எடுத்தால் படுகிழமா இருப்பீங்க!

ஒவ்வொன்றும் ஒரு வளர்ச்சி நிலை.(Stage in growth).

முதல் நிலையில் பார்க்கிறோம். இரண்டாம் நிலையில் உணர்கிறோம்.

தண்ணீரைப் பார்ப்பதையும்,

அதைக் கோதி நம்மேல் ஊற்றும்பொது உணர்வதையும்

ஒப்பிட்டுப் பார்த்தால் நிலை வேறுபாடு புரியும்.

கடவுளைப் பற்றிக் கவலைப் படாதவன் ஒரு அழகான மலரைக் கண்டால் 'மலரின் அழகை' ரசிப்பான்.

கடவுள் பக்தியுள்ளவன் மலரின் அழகைப் படைத்த இறைவனை நினைத்து அவரது அழகை ரசிக்கிறான்.

உண்மையான ரசனை கடவுளை உணரும்போதுதான் கிடைக்கும்.

உணரவேண்டுமானால் உணரப்பட வேண்டிய பொருளை நாம் தொட (Touch) வேண்டும்.

குழந்தை அம்மாவைப் பார்ப்பதோடு திருப்தி அடைவதில்லை.

இரண்டு கரங்களையும் மேல் நோக்கி நீட்டுகிறது, தாய் தன்னை அள்ளி எடுத்து அரவணைக்க வேண்டுமென்று.

தாயின் அரவணைப்பில் கிடைக்கும் இன்பம் வேறெதிலும் கிடைக்காது.

நாமும் இறைவனை விசுவாசக் கண்ணால் பார்த்தால் மட்டும் போதாது.

இறைவனின் அரவணைப்பிற்குள் சென்று, அவர் நம்மைத் தொடுவதையும், நாம் அவரைத் தொடுவதையும் உணரவேண்டும்.

கடலுக்குள் நீந்தி விளையாடும் மீனை நினைத்துப் பாருங்கள்.

மீனைச் சுற்றிலும் நீர், மீனுக்குள்ளும்நீர்.

இறைவன் என்னும் கடலுக்குள் வாழும் நம்மைச் சுற்றிலும் இறைவன், நமக்குள்ளும் இறைவன்.

இந்த உண்மைமையைத் தியானித்தால், இறைவன் நம்மைத் தொடுவது மட்டுமல்ல,  தனது அரவணைப்பில் வைத்திருக்கிறார் என்பதையும் உணர்வோம்."

.."நீ சொல்வதெல்லாம் சரிதான். ஆனால், புனிதர்களுக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும்.

நம்மைப்போன்ற சாதாரண மக்களுக்கு வார்த்தை அளவில் புரிகிறது.

செயலளவில்?

ஒரு 'அருள் நிறைந்த' மந்திரம் சொல்வதற்குள் நமது மனது அமெரிக்காவை ஒரு முறைச் சுற்றி விட்டு வந்துவிடுகிறது.

மனதை இறைவனிடம் ஒருநிலைப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமா? "

." எல்லோருடைய பக்தி நிலையும் ஒரே அளவு இருக்காது.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் எல்லா மாணவர்களுமா நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்கிறார்கள்?

நம்மால் இயன்ற அளவு இறைவனின் சந்நிதியில் வாழ்வோம்.

அலுவலகத்தில் பணி   புரியும்போது நாம்  அலுவலகத்தில்   இருக்கிறோம் என்ற ஏண்ணம் இருக்கிறது அல்லவா?

அதேபோன்று நாம் இறைவனின் சந்நிதியில் இருக்கிறோம் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.

பக்தியின் அளவு கூடும்போது இறைவனோடு நெருங்கி வாழும் உணர்வு அதிகம்  ஆகும்.

பள்ளியில் சேர்ந்தவுடனே Ph.D ஆக முடியுமா?

L. K. G தான் ஆகமுடிம்.

ஆனால் L. K. G யில் சேர்ந்தால்தான், Ph.D ஆக முடியும்."

ஆன்மீகத்தில் வளர்ச்சி.

1.இறைவனைத் தேடுவோம்.

2.இறைவனைப் பார்ப்போம்.

3.இறைவனை     உணர்வோம்.

4.இறைவனோடு இணைவோம்.

லூர்து செல்வம்.